மறைந்த தலைவர் அஷ்ரப்பின் நினைவுகள் மக்கள் மத்தியில் நிலைக்கவே நான் அரசியலில் நுழைந்தேன் – அமைச்சர் பேரியல் அஷ்ரப்

மறைந்த தலைவர் அஷ்ரப்பின் நினைவுகள் எதிர்கால சந்ததியினர் மத்தியில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே தான் அரசியலில் பிரவேசித்ததாக வீடமைப்பு அமைச்சரும் “நூஆ’ தலைவியுமான பேரியல் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கவிஞர் நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; தலைவர் அஷ்ரப்பின் திடீர் மறைவின் பின்னர் அவரது நாமம் மக்கள் மனதில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே நான் அரசியலில் நுழைந்தேன். எனது நோக்கம் முழு அளவில் நிறைவேறி வருவதுடன் மக்கள் மனதில் தொடர்ந்தும் தலைவர் அஷ்ரப் வாழ்ந்து வருகின்றார் என்பதைக் காணும்போது எனது உள்ளம் பூரிப்பு அடைந்து வருகின்றது.

அன்று தலைவர் திடீர் விபத்தில் மரணித்தவுடன் அவர் பற்றிய நினைவு நாட்கள் செல்லச்செல்ல எதிர்கால சந்ததியின் மத்தியில் இருந்து மறைந்து விடுமோ என்ற நினைப்பிலேதான் எனது மகன் என்னிடம் தலைவரின் பெயர் தொடர்ந்து மக்கள் மனதில் நிலைத்திருக்க வேண்டும் என்றால் நீங்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க வேண்டும் என வற்புறுத்தினார். அவ்வாறு அவர் கூறியதில் ஒரு அர்த்தம் இருப்பதை உணர்ந்துதான் அன்று நான் பாராளுமன்றம் சென்றேன். அது மட்டுமல்லாமல் அதன் யதார்த்தத்தை இன்று நான் கண்கூடாக காண்கிறேன்.

பல வைபவங்களின் போதும் மேடையில் என்னை கண்டவுடன் தலைவரையும் அவர் மக்களுக்காகச்செய்த பணிகளும் ஞாபகம் வருவதாக கூறுவதுடன், அவரைப் பற்றிய நினைவுகளையும் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் ஞாபகப்படுத்துகின்றனர். இன்று கூட வேறு மதங்களைச் சேர்ந்த பல கவிஞர்கள் என்னைக் கண்டவுடன் மறைந்த தலைவரின் ஞாபகம் வருவதாகக் கூறியதுடன், அவரைப் பற்றியும் அவர் இலக்கியத் துறையில் காட்டிய ஈடுபாடு பற்றியும் ஞாபகப்படுத்தினர்.

மறைந்த அஷ்ரப் இலக்கியத்துறையில் பெரும் ஈடுபாடு காட்டியதுடன், கலையுலகத்தினருடனும் மிகவும் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்தார். மேலும் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தும் விதமாகப் பல்வேறு கவிதைகளைப் புனைபவராகவும் இருந்தார். அவரது இலக்கிய ஆர்வத்திற்கும் கவிதை எழுதும் திறமைக்கும் எழுதி வெளியிட்ட “நான் எனும் நீ’ நல்லதோர் சான்றாகும் எனவும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • rohan
    rohan

    அவராக இருந்திருந்தால் இப்படி இவர் போல் இருந்திருக்க மாட்டார் என்று நினைக்க வைப்பதன் மூலம் அவரின் நினைவை இவர் காப்பார் போலும்!

    Reply