03

03

முழு அடைப்பு போராட்டத்திற்கு பிஜேபி ஆதரவு.

eela-ganash.jpgஇலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நாளை  நடத்த உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு பிஜேபி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் இல.கணேசன் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் 4ஆம்  தேதி நடத்துவதாக அறிவித்துள்ள முழு கடையடைப்புக்கு பிஜேபி ஆதரவு  தருகிறது.

தற்போது பத்திரிகைகளில்  வரும் செய்திகள், இலங்கையில் தவிக்கும் தமிழர்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு நிரந்தரமாக சமஉரிமை பெற்றுத்தரவும் ஒவ்வொருவரும் தன் பங்குக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று கருதுகிறார்கள் என்பதை உணர்த்துகிறது. சிலர் உணர்ச்சிவரப்பட்டு தங்களை  மாய்த்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். செய் அல்லது செத்து மடி என்பது ஏற்புடையதல்ல. மாறாக “வாழ்ந்து லட்சியத்தை அடைந்து காட்டு’ என்பதில் நாம் உறுதியுடன் இருக்க வேண்டும்.

அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் பங்குக்கு செய்ய வேண்டியவைகளை செய்தும், மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசின் செயல்பாடு இந்தவிஷயத்திலும் திருப்திகரமாக இல்லை. எனவே மக்கள் அனைவரும் பங்கேற்கும் ஒரு சாத்வீக போராட்டம் நடத்துவதால் மக்களுக்கு தங்களது உணர்வுகளை வெளியிட ஒரு வடிகால் கிடைக்கும். இந்த அறிவிப்பை வெற்றிகரமாக்கிட மக்கள் தானாக முன் வர வேண்டும். தங்களது ஆதரவை ஒன்றுபட்டு மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும்.

பிஜேபியின் தொண்டர்கள் இந்த முழு அடைப்புக்கு ஒத்துழைப்பார்கள். மக்கள் தானாக முன் வந்து தங்களது உணர்வை வெளிப்படுத்தும் வாய்ப்பு இது என்பதால் கட்சியின் தொண்டர்கள் தெருவில் இறங்கி எவரையும் வற்புறுத்த மாட்டார்கள்.
இது அச்சுறுத்தி வெற்றிகரமாக்கிய போராட்டம் என்கின்ற அவப்பெயர் வராது, தானாக வெற்றி பெறுவது சிறப்பாகும்.

ஆனால் அதே நேரத்தில், மாநில அரசும் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி ஒடுக்க முனைவதும் கூடாது. எந்தவிதமான வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாது. அமைதி காக்கும் பணியினை அரசு செய்யட்டும். ஆனால் போராட்டம் வெற்றி பெற்றால் அதன் காரணமான அரசியல் லாபம் யாருக்குப் போகும் எனக் கணக்கிட்டு தடுக்க முனைதல் கூடாது என அரசை வற்புறுத்துகிறேன். தமிழர்கள் அனைவரும் இலங்கை தமிழர்களை காக்கவும், அவர்களுக்கு சம உரிமை பெறவும் முனையும் விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மன்னார் ஆஸ்பத்திரிக்கு 48 நோயாளர் மாற்றம்

வன்னிப் பகுதியில் விமான மற்றும் ஷெல் தாக்குதல்களால் படுகாயமடைந்த நிலையில் வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் 48 நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக 16 அம்புலன்ஸ்களில் மன்னார் வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.  நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் இவர்கள் அம்புலன்ஸ்கள் மூலம் மன்னாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மன்னார் ஆஸ்பத்திரியில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதுடன் பொதுமக்களும் பொது அமைப்புகளும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்துவருகின்றனர். கடந்த வாரமும் 28 நோயாளர்கள் வவுனியாவில் இருந்து மன்னார் ஆஸ்பத்திரிக்கு இடமாற்றப்பட்டிருந்தனர்.

இதேவேளை, வன்னி யுத்தத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு அவசர சிகிச்சையளிப்பதற்கு பேசாலை அரசினர் வைத்தியசாலை,முருங்கன் மாவட்ட வைத்தியசாலை என்பவற்றையும் தயாராக இருக்குமாறு மன்னார் சுகாதார பணிமனை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஈராக் மாகாண சபை தேர்தல் முடிவுகள் அடுத்த வாரம்

iraq-elc.jpgஈராக்கில் நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலின் முடிவுகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த தேர்தல் அலுவலகம் முழு முடிவுகளையும் அறிவிக்கப் பல வாரங்கள் தேவைப்படும் எனத் தெரிவித்தது. புதுவகையான தேர்தல் முறை என்பதால் வாக்குகளை எண்ண பல நாட்கள் எடுக்கும். மற்றும் எண்ணுவதில் பெரும் சிக்கல்களும் உள்ளதென்றும் செயலகம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை நடந்த மாகாண சபைத் தேர்தல்களில் 15 மில்லியன் மக்கள் வாக்களித்தனர்.

440 ஆசனங்களுக்கு 14 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 400 கட்சிகள் களத்தில் குதித்தன. ஈராக்கிற்கான ஐ. நா. வின் தூதுவர் முஸ்தபாமிஸ்டிரா இதுபற்றிக் கூறுகையில் :- ஈராக்கில் இறுதியாக நடந்த தேர்தல் முடிவுகள் கணக்கிடப்பட்ட விதம் பூரண திருப்தியில்லை. விகிதாசாரம் முறையாகப் பேணப்படவில்லை.எனவே இம்முறை இந்தத் தவறுகள் இடம்பெறாமல் தவிர்க்க பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். மீள் புனரமைப்புப் பணிகள், வெளிநாட்டு உதவிகள் என்பவற்றை மாகாண சபை முன்னெடுப்பதுடன், ஆளுநர்களையும் நிர்வாகமே தெரிவு செய்கின்றது. 2.5 பில்லியன் ரூபா புனரமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தை சர்வதேசம் முழுமையாக தடைசெய்யவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை வலியுறுத்தல்

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை சர்வதேசம் முழுமையாக தடைசெய்ய வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியத்திடம் வலியுறுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். ஐரோப்பிய விஐயத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் மாலை நாடு திரும்பிய வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் ஊடகவியலாளர்களிடம் மேலும் கூறியதாவது; “எனது இந்த ஐரோப்பிய விஜயத்தின்போது நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு விரிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன். யுத்தவெற்றியைத் தொடர்ந்து வடக்கில் துரித அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக சர்வதேசத்திற்கு தெளிவு படுத்தியுள்ளேன். பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் விடயத்தில் எந்த நாடும் தனித்துச் செயற்பட முடியாது. பயங்கரவாதச் சவாலை எதிர்கொள்ளும் சகலநாடுகளும் ஒருமித்துச் செயற்படவேண்டும்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை உலகின் சில நாடுகள் மட்டுமே தடைசெய்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் இன்னமும் அதனைச் செய்யவில்லை. தாமதமின்றி அதனை தடைசெய்வதன் மூலம் பயங்கரவாதம் மீண்டும் தலையெடுப்பதை முற்றாகத் தடுக்க முடியும் என்பதை ஐரோப்பிய ஒன்றியத்திடம் வலியுறுத்தியுள்ளேன்’ எனவும் அவர் தெரிவித்தார்.

நோயாளர்களை அழைத்துவர எந்தவேளையிலும் அரசு தயார் – அமைச்சர் சமரசிங்க

mahinda-samarasinga.jpgபுதுக் குடியிருப்பு ஆஸ்பத்திரியில் சிக்கியுள்ள 500 நோயாளிகளையும் மேலதிக சிகிச்சைக்காக அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்து வருவதற்கு சகல வசதிகளும் அளிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக அனர்த்த நிவாரண மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார். மேலதிக சிகிச்சைக்காக அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவதற்கென 500 நோயாளர்கள் காத்திருப்பதாகவும் இவர்களை அழைத்து வருவது தொடர்பாக அரசாங்கத்துடனும் புலிகளுடனும் பேசிவருவதாகவும் ஐ. சி. ஆர். சி அறிவித்துள்ளது.

இது குறித்து வினவிய போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், வன்னியில் உள்ள நோயாளிகளை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்து வர அரசாங்கம் சகல வசதிகளும் செய்துள்ளதோடு அம்பிலன்ஸ்களும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். கடந்த இரு தினங்களுக்கு முன் 226 நோயாளிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டதாகவும் அவர் கூறினார். இதற்கு முன்பு சில நோயாளர்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சிகிச்சைக்காக வந்து சிகிச்சை பெற்ற பின் மீண்டும் வன்னிக்குச் சென்றதாகவும் புதுக் குடியிருப்பு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் வர விரும்பினால் அதற்கு உதவ அரசு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியில் உள்ள 500 நோயாளிகளுக்கும் ஐ. சி. ஆர். சி. உதவி வருவதாகவும் 100 ஐ.சி.ஆர்.சி உறுப்பினர்கள் அங்கு உள்ளதாகவும் ஐ. சி. ஆர். சி பேச்சாளர் சரசி விஜேரத்ன கூறினார்.  இவர்களை அழைத்து வருவது குறித்து அரசுடனும் புலிகளுடனும் தினமும் பேசி வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஈழப் பிரச்சனையில் ஆதாயம் தேடும் இயக்கங்கள்: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் சில இயக்கங்கள் இலங்கை பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைக்கு உறுதுணையாக செயல்படாமல், அதற்கு நேர்மாறாக அரசியல் லாபத்திற்காக ஆதாயம் தேடுகின்றனர் என்று மத்திய அமைச்சர் வாசன் கூறியுள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் ராஜீவ்காந்தி சிலையை வன்முறையாளர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தேசவிரோதிகள் மற்றும் தேசத்தின் ஒற்றுமையை சீர்குலைப்பவர்கள். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதில் மத்திய, மாநில அரசு மற்றும் காங்கிரஸ் கட்சியும் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சில இயக்கங்கள் இலங்கை பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைக்கு உறுதுணையாக செயல்படாமல் அதற்கு நேர்மாறாக அரசியல் லாபத்திற்காக ஆதாயம் தேடுகின்றனர். இது தமிழக மக்களிடம் ஒருபோதும் எடுபடாது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் மத்திய அரசின் சாதனைகள் மூலம் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்றார்.

சாத்தான்களின் செவிகளில் மனித உரிமை வேதம் – தங்கள் வேள்விக்கு மக்களை பலியிட சிங்கமும் புலியும் தயார் : த ஜெயபாலன்

War in Wanni - Photo_Puthinamமகாபாரதக் கதையில் அனைத்தையும் வைத்து சீட்டாடி நிர்க்கதியான தருமன் இறுதியில் தனது மனைவியைப் பணயம் வைத்து சீட்டாடித் தோற்றது என்பது புராணக் கதை. இப்போது இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறுகின்ற இந்த யுத்தத்தில் ஒட்டுமொத்த வன்னி மக்களும் பணயம் வைக்கப்பட்டு உள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு எனப் பல்வேறு சர்வதேச அமைப்புகள் தொடர்ச்சியாக அழுத்தங்களைக் கொடுத்த போதும் அவற்றை முற்று முழுதாக உதாசீனப்படுத்திவிட்டு தங்கள் பாட்டுக்கு தங்கள் நோக்கங்களுக்காக இரு தரப்பும் யுத்தத்தைத் தொடர்கிறது. நிர்க்கதியான மக்கள் என்பதற்கு உண்மையான உதாரணம் வன்னி மக்கள் என்பதற்கு அப்பால் அதற்கொரு விளக்கம் வேண்டியதில்லை.

சார்ள்ஸ் டார்வினின் 200வது பிறந்த தினம் பெப் 12ல் நினைவுகூரப்படும் காலத்தில் யுத்தப் பிரியர்களான சிங்கமும் புலியும் ‘தக்கன பிழைக்கும்’ விதியை வன்னி மக்களின் மத்தியில் வைத்து பரீட்சித்துப் பார்க்கத் முனைந்துள்ளன. அனைத்து யுத்த விதிகளையும் மீறி கடந்த பல மாதங்களாக நடைபெறும் இந்த யுத்தம் தற்போது இந்த அத்தியாயத்தின் க்ளைமக்ஸிற்கு வந்துள்ளது. துரதிஸ்ட வசமாக இங்கு கதாநாயகர்கள் யாரும் இல்லை. ஆபத்தில் கைகொடுக்க கிருஸ்ணபரமாத்மாவும் இல்லை. இரு பக்கத்திலும் நிற்பது சாத்தான்கள் மட்டுமே. இவர்களுக்கு மத்தியில் அப்பாவி வன்னி மக்கள் ஒன்றல்ல இரண்டல்ல 250 000 பேர் வரை மாட்டிக் கொண்டு உள்ளனர். குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் வயோதிபர்கள் எவ்வித வேறுபாடும் இன்றி தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்களுக்குள் வெட்டைவெளியில் விடப்பட்டு உள்ளனர். இந்த ஆபத்தான சூழலில் குழந்தைகள் பிரசவிக்கின்றன. மழலைகள் தங்கள் உயிரைக் காக்க அழுதழுது ஓடுகின்றன. மரணங்கள் தொடர்கிறது. அன்புக்குரியவர்களை இழந்த உறவுகள் துடிக்கின்றன.

செப்ரம்பர் 11 அன்று தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க இரட்டைக் கோபுரங்களில் ஒன்று உலகமே பார்த்து நிற்க யாருமே எதுவும் செய்ய வியலாத கையறு நிலையில் நிற்க சில மணி நேரங்களில் சரிந்து வீழ்ந்தது. இறுதிநேரத்தில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அந்த மக்கள் தவித்த தவிப்பு கையறு நிலையில் உலகமே அதனைப் பார்த்து நின்றது. அந்த மனித அவலம் அதனிலும் பல மடங்காக புதுக்குடியிருப்பில் நிகழ்ந்துவிடும் என்ற அபாயம் இப்போது ஏற்பட்டு உள்ளது. ஆனால் இந்த அவலத்தை ஏற்படாமல் தடுக்க சகல சந்தர்ப்பங்களும் உண்டு. அப்படி இருந்தும் ஒரு மனித அவலம் ஏற்படுத்தப்படுமானால் அதனை தமிழ் மக்கள் என்றைக்கும் மன்னிக்கவோ மறக்கவோ மாட்டார்கள்.

சர்வதேச சமூகம் விரைந்து செயற்பட வேண்டும். அதற்கான நடைமுறைச்சாத்தியமான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட வேண்டும். இன்றுள்ள நிலையில் வெறும் அழுத்தங்கள் மட்டும் போதாது. செயற்பாடுகள் மிக அவசியம்.

வன்னி மக்கள் பணயம் வைக்கப்பட்டு உள்ள இந்த நிலையிலும் அந்த மக்களை யுத்தப் பகுதிகளில் இருந்து உடனடியாக வெளிக்கொண்டு வருவதைக் கோருவதை விட்டுவிட்டு புலிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஜனவரி 31ல் பிரித்தானிய தமிழர் பேரவையும் தமிழ் இளையோர் அமைப்பும் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதில் 50 000 – 100 000 பேர் வரை கலந்தகொண்டனர். சகல அரசியல் முரண்பாடுகளையும் மறந்து வன்னி மக்களைக் காக்க அவர்கள் திரண்டனர். அங்கு ஒரு சில புலி ஆதரவுக் குரல்களும் வே பிரபாகரனின் படங்களும் கொண்டு வரப்பட்டாலும் அவற்றை அப்புறப்படுத்தும் படி நிர்ப்பந்திக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தது.  யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்பதே அவ்வூர்வலத்தில் கலந்த கொண்டவர்களின் பிரதான கோரிக்கையாக அமைந்தது. ஆனால் ஏற்பாட்டாளர்களான பிரித்தானிய தமிழர் பேரவையினது செய்திக் குறிப்பு முற்றிலும் விடுதலைப் புலிகளின் ஆதரவு நிலையை எடுத்து உள்ளது. சர்வதேச அமைப்புகள் அனைத்துமே வன்னி மக்களை புலிகள் தடுத்து வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டி உள்ள நிலையில் தங்கள் புலியாதரவு நிலைப்பாட்டினால் பிரித்தானிய தமிழர் பேரவை ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை ஒரு வகையில் பாதிக்கச் செய்துள்ளனர்.

இங்கு பிரித்தானிய தமிழர் போறம் புலிகளுக்கு வக்காலத்து வாங்க அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் ஈபிடிபி புலிகளுக்கு எதிராக ஊர்வலம் நடாத்தி உள்ளது. புலிகள் பணயக் கைதிகளாக உள்ள தமிழ் மக்களை விடுவிக்க வேண்டும் என்று அந்த ஊர்வலத்தில் கோரப்பட்டு உள்ளது.

தடுத்து வைக்கப்பட்டு இருப்பது வன்னி மக்கள். அவர்கள் ஒரு மனித அவலத்தை ஒவ்வொரு விநாடியும் எதிர்நோக்கி உள்ளனர். அவர்களுக்காக யாழிலும் புலத்திலும் உள்ள மக்களின் மனங்கள் துடிக்கின்றது. ஆனால் அதனை பிரித்தானிய தமிழர் பேரவை, ஈபிடிபி என்பன தங்கள் குறுகிய அரசியல் நலன்களின் அடிப்படையில் பயன்படுத்த முற்பட்டு உள்ளன. பிரித்தானிய  தமிழர் பேரவைக்கு புலிகளின் மனித உரிமை மீறல்கள் தெரியவில்லை. ஈபிடிபிக்கு தனதும் தனது அரசினதும் மனித உரிமை மீறல்கள் தெரியவில்லை. இந்த ‘செலக்டிவ் அம்னீசியா’ காரர்கள் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க முற்பட்டதே தமிழ் மக்களின் இந்த அவலத்திற்கு காரணம்.

அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எப் தலைவர் சிறீதரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், மற்றும் கிழக்கின் முதலமைச்சர் பிள்ளையான் பா உ முரளீதரன் இவர்கள் ஏன் இந்த வன்னி மக்களின் பாதுகாப்புப் பற்றி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. புலிகள் பயங்கரவாதிகள் என்று குற்றம்சாட்டும் இந்தத் தலைவர்கள் புதுக்குடியிருப்பில் சிக்கித் தவிக்கும் மக்களைக் கருத்தில் எடுக்காமல் தங்களுடைய அரசாங்கம் நடத்தும் இந்த யுத்தம் பற்றி மௌனமாக இருக்கிறார்கள். அங்கு மக்கள் உயிரிழக்கும் போதெல்லாம் அதனைப் புலிகளின் தலையில் கட்டி தப்பித்துக் கொள்வதைத் தவிர இவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த வன்னி மக்களுக்கு ஏற்படப் போகும் அவலத்தை தடுத்து நிறுத்துவதற்காகவேனும் இவர்கள் குரல் கொடுக்காவிட்டால் இவர்கள் செய்வது அரசியல் விபச்சாரம் என்று குறிப்பிடுவது மிகையல்ல. இது இவர்களுக்கு மட்டுமல்ல புலம்பெயர் தேசங்களில் உள்ள இவர்கள் ஏஜென்டுகளுக்கும் பொருந்தும்.

ஏற்படப் போகும் இந்த அவலத்திற்கு புலிகளும் சம பொறுப்புடையவர்கள். அவர்கள் ஒன்றும் புனிதர்கள் அல்ல என்பது அரசாங்கத்தின் மீதான தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக பிரித்தானிய தமிழர் பேரவை சுட்டிக்காட்டும் சர்வதேச அமைப்புகள் அனைத்தினதும் அறிக்கைகளிலும் மீண்டும் மீண்டும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதைப் பற்றி மூச்சும் விடுவதில்லை. பிரபாகரன் மாவீரர் தின உரையில் உறுமினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் ‘வடக்கில் இருந்து தெற்குக்கு சவப்பெட்டிகள் அனுப்புவோம்’ என்று டபிள் உறுமல் விடுவதைத் தவிர உருப்படியாக எந்த அரசியலும் செய்யவில்லை.

தங்களுக்கு வாக்களித்த மக்களை விட்டுவிட்டு தமிழ் மக்களை நாங்கள் தான் பிரதிநிதித்துவம் செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு புலிக்கும் சிங்கத்துக்கும் பின்னால் நிற்கும் தமிழ் தலைமைகளும் அவர்களின் புலம்பெயர் முகவர்களும் இந்த வன்னி மக்கள் சிந்தும் குருதியில் தங்களைக் கறைபடுத்திக் கொண்டுள்ளனர்.

இப்போதுள்ள நிலையில் யுத்தத்தில் சிக்குண்ட தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால்
1. யுத்தம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அல்லது
2. அரச படைகளும் புலிகளும் குறைந்த பட்சம் சில தினங்களுக்காவது யுத்தத்தைத் தவிர்த்து மக்கள் பாதுகாப்பாக பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
3. பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் நடத்துவதை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
4. பாதுகாப்பு வலயங்களை சர்வதேச மனிதாபிமான அமைப்புகளின் பொறுப்பில் விடவேண்டும்.
5. விடுதலைப் புலிகளும் பாதுகாப்பு வலயங்களுக்கு மக்கள் செல்வதை அனுமதிக்க வேண்டும்.
6. பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான பாதுகாப்பான வழியை புலிகளும் அரச படைகளும் ஏற்படுத்த வேண்டும்.
போன்ற ஜனவரி 29 அன்று ‘இலங்கை அரசும் புலிகளும் 200 000 – 300 000 தமிழர்களை ‘guinea pigs’ ஆக நடத்துகின்றனர் – பொறுப்பற்றவர்களின் யுத்தம் : த ஜெயபாலன்‘என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அல்லது அதற்கு ஒத்த விடயங்களை உடனடியாக செயற்படுத்த சர்வதேச சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அவலங்கள் ஏற்பட்ட பின் அதனைக் கண்டிப்பதிலும் அந்த அவலத்தை தடுத்து நிறுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும். இந்தப் போராட்டத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள முஸ்லீம் மக்களும் சர்வதேச மக்களும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.