வன்னி உட்பட வடமாகாணத்திற்கு 2011 இல் முழுமையாக மின்சார விநியோகம் வழங்கப்படும் என்றும் 32.6 மில்லியன் டொலர் நிதியில் இத்திட்டம் பூரணப்படுத்தப்படுமெனவும் இலங்கை மின்சார சபை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வீடுகளுக்குத் தற்போது 1 சதவீதமும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 4 சதவீதமுமே மின்சார வசதி தற்போது உள்ளது. அதேசமயம், மன்னார் மாவட்டம் 37 சதவீத மின்சார விநியோகத்தைப் பெற்றுவருவதுடன் யாழ்ப்பாண மாவட்டம் 52 சதவீத மின் விநியோகத்தையும் வவுனியா மாவட்டம் 67 சதவீத மின் விநியோகத்தையும் பெற்றுள்ளன. தற்போது வவுனியா சுன்னாகம் இடையே கேபிள்கள் பொருத்தப்படும் பணிகள் இடம்பெறுகின்றன.
வவுனியாவுக்கும் கிளிநொச்சிக்கும் இடையே 132 கிலோவாட்ஸ் மின் பரிவர்த்தனையை மேற்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. 39 பில்லியன் டொலர் செலவிலான இத்திட்டத்திற்கு ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவரமைப்பு உதவி வழங்குகின்றது.
கிளிநொச்சிக்கும் சுன்னாகத்துக்கும் இடையில் மற்றொரு மின் பரிவர்த்தனையை மேற்கொள்ள 19.5 மில்லியன் டொலர் தேவையாகும். இதற்கும் மேலதிகமாக 45 மில்லியன் டொலர் செலவில் நடுத்தரதாழ்ந்த மட்ட வோல்டேஜ் விஸ்தரிப்புத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. மின் விநியோகக் கட்டமைப்பை அமுல்படுத்த இந்தத் தொகை தேவைப்படுகிறது.
இதேவேளை, வழமையான நடவடிக்கையில் ஈடுபடாமல் சூரியசக்தி, தொலைபேசி வசதிகள் வடக்கில் ஏற்படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் அகதி முகாம்களில் நாணயக் குற்றிகளைப் பயன்படுத்தும் சூரிய சக்தி தொலைபேசி வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன