February

February

பொதுமக்களின் தரிசனத்திற்கு புத்தரின் தந்தம்

புத்தபெருமானின் புனித தந்தம் இன்று 6ம் திகதி முதல் 16ம் திகதி வரை கண்டி தலதாமாளிகை யில் காட்சிக்கு வைக்கப் படவுள்ளது. இதனையிட்டு கண்டி பொதுச்சந்தையிலுள்ள இறைச்சிக் கடைகளும், மதுபானக் கடைகளும் பூட்டப்படவு ள்ளன.

புனித தந்தத்தைப் பொது மக்கள் தரிசனத்திற்குத் திறந்து வைக்கப்படுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தலதாமாளிகை தியவதன நிலமே நிலங்க தெல பண்டார தெரிவித்தார். இதன் ஏற்பாடுகள் குறித்து கண்டி கச்சேரியில் நடைபெற்ற குழுக் கூட்டத்திலேயே இதனை தெரிவித்தார்.

இறுதியாக ஐந்து வருடத்திற்கு முன்னர் 2003ல் காட்சிக்கு வைக்கப்பட்டது. நாட்டின் சுபீட்சத்திற்காகவும், சமாதானம் ஏற்பட்டு ஜனநாயகம் ஏற்படவும், 25 வருடகால யுத்தம் நீங்கவும் வேண்டியே இத்தரிசனத்தினை ஏற்பாடு செய்வதாகவும், மல்வத்த, அஸ்கிரிய பெளத்த பீடங்களின் மாநாயக்க தேரோக்களின் பூரண ஆசீர்வாதத்துடன் இத்தரிசனம் ஒழுங்குபடுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

சார்க் மாநாடு : பிரணாப் இலங்கை வருகை

pranab.jpgசார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மீண்டும் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் . வருகிற பிப்ரவரி 26 ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பில் சார்க் மாநாடு தொடங்குகிறது. இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில், சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இதில் இந்தியா சார்பில் கலந்து கொள்வதற்காக பிரணாப் முகர்ஜி வரும் 26ம் தேதி கொழும்பு வருகை தரவுள்ளார்.

வடக்கில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் அரசு தெற்கில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த 17 ஆவது திருத்தத்தை அமுலாக்க வேண்டும்

வடக்கில் பயங்கரவாதத்தை அழிக்கும் அரசாங்கம் தெற்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்த 17 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரியுள்ளதுடன். பொலிஸார் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது; மத்திய மாகாண சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு தோல்வியை தழுவுமெனத்தெரிந்துள்ள நிலையில் அங்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆதரவாளர்களை கைது செய்யும் கைங்கரியத்தில் இறங்கியுள்ளது.

அதாவது நுவரெலியா மாவட்டத்தில் ஐ.தே.க. வேட்பாளர்களான திகாம்பரம் மற்றும் முருகையா ரவீந்திரன் ஆகியோரின் ஆதரவாளர்கள் ஆயிரம் பேரை கைது செய்யுமாறு அங்குள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பக்ஸ் அனுப்பப்பட்டுள்ளது. தோட்ட மக்கள் பெருமளவில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்களின் வருமானம் 50% வீதத்தால் விழ்ச்சிகண்டுள்ளது. தேயிலை விலை வீழ்ச்சியினால் தொழில் இல்லை. மலையக இளைஞர்கள் கொழும்பு உட்பட ஏனைய நகரங்களுக்கு சென்று பணிபுரிகின்ற போது கைது செய்யப்படுகின்றனர். தோட்டப்புற மக்கள் இவ்வாறு சகல வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமக்கு நன்மைகளை பெற்றுக் கொள்ளும் ஒரேமார்க்கமான மாகாண சபைத் தேர்தலில் அம்மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இதனை, குழப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசாங்கம் வடக்கில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கொண்டு தெற்கில் ஜனநாயகத்தை இவ்வாறு மீறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதையடுத்து கவலையடைகின்றோம். அதாவது எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டுள்ளதுடன் ஊடகமும் ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர். மாகாண சபைகளை ஒன்றாகக் கலைத்து தேர்தலை நடத்தாது பிரித்து தனித்தனியே தேர்தலை நடத்தி தனது இலாபத்துக்காக தான்தோன்றித்தனமாக மக்களின் பணத்தை நாசம் செய்கின்றது. எனவே அரசாங்கம் ஜனநாயகத்தை மீறும் வகையில் செயற்படக் கூடாது. முதலில் 17 ஆவது அரசியல் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோருகின்றோம். இதன் மூலம் அரசியலமைப்புப் பேரவை உருவாக்கப்படும்.

இதன் மூலம் பொலிஸ் மற்றும் தேர்தல் உட்பட அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களும் அமைக்கப்படும் இவ்வாறு அமைக்கப்படுமாயின் மோசமான சம்பவங்கள் தடுக்கப்படும். எனவே இதனை அமுல்படுத்துமாறு அரசிடம் கேட்கின்றோம். இதேவேளை மத்திய மாகாணத்தில் அமைச்சர்கள் அரச சொத்துகளையும் வளங்களையும் பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாடசாலைகளை மூடி ஆசிரியர்களை தேர்தல் பிரசாரத்துக்கு அழைப்பது தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும். மத்திய மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர்களாக சரத் ஏக்கநாயக்கவுள்ள நிலையில் சுவரொட்டிகளில் ஜனாதிபதியின் படமே உள்ளது. இந்நிலையில் சரத் ஏக்கநாயக்கா தேர்தல் வேற்றிக்காக செயற்படவில்லை என்பது தெரிய வருகின்றது.

