11

11

மட்டு. நிவாரணம் வவுனியாவில் கையளிப்பு

aid-bati.jpgவன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வரும் மக்களுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் ஆலோசனைக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட ஏழுமில்லியன் ரூபா பெறுமதிவாய்ந்த நிவாரணப் பொருட்கள் நேற்று வவுனியா அரச களஞ்சியத்தில் வைத்து மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ். திரு ஞானசம்பந்தரிடம் கையளிக்கப்பட்டது.

 மட்டக்களப்பு மாநகரசபை பிரதி மேயர் ஏ. ஜோர்ச்பிள்ளை உத்தியோகபூர்வமாக பொருட்களை கையளித்தார். ஏழு லொறிகளில் இந்தப் பொருட்கள் வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்டன.

பத்து நாட்களுக்குள் 30 ஆயிரம் சிவிலியன்கள் அரச பகுதிக்கு வருகை! – இராணுவப் பேச்சாளர் தகவல்

wanni.jpgஅரசாங்கத்தின் அழைப்பை ஏற்று புலிகளின் பிடியிலிருந்து தப்பி கடந்த பத்து நாட்களுக்குள் மாத்திரம் சுமார் 30 ஆயிரம் சிவிலியன்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வருகை தந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரை 33,131 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தந்துள்ளததோடு, கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் 3848 பொதுமக்கள் வருகை தந்துள்ளனர். இத்தொகை கடந்த பத்து நாட்களுக்குள் மாத்திரம் 29, 283 ஆக அதிகரித்துள்ளது.

கடந் வருடத்தில் மாத்திரம் மொத்தமாக 1704 சிவிலியன்களே அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருகை தந்திருந்தனர். தங்களது பிடியிலிருந்து பொதுமக்கள் தப்பிச் செல்வதை பல்வேறு முறைகளில் தடுத்த புலிகள், தற்பொழுது தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டு அந்த மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி தடுக்க முயற்சித்து வருகின்றனர். எனினும் புலிகளின் பிடியிலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி மக்கள் தொடர்ந்தும் வந்த வண்ணமுள்ளதாக பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார். 

வன்னிப் பகுதியில் மனிதாபிமான நெருக்கடி உச்சகட்டம்: இலங்கையில் இது தொடர்பான கவனயீர்ப்பு போராட்டங்கள் எங்கே? – ஏகாந்தி

srilanka_displaced.jpgமுல்லைத் தீவில் மனிதாபிமான நெருக்கடி உச்சகட்டத்தை அடைந்துள்ளது. விடுதலைப் புலிகள் அரசின்பால் குற்றஞ்சாட்டுவதும், அரசு விடுதலைப் புலிகளின் பக்கம் குற்றஞ்சாட்டுவதுமாக காணப்பட்டு வரக்கூடிய இந்த நிலையில் மனித உயிர்கள் அழிந்து கொண்டிருக்கின்றன.

இலங்கையின் வடக்கே இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரதேசத்தில் இருந்து வெளியேறி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கி வந்த பொதுமக்கள் மீது முல்லைத்தீவு மாவட்டம் உடையார் கட்டுபகுதியில் விடுதலைப்புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 சிவிலியன்கள் கொல்லப்பட்டதுடன், 75 பேர் காயமடைந்துள்ளதாக இலங்கை இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து உடையார்கட்டுப் பிரதேசத்தை நோக்கி வந்த இந்த சிவிலியன்களில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையிலுள்ளவர்கள் உடனடியாக ஹெலிகொப்டர்கள் மூலம் அழைத்து வரப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர்  தெரிவித்தார். உயிரிழந்த 19 பேரில் சிறுமி ஒருவரும், சிறுவர் ஒருவரும் அடங்குவர். புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 75 சிவிலியன்களில் 11 சிறுவர்கள், 31 ஆண்கள், 27 பெண்கள் அடங்குவதாக தெரிவித்த பிரிகேடியர், இவர்களில் 15 பேரின் நிலைமைகள் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

படுகாயமடைந்தவர்கள் விமானப் படையினரின் உதவியுடன் ஹெலிகொப்டர் மூலம் உடனடியாக வவுனியா மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

புலிகளின் அடக்குமுறைகளாலும், துன்புறுத்தல்களாலும் மிகவும் பாதிப்படைந்த அப்பாவி தமிழ் மக்கள் அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றும் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பை நாடியும் கடந்த சில தினங்களாக வேகமாக வரத் தொடங்கினர் என்று தெரிவித்த பிரிகேடியர், இதனை தடுத்து நிறுத்தவே புலிகள் அப்பாவி பொது மக்களை இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல்களையும், துப்பாக்கிப் பிரயோகத்தையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். புலிகளின் மீது நம்பிக்கை இழந்த பொது மக்கள் மேலும் வருகை தரவுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர் வருபவர்களின் பாதுகாப்பு உட்பட தேவையான சகல வசதிகளையும் அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் மேற்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இன்றையதினம் (11)  இலங்கையிலிருந்து வெளிவந்திருக்கும் அனைத்து சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளிலும் இந்தச் செய்திக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ரொய்ட்டர், பீ.பீ.ஸி, சீ.என்.எல். செய்திகளும் இச்செய்தியை இராணுவத் தரப்பினரின் அறிக்கைகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவம் பற்றி விடுதலைப்புலிகள் இதுவரை உத்தியோகபூர்வமான எந்தவிதமான அறிவித்தல்களையும் வெளியிடவில்லை.

மறுபுறமாக  முல்லைத்தீவு விஸ்வமடு வடக்கு சுந்தரபுரம் பகுதியிலுள்ள இடைத்தங்கல் முகாமில்  நேற்றுமுன்தினம் (09) இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 30 பேர் பலியாகியுள்ளதாகவும், மேலும் 64 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவித்தன. இத்தாக்குதலில் 20 படையினரும் 10 பொதுமக்களுமாக 30 பேர் பலியாகியதாகவும், மேலும் 24 படையினரும், 40 பொதுமக்களுமாக 64 பேர் காயமடைந்ததாகவும் இராணுவத் தரப்பு அறிவித்திருந்தது. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வரும் பொதுமக்களுடன் சேர்ந்து வந்த பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரே இடைத்தங்கல் முகாமில் வைத்து குண்டினை வெடிக்க வைத்ததாகவும்  இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வரும் மக்களைச் சோதனைக்குட்படுத்தும் இடத்திலேயே இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் விடுதலைப் புலிகள் நடத்தியுள்ள முதல் பெரிய மனித வெடிகுண்டுத் தாக்குதல் இதுவென்றும் குறிப்பிடப்பட்டது.

ஆனால்,  விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலிலேயே சுந்தரபுரம் பகுதியில் பொதுமக்களும் படையினரும் கொல்லப்பட்டதாக படைத்தரப்பு பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில், இடம்பெயர்ந்து வந்த மக்கள் மீது படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே அவர்கள் கொல்லப்பட்டதாக விடுதலைப்புலிகளின் ஆதரவு இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்கள் கொல்லப்பட்ட இடத்தை படம்பிடித்துக் காட்டியிருந்த சிறீலங்கா இராணுவத் தரப்பு அங்கு படையினருக்கு சேதங்கள் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரங்களையும் காண்பிக்கவில்லை என்றும்,  குண்டு வெடித்து காயம்பட்டதற்கான அடையாளங்கள் இல்லாமல் துப்பாக்கி வேட்டுக்களிலேயே மக்கள் கொல்லப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர் என்றும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம்

சிறிலங்கா படைகள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகளை வீசிவிட்டு நாம் பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்தியதாக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று (11) புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது பாரிய இனப்படுகொலையை திட்டமிட்ட ரீதியில் அரங்கேற்றி வருகின்றது. அண்மைக்காலங்களில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் என்றும் இல்லாதவாறு கொடிய இனப் படுகொலை ஒன்று தமிழ் மக்கள்மீது சிங்கள அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

நாளாந்தம் அப்பாவிப் பொதுமக்கள் பல நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருகின்றனர்.சிறிலங்காவின் அரச படைகள் வேண்டும் என்றே திட்டமிட்டு இந்த இனப்படுகொலையை அரங்கேற்றி வருகின்றது. குறிப்பிட்ட சில பிரதேசங்களை பாதுகாப்பு பிரதேசங்கள் எனப் பிரகடனப்படுத்தி விட்டு அப்பிரதேசத்திற்குள் மக்களையும்,அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தையும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களையும் வரவழைத்து வேண்டும் என்றே பீரங்கித் தாக்குதல்களையும் வான் தாக்குதல்களையும் மேற்கொண்டு மக்களை தொடர்ச்சியாக கொன்றொழித்து வருகின்றது.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளும் இதற்கு கண்கண்ட சாட்சிகளாக உள்ளனர். இங்குள்ள மருத்துவமனைகள் எல்லாவற்றின் மீதும் ஆட்லறி எறிகணைகளை வீசி செயலிழக்கச் செய்துள்ளனர். அழிவிற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் இந்த மக்களின் அவலங்களை வெளியுலகத்திற்குப் போகாதவண்ணம் தொலைத்தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டுள்ளன.

ஊடகவியலாளர்களோ, அனைத்துலக தொண்டு நிறுவனங்களோ, மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கான கண்காணிப்பாளர்களோ எமது பிரதேசத்திற்குள் வருவது சிங்கள அரசினால் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. எமது பிரதேசத்திற்குள் கொண்டு வரப்படும் அத்தியாவசிய மருந்துகள் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாரிய காயங்களுக்குள்ளாகும் மக்கள் மருந்தின்மையால் நாளாந்தம் இறந்து கொண்டே இருக்கின்றனர்.போர் நடக்கும் பிரதேசத்திற்குள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளும் அரசினால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மக்கள் நாளாந்தம் நாடோடிகள் போன்று இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர். காடுகளிலும் மேடுகளிலும் விலங்குகளைவிட மோசமான முறையில் வாழ்க்கை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமுற்றும் அல்லற்பட்ட வண்ணம் உள்ளனர்.

21 ஆம் நூற்றாண்டின் படுமோசமான மனித அவலம் தமிழ் மண்ணில் சிங்கள அரசினால் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த மனித அவலத்தை முழு உலக நாடுகளும் கண்டிப்பதோடு நின்றுவிடாமல் அரசிற்கு அழுத்தம் கொடுத்து போரை நிறுத்தி அரசியல் பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சிளைக்குத் தீர்வுகான முன்வரவேண்டும்.

ஓரிரு நாட்களுக்கு முன்னர் அப்பாவி பொதுமக்கள் மீது சிறிலங்கா படைகள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகளை வீசிவிட்டு நாம் பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டதாக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நாங்கள் மனித உரிமைகளுக்காக போராடும் ஓர் விடுதலை இயக்கம். எமது மண்ணின் விடுதலைக்காக எமது மக்களும் நாங்களும் அளப்பரிய தியாகங்களை புரிந்தவண்ணம் உள்ளோம்.

இவ்வாறான மனித சமுதாயம் வெறுக்கத்தக்க காட்டுமிராண்டித்தனமான செயலை நாம் புரியவில்லை என முற்றாக மறுக்கின்றோம். எமது பிரதேசத்திற்கான தொலைத்தொடர்புகளை துண்டித்து விட்டு தனது ஊடகங்களினூடாக சிறிலங்காஅரசு பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது என்பதை அனைத்துலக சமூகத்திற்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(இவ்வறிக்கை புதினம் இணையத்தளத்தில் பிரசுரமாகி இருந்தது)

முல்லைத்தீவில் படையின் தாக்குதல்.

இந்நிலையில் முல்லைத்தீவு பிரதேசத்தின் மீது இராணுவத்தின் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக பாரிய உயிரிழப்புகளும், காயங்களும் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வன்னியில் பாதுகாப்பு வலயப் பிரதேசங்கள் எங்கும் திங்கட்கிழமை சிறிலங்கா வான் மற்றும் தரைப்படையினர் நடத்திய தாக்குதல்களில் 36 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 76 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் இதேவேளை, உறவினர்கள் யாருமற்ற நிலையில் இருந்த பல உடல்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் அடக்கம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரம், வள்ளிபுரம், சுதந்திரபுரம், மாத்தளன் உள்ளிட்ட பகுதிகளில்  திங்கட்கிழமை காலை முதல் சிறிலங்கா படையினர் பரவலாக எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலின் போது 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் பகுதியில் கடுமையான பீரங்கித் தாக்குதலில் 16 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 49 பேர் படுகாயமடைந்துள்ளனர். இடம்பெயர்ந்த தமிழர்கள் தங்கியிருந்த கொட்டகைகளின் மீதே எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு

எனவே,  இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் விரலை நீட்டி குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றனரே தவிர, மனித உயிர்களின் இழப்புகளை உடன் நிறுத்துவதற்கான எதுவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. 

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கப்பல் ஏற்பாடு

ship-10022009.jpgஇந்நிலையில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் மோதலில் இடையில் அகப்பட்ட நோயாளிகள் மற்றும் காயம்பட்டவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கப்பல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

அந்த வகையில், முதல் கட்டமாக நேற்றையதினம் சுமார் 250 பேர்வரை சிகிச்சைக்காக  புதுமாத்தளனில் இருந்து இந்த கப்பலில் திருகோணமலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மோதலில் ஈடுபடுகின்ற இரு தரப்பினரின் இணக்கத்துடனேயே இந்தக் கப்பல் மூலமான பாதுகாப்பான வெளியேற்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்புக்கான பேச்சாளர் சரசி விஜேரட்ண பிபிசி செய்திச்சேவைக்குத் தெரிவித்திருந்தார். மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து அனுப்பப்பட வேண்டியவர்கள் இன்னும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் அங்கிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதுமாத்தளன் கடற்கரையிலிருந்து சுப்பல் வரையிலான கடற்பகுதியில் நோயாளர்களை மிகுந்த கவனத்துடன் அழைத்துச் செல்வதற்கு உள்ளுர் மீனவர்கள் தமது படகுகளை வழங்கி பெரிதும் ஒத்துழைத்ததாகவும் சர்வதேச செஞ்சிலுவைக்குழு தெரிவித்திருக்கின்றது.

நோயாளர்கள் அழைத்துச்செல்லப்பட்ட இந்தக் கப்பலில் மருத்துவர்கள், செஞ்சிலுவைக்குழு உறுப்பினர்கள் உட்பட பலரும் பிரயாணம் மேற்கொண்டதாகவும் சர்வதேச செஞ்சிலுவைக்குழு கூறியிருக்கின்றது.

அரசாங்கம் வேண்டுகோள்

மோதல் பிரதேசத்திலிருந்து தப்பிவரும் பொதுமக்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தாதிருப்பதற்கு, அவர்கள் மீது சர்வதேச சமூகம் அதி உச்ச அழுத்தத்தைக் கொடுக்க வேண்டுமென்று அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு சிவிலியன்கள் பாதுகாப்பாக வருவதற்கு இடமளிக்குமாறு, ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் புலிகளை வலியுறுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். விசுவமடு பகுதியில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து, நேற்று அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்த பொதுமக்கள் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும், இந்தச் சம்பவத்தையடுத்து அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு இந்த வேண்டுகோளை விடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நலன்புரி நிலையத்தில் வைத்துத் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், தொடர்ந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்த வண்ணம் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்துள்ளனர். நேற்றைய தினம் ஐந்து முதல் ஆறாயிரம் பேர் வரை எதிர்பார்க்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, மீட்கப்படாத பிரதேசங்களிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் பொதுமக்களை உள் வாங்குதற்கென நேற்று முதல் புதிய செயற்றிட்டம் நடை முறைப்படுத்தப்படுகின்றது. சிலிவியன்களும், பொதுமக்களும் பாதிப்படையாதிரு க்கும் வகையில், சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறிய அமைச்சர் தேவையானதும், பொருத்தமானதுமான பாதுகாப்பு வழிமுறையை இராணுவத்தினர் பின்பற்றுகிறார்கலென்றும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் மோசமடையும் மனித உரிமைகள் நிலைவரம்

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைவரம் குறித்து ஐ.நா.வின் சுயாதீன நிபுணர்கள் 10 பேர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக விமர்சனக்குரல்களுக்கான இடம் சுருங்கி வருவது தொடர்பாகவும் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களுக்கு எதிரான அடக்குமுறை அச்சம் குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

செயற்பாட்டுத் திறனற்ற விசாரணைகள் பற்றாக்குறையாக இருப்பதானது மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தண்டனையிலிருந்தும் விலக்குப் பெறும் நிலைமைக்கு வழிவகுத்து விடும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலையும் ஐ.நா. நிபுணர்கள் கண்டித்துள்ளனர்.

வடக்கு மோதல்களால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இடம்பெயர்ந்திருப்பதுடன், மோதலில் சிக்கியுமுள்ளனர். அதேசமயம், இந்தப் பொதுமக்கள் எதிர்நோக்கும் அவல நிலை குறித்தும் இழப்புகள் தொடர்பாகவும் ஐ.நா. நிபுணர்கள் அதிகளவு கவலையை வெளியிட்டுள்ளனர். அத்துடன், மனிதாபிமான உதவிகள் அந்த மக்களை சென்றடைவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்திருப்பதுடன் இது அடிப்படை பொருளாதார, சமூக உரிமைகளை மோசமாக மீறும் செயலெனவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இலங்கையில் கவனயீர்ப்பு நடவடிக்கைகள் இல்லை.

தற்போதைய வன்னி மனிதாபிமான நெருக்கடி பற்றி இலங்கையில் மாத்திரமல்ல, சர்வதேச ரீதியில் அனைவரும் தெரிந்து வைத்துத்தான் உள்ளனர். இலங்கையில் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்று மேற்குலக நாடுகள் பலவற்றில் புலம்பெயர்ந்தவர்களால் பல கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்தும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆனால், இத்தகைய போராட்டங்களினால் சர்வதேச ரீதியில் இலங்கை அரசுக்கு பலமான அழுத்தத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்றையும் காணமுடியவில்லை. தற்போதைய நிலையில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டங்களால் பாரியளவில் ஏதாவது சாதிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே மாறிக்கொண்டு வருகின்றது.

மறுபுறமாக தமிழகத்திலும் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் மிக விசாலமான அளவில் முன்னெடுத்துச் செல்லப்படுவதை அவதானிக்கின்றோம். ஊர்வலங்கள், கடையடைப்புகள், கண்டனக் கூட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள், தீக்குளிப்புகள் என பல்வேறு கண்டன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட போதிலும்கூட, இந்திய மத்திய அரசின் அழுத்தமான நெருக்கடிகள் எதையும் காணக்கூடியதாக இல்லை.

இத்தகைய அனைத்து கண்டன நடவடிக்கைகளும் இலங்கை அரசுக்கு யுத்த நிறுத்தத்துக்கான அழுத்தத்தை வழங்குகின்றனவே தவிர, புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மக்களை விடுவிப்பதற்கான கவனயீர்ப்பாக எந்த நடவடிக்கைகளும் நடைபெறவில்லை என சில அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

வெளிநாடுகளில் யுத்தம் நிறுத்தம் தொடர்பாக தமிழ் மக்கள் மூலமாக மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு நடவடிக்கைகளைப் போல இலங்கையில் அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய நடவடிக்கைகள் இதுவரை பாரியளவுக்கு மேற்கொள்ளப்படவில்லை.

குறிப்பாக இன்று தென்பகுதியை மையமாகக் கொண்டு பல தமிழ் அரசியல் கட்சிகள் காணப்படுகின்றன. மலையகப் பகுதிகளிலும் பல தமிழ் அரசியல் கட்சிகள் காணப்படுகின்றன. ஆனால்,  இவைகள் திட்டமிட்ட அடிப்படையில் கவனயீர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக காணமுடியவில்லை.  

அண்மைக் காலங்களில் இலங்கையில் சிறிய சிறிய விடயங்களுக்கெல்லாம் பாரியளவிலான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். அரசியல்கட்சிகள், எதிர்க்கட்சியினர்,  ஊடக அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகள் என கொழும்பில் கோட்டைப் புகையிரத நிலையம், லிப்டன் சுற்றுவட்டம் போன்ற பிரதேசங்களில் மாத்திரமல்லாமல், கொழும்பை அண்மித்த பிரதேசங்களிலும் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகள், ஊர்வலங்களை நடத்தியதை நாம் அறிவோம்.

இந்த வன்னி மனிதாபிமான நெருக்கடியின் போது ஏன் இத்தகைய அமைப்புகள் மௌனம் சாதிக்கின்றன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாமல் தமிழ்க் கட்சிகள் அமைப்புகள் கூட ஒன்றிணைந்து ஏன் பாரிய கவனயீர்ப்பு ஊர்வலங்களையோ போராட்டங்களையோ நடத்த முன்வரவில்லை என்பது சிந்திக்க வேண்டியதாகவேயுள்ளது. கடந்த வாரத்தில் ஒரு சில கவனயீர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும்கூட, ஊடகங்களிலும் அவை முக்கியத்துவப்படுத்தப்பட்டதாக இருக்கவில்லை. எனவே,  இலங்கையினுள் அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் பாரிய அழுத்தத்தை கொடுக்கக்கூடிய வகையில் கவனயீர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை சிந்திக்கக் கூடிய விடயம் என்பதை அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, அரசு யுத்தத்தை நிறுத்தமாட்டோம் என பிடிவாதமாக இருக்கும் நிலையில் வன்னியிலிருந்து மக்களை மீட்பதற்கு இலங்கையில் தமிழ்க்கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் பேதங்களை மறந்து இரு தரப்பாருக்கும் அழுத்தங்களைக் கொடுக்காவிடின் வன்னி மக்களின் நிலைமை மேலும் மேலும் பரிதாபகரமாக மாறக்கூடியதாகவே அமைந்துவிடும்.

மத்தியஸ்தத்துக்கு தயார்; கிழக்கு திமோர் ஜனாதிபதி

இலங்கையில் முன்னெடுக்கப்படும் யுத்தம் நிலையான சமாதானத்தை தேடித்தராதென தெரிவித்திருக்கும் கிழக்குத் திமோர் ஜனாதிபதி ஜோஸ் ராமொஸ் ஹோர்டா, சமாதான இணக்கப்பாட்டுக்கு எந்தவழியிலாவது பங்களிப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

கசப்பான முடிவுக்காக எந்தத் தரப்பினராலும் இந்த யுத்தம் முன்னெடுக்கப்பட்டாலும் நீண்டகால சமாதானத்தை அது ஏற்படுத்த மாட்டாது என்று நோபல் பரிசு பெற்றவரான ஜோஸ் ராமொஸ் ஹோர்டா கூறியுள்ளார்.

உள்நாட்டு யுத்தம் பாரிய அழிவையே ஏற்படுத்தும் என்று கவலை தெரிவித்துள்ள கிழக்குத் திமோர் ஜனாதிபதி, ஏற்கெனவே துன்பமடைந்திருக்கும் மக்களை தொடர்ந்திருக்குமாறோ அல்லது அவர்களின் விருப்பத்திற்கு எதிராக செல்லுமாறோ நிர்ப்பந்திக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார். அத்துடன், பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வுகாண முன்வருமாறு விடுதலைப்புலிகளை அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

கிழக்கு திமோர், ஜனாதிபதியின் அறிக்கையை கிழக்கு திமோர், இந்தோனேசியா அக்ஷன் நெற்வேர்க் வெளியிட்டுள்ளது.

முல்லை. குருவிக்குளம் சந்தி நேற்று படையினர் வசம்

mi24_2601.jpgமுல்லைத் தீவு, குருவிக்குளம் சந்தியை பாதுகாப்புப் படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.

முல்லைத்தீவு முழுவதையும் புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் முன்னேறிவரும் இராணுவத்தின் 57வது படைப்பிரிவினர் இந்தப் பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் இந்த குருவிக்குளம் பிரதேசம் அமையப்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான ஆயுதங்களையும் படையினர் மீட்டெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரி – 56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் துப்பாக்கி ரவைகள் மற்றும் பல்குழல் இயந்திர துப்பாக்கி ரவைகள் முழுமையாக நிரப்பப்பட்ட கொள்கலன் ஒன்றையும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இராணுவத்தினர் மீட்டெடுத்துள்ளனர்.

குருவிக்குளம் மேற்கு பிரதேசத்தை முழுமையாக கைப்பற்றிய இராணுவத்தின் 57வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தலைமையிலான படைப்பிரிவினர் இந்தப் பிரதேசத்தில் தொடர்ந்தும் பாரிய தேடுதல்களை மேற்கொண்டு வருவதாக பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, முல்லைத்தீவில் எஞ்சியுள்ள புலிகளின் பிரதேசங்களை நோக்கி பாதுகாப்புப் படையினர் முன்னேறி தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்த இராணுவப் பேச்சாளர் அங்கிருந்து பெருந்தொகையான ஆயுதங்களையும் மீட்டெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடமேல், மத்தி தேர்தல்: பிரசாரப் பணிகள் இன்று நள்ளிரவுடன் முடிவு; 18000 பொலிஸார் கடமையில்

election_.jpgவடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ள அதே வேளை சகல தேர்தல் பிரசாரப் பணிகளும் இன்று  நள்ளிரவு (11) 12.00 மணியுடன் முடிவடைவதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

18 ஆயிரம் பொலிஸார்

தேர்தல் பாதுகாப்புக் கடமைகளில் 18 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளதோடு அவர்கள் நேற்று (10) முதல் தேர்தல் நடைபெறும் 5 மாவட்டங்களுக்கும் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இது தவிர இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் இருந்து மட்டுமன்றி அண்டிய மாவட்டங்களில் இருந்தும் பொலிஸார் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார். இவர்கள் வாக்களிப்பு நிலையங்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் வீதிகள் என்பவற்றில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படுவர். இவர்கள் 15 ஆம் திகதி வரை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அரச ஊழியர்கள்

தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படும் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் 12ஆம் திகதி முதல் கடமையைப் பொறுப்பேற்க உள்ளனர். இவர்கள் 13ஆம் திகதி வாக்களிப்பு இடம்பெறும் பாடசாலைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் கண்காணிப்பு

தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் பெப்ரல், தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் அடங்கலான ஐந்து கண்காணிப்பு அமைப்புகள் ஈடுபடவுள்ளன. பெப்ரல் அமைப்பு 12ஆம் திகதி முதல் அப்பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் கிங்ஸ்லி ரொட்ரிகோ தெரிவித்தார். இம்முறை 3 ஆயிரம் பேர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளதோடு இதில் 600 பேர் நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார்.

2247 பேர் போட்டி

இம்முறை தேர்தலில் மத்திய மாகாணத்தில் இருந்து 56 பேரும், வடமேல் மாகாணத்தில் இருந்து 50 பேருமாக 106 பேர் தெரிவு செய்யப்பட உள்ளனர். 17 கட்சிகளும் 43 சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிட உள்ளன. 2247 பேர் களத்தில் குதித்துள்ளனர்.

மத்திய மாகாணத்தில் 15 கட்சிகளும் 26 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதோடு இம்மாகாணத்தில் 17 இலட்சத்து 46,449 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இங்கு 1389 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வடமேல் மாகாணத்தில் 15 கட்சிகளும் 17 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட உள்ளன. இங்கு 16 இலட்சத்து 61 ஆயிரத்து 733 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இங்கு 1209 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

வெளிநாட்டு உறவுகளில் புதிய கொள்கையை பின்பற்றப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு

hillary.jpgஉலக நாடுகளுடனான உறவில் புதிய கொள்கையொன்றைக் கடைப்பிடிக்க அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தீர்மானித்திருப்பதாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அண்மைய வருடங்களாக விரிசலடைந்திருந்த ரஷ்யாவுடனான உறவை மீண்டும் புதுப்பிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ள பைடன் ஈரானுடன் பேச்சுகளை ஆரம்பிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல விவகாரங்களை சாதகமான அணுகுமுறையினூடாக கையாள்வதற்கு அமெரிக்கா தயாராகவுள்ள அதேவேளை நட்பு நாடுகளும் இவ்வாறான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென எதிர்பார்ப்பதாக பைடன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தானை தவிர்த்து ஆப்கானிஸ்தானில் எந்தவொரு தந்திரோபாய வெற்றியையும் அடைய முடியாதென எச்சரித்துள்ள பைடன் இப்பிராந்தியத்தின் நிலைமை மோசமடைந்து வருவது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல அனைத்து நாடுகளுக்குமே பாதுகாப்பு அச்சுறுத்தலை தோற்றுவிக்குமென தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் மூனிச் நகரில் நடைபெற்று வரும் பாதுகாப்பு மாநாட்டில் சர்வதேச தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் மத்தியில் உரையாற்றிய பைடனின் உரையில் ஒபாமா நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை அணுகுமுறை, காலநிலை மாற்றம் மற்றும் உலக பொருளாதார நெருக்கடி போன்ற முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

உலக நாடுகளுடனான உறவில் புதிய அணுகுமுறையொன்றைக் கடைப்பிடிப்பதென்ற புதிய நிர்வாகத்தின் தீர்மானத்துடன் நான் ஐரோப்பாவுக்கு வந்துள்ளேன். உலக நாடுகளின் விவகாரங்களை உள்வாங்கி அதனை அவதானித்து இது தொடர்பில் ஆலோசனை நடத்துவோம். அமெரிக்காவுக்கு உலகம் தேவை. உலகத்திற்கு அமெரிக்கா தேவையென கருதுகிறேன். எமது அரசாங்கம் மிக உயர்ந்த இலக்குகளைக் கொண்டுள்ளது. எமது நாட்டுக்கு வெளியில் படைப்பலத்தை பிரயோகிக்காமல் ஜனநாயக ரீதியில் விவகாரங்களைக் கையாள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா தொடர்பில் அதனுடனான உறவை மீள சீரமைக்க ஜனாதிபதி ஒபாமா விரும்புகிறார். பல விவகாரங்கள் தொடர்பில் எம்மால் இணைந்து பணியாற்ற முடியும். ஆனால், ஒவ்வொரு விடயத்திலும் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து செயற்படுவது சாத்தியமற்றது. சில விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆனால், பொதுவாக எமக்கிடையில் இணக்கம் ஏற்படும் விடயங்களில் நாம் தொடர்ந்து இணைந்து செயற்பட வேண்டும்.

மத்திய ஐரோப்பாவில் ஏவுகணைப் பாதுகாப்பு கவசத்தை அமைக்கும் திட்டத்தை அமெரிக்கா தொடர்ந்து முன்னெடுக்கும். இதேவேளை, ஈரானின் நடவடிக்கைகளுக்கேற்ப அந்நாட்டுடனான தொடர்புகள் பேணப்படும். நேட்டோ கூட்டமைப்பு மற்றும் ரஷ்யாவுடன் நாம் அதிகளவான ஆலோசனைகளை நடத்தும் அதேவேளை எமது நட்பு நாடுகளிடமிருந்து அமெரிக்கா உதவிகளை எதிர்பார்க்கும். உதாரணத்திற்கு குவாண்டனாமோ தடுப்பு முகாம் மூடப்படும்போது அங்கிருக்கும் கைதிகளை ஏனைய நாடுகள் ஏற்றுக்கொள்வது போன்ற விடயங்களில் நாம் ஏனைய நாடுகளுடன் தீவிர ஆலோசனைகளை நடத்துவதுடன் அவற்றிடமிருந்து உதவிகளையும் எதிர்பார்ப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு இன்று புதன்கிழமை அறுவை சிகிச்சை

0302-karunanidhi.jpgமுதுகுவலி குறையாத காரணத்தினால் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு இன்று (புதன்கிழமை) அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது என டாக்டர்கள் குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் காணப்படுவதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் முதுகில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக 15 நாட்களுக்கு மேலாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வலி குறையாத காரணத்தினால் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்கப்பட்டு, அவரது தண்டுவடத்தில் ஏற்பட்டுள்ள வலியை சரி செய்வதற்கு அறுவை சிகிச்சை செய்வதென்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்துள்ளார்கள்.

இதுகுறித்து 2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து வந்த டாக்டர் ஏ.ஜெய்ஸ்வாலும், மற்ற டாக்டர்களும் கலந்து பேசி அறுவை சிகிச்சை செய்வதென்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். இந்த அறுவை சிகிச்சை இன்று (11.2.2009) புதன்கிழமை  நடைபெற உள்ளது. முதல்-அமைச்சர் கருணாநிதியின் நலனை கவனிக்க விசேட டாக்டர்களைக் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு முதல்-அமைச்சர் கருணாநிதி விரைவில் நலம் பெற்றிடும் வகையில் பார்வையாளர்கள் கண்டிப்பாக ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காயமடைந்த நோயாளர்கள் கப்பல் மூலம் திருமலைக்கு கொண்டு வருகை

ship-10022009.jpgவன்னியில் இருந்து நேற்று ஒரு தொகுதி நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாத்தளன் கடற்பரப்பில் நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் கப்பல் தரித்துநின்று நோயாளர்களை ஏற்றிச் சென்றுள்ளது.

நோயாளர்கள் படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு கப்பலில் ஏற்றப்பட்டுள்ளனர்.  ‘ஓசின்’ எனும் கப்பலே மாத்தளன் கடற்பரப்புக்கு வந்து நோயாளர்களை ஏற்றிச் சென்றுள்ளது. நோயாளர்களுடன் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் வெளியேறியுள்ளனர்.கப்பலில் நோயாளர்கள் ஏற்றப்படுகின்றனர்.

கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்ட நோயாளர்கள் திருமலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் தஸநாயக்க கூறினார்.

இந்திய பொதுத் தேர்தலுக்கு முந்தைய கடைசி கூட்டம் – மக்களவை நாளை கூடுகிறது

lok-saba.jpgஇந்திய பொதுத் தேர்தலுக்கு முந்தைய மக்களவையின் கடைசி கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இதய அறுவை சிகிச்சைக்குப் பின் ஓய்வெடுத்து வருவதால் இந்த கூட்டத் தொடரில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளமாட்டார் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவையின் பதவிக் காலம் மே மாதம் முடிகிறது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், 14வது மக்களவையின் கடைசி கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உரையாற்றுகிறார்.

வழக்கமாக பிப்ரவரி இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தேர்தல் நடக்க உள்ளதால், புதிய அரசு அமைந்த பிறகே முழுமையான பட்ஜெட்  தாக்கல் செய்யப்படும். அது வரை அரசின் செலவுக்காக 16ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 14வது மக்களவையின் கடைசிக் கூட்டம் என்பதாலும் தேர்தலுக்கு முந்தைய கூட்டத் தொடர் என்பதாலும் மக்களின் கவனத்தை கவர, முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கைப் பிரச்சினையும் எடுத்துக் கொள்ளப்படலாமென கருத்துக்கள் தெரிவிக்கின்றன. 

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் 26ம் தேதி வரை நடக்கிறது. இதில் விடுமுறை போக, 10 நாட்களுக்கு நாடாளுமன்றம் செயல்படும்.

இப்போதைய மக்களவையின் கடைசிக் கூட்டத் தொடர் என்பதால் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பற்றிய மதிப்பீடுகளையும் கூற  உறுப்பினர்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்படும். கூட்டத்  தொடரை அமைதியாக நடத்த எல்லா எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு அல்-கய்டா எச்சரிக்கை

al-qaeda-yazid.jpgபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்தியாவை பின் லேடன் தலைமை‌யிலான அல்-கய்டா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் ம‌ற்று‌ம் பாகிஸ்தானில் செயல்படும் அல்-கய்டா பயங்கரவாத அமைப்பின் முஸ்தஃபா அபு யாஸீத் இவ்வாறு விடுத்துள்ள எச்சரிக்கை அடங்கிய வீடியோவை பி.பி.சி. தொலைக்காட்சி வெளியிட்டது.

இந்த 20 நிமிட வீடியோவில் யாஸீத் அரபு மொழியில் கூறியது: “நாங்கள் முஸ்லிம் நாடுகள் எங்கும் உள்ள முஜாஹிதீனையும், தற்கொலைத் தாக்குதல் பயங்கரவாதிகளையும் உங்களை எதிர்கொள்ள அழைத்து வருவோம். உங்கள் பொருளாதார மையங்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி அவற்றை மண்ணோடு மண்ணாக்குவர்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அதில் அவர் கூறிய போது, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவை கொலை செய்ய அல்-கய்டா தலைவர் ஐமான் அல்-ஸவாஹிரி என்பவர் முடிவெடுத்தார் என்றார்.

பாகிஸ்தான் அரசு மற்றும் அதன் ராணுவத்திற்கு‌ம் யாஸீத் கடும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.

இந்த வீடியோ ஒளிபரப்பினால் பாகிஸ்தான் முன்பு வெ‌ளி‌யி‌ட்ட செய்தி ஒன்றும் பொய் என்று தெரியவந்துள்ளது. அதாவது தற்போது இந்த மிரட்டலை வெளியிட்டுள்ள அபு யாஸீத் என்பவர் 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று பாகிஸ்தான் வெளியுலகிற்கு அனுப்பிய செய்தி பொய்யாகியுள்ளது.

அல் – காய்தா மிரட்டலை சந்திக்க தயார் : ஏ.கே.அந்தோணி

மும்பையில் நடத்தப்பட்டதை போன்ற தாக்குதல் மீண்டும் நடத்தப்படும் என இந்தியாவுக்கு அல் – காய்தா மிரட்டல் விடுத்துள்ள நிலையில், எத்தகைய மிரட்டலையும் சந்திக்க இந்தியா தயாராக இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் மும்பையில் நடத்தப்பட்டதை போன்ற தாக்குதல் மீண்டும் நடத்தப்படும் என இந்தியாவுக்கு என இந்தியாவிற்கு ஆப்கானிஸ்தான் ம‌ற்று‌ம் பாகிஸ்தானில் செயல்படும் அல் – காய்தா பயங்கரவாத அமைப்பின் முஸ்தஃபா அபு யாஸீத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில்  செய்தியாளர்களை சந்தித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியிதம் இந்த மிரட்டல் குறித்து கேட்டபோது,” அல் – காய்தா அமைப்பு இந்தியாவுக்கு விடுத்துள்ள மிரட்டல் குறித்து நான் முழுமையாக பார்க்கவில்லை.இருப்பினும் எந்தப் பகுதியிலிருந்தும் நாட்டுக்கு விடுக்கப்படும் பாதுகாப்பு மிரட்டலை சந்திக்க இந்தியா சந்திக்க தயாராக இருப்பதாகவும், அதை சமாளிக்கும் திறமையும் நம்மிடம் உண்டு ” என்று பதிலளித்தார்.