13

13

அமெரிக்காவில் வீட்டில் விழுந்து நொறுங்கிய விமானம் – பலர் பலி

bombardier-dash-8-q400.jpgஅமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு அருகில் உள்ள பஃபலோ நகரில் வீடுகள் மீது பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் 3 இந்தியர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.

விபத்தில் சிக்கிய அந்த காண்டினன்டல் ஏர்லைன்ஸ் (Continental Airlines Flight 3407) விமானம் 60 பயணிகளுடன் நியூஜெர்சி மாகாணத்தின் நெவார்க் நகரிலிருந்து நயாகரா நீர்விழ்ச்சி அருகே உள்ள பஃபலோ விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தது. விமான நிலையத்தை நெருங்கிய நிலையில் க்ளியரன்ஸ் சென்டர் என்ற புறநகரில் வீடுகளின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது.

விழுந்த வேகத்தில் விமானம் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 60 பேருமே பலியாயிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் வீடுகளில் இருந்தவர்களின் நிலை என்னவானது என்று தெரியவில்லை. விபத்துக்குள்ளான அந்த விமானம் 74 இருக்கைகள் கொண்ட பம்பார்டியர் (Bombardier Dash 8 Q400) வகையைச் சேர்ந்தது

பிரிட்டனின் விசேட பிரதிநிதி நியமனத்தை ஏற்க இலங்கை அரசு மறுப்பு!

rohitha-bogollagama.jpgஇலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக  பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுண் நியமித்த விசேட பிரதிநிதியின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் அவர் மேலும் கூறியிருப்பதாவது.

இலங்கைக்கான பிரிட்டனின் விசேட பிரதிநிதியின் நியமனம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. ஒரு தலைப்பட்சமாக இடம்பெற்ற இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென அதில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நியமனம் சர்வதேச சட்டவிதிகளுக்கு முரணானதென்றும் இவரது நியமனத்தில் முறையான இராஜதந்திர ஒழுங்குமுறைகள் பேணப்படவில்லையென்றும் அமைச்சரவையில் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ‘தமிழ் பவுண்டேஷன்’ தடை செய்யப்பட்டுள்ளது.- அமெரிக்காவுக்கு இலங்கை பாராட்டு

u-s-a-flag.jpgஅமெரிக் காவின் மெரிலான்ட் பகுதியில் செயற்பட்டுவந்த தமிழ்கள் அமைப்பின் சொத்துக்களை முடக்குவதாக அமெரிக்க திறைசேரி அறிவித்துள்ளது. அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணிவந்ததாகக் கூறியே இந்த அமைப்பை அமெரிக்கா தடைசெய்துள்ளது.

இந்த அமைப்புடன் எந்தவிதமான வங்கிச் செயற்பாடுகளையோ, வர்த்தகச் செயற்பாடுகளையோ பேணக்கூடாதென அமெரிக்கா அறிவித்துள்ளது.

“தமிழீழ விடுதலப் புலிகளும் ஏனைய பயங்கரவாத அமைப்புக்களைப் போன்றதொரு அமைப்பே. அறக்கட்டளைகளை உருவாக்கி நிதிசேகரித்து அவற்றை வன்முறையுடன்கூடிய தமது கொள்கைகளுக்காகப் பயன்படுத்துகின்றனர்” என அமெரிக்க திறைசேரியின் வெளிநாடுகளின் சொத்துக்களைக் கட்டுப்படுத்தும் அலுவலகத்தின் பணிப்பாளர் அடம் சுய்பின் கூறினார்.

இதேவேளை, அமெரிக்காவிலிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கடந்த 2007ஆம் ஆண்டு வெள்ளைமாளிகையின் உத்தரவுக்கமைய தடைசெய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் பவுண்டேஷனின் சொத்துக்களை முடக்கிய அமெரிக்காவுக்கு இலங்கை பாராட்டு

எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளுக்கு உதவி வழங்கும் தமிழ் பவுண்டேசனின் சொத்துக்களை முடக்குதவற்குத் தீர்மானித்த அமெரிக்க அரசாங்கத்துக்கு இலங்கை பாராட்டுத் தெரிவித்ததுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை காரணமாக எந்தவொரு அமெரிக்க பிரஜைக்கும் தமிழ் பவூண்டேஷனோடு எந்தவிதக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதும் தடைசெய்யப்பட்டள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இயங்கும் அரக்கட்டளை தமிழ் நிறுவனங்கள் மூலம் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகள் தமது நடவடிக்கைகளுக்கான நிதி சேகரிக்கின்றனா என அமெரிக்க அதிகாரிகள் குற்றம்  சுமத்தியூள்ளனா;.

எல்.ரீ.ரீ.ஈ அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாதிகளின் பட்டியலில் 1997 ஆம் ஆண்டில் அமெரிக்கா இணைத்தது. தமிழா புனாவாழ்வூக் கழகமும் புலிகளுக்கு உதவியதால் 2007 ஆம் ஆண்டில் அதன் சொத்துக்களையூம் அமெரிக்க முடக்கியது என்றும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

செயற்கைக்கோள்கள் விண்வெளியில் மோதின

iridium.jpgஅமெரிக்க தொலைதொடர்பு செயற்கைக்கோள் ஒன்றும் ரஷ்ய செயற்கைக்கோள் ஒன்றும் விண்வெளியில் மோதிக்கொண்டுள்ளன. விண்வெளியில் மனிதன் அனுப்பிய பொருட்கள் உடைந்த சம்பவங்களிலேயே இந்த அளவுக்கு மிகப் பெரிய அளவில் ஒரு சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல்முறை என்று கருதப்படுகிறது.

இரிடியம் என்ற அமெரிக்க வர்த்தக செயற்கைக்கோள் ஒன்று பயன்பாட்டில் இல்லாத ரஷ்ய செயற்கைக்கோள் ஒன்றுடன் மோதியிருக்கிறது. வடதுருவத்திற்கு அருகில் சைபீரியாவில் எண்ணூறு கிலோ மீட்டர் உயரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த மோதல் நடந்துள்ளது என அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாஸா கூறியுள்ளது.

தாய்நாட்டை பேரழிவுக்குள்ளாக்கும் நீர்மூழ்கிகளை உருவாக்கும் தலைமுறை மீண்டும் உருவாக இடமளிக்க முடியாது – ஜனாதிபதி

mahinda-rajapaksa.jpgபயங்கரவாதமற்ற நாடொன்றுக்கு நாம் வழி சமைத்துள்ளோம் தாய் நாட்டைப் பேரழிவுக்குள்ளாக்க நீர்முழ்கிக் கப்பல்களை உருவாக்கும் இளைய தலைமுறையொன்று மீண்டும் உருவாக இடமளிக்க முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டை சீரழிந்து மனிதப் படுகொலைகளில் ஈடுபடுத்தப்படவென வடக்கு, கிழக்கு இளைஞர்கள் கரும்புலி படைகளுக்குச் சேர்க்கப்படுகின்ற நிலை மாற்றம் பெற வேண்டும். அத்தகைய இளைஞர்கள் நாட்டின் அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்வதற்கான பொறுப்புடையவர்களாக உருவாக்கப்பட வேண்டுமென்பதே தமது நோக்கமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். பயங்கரவாதமற்ற இலங்கையை உருவாக்குதவற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நம்மிடமிருந்து கை நழுவிய நாட்டின் மூன்று மடங்கு கடற்பிரதேசத்தை மீண்டும் நாம் பெற முடிந்தமை பெருவெற்றியாகுமெனவும் அவர் தெரிவித்தார்.

சமுத்திரவியல் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் உரை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

சமுத்திரவியல் பல்கலைக்கழகம் பாரியதொரு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதொன்று. இதனை ஆரம்பித்ததில் எந்தவித குறுகிய நோக்கமும் இருந்ததில்லை. எமது புதிய பரம்பரை கடல்வளங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன. அதற்கான காலம் தற்போது உருவாகியுள்ளன.

வெறுமனே மீன் பிடிக்கும் தொழில் மட்டும் கடலின் பயனல்ல. அதில் பல்வேறு வளங்கள் உள்ளன. அதேவேளை கடல் பிரதேசம் சம்பந்தமாக உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு பெறும் வகையில் சர்வதேசசத்துடன் இணைந்ததான செயற்றிட்டங்கள் பற்றி சிந்திக்க வேண்டிய காலம் எழுந்துள்ளது.