பாலித ரங்கபண்டார தனது தேர்தல் பிரசாரத்திற்காக ஒரு வாடகைக்காரை அமர்த்தியுள்ளார். அக்காரின் இலக்கத்தகட்டிலுள்ள இலக்கமும் வேறு ஒரு வாகனத்தின் இலக்கமும் ஒன்றாகவுள்ள நிலையில் இது தொடர்பில் ரங்கபண்டாரவை பொலிஸார் கைதுசெய்ய முற்பட்டுள்ளனர். இதையடுத்து இவ்வாகனத்தின் உரிமையாளர் பொலிஸில் சென்று இது தொடர்பில் தெரிவித்துள்ளார். இவரைக் கைது செய்ய அவரது மெய்ப்பாதுகாவலரொருவரை அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யுமாறு கேட்டுள்ளதுடன் அச்சுறுத்தியும் உள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறையிட்டுள்ளோம். தற்போது இவ்வாறு இடம்பெறுவதற்கு காரணம் பொலிஸார் அரசியல் மயப்படுத்தப்படுவதே காரணமாகும். எனவே 17 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு கோருகின்றோம். இதன் மூலம் பொலிஸார் சுயாதீனமாக செயற்பட வழிவகுக்குமென்றார்.

அரசின் தவறான பயணத்தால் மிகவிரைவில் முழுநாடுமே அகதி முகாமாக மாறப்போகின்றது

பாதுகாப்புப் படையினர் விடுதலைப்புலிகளை முல்லைத்தீவுக் காட்டுக்குள் சிறைப்படுத்தியதாக கூறும் அரசு நாட்டு மக்களின் பிரச்சினைகளை எந்தக் காட்டுக்குள் மறைக்க முடியுமெனக் கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அரசின் தவறான பயணத்தால் மிகவிரைவில் முழுநாடுமே அகதிமுகாமாக மாறும் அபாயம் தெரிவதாக எச்சரித்துள்ளார். நாட்டை பேரழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு மத்திய, வடமத்திய மாகாண சபைகளின் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார்.

வடமேல் மாகாண சபைத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாரம்மலையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;

விடுதலைப்புலிகள் முல்லைத்தீவு காட்டுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அங்கு 1500 அல்லது இரண்டாயிரம் புலிகள் ஒளிந்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சு அந்தக் காட்டிலும் கிழக்கு மாகாணத்திலும் யால காட்டிலும் ஒளிந்திருக்கும் புலிகளை விரட்டியடித்து விரைவில் இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரமுடியுமென நம்பிக்கை தெரிவித்திருக்கின்றது. விடுதலைப்புலிகள் காட்டுக்குள் சென்று ஒளிந்திருக்க முடியும். ஆனால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை காட்டுக்குள் மறைக்க முடியுமா? பங்கருக்குள் சிறைப்படுத்த முடியுமா? எனக் கேட்க விரும்புகின்றோம்.

நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையிலிருந்து அரசாங்கம் தப்பிச் செல்ல முடியாது. மக்களை ஏமாற்ற முடியாது. இன்று வாழ்க்கைச் செலவு உயர்வால் மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர் கொள்கிறார்கள். விலைவாசி அதிகரிப்பு கிராமப்புற மக்களை பெரிதும் பாதித்துள்ளது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வரை பொறுமை காக்குமாறு அன்று ஜனாதிபதி கூறினார். இன்று யுத்தம் முடிவடைந்துள்ளதாக அவரே கூறுகின்றார். அப்படியானால் மக்களுக்கு சலுகைகள், நிவாரணங்கள் பொருளாதார வளர்ச்சிக்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அதற்குப் பதிலாக மேலும் சிறிது காலம் இடுப்பை வரிந்து கட்டிக் கொள்ளுமாறு ஜனாதிபதி கூறுகிறார்.

ஆட்சித் திறமையற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இதுவரை காலமும் யுத்தத்தின் பின்னால் மறைந்திருந்து நாட்டையும் சர்வதேசத்தையும் ஏமாற்றி வந்தார். இனியும் அவரால் இந்த ஏமாற்று நாடகத்தை மேடையேற்றிக் கொண்டிருக்க முடியாது. பொருளாதார வீழ்ச்சி கண்டிருக்கும் நாட்டை இந்த அரசால் அதிலிருந்து மீட்டெடுக்க முடியாது. இந்த அரசிடம் அதற்கான கொள்கைத்திட்டம் கிடையாது. நாட்டைப் பாதுகாக்க வேண்டிய மற்றொரு சந்தர்ப்பம் மீண்டும் உருவாகியுள்ளது. யுத்தத்தால் மட்டும் நாட்டைப் பாதுகாப்பதால் பிரச்சினை தீரப்போவதில்லை. முழுநாடும் இன்று பாரிய சவாலை எதிர்கொண்டிருக்கின்றது. இந்தச் சவாலை நாம் வெற்றி கொண்டாக வேண்டும். அராஜகம் தலைவிரித்தாடுகின்றது. ஜனநாயகம் அச்சுறுத்தலுக் குள்ளாக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தையும் அடிப்படை மனித உரிமைகளையும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும். இதனைச் செய்யக்கூடிய, வெற்றி கொள்ளக் கூடிய ஆயுதம் மக்கள் சக்தியொன்றே ஆகும்.

இன்று நாம் இன, மத, மொழி, கட்சி பேதம் பார்த்துக் கொண்டிருக்க நாட்டின் பொது எதிரியை முறியடிக்க அனைத்து மக்கள் சக்தியும் கட்டியெழுப்பப்பட வேண்டும். அதற்குரிய சந்தர்ப்பமாக இந்த மாகாண சபைகளின் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும். அரசு செல்லும் பாதை தவறானது என்பதைக் காட்டுவதற்கு இத் தேர்தலின போது ஒரு பாடத்தைப் புகட்ட வேண்டும். நாட்டில் மீண்டும் நல்லாட்சியை மலரச் செய்வதற்கு வடமேல் மாகாண மக்கள் பணியை ஆரம்பிக்க வேண்டும். மத்திய, வடமேல் மாகாண சபைகளின் வெற்றியானது முழுநாட்டு மக்களைத் தட்டியெழுப்பக் கூடியதாக அமைய வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஆறுமுகம் தொண்டமானும் சந்திரசேகரனும் பொதுத் தேர்தலில் ஐ.தே.க.வுடன் போட்டியிடுவார்கள் – எஸ்.பி.திஸாநாயக்க

சுற்றுலாத் துறையும் ஏனைய ஏற்றுமதித்துறைகளும் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளதுடன் எமக்கு வருகின்ற அந்நியச் செலாவணியும் சகல வழிகளிலும் முடங்கிக் கிடக்கின்றன எனத் தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க, நாடு பொருளாதார சிக்கலில் மூழ்கித்தத்தளிக்கின்றது எனவும் கூறினார். இராகலை நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.

இக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அவர்; இந்த அரசிடம் முறையான அபிவிருத்தித்திட்டம் இன்மையாலும் நூற்றுக்கும் மேற்பட்ட அமைச்சர்களின் சொகுசு வாழ்க்கையாலும் நாடு பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் கடன் வழங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றன. நாட்டை மீட்டெடுக்க முதற்கட்ட நடவடிக்கையாக எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அணிதிரண்டு வாக்களியுங்கள்.

மத்திய மாகாணசபையை கலைக்கும் வரை நான் போட்டியிடுவது அரசுக்கும் ஜனாதிபதிக்கும் தெரியாது. அறிந்திருந்தால் மாகாணசபையை கலைத்திருக்கமாட்டார்கள். நான் போட்டியிடுவதைத் தடுக்கப் பல வழிகளிலும் முயற்சித்தனர். முடியாது போனதால் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது பல சட்டவல்லுநர்களை அனுப்பி வைத்து என்னை அகற்ற முயற்சி செய்தனர் . ஆனால், அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இப்போது கண்டியில் முகாமிட்டு அரச பயணத்தில் அனைவருக்கும் உணவும் , பெண்களுக்கு சாறியும் , ஆண்களுக்கு சாரமும் , பாடசாலை உபகரணங்களும் வழங்கி வாக்கு வேட்டையில் இறங்கியுள்ளனர். இவை அனைத்தும் எனதும் ஐ.தே.க.வினதும் வெற்றியின் உறுதியைக் கண்டு கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு உள்ளது போன்றே தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் உரிமைகள் உண்டு. அரசியல் சாசனத்திலேயே உள்ளது. இங்குதான் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன. அரசுக்கு எதிரானவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். ஊடகத்தை சேர்ந்தவர்களும் கொலை செய்யப்படுகின்றனர். மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்வதையே விரும்புகின்றோம். அனைவரையும் அரவணைத்தே தேர்தலில் போட்டியிடுகின்றோம்.

ஜனாதிபதியோடு தொண்டமானும் சந்திரசேகரனும் இணைந்துள்ளனர். இங்கு அவர்களுக்கு மரியாதை கிடையாது. அடிமட்டத்தில் தான் இவ்விருவரையும் நடத்துகின்றார். இரண்டரை வருடமாக மலையக மக்கள் படும் அவலத்திற்கு இவ்விருவரும் என்ன செய்தனர்? நான் இவ்விருவரையும் இத்தேர்தலில் எங்களுடன் இணைந்து போட்டியிடுமாறு அழைத்தேன். அதற்கு அவர்கள் இத்தேர்தலில் வரமுடியாது. பொதுத் தேர்தலுக்கு வருகின்றோம் என்கின்றனர். மக்களுக்கு சேவை செய்ய சௌமியமூர்த்தி தொண்டமான் ஒருவரால் தான் முடியும். ஆறுமுகனால் முடியாது.

இம்முறை திறமையான தமிழ் வேட்பாளர்களை நியமித்துள்ளோம். அவர்கள் வெற்றிபெற்று நல்ல சேவை செய்வார்கள். கண்டியில் 13 ஆசனமும் ஐ.தே.க. வசமாவது உறுதி. அதே போன்று நுவரெலியாவிலும் மாத்தளையிலும் எமது வேட்பாளர்கள் வெற்றிபெற்று மத்திய மாகாணசபையைக் கைப்பற்றுவோம். இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பேன். உலக நாடுகளிடமிருந்தும் உதவிகளை இம்மாகாணசபைக்குப் பெற முடியும். பெற்றுப் புதிய முயற்சிகளை ஏற்படுத்தி வேலைவாய்ப்பு, மின்சாரவசதி, பாடசாலை அபிவிருத்தி ,பாதை அபிவிருத்திகளை மேற்கொள்வோம்.

இக்கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரேணுகா ஹேரத், மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், வேட்பாளர்களான ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் செயலாளர் சதாசிவம் , ஜகத் சமரஹேவா, ரவீந்திரன் ஆகியோரும் உரையாற்றினர்.

”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை வரவேற்கிறோம்” சிவாஜிலிங்கம் – நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்

Sivajilingam M K”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு பேச்சுவார்த்தையை நடத்தி இறுதித் தீர்வு எட்டப்படுமாக இருந்தால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்று ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தேசம்நெற்றுக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் தெரிவித்தார். இணைத்தலைமை நாடுகள் விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும் என்ற வேண்டுகோளைவிடுத்த 24 மணி நேரத்தினுள் பெப்ரவரி 3ல் தேசம்நெற்றுக்கு பேட்டியளித்த பா உ சிவாஜிலிங்கம் விடுதலைப் புலிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சில தவறுகளை விட்டிருப்பதாகவும் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியாக பலவீனமானதாக இருந்தது என்ற வகையில் கருத்து வெளியிட்ட அவர் விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்று ஒரு தீர்வுத் திட்டதை முன்வைக்காமல் போனது மிகப்பெரிய தவறு என்று தான் கருதுவதாகவும் கூறினார். தமிழ் மக்கள் இன்றொரு நெருக்கடி மிக்க சூழலில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர் தமிழ் மக்களுக்கான கௌரவமான ஒரு அரசியல் தீர்வை பெறுவது மிகவும் அவசியமானது என்று குறிப்பிட்டார்.

லண்டன் மிச்சம் பகுதியில் அவர் தங்கியிருந்த இல்லத்தில் அவரைச் சந்தித்து இரண்டரை மணிநேரம் இச்சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் தேசம்நெற் ஆசிரியர்கள் ரி சோதிலிங்கமும் த ஜெயபாலனும் பா உ எம் கே சிவாஜிலிங்கத்தை நேர்கண்டனர். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உணர்ச்சிகரமாகப் பதிலளித்த பா உ சிவாஜிலிங்கம் இலங்கை இனப்பிரச்சினை தீர்க்கப்படாதவரை இலங்கை அரசால் விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ள முடியாது என்று தெரிவித்தார். அது விடுதலைப் புலிகளின் மிகப்பெரிய பலம் என்றும் கூறினார்.

தேசம்நெற் வாசகர்களுக்காக பா உ எம் கே சிவாஜிலிங்கத்துடனான பேட்டி:

Sivajilingam M K & Jeyabalan Tதேசம்நெற்: இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையேயான யுத்தத்தில் சிக்கியுள்ள 250 000 தமழ் மக்களை யுத்த பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றுவது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டைக்கொண்டு உள்ளது?

சிவாஜிலிங்கம்: முதலில் 250 000 என்பது தவறு. 400 000 இருந்து 500 000 வரை இருக்கிறார்கள். சர்வதேச சமூகமே 300 000 டின்று மதிப்பிட்டு இருக்கிறார்கள். இலங்கை அரசாங்கம் 150 000 என்றும் சிலசமயம் 100 000 கூறிக்கொண்டு உள்ளது.

வன்னியுத்தம் இன்று நேற்று ஆரம்பிக்கப்படவில்லை. மாவிலாற்றிலேயே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஜனவரி 2008ல் இலங்கை அரசாங்கம் யுத்தநிறுத்தத்தை மீறி பிரகடனப்படுத்திய ஒரு யுத்தத்தை நடத்துகிறது. இதனை தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புப் போராகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.

தேசம்நெற்: மாவிலாறு அணைக்கட்டை மறித்து நீர் விநியோகத்தை தடுத்தது புலிகள். 2007 மாவீரர் உரையில் யுத்தப் பிரகடனம் செய்து தெற்கில் குண்டுகளை வெடிக்கச் செய்ததும் புலிகள். அதனைத் தொடர்தே அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்த யுத்தத்தை ஆரம்பித்ததில் புலிகளுக்கு முக்கிய பங்கு உண்டு அல்லவா?

சிவாஜிலிங்கம்: மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக வந்ததில் இருந்து ஜேவிபி மற்றும் ஜாதிக ஹெலஉறுமய போன்றவற்றின் ஆலோசனையுடயேனே செயற்படுகின்றார். அந்த நிகழ்ச்சி நிரலிலேயே செல்கிறார். தமிழ் தேசிய உணர்வாளர்களை யாழ்ப்பாணத்திலும் ஏனைய பகுதிகளிலும் வேட்டையாடியதைத் தொடர்ந்தே இந்த யுத்தம் ஆரம்பித்தது என்றே சொல்ல வேண்டும். அதன் தொடர்ச்சியாகத்தான் மாவிலாறு அமைந்தது. 2007ல் பெரிய குண்டுவெடிப்பு என்று எதுவும் இடம்பெறவில்லை.

யுத்த நிறுத்த மீறல்கள் என்று சொன்னால் 3000 – 5000 என்று புலிகள் சம்பந்தப்பட்டு இருந்தாலும் ஒருவரை இயக்கத்தில் சேர்திருந்தால் அதுவும் மீறல்தான். மற்றும்படி பெரிய மீறல்கள் என்று குறிப்பிட எதுவும் இல்லை. ஆனால் மகிந்த ராஜபக்ச ஒரு இராணுவத் தீர்வை நோக்கித் தான் செல்ல எண்ணியிருந்தார். அது தான் நடைபெறுகிறது.

தேசம்நெற்: மகிந்த ராஜபக்ச இராணுத் தீர்வுக்கு செல்லக் கூடியவர் என்பதனாலேயே புலிகள் அவரை வெற்றியடைச் செய்வதற்காக அதற்கு ஏற்ற வகையில் தமிழ் மக்களை வாக்களிப்பில் ஈடுபடவிடாமல் தடுத்தனர். அந்த அடிப்படையிலேயே புலிகளின் தலைவர் பிரபாகரனது அப்போதைய மாவீரர் தின உரையும் அமைந்தது.

சிவாஜிலிங்கம்: மகிந்த ராஜபக்சவை விடுதலைப் புலிகள் தெரிவு செய்தார்கள் என்பது தவறானது. சிங்களவர்கள் தங்களுடைய தலைவரை தாங்களே தெரிவு செய்ய வேண்டும் என்பதே விருப்பமாக இருந்தது. ஆனால் தமிழர் தரப்பில் சிலருக்கு ரணில் விக்கிரமசிங்கவைத் தெரிவு செய்திருந்தால் அவர் கொஞ்சம் மென்மையான போக்கை கொண்டிருப்பார் என்ற நம்பி;க்கை இருந்தது. இன்றைக்கு ரணில் விக்கிரமசிங்க இந்த இராணுவத் தீர்வை ஆதரித்து நிற்பதில் இருந்து எந்த சிங்களத் தலைவருமே ஒரு தீர்வுக்கு தயாரில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. ஆகவே நாங்கள் இதில் பிரேத பரிசோதணை செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. எவர் அந்த ஆட்சியில் இருந்திருந்தாலும் இந்த நிகழ்ச்சி நிரலிலேயே நடந்திருக்கும் ஆனால் வேகம் கூடலாம் அல்லது குறையலாம்.

தேசம்நெற்: இந்த யுத்தத்தை வலிய ஆரம்பித்ததில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் நிறைந்த பங்கு உள்ளது. பொங்கு தமிழ் போன்ற நிகழ்ச்சிகளில் இன உணர்வுகளை உசுப்பி போருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா உ க்களும் அழைப்பு விட்டிருந்தனர். தெற்கிற்கு சவப்பெட்டிகள் வரும் என்ற பேச்சுக்கள் பாராளுமன்றத்திலும் ஒலித்தது. அந்த தவறுகளை நீங்கள் இப்போது உணர்கிறீர்களா?

சிவாஜிலிங்கம்: இல்லை. இல்லை. அடக்குமுறையை நீங்கள் திணித்தால் அந்த அடக்குமுறைக்கு எதிராக நாங்கள் போராடுவோம். அந்த நேரத்திலே 40 000 சவப்பெட்டிகள் தெற்குக்கு வரும் என்று ரிஎன்ஏ பா உ கூறியிருந்தது யுத்த நிலமையல்ல. அதன் பிறகு பல தடவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்த முன்வந்திருந்தது. ஆனால் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா உ க்களை படுகொலை செய்தது அரசாங்கம். தமிழ் மக்களின் அரசியல் சக்திகள் எல்லாவற்றையும் அழித்தது அரசாங்கம். தமிழ் மக்களுக்காக யார் போராடுவார்களோ போராட முற்படுவார்களோ அவர்களை எல்லாம் வேட்டையாடப்படுவார்ட்கள் என்பது தான் சிங்களத்தினுடைய தெளிவான செய்தி.

தேசம்நெற்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுயாதீனமாக செயற்பட முடியாமல் விடுதலைப் புலிகளின் அறிவுறுத்தலின் படியே செயற்பட வேண்டிய ஒரு நிலை இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இது பற்றி உங்களுடைய கருத்து என்ன?

சிவாஜிலிங்கம்: 2004 தேர்தலின் போதுதான் தமிழீழ விடுதலைப் புலிகளோடு நேரடியாகக் கலந்துபேசி தேர்தல் அறிக்கைகளை தயாரிக்க வேண்டிய நிலை இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் தான் தமிழ் மக்களுடைய உண்மையான பிரதிநிதிகள். பேச்சுவார்த்தைகள் புலிகளுடன் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். மற்றது 2003ல் விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை செயற்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் கோரி இருந்தோம். அதற்கு இலங்கை அரசு தவறிவிட்டது. தமிழ் தேசிய விடுதலை இயக்கத்துடன் இணைந்து செயற்படுவது அவர்களுடைய பினாமி என்பதல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுயாதீனமாகவே செயற்பட்டு வருகிறது.

தேசம்நெற்: விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி உரையாட முன்வரவேண்டும் அதுவே மக்களின் இழப்புகளைத் தவிர்ப்பதற்கு வழிவகுக்கும் என இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளும் 2002 பேச்சுவார்த்தையின் போது மத்தியஸ்தம் வகித்த இணைத் தலைமை நாடுகளும் இன்று கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?

Sivajilingam M Kசிவாஜிலிங்கம்: மக்களை வெளியே கொண்டுவருவது என்பது இரண்டு தரப்பும் தீர்மானிக்க வேண்டிய விடயம். இலங்கை அரசாங்கம் பிடிவாதமாக எல்லோரையும் ஒழிக்க வேண்டும் என்ற நினைக்கின்ற வகையிலே மக்கள் வெளியேற விரும்பவில்லை. வேண்டுமென்றால் சர்வதேச சமூகம் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் மிசன் அங்கு செல்லட்டும். அல்லது அவர்களுடைய பிரதிநிதிகள் அங்கு சென்று பார்வையிடட்டும்.

இன்றைக்கு புலிகள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏனைய இயக்கங்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்பட்டது ஒடுக்குமுறையின் அடக்குமுறையின் வெளிப்பாடு. சிங்களப் பெரினவாதம் எங்களை அழிப்பதைத் தடுப்பதற்கே ஆயும் ஏந்தப்பட்டது. அதனைக் கீழே வைப்பதை மக்கள் விரும்பவில்லை. இந்த இடத்திலே சர்வதேசம் தன்னுடைய நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையினுடைய தலையீட்டின் ஊடாக அரசியல் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்பது தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு.

அதைவிடுத்து இன்னொருவரின் நிகழ்ச்சி நிரலுக்கு உதவி செய்வதற்குத்தான் சர்வதேச சமூகம் வருகின்றது என்று சொன்னால் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் போராடி அழிவதற்கு ஆய்த்தமாக இருக்கின்றோம். அடிமை வாழ்வை ஏற்றுக் கொள்வதற்கு நாங்கள் யாரும் தயாராக இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தயாராக இல்லை.

தேசம்நெற்: சர்வதேச சமூகத்தினுடைய தலையீடு என்று எதனைக் கேட்கறீர்கள். சமாதானப் படை ஒன்று வரவேண்டும் என்று கேட்கறீர்களா? அல்லது பாதுகாப்பு வலயத்தை சர்வதேசத்தின் பொறுப்பில் விட வேண்டும் என்று கேட்கிறீர்களா? அவ்வாறு சர்வதேசத்தின் பொறுப்பில் பாதுகாப்பு வலயம் ஒப்படைக்கப்பட்டால் மக்களை பாதுகாப்பு வலயத்திற்கு அனுமதிக்கும்படி நீங்கள் கோருவீர்களா?

சிவாஜிலிங்கம்: இந்த நிலைமைகளை நேரில் வந்து பார்க்குமாறு விடுதலைப் புலிகள் அழைப்பு விட்டு இருக்கிறார்கள் அதனை ஏன் இன்னமும் செய்யவில்லை. அதனைச் செய்து விட்டு விடுதலைப் புலிகளோடு சர்வதேச சமூகம் பேசலாமே. இதனை நாங்கள் தீர்மானிக்க முடியாது. அங்கிருக்கின்ற மக்களும் புலிகளும் தான் தீர்மானிக்க வேண்டும்.

அங்கு ஆபத்தில் இருக்கின்ற மக்களுக்கு பாதுகாப்பைச் செய்யாமல் இலங்கை அரசாங்கத்தை நம்பி போகச் சொல்ல முடியாது.

தேசம்நெற்: இன்றைக்கு இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்ல முடியாது. இலங்கை அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் கொல்லபடுவது பற்றிய கரிசனை இல்லாமல் இருக்கலாம்.

சிவாஜிலிங்கம்: இல்லாமல் இருக்கலாம் இல்லை துப்பரவாக இல்லை. இன்றைக்கு இனப்படுகொலையை இலங்கை அரசாங்கம் தான் செய்து கொண்டிருக்கிறது.

தேசம்நெற்: அதனால் தான் தமிழீழ விடுதலைப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் தமிழ் மக்களுடைய பாதுகாப்பு தொடர்பாக விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் முக்கிய பங்கிருக்கிறது ஏனென்றால் அவர்கள்தான் தமிழ் மக்களுடைய ஏகபிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அப்படி இருந்தும் வடக்கு கிழக்கின் எல்லாம் பகுதிகளில் இருந்தும் பின்வாங்கிய புலிகள் மக்கள் செறிவாக உள்ள பகுதியில் பின்வாங்காமல் நின்று சண்டையிடுவதன் நோக்கம் என்ன? இப்பகுதியில் சண்டையிட்டால் பெரும் மனித அவலம் நிகழும். இந்த அழிவை எப்படி நிறுத்துவது?

சிவாஜிலிங்கம்: சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு துணைபோவதை முதலில் நிறுத்தட்டும். பின்னர் வன்னி சென்று மக்களுடன் பேசட்டும். புலிகளுடன் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். இதற்கு மேல் சிறிலங்கா அரசாங்கத்தினது கொடுமைகள் தொடருமாக இருந்தால் போராடுகிற சக்தியைக் கொண்டிருக்கின்ற நாங்கள். தாங்கும் சக்தியையும் கொண்டிருக்கிறோம். ஒரு படைபலமோ படைபத்தினுடைய எண்ணிக்கையோ ஆயுதங்களோ வெற்றியைத் தீர்மானிக்காது. தாங்குகிற சக்தி தான் தீர்மானிக்கும். இறுதி வெற்றி எங்களுக்கெ என்றதிலை நாங்கள் உறுதியாக இருக்கிறம்.

இதுவரை ஒரு லட்சம் மக்கள் கொல்லபட்டு இருக்கிறார்கள் 25 000 போராளிகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் இதன் முடிவென்ன? இதுக்கு விலையென்ன? வெறும் 13வது திருத்தம் அந்தத் திருத்தம் இந்தத் திருத்தம் என்று சொல்லி எங்களை ஏமாற்ற முற்படுவதற்கு சர்வதேச சமூகம் துணைபோகுமாக இருந்தால் நாங்கள் ஒரு போதும் சர்வதேசத்திற்கு அடி பணிய மாட்டோம். ஒட்டுமொத்த இனமும் அழிய வேண்டி ஏற்பட்டாலும் அதைச் சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் இது தான் எங்களுடைய நிலைப்பாடு.

தேசம்நெற்: ஒட்டுமொத்த இனமும் அழிவதற்கு தயாராக இருக்கிறம் என்று ஒரு மக்கள் பிரதிநிதியாக இருந்துகொண்டு நீங்கள் எப்படிச் சொல்ல முடியும்?

சிவாஜிலிங்கம்: மக்களுக்கு எங்களுக்கு சுயமரியாதை என்ற அடிப்படையில் தான் நாங்கள் போராட ஆரம்பித்த நாங்கள். சுயமரியாதையை இழந்து நாங்கள் சரணாகதியடைந்து மீண்டும் இரண்டாம் தரப் மூன்றாம் தரப் பிரஜைகளாக வாழ்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. மக்கள் எங்களைத் தெரிவு செய்திருக்கிறார்கள் தங்களுக்கு நீதியான கௌரவமான வாழ்வை ஏற்படத்தித் தருவதற்கு.

தேசம்நெற்: ஒட்டுமொத்த இனத்தையும் அழிப்பதற்கு அல்லவே. வெளிநாடுகளுக்கு வந்துள்ள மூன்றிலொரு பகுதி தமிழர்களதும் சுயமரியாதை என்ன?

சிவாஜிலிங்கம்: அதை எங்களால் செய்ய முடியவில்லை என்றால் அடிமையாக செல்லுங்கள் என்று சொல்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. இதற்கு மேல் நீங்கள் வேறு விடயத்திற்கு செல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

வெறுமனே புலிகள் தான் விடுவிக்க வேண்டும் என்றால் விடுவிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நடந்தது. யாழ்ப்பாணம் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலை. ஆறு லட்சம் மக்கள் இருக்கிறார்கள். வேட்டையாடப்படுகிறார்கள். அதே போல் வவுனியா நகரம் மன்னார் நகரத்தில் மக்கள் வேட்டையாடப்படுகிறார்கள். கிழக்கு மாகாணம் கொழும்பு நகரம் எங்கும் தமிழ் மக்கள் வேட்டையாடப்படுகிறார்கள். சரி வன்னி நிலப்பரப்பில் தான் அவலங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சரி வேறு எங்கும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறவில்லையா? இந்த அவலங்களுக்கு முடிவில்லாத நிலையில் வன்னியைவிட மோசமான அவலத்திற்குள் அந்த மக்களைத் தள்ளுவதற்கு நாங்கள் தயாரில்லை. அதற்கு துணை போக முடியாது.

Sivajilingam M K & Sothilingam Tதேசம்நெற்: அண்மையில் இந்தியா சென்று திரும்பிய நீங்கள் பல இந்தியத் தலைவர்களையும் சந்தித்து இருந்தீர்கள். இலங்கை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

சிவாஜிலிங்கம்: நான் அறிந்தவரை இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாடு தவறானது என்பது தான் என்னுடைய கருத்து. பாகிஸ்தானும் சீனாவும் இலங்கையின் புலிகளை அழிக்கும் யுத்தத்திற்கு முழுமையாக உதவி வருகிறார்கள். இராணுவ ரிதியாக புலிகள் பலமிழந்து போயுள்ளனர். இலங்கை பெரும்பாலும் சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட நிலையே காணப்படுகிறது. ஈரான் நிதியுதவியை அள்ளிக் கொடுக்கிறது. இந்தியாவிற்கு எதிரானவர்கள் இலங்கையில் ஆளுகை செலுத்துகையில் குறைந்தது மூன்றில் ஒரு நிலப்பரப்பாவது தங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று நினைக்காமல் பழிவாங்கத் துடிப்பது சீனா, பாகிஸ்தான் நாடுகளின் கையை அங்கு ஓங்கச் செய்யும். இதனை இந்தியா விரைவில் உணரும்.

ஆனால் எமது தொப்புள்கொடி உறவுகளான தாய்த் தமிழக மக்கள் உணர்வாகவும் விழிப்பாகவும் இருக்கிறார்கள். 

தேசம்நெற்: இந்தியக் காங்கிரஸ் கட்சி தான் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். அடுத்த தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சி அமைந்தால் அது விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக அமையும் என்று நினைக்கிறீர்களா?

சிவாஜிலிங்கம்: இந்தியாவின் தேர்தலில் யார் வெற்றி பெறவேண்டும் என்பது பற்றி இந்திய மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் மாற்றங்கள் ஏற்பட்டால் வாய்புகள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம் அவ்வளவுதான்.

பிஜேபி ஆட்சியின் போது அன்ரன் பாலசிங்கம் பயணம் செய்த கப்பல் இந்திய கடற்படையால் வழிமறிக்கப்பட்டது. அப்போது தங்கள் கட்டுப்பாட்டுத் தளத்திற்கு தொடர்பு கொண்டு தாங்கள் என்ன செய்வது என்று கப்பலில் இருந்தவர்கள் கேட்டுள்ளனர். அவர்களை சற்றுப் பொறுக்கும்படி சொல்லிவிட்டு விடுதலைப் புலிகள் நெடுமாறன் ஐயாவுடன் தொடர்புகொண்டனர். நெடுமாறன் ஐயா அப்போது பாதுகாப்புச் சௌலாளராக இருந்த ஜோர்ச் பேர்னான்டஸ் உடன் தொடர்பு கொண்டு பின்னர் மனிதாபிமான அடிப்படையில் பயணத்தைத் தொடர அனுமதி வழங்கப்பட்டது.

தேசம்நெற்: தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை படிமுறையாக வெற்றி பெற்றிருப்பதற்கான வாய்ப்பு ஒன்று இருந்தள்ளது. குறிப்பாக இலங்கை – இந்திய ஒப்பந்தம் சந்திரிகாவின் காலத்தில் முன்வைக்கப்பட்ட தீர்வுகள். இதில் தமிழ் அரசியல் தலைமைகள் தவறுவிட்டுள்ளனவா?

Sivajilingam M Kசிவாஜிலிங்கம்: தமிழ் தரப்பில் எவ்விதமான தவறும் இல்லை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூட தலைமை தாங்கிய வரதராஜப்பெருமாள் என்ன சொல்லிச் சென்றார். அதை நடைமறைப்படுத்த இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை. உண்மையான அதிகாரம் வழங்கப்படவில்லை. ஆனால் அப்படிச் செய்திருந்தால் அடுத்த பக்கம் கொண்டு சென்றிருக்கலாம். 2002 பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட தீ;ர்மானங்களை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவில்லை. ஐஎஸ்ஜிஏ க்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையே. பி ரொம்ஸ்க்கு என்ன நடந்தது.

தமிழ் தேசியத்தின் போராட்டம் ஓயாது. வேணும் என்றால் அது மிகவும் நசுக்கப்படலாம். அழிக்கப்படலாம் ஆனால் சாம்பல் மேட்டில் இருந்து பீனிக்ஸ் பறவை எழும்புவது போன்று இந்தப் போராட்டம் திருப்பி வெடிக்கும். எல்ரிரிஈ தவறுக்ள் விட்டுருக்கிறது. நாங்கள் தவறுகள் விட்டிருக்கிறம். ஆனால் அடுத்த தலைமுறை அந்தத் தவறை விடாது என்றதை நான் டெல்லியில் ஒரு திங் ராங்க் அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் சொல்லி இருக்கிறேன். புலிகள் அழிக்கப்பட்டாலும் ஒரு எதிர்ப்பு இயக்கம் ஒன்று எஸ் ஓ வை ஓ என்ற பெயரில் இருக்கட்டும் லோங்ரேமில் ஒரு வரலாறு படைக்கட்டும்.

தேசம்நெற்: தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள முரண்பாடுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா?

சிவாஜிலிங்கம்: கட்சிகள் கூட்டமைப்புகள் அனைத்தையும் பிளவுபடுத்திய மகிந்த ராஜபக்சவால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 22 பா உ க்களில் ஒருவரையும் விலைக்கு வாங்க முடியாமல் போனது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று நான் கருதுகிறேன். 

தேசம்நெற்: இன்று இந்த ஆபத்தான சூழலில் தமிழ் மக்கள் தள்ளப்பட்டதற்கு பல்வேறு தவறான முடிவுகள் காரணமாக அமைந்திருக்கிறது. அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய பொறுப்பை சரிவரச் செய்யவில்லை என்று நீங்கள் கருதவில்லையா?

சிவாஜிலிங்கம்: விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் தீர்வுத் திட்டதை முன் வைக்கத் தவறிவிட்டது என்றே நான் கருதுகிறேன். அவ்வாறான ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்காதது மிகப்பெரிய தவறு என்றே நான் கருதுகிறேன்.

தேசம்நெற்: மீண்டும் பழைய விடயத்திற்கே வருகிறேன். இந்த யுத்த்தில் சிக்குண்ட மக்கள் லட்சக்கணக்கான மக்களை எப்படி இந்த அவலத்தில் இருந்து மீட்க முடியும்?

சிவாஜிலிங்கம்: சர்வதேச கண்காணிப்பில் ஆயுதங்களை வைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்குப் பொவது தான் மக்களுக்கும் நல்லது எல்லவற்றுக்கும் நல்லது. அப்படி பேச்சுவார்த்தையை நடாத்தி இறுதித் தீர்வு எட்டப்படுமாக இருந்தால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால் புலிகள் சரணடைவதை ஒரு போதும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

சாலைப்பகுதித் தாக்குதலில் கடற்புலிகளின் இரண்டாவது தளபதி மரணம்

வன்னியை விடுவிக்கும் நடவடிக்கையின் மிக முக்கிய இலக்கை அடைந்துள்ள படையினர் சாலைப்பகுதியில் நடத்திய தாக்குதலில் கடற்புலிகளின் இரண்டாவது தளபதி உட்பட 4 பேரை நேற்று (பெப்:04) கொல்லப்பட்டதாக படைத் தரப்பு தெரிவிக்கின்றது.  நேற்று பிற்பகல் 1.45 மணிமுதல் 2.00 மணிவரை தாக்குதல் நடத்திய 55 வது படைப்பிரிவினர் சாலைப் பகுதியில் அமைந்துள்ள கடற்புலிகளின் தளத்தை கைபற்றினர். இத் தாக்குதலில் கடற்புலிகளின் இரண்டாவது தளபதியான வினாயகம் கொல்லப்பட்டுள்ளார்.

தொடர்பு சாதனங்களை ஒட்டுக்கேட்ட போது எல்ரிரிஈயினருக்கு இவர்கள் இறந்த உடல்களை தேடமுடியாமல் படையினரின்  தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் பின்வாங்கியுள்ளதாக படையினரின் மின்னனுயியல் போர்யுக்தி பிரிவினர் தெரிவித்தனர்.

இதேவேளை பூநகரி கடற்புலிகளின் பொறுப்பாளர் காதர் எனும் பஹலவனும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என மேலும் கடற்புலிகளின் விசேட தளபதியான சின்னக்கன்னன் நேற்றுக் காலை 8.50 மணியளவில் நடந்த பிறிதொரு தாக்குதலில் இப்பகுதியில் வைத்து கொல்லப்பட்டுளார். இவர் கொல்லப்பட்ட பின் அவர்களின் சொந்தப்பானியில் லெப்டினன் கேனல் பதவி உயர்வும் வழங்கியுள்ளதாக படையினரின் மின்னனுயியல் போர்யுக்தி பிரிவினர் தெரிவித்தனர். இம்மோதல்களில் 8 கடற்புலிகள் கொல்லப்பட்டுள்ளதும் ஊர்ஜீதம் செய்துள்ளனர்.

தேசத்துக்கு மகுடம் கண்காட்சியில் புலிகளின் கடல் மூழ்கிப்படகு

dayata_kirula.jpgதேசத்துக்கு மகுடம் தேசிய கண்காட்சியை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் நேற்று (பெப்:04) பிற்பகