யாழ்ப் பாணத்திலுள்ள இலங்கை போக்குவரத்துச் சபையை முன்மாதிரி போக்குவரத்துச் சபையாக தரமுயர்த்த அரசாங்கம் தீர்மாணித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட வேண்டுகோளுக்கு இணங்க தரமுயர்த்தப்படவுள்ள யாழ். போக்குவரத்துச் சபையின் ஆரம்ப வைபவம் இம்மாத இறுதியில் பிரமாண்டமான முறையில் நடத்தப்படவுள்ளது. யாழ்.குடா நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை விருத்தி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டத்தின்படி முதற்கட்டமாக 25 புதிய பஸ் வண்டிகள் அங்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. தேவைகளுக்கேற்ப எதிர்காலத்தில் இன்னும் பல பஸ் வண்டிகள் அனுப்பப்படும்.
யாழ். குடா நாட்டுக்கான பஸ் போக்குவரத்து கால அட்டவணையின்படி சகல பகுதிகளையும் உள்ளடக்கப்படும் விதத்தில் சேவை நடத்த 89 பஸ் வண்டிகள் தேவைப்படுகின்றன. எனினும், தற்போது 45 பஸ் வண்டிகளே அங்கு உள்ளன. பாடசாலை மாணவர்களுக்கான பஸ் சேவைக்கென 39 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளபோதும் இதன் எண்ணிக்கையை 50 ஆக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் யாழ்.குடா நாட்டிலுள்ள சகல போக்குவரத்துச் சபை டிப்போக்களும் நவீனமயப்படுத்தப்படுவதுடன் நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்றே குடா நாட்டிலுள்ள சகோதர தமிழ் மக்களும் அரச போக்குவரத்துச் சேவையைப் பெற வேண்டும் என்ற ஜனாதிபதியின் எண்ணம் விரைவில் செயலுருவம் பெறவுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.