வடக்கு, கிழக்கு முழுவதிலுமுள்ள கடற் பிரதேசத்தின் உரிமைகள் நம்கையை விட்டு நழுவிப் போயிருந்தன. திருகோணமலைத் துறைமுகத்துக்குக் கூட நாம் சுதத்திரமாக போய்வரக்கூடிய சூழ்நிலை அற்றுப் போயிருந்தது. இன்று அந்நிலை மாற்றப்பட்டு சகல கடற்பிராந்தியமும் எமது உரிமை சொத்தாகியுள்ளன.

கடல்பற்றிய அறிவில் நாம் சர்வதேச சமுத்திரவியல் பல்கலைக்கழகங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன. கடந்த காலங்களில் எம்மால் முடியாமற் போனதை சர்வதேச அறிவுடன் மீளப் பெற்றுக் கொள்வது அவசியமாகிறது.

சமுத்திரவியல் பல்கலைக்கழகம் சகல இன,மத பிரதேசத்தினருக்கும் உரித்துடையது. வடக்கு, கிழக்கு இளைஞர்களுக்கும் சமுத்திரவியல் சம்பந்தமான கல்வியை வழங்கும் பொறுப்பு சமுத்திரவியல் பல்கலைக்கழகத்திற்கு உள்ளது.

இந்நாட்டில் சகல இன மத மக்களும் நாற்திசையிலுமிருந்து சரிசமனாக கற்கக்கூடியதான உரிமையை சமுத்திரவியல் பல்கலைக்கழகம் வழங்க வேண்டும். வடக்கு, கிழக்கு இளைஞர்களும் இங்கு பட்டதாரிகளாக உருவாக வேண்டும் அவர்களும் தாய்நாட்டுக்குச் சேவை செய்யும் நிலை வரவேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நான் கடற்றொழில் அமைச்சராக இருந்த காலத்தில் சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தேன். இன்று இப்பல்கலைக்கழக பட்டதாரிகளுக்குப் பட்டமளிக்கும் பாக்கியத்தை பெற்றதில் மகிழ்ச்சியடைகின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கான பிரித்தானிய பிரதமரின் சிறப்புப் பிரதிநிதி

des_browne.jpg
இலங்கையில் நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கிலும், அங்கு நிலவும் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக உதவும் வகையிலும், பிரிட்டனின் முன்னாள் பாதுகாப்புச் செயலரான தேஸ் பிரவுண் அவர்களை பிரித்தானியப் பிரதமர் கார்டன் பிரவுண் தனது சிறப்பு பிரதிநிதியாக நியமித்துள்ளார்.

இலங்கை அரசுடனும், அங்குள்ள பல்சமூகத் தலைவர்களுடனும் தேஸ் பிரவுண் அவர்கள் நெருக்கமாக இணைந்து செயல்படுவார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  இந்த விடயம் தொடர்பில் அவர் சர்வதேச அமைப்புகள் மற்றும் பரந்துபட்ட அளவில் சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.

வாக்களிப்பின் போது குழப்பம் விளைவித்தால் தேர்தல் இரத்துசெய்யப்படும்!

election-commissioner.jpgவட மத்திய மற்றும் மத்திய மகாகண சபைகளுக்கான தேர்தலை நீதியாகவும்  நேர்மையாகவும் நடத்த சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் எவராயினும் வாக்களிப்பு நிலையங்களில் குழப்பம் விளைவித்தால் தேர்தலை இரத்து செய்ய நேரிடும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

தேர்தகள் ஆணையாளர் தலைமையக கேட்போர் கூடத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வாக்களிப்பின் போது குழப்பம் விளைவிக்காமல் இருப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பாக இது தொடர்பாக அரசியல்  கட்சி செயலாளர்களுக்கும் சுயேச்சைக்குழுத் தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுப்பதாக கூறினார். வாக்களிப்பு நிலையமொன்றில் குழப்படி ஏற்பட்டாலும் மாகாண சபை தேர்தலின் முழுமையான முடிவை வெளியிடுவதிலும் தடை ஏற்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

குறிப்பிட்ட இரண்டு மாகாணங்களுக்குமான தேர்தலை இதற்கு முன்னர் நடத்த உத்தேசித்திருந்த போதும் பாடசாலை விடுமுறை காரணமாக சற்று பிற்போட நேரிட்டது. கூடுதலான ஆசிரியர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடுகின்றமையால் அவர்களுக்கு தபால் மூல வாக்களப்புக்கு விண்ணப்பிப்பதற்காக போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்பதால் கால தாமதம் ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.

தேர்தல் வரலாற்றில் முதற்தடவையாக கணனி மயமாக்கப்பட்ட வாக்காளர் அட்டை வாக்காளர்களுக்கு விநியோகிக்கப் பட்டுள்ளன. அதேபோன்று வாக்காளர் பட்டியலும் கணனிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திணைக்களத்துக்கு கிடைத்துள்ள தகவல்களுக்கு ஏறபவே தேசிய அடையாள அட்டை இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலக்கங்களில் தவறுகள் தெண்படின் உரிய அடையாள அட்டையை சமர்பித்து வாக்களிக்க முடியும்.

வாக்களிப்பதற்கு அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தற்காலிக அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் இது வரை  25 ஆயிரம் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் புகைப்படம் உள்ளடக்கப்பட்ட  சாரதி அனுமதிப் பத்திரம்,  கடவைச் சீட்டு,  தபால் திணைக்கள அடையாள அட்டை,  ரயில் போக்கு வரத்து அனுமதிப் பத்திரம்,  ஓய்வூதிய அடையாள அட்டை, மதத் தலைவர்களுக்கான அடையாள அட்டை மற்றும் முதியோர் அடையாள அட்டை போன்றவற்றை சமர்பித்து வாக்களிப்பில் பங்குபற்ற முடியும் எனவும் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவை கைப்பற்றிய பின்னரும் இனப்பிரச்சினைக்கு மகிந்த அரசினால் தீர்வை முன்வைக்க முடியாதுள்ளது – ரணில்

ranil-wickramasinge.jpgநாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் அரசாங்கமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் என்ன தீர்வினை முன்வைத்துள்ளனரென கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முல்லைத்தீவினை கைப்பற்றி யுத்தத்தில் வெற்றிபெற்றும் அரசினால் இனப்பிரச்சினைக்குத் தீர்வினை முன்வைக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கண்டி பொதுச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

போர்வீரர்களின் வெற்றியை நிலைநாட்ட வாக்களியுங்கள் என ஜனாதிபதி வாக்கு கேட்டுள்ளார். இன்று போர்வீரர்கள் முல்லைத்தீவினையும் கைப்பற்றியுள்ள நிலையில் இனி ஏன் வெற்றிக்காக வாக்களிக்க வேண்டும்.  தம்மைப் பலப்படுத்தவே வாக்கு கேட்கின்றனர். மிகின் எயார், கொழும்பில் பாலங்கள் அமைத்தல் கிராமங்களில் மகநெகும, கமநெகும திட்டங்கள் முலம் அரசாங்கம் பணம் சம்பாதிக்கின்றது இதற்காகவே வாக்கு கேட்கிறது.

பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டார். ரிவிர பத்திரிகை ஆசிரியர் தாக்கப்பட்டார். சிரச எரிக்கப்பட்டது. லசந்த கொலை செய்யப்பட்டார். ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர், கடத்தப்பட்டனர், இதனையே மூன்று வருடமாக இந்த அரசு செய்தது. இவ்வாறு ஊழல் புரிந்த குடுகாரர்கள், கொள்ளையர்கள், ஏமாற்றுக்காரர்கள், கொலைகளை மூடிமறைக்க போர்வீரர்களது வெற்றியைக் காட்டி வாக்குக் கேட்கின்றனர். இதற்கு எதிராக இலங்கை தேசிய தொழிலாளர் முன்னணி ஐ.தே.க., முஸ்லீம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி அனைத்தும் இணைந்து எஸ். பி. திஸ்ஸநாயக்கா தலைமையில் ஒரு குழுவினரை நியமித்துள்ளோம்.

பொருட்களின் விலை அதிகரிப்பு, விவசாயமுலப்பொருட்களின் விலை அதிகரிப்பு இதற்கு மக்களுக்கு மானியங்கள் வழங்கப்படவேண்டும். இந்த நாட்டு மக்கள் ஜனநாயக உரிமைகளை, அரசியல் அமைப்பு உரிமைகளை பெற்றுக்கொள்ள ஐ.தே.க. வுக்கு வாக்களியுங்கள் இதற்காக திஸ்ஸநாயக்காவை வெற்றிபெறச் செய்யுங்கள் என்ன நடந்தாலும் மகிந்த அரசு இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டியுள்ளது. இந்த நாட்டைக் காப்பாற்ற ஐ.தே.க. ஆட்சியினாலேயே முடியும் எனத் தெரிவித்தார்.

அரசின் முயற்சியை புலிகள் குறைத்து மதிப்பிட்டதால் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட தீர்மானித்தோம். – தாய்லாந்தில் பிரதமர் ரத்ணசிறி

pm-srianka.jpgஇலங் கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக அடுத்தடுத்து ஆட்சிபீடமேறிய அரசுகள் புலிகள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தின. ஆனால் அந்தப் பேச்சுவார்த்தைகளினால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கமும் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது.

எனினும் அரசாங்கத்தின் முயற்சியை புலிகள் குறைத்து மதிப்பிட்டதால் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவது என்ற தீர்மானத்தை மேற்கொண்டோம் என பிரதமர் ரத்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார்.

பௌத்த சமய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக 5 நாள் விஜயம் மேற்கொண்டு தாய்லாந்துக்குச் சென்றுள்ள பிரதமர் நேற்று பெங்கொக் நகரில் அந்நாட்டுப் பிரதமர் அபிசிட் விஜ்ஜாஜிவாவை சந்தித்துக் கலந்துரையாடியபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வடக்கிலுள்ள அப்பாவிப் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அனைத்து முயற்சிகளை மேற்கொண்டபோதும் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் அவர்களைத் தொடர்ந்தும் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருகின்றது. இலங்கையின் வட பகுதியில் இன்று புலிப்பயங்கரவாதிகள் குறுகிய பிரதேசத்துக்குள் மட்டுப்படுத்தப் பட்டுள்ளனர்.  இந்தப் பிரதேசத்தில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வர முயற்சிக்கும் அப்பாவிப் பொதுமக்கள் மீது புலிகள் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருவகின்றனர் என்றும் பிரதமர் அங்கு மேலும் தெரிவித்தார்.

யாழ். இ. போ. சபையை முன்மாதிரி சபையாக தரமுயர்த்த அரசு தீர்மானம்! -அமைச்சர் டலஸ்

dalas_alahapperuma.jpgயாழ்ப் பாணத்திலுள்ள இலங்கை போக்குவரத்துச் சபையை முன்மாதிரி போக்குவரத்துச் சபையாக தரமுயர்த்த அரசாங்கம் தீர்மாணித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட வேண்டுகோளுக்கு இணங்க தரமுயர்த்தப்படவுள்ள யாழ். போக்குவரத்துச் சபையின் ஆரம்ப வைபவம் இம்மாத இறுதியில் பிரமாண்டமான முறையில் நடத்தப்படவுள்ளது. யாழ்.குடா நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை விருத்தி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டத்தின்படி முதற்கட்டமாக 25 புதிய பஸ் வண்டிகள் அங்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. தேவைகளுக்கேற்ப எதிர்காலத்தில் இன்னும் பல பஸ் வண்டிகள் அனுப்பப்படும். 

யாழ். குடா நாட்டுக்கான பஸ் போக்குவரத்து கால அட்டவணையின்படி சகல பகுதிகளையும் உள்ளடக்கப்படும் விதத்தில் சேவை நடத்த 89 பஸ் வண்டிகள் தேவைப்படுகின்றன. எனினும்,  தற்போது 45 பஸ் வண்டிகளே அங்கு உள்ளன. பாடசாலை மாணவர்களுக்கான பஸ் சேவைக்கென 39 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளபோதும் இதன் எண்ணிக்கையை 50 ஆக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் யாழ்.குடா நாட்டிலுள்ள சகல போக்குவரத்துச் சபை டிப்போக்களும் நவீனமயப்படுத்தப்படுவதுடன் நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்றே குடா நாட்டிலுள்ள சகோதர தமிழ் மக்களும் அரச போக்குவரத்துச் சேவையைப் பெற வேண்டும் என்ற ஜனாதிபதியின் எண்ணம் விரைவில் செயலுருவம் பெறவுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.