February

February

ஈழப் பிரச்சனையில் ஆதாயம் தேடும் இயக்கங்கள்: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் சில இயக்கங்கள் இலங்கை பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைக்கு உறுதுணையாக செயல்படாமல், அதற்கு நேர்மாறாக அரசியல் லாபத்திற்காக ஆதாயம் தேடுகின்றனர் என்று மத்திய அமைச்சர் வாசன் கூறியுள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் ராஜீவ்காந்தி சிலையை வன்முறையாளர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தேசவிரோதிகள் மற்றும் தேசத்தின் ஒற்றுமையை சீர்குலைப்பவர்கள். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதில் மத்திய, மாநில அரசு மற்றும் காங்கிரஸ் கட்சியும் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சில இயக்கங்கள் இலங்கை பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைக்கு உறுதுணையாக செயல்படாமல் அதற்கு நேர்மாறாக அரசியல் லாபத்திற்காக ஆதாயம் தேடுகின்றனர். இது தமிழக மக்களிடம் ஒருபோதும் எடுபடாது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் மத்திய அரசின் சாதனைகள் மூலம் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்றார்.

சாத்தான்களின் செவிகளில் மனித உரிமை வேதம் – தங்கள் வேள்விக்கு மக்களை பலியிட சிங்கமும் புலியும் தயார் : த ஜெயபாலன்

War in Wanni - Photo_Puthinamமகாபாரதக் கதையில் அனைத்தையும் வைத்து சீட்டாடி நிர்க்கதியான தருமன் இறுதியில் தனது மனைவியைப் பணயம் வைத்து சீட்டாடித் தோற்றது என்பது புராணக் கதை. இப்போது இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறுகின்ற இந்த யுத்தத்தில் ஒட்டுமொத்த வன்னி மக்களும் பணயம் வைக்கப்பட்டு உள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு எனப் பல்வேறு சர்வதேச அமைப்புகள் தொடர்ச்சியாக அழுத்தங்களைக் கொடுத்த போதும் அவற்றை முற்று முழுதாக உதாசீனப்படுத்திவிட்டு தங்கள் பாட்டுக்கு தங்கள் நோக்கங்களுக்காக இரு தரப்பும் யுத்தத்தைத் தொடர்கிறது. நிர்க்கதியான மக்கள் என்பதற்கு உண்மையான உதாரணம் வன்னி மக்கள் என்பதற்கு அப்பால் அதற்கொரு விளக்கம் வேண்டியதில்லை.

சார்ள்ஸ் டார்வினின் 200வது பிறந்த தினம் பெப் 12ல் நினைவுகூரப்படும் காலத்தில் யுத்தப் பிரியர்களான சிங்கமும் புலியும் ‘தக்கன பிழைக்கும்’ விதியை வன்னி மக்களின் மத்தியில் வைத்து பரீட்சித்துப் பார்க்கத் முனைந்துள்ளன. அனைத்து யுத்த விதிகளையும் மீறி கடந்த பல மாதங்களாக நடைபெறும் இந்த யுத்தம் தற்போது இந்த அத்தியாயத்தின் க்ளைமக்ஸிற்கு வந்துள்ளது. துரதிஸ்ட வசமாக இங்கு கதாநாயகர்கள் யாரும் இல்லை. ஆபத்தில் கைகொடுக்க கிருஸ்ணபரமாத்மாவும் இல்லை. இரு பக்கத்திலும் நிற்பது சாத்தான்கள் மட்டுமே. இவர்களுக்கு மத்தியில் அப்பாவி வன்னி மக்கள் ஒன்றல்ல இரண்டல்ல 250 000 பேர் வரை மாட்டிக் கொண்டு உள்ளனர். குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் வயோதிபர்கள் எவ்வித வேறுபாடும் இன்றி தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்களுக்குள் வெட்டைவெளியில் விடப்பட்டு உள்ளனர். இந்த ஆபத்தான சூழலில் குழந்தைகள் பிரசவிக்கின்றன. மழலைகள் தங்கள் உயிரைக் காக்க அழுதழுது ஓடுகின்றன. மரணங்கள் தொடர்கிறது. அன்புக்குரியவர்களை இழந்த உறவுகள் துடிக்கின்றன.

செப்ரம்பர் 11 அன்று தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க இரட்டைக் கோபுரங்களில் ஒன்று உலகமே பார்த்து நிற்க யாருமே எதுவும் செய்ய வியலாத கையறு நிலையில் நிற்க சில மணி நேரங்களில் சரிந்து வீழ்ந்தது. இறுதிநேரத்தில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அந்த மக்கள் தவித்த தவிப்பு கையறு நிலையில் உலகமே அதனைப் பார்த்து நின்றது. அந்த மனித அவலம் அதனிலும் பல மடங்காக புதுக்குடியிருப்பில் நிகழ்ந்துவிடும் என்ற அபாயம் இப்போது ஏற்பட்டு உள்ளது. ஆனால் இந்த அவலத்தை ஏற்படாமல் தடுக்க சகல சந்தர்ப்பங்களும் உண்டு. அப்படி இருந்தும் ஒரு மனித அவலம் ஏற்படுத்தப்படுமானால் அதனை தமிழ் மக்கள் என்றைக்கும் மன்னிக்கவோ மறக்கவோ மாட்டார்கள்.

சர்வதேச சமூகம் விரைந்து செயற்பட வேண்டும். அதற்கான நடைமுறைச்சாத்தியமான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட வேண்டும். இன்றுள்ள நிலையில் வெறும் அழுத்தங்கள் மட்டும் போதாது. செயற்பாடுகள் மிக அவசியம்.

வன்னி மக்கள் பணயம் வைக்கப்பட்டு உள்ள இந்த நிலையிலும் அந்த மக்களை யுத்தப் பகுதிகளில் இருந்து உடனடியாக வெளிக்கொண்டு வருவதைக் கோருவதை விட்டுவிட்டு புலிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஜனவரி 31ல் பிரித்தானிய தமிழர் பேரவையும் தமிழ் இளையோர் அமைப்பும் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதில் 50 000 – 100 000 பேர் வரை கலந்தகொண்டனர். சகல அரசியல் முரண்பாடுகளையும் மறந்து வன்னி மக்களைக் காக்க அவர்கள் திரண்டனர். அங்கு ஒரு சில புலி ஆதரவுக் குரல்களும் வே பிரபாகரனின் படங்களும் கொண்டு வரப்பட்டாலும் அவற்றை அப்புறப்படுத்தும் படி நிர்ப்பந்திக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தது.  யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்பதே அவ்வூர்வலத்தில் கலந்த கொண்டவர்களின் பிரதான கோரிக்கையாக அமைந்தது. ஆனால் ஏற்பாட்டாளர்களான பிரித்தானிய தமிழர் பேரவையினது செய்திக் குறிப்பு முற்றிலும் விடுதலைப் புலிகளின் ஆதரவு நிலையை எடுத்து உள்ளது. சர்வதேச அமைப்புகள் அனைத்துமே வன்னி மக்களை புலிகள் தடுத்து வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டி உள்ள நிலையில் தங்கள் புலியாதரவு நிலைப்பாட்டினால் பிரித்தானிய தமிழர் பேரவை ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை ஒரு வகையில் பாதிக்கச் செய்துள்ளனர்.

இங்கு பிரித்தானிய தமிழர் போறம் புலிகளுக்கு வக்காலத்து வாங்க அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் ஈபிடிபி புலிகளுக்கு எதிராக ஊர்வலம் நடாத்தி உள்ளது. புலிகள் பணயக் கைதிகளாக உள்ள தமிழ் மக்களை விடுவிக்க வேண்டும் என்று அந்த ஊர்வலத்தில் கோரப்பட்டு உள்ளது.

தடுத்து வைக்கப்பட்டு இருப்பது வன்னி மக்கள். அவர்கள் ஒரு மனித அவலத்தை ஒவ்வொரு விநாடியும் எதிர்நோக்கி உள்ளனர். அவர்களுக்காக யாழிலும் புலத்திலும் உள்ள மக்களின் மனங்கள் துடிக்கின்றது. ஆனால் அதனை பிரித்தானிய தமிழர் பேரவை, ஈபிடிபி என்பன தங்கள் குறுகிய அரசியல் நலன்களின் அடிப்படையில் பயன்படுத்த முற்பட்டு உள்ளன. பிரித்தானிய  தமிழர் பேரவைக்கு புலிகளின் மனித உரிமை மீறல்கள் தெரியவில்லை. ஈபிடிபிக்கு தனதும் தனது அரசினதும் மனித உரிமை மீறல்கள் தெரியவில்லை. இந்த ‘செலக்டிவ் அம்னீசியா’ காரர்கள் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க முற்பட்டதே தமிழ் மக்களின் இந்த அவலத்திற்கு காரணம்.

அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எப் தலைவர் சிறீதரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், மற்றும் கிழக்கின் முதலமைச்சர் பிள்ளையான் பா உ முரளீதரன் இவர்கள் ஏன் இந்த வன்னி மக்களின் பாதுகாப்புப் பற்றி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. புலிகள் பயங்கரவாதிகள் என்று குற்றம்சாட்டும் இந்தத் தலைவர்கள் புதுக்குடியிருப்பில் சிக்கித் தவிக்கும் மக்களைக் கருத்தில் எடுக்காமல் தங்களுடைய அரசாங்கம் நடத்தும் இந்த யுத்தம் பற்றி மௌனமாக இருக்கிறார்கள். அங்கு மக்கள் உயிரிழக்கும் போதெல்லாம் அதனைப் புலிகளின் தலையில் கட்டி தப்பித்துக் கொள்வதைத் தவிர இவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த வன்னி மக்களுக்கு ஏற்படப் போகும் அவலத்தை தடுத்து நிறுத்துவதற்காகவேனும் இவர்கள் குரல் கொடுக்காவிட்டால் இவர்கள் செய்வது அரசியல் விபச்சாரம் என்று குறிப்பிடுவது மிகையல்ல. இது இவர்களுக்கு மட்டுமல்ல புலம்பெயர் தேசங்களில் உள்ள இவர்கள் ஏஜென்டுகளுக்கும் பொருந்தும்.

ஏற்படப் போகும் இந்த அவலத்திற்கு புலிகளும் சம பொறுப்புடையவர்கள். அவர்கள் ஒன்றும் புனிதர்கள் அல்ல என்பது அரசாங்கத்தின் மீதான தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக பிரித்தானிய தமிழர் பேரவை சுட்டிக்காட்டும் சர்வதேச அமைப்புகள் அனைத்தினதும் அறிக்கைகளிலும் மீண்டும் மீண்டும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதைப் பற்றி மூச்சும் விடுவதில்லை. பிரபாகரன் மாவீரர் தின உரையில் உறுமினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் ‘வடக்கில் இருந்து தெற்குக்கு சவப்பெட்டிகள் அனுப்புவோம்’ என்று டபிள் உறுமல் விடுவதைத் தவிர உருப்படியாக எந்த அரசியலும் செய்யவில்லை.

தங்களுக்கு வாக்களித்த மக்களை விட்டுவிட்டு தமிழ் மக்களை நாங்கள் தான் பிரதிநிதித்துவம் செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு புலிக்கும் சிங்கத்துக்கும் பின்னால் நிற்கும் தமிழ் தலைமைகளும் அவர்களின் புலம்பெயர் முகவர்களும் இந்த வன்னி மக்கள் சிந்தும் குருதியில் தங்களைக் கறைபடுத்திக் கொண்டுள்ளனர்.

இப்போதுள்ள நிலையில் யுத்தத்தில் சிக்குண்ட தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால்
1. யுத்தம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அல்லது
2. அரச படைகளும் புலிகளும் குறைந்த பட்சம் சில தினங்களுக்காவது யுத்தத்தைத் தவிர்த்து மக்கள் பாதுகாப்பாக பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
3. பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் நடத்துவதை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
4. பாதுகாப்பு வலயங்களை சர்வதேச மனிதாபிமான அமைப்புகளின் பொறுப்பில் விடவேண்டும்.
5. விடுதலைப் புலிகளும் பாதுகாப்பு வலயங்களுக்கு மக்கள் செல்வதை அனுமதிக்க வேண்டும்.
6. பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான பாதுகாப்பான வழியை புலிகளும் அரச படைகளும் ஏற்படுத்த வேண்டும்.
போன்ற ஜனவரி 29 அன்று ‘இலங்கை அரசும் புலிகளும் 200 000 – 300 000 தமிழர்களை ‘guinea pigs’ ஆக நடத்துகின்றனர் – பொறுப்பற்றவர்களின் யுத்தம் : த ஜெயபாலன்‘என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அல்லது அதற்கு ஒத்த விடயங்களை உடனடியாக செயற்படுத்த சர்வதேச சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அவலங்கள் ஏற்பட்ட பின் அதனைக் கண்டிப்பதிலும் அந்த அவலத்தை தடுத்து நிறுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும். இந்தப் போராட்டத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள முஸ்லீம் மக்களும் சர்வதேச மக்களும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

புலிகளுக்கு சார்பாக செயற்படும் அனைவரும் உடனடியாக நாட்டைவிட்டு துரத்தப்படுவார்கள் – அரசு எச்சரிக்கை

gothapaya_rajapaksa.jpgவிடுதலைப் புலிகள் சார்பாக செயற்படும் அனைவரும் நாட்டை விட்டுத் துரத்தப்படுவார்கள் என்று வெளிநாட்டு இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற அமைப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுவிற்சர்லாந்து மற்றும் ஜேர்மனியின் தூதுவர்கள் மற்றும் சி.என்.என், பி.பி.சி.செய்திச் சேவைகள், அல்ஜசீரா என்பன இவ்வாறாக ஒரு தலைப்பட்சமாக செயற்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தேசிய நாளேடு ஒன்றுக்கு வழங்கிய விஷேட பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது; புலிகளை இறுதிக் கட்டத்தை அடைய வைக்கும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளும் நேரத்தில் குறித்த ஊடகங்களின் அறிக்கைகள் பாதுகாப்பு படையினருக்கு களங்கம் விளைவிக்கின்றன. இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெறும் போரில் வடக்குப் பகுதியிலுள்ள பொதுமக்களை விடுவிக்க அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பது போல சர்வதேச சமூகம் செயற்படுவது கண்டனத்திற்குரியது.

மக்களின் உணர்வலைகளைத் தூண்டக்கூடிய வகையிலான காட்சிகளை இந்தத் தொலைக் காட்சிச் சேவை ஒலிபரப்புச் செய்தது. குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சில வெளிநாட்டுத் தூதுவர்கள் செயற்பட்டனர். விடுதலைப்புலிகளுக்கு இரண்டாவது சந்தர்ப்பம் வழங்க முயற்சிப்பதற்காக இவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்.பொதுமக்களை மனிதக் கேடயங்களாக விடுதலைப்புலிகள் பயன்படுத்துகின்றனர்.

இதனை வெளிநாட்டு ஊடகங்கள் பொதுமக்கள் புலிகளுக்கு ஆதரவாக அப்பகுதியிலுள்ளதாக பொறுப்பற்ற முறையில் விமர்சித்து வருகின்றன. குறிப்பிட்ட பகுதிகளில் ஊடகவியலாளர்கள் மற்றும் உதவி அமைப்புகள் பணியாற்ற தடைசெய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுடன் உறவை வளர்த்த நோர்வேக்கான இலங்கைத் தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டார்

நோர்வேக்கான இலங்கைத் தூதுவர் எசல வீரக்கோன் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகமவினால் அங்கிருந்து திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது இருவருட சேவைக்காலம் முடிவடைவதற்கு முன்னரே அவர் திருப்பியழைக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக அமைச்சு வட்டாரங்களிலிருந்து மேலும் தெரியவருவதாவது;

எசலவுக்கெதிராக அதிகளவான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளின் கொடுமைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சியொன்றை நோர்வேயில் நடத்தும் திட்டத்தை எசல ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், ஒஸ்லோவைத் தவிர இலங்கைத் தூதரகங்கள் அமைந்துள்ள அதிகளவான ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களில் இக்கண்காட்சி நடைபெற்றது.நோர்வேயிலுள்ள தமிழ் மக்களுடனான உறவை வளர்ப்பதில் இவர் ஆர்வம் காட்டியதாகவும் எசல மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தவிர எசலவின் தந்தையாரான பிரட்மன் வீரக்கோன் முன்னாள் ஜனாதிபதிகள் பலரது செயலாளராக இருந்தவர். ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது அவரது முக்கிய ஆலோசகராயிருந்தார்.

இதன்போது விடுதலைப்புலிகளுடன் சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தும் முயற்சிகளில் வீரக்கோன் முக்கிய பங்காற்றியதுடன் அதியுயர் தொழில்நுட்பத்தைக் கொண்ட தொடர்பாடல் சாதனங்களை நோர்வே நாட்டவர்கள் ஊடாக விடுதலைப்புலிகளுக்கு அனுப்பி வைத்ததாகவும் இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்மோகன் சிங் 8 நாள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் – 2 வாரத்தில் அலுவலகம் செல்வார்

sing.jpgஇதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், 8 நாள் சிகிச்சைக்குப் பிறகு நேற்று வீடு திரும்பினார். இன்னும் 2 வாரத்தில் அவர் வழக்கமான பணிகளை கவனிப்பார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டதால், ஜனவரி 23ம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் 14 மணி நேரம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதன் பிறகு பிரதமரின் உடல்நிலை வேகமான முன்னேறியது. 28ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.  எட்டு நாள் சிகிச்சைக்குப் பிறகு நேற்று காலை 8 மணிக்கு மருத்துவமனையில் இருந்து மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினருடன் வீடு திரும்பினார். புறப்படும் முன்பு,  சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்ஸ்களுக்கு, பிரதமர் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்தார்.

 டிஸ்சார்ஜ் செய்வதற்கு முந்தைய பரிசோதனைகளை மும்பை டாக்டர் ராம்காந்த் பாண்டா தலைமையிலான குழு செய்தது.  நேற்று அதிகாலை பிரதமர் எழுந்ததும் டீ குடித்தார். மருத்துவமனை வளாகத்தில் சிறிது தூரம் வாக்கிங் சென்றார். பின்னர் பத்திரிகைகள் படித்தார். சிற்றுண்டி கொடுக்க தயாரானபோது வீட்டுக்குப் போய் சாப்பிட விரும்புவதாக கூறினார். பிரதமர் நேற்று உற்சாகமாக காணப்பட்டார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

‘இப்போது, வீட்டில் இருந்தபடியே பிரதமர் பணியாற்றுவார். 2 அல்லது 3 வாரத்தில் அலுவலகம் வந்து வழக்கமான பணிகளை கவனிப்பார். பிரதமர் பூரண குணமடையும் வரை டாக்டர் பாண்டா தலைமையிலான குழு அவரை கவனித்து வரும்’ என்று மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சர் அன்புமணி கூறினார். பிரதமரின் ஊடகத்துறை செயலாளர் தீபக் சாந்து விடுத்த அறிக்கையில், அடுத்து வரும் வாரங்களில் உணவு அளவு மற்றும் உடற்பயிற்சியை படிப்படியாக அதிகரிக்கும்படி டாக்டர்கள் ஆலோசனை கூறி உள்ளனர். தான் விரைவில் குணமடைய வேண்டி நாடு முழுவதும் மக்கள் பிரார்த்தனை செய்ததற்காக பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். என்று கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் தாக்குதல்

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள வில்லியம்ஸ் ரோட்டில்  ஓட்டல் வளாகத்தில் இலங்கை அரசுக்கு சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்துக்குள் இன்று மாலை திடீரென்று சுமார் 10 பேர் கொண்ட கும்பல் நுழைந்து. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் அருகே சென்று இலங்கை ராணுவத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி, அலுவலக கண்ணாடி கதவுகளை அடித்து நொறுக்கினார்கள். இதில் கண்ணாடிகள் சுக்கு நூறாக உடைந்து சிதறின.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளம்பர போர்டுகளை அவர்கள் கிழித்து எறிந்தனர். இதைக் கண்டு அலுவலகத்துக்குள் பணியில் இருந்த ஊழியர்கள் பதறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். கண்ணாடிகளை நொறுக்கும் சத்தம் கேட்டு ஓட்டல் வளாகத்தில் இயங்கி வந்த மற்ற கடை ஊழியர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து நொடிப் பொழுதில் தப்பி ஓடி விட்டது. இது குறித்து அலுவலக அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணாடிகளை உடைத்த நபர்களை தேடி வருகிறார்கள்.

முல்லைத்தீவில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பம்

_army.jpgமுல்லைத் தீவு மற்றும் முல்லைத்தீவை சூழ உள்ள வீதிகளில் போக்குவரத்தை ஆரம்பிக்கும் வகையில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.

ஏ-9 வீதியில் போக்குவரத்து நடவடிக் கைகளை ஆரம்பிக்கும் வகையில் வீதியின் இருபக்கமும் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதோடு கிளிநொச்சி மாவட்டத்திலும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றது

முல்லைத்தீவில் புலிகளின் ஒன்றுகூடல் தளம் மீது விமானத் தாக்குதல

jet-1301.jpgமுல்லைத்தீவு களப்புக்கு வடக்கு பிரதேசத்திலுள்ள புலிகளின் ஒன்று கூடல் தளம் ஒன்றை இலக்கு வைத்து விமானப் படையினர் நேற்று கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.  விமானப் படைக்குச் சொந்தமான ஜெட் ரக தாக்குதல் விமானங்களைப் பயன்படுத்தி நேற்றுப் பிற்பகல் 4.20 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

முன்னேறிவரும் இராணுவத்தின் 59வது படைப் பிரிவினருக்கு உதவியாக நடத்தப்பட்ட தாக்குதல் வெற்றியளித்துள்ளதாக விமான ஓட்டிகளும், களமுனை வீரர்களும் உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மத்திய, வடமேல் மாகாண சபைகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும்

vote.jpgமத்திய, வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் தபால் மூலமான வாக்களிப்பு இன்று திங்கட்கிழமையும் நாளை செவ்வாய்க்கிழமையும் அந்தந்த மாவட்டங்களில் இடம் பெறவிருக்கின்றன. இரண்டு மாகாணங்களிலும் 66,909 பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகைமை பெற்றிருப்பதாக மேலதிகத்தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பி. சுமானசிரி தெரிவித்தார்.

இதன் பிரகாரம் மத்திய மாகாணசபையில் கண்டி மாவட்டத்தில் 17,784 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 5,592 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 9,417 பேரும் தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். வட மேல் மாகாண சபையில் குருணாகல் மாவட்டத்தில் 29491 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 4625 பேரும் தகுதிபெற்றிருப்பதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சுமணசிறி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையின் 63 வது சுதந்திரதினக் கொண்டாட்டம் தலைநகரில் விரிவான அடிப்படையில் இடம் பெறவிருப்பதை யொட்டி பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு பெருந்தொகையான பொலிஸாரும், முப்படையினரும் கொழும்புக்கு வரவழைக்கப்படுவதன் காரணமாக மத்திய, வடமேல் மாகாணங்களைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த மாதம் 26, 27 ஆம் திகதிகளில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய தபால் மூல வாக்களிப்பின் போது தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், சுயேச்சைக்குழுக்கள் சார்பில் தலா ஒரு பிரதிநிதி வாக்களிப்பை கண்காணிக்க அனுமதிக்கப்படுவர் என தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

தீக்குளித்த பள்ளப்பட்டி ரவி மரணம்: தலைவர்கள் அஞ்சலி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் சனிக்கிழமை அன்று உடல் கருகிய நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  இவர் இலங்கையில் அப்பாவித் தமிழர்களை காப்பாற்றக் கோரியும், இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தியும் தீக்குளித்ததாக ரவியின் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஆனால் காவல்துறையினர், ரவி இலங்கை தமிழருக்காக தீக்குளிக்கவில்லை என்றும் ரவி 2 வழக்குகளில் ஏற்கனவே சிறைத் தண்டனை பெற்றவர் என்றும், இன்னும் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறினார். அவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே தீக்குளித்துள்ளார் என்றும் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வாசுகி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தமிழருக்காக பள்ளப்பட்டி வாலிபர் ரவி தீக்குளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரவி இலங்கை தமிழர்களுக்காகத்தான் தீக்குளித்தான் என்று வைகோ, திருமாவளவன் மற்றும் இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தினரும் அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.  இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ரவி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மரணம் அடைந்த ரவியின் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் ஜி.கே.மணி, பழ.நெடுமாறன் மற்றும் இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் உள்பட தமிழின ஆதரவாளர்கள் மதுரை விரைந்துள்ளனர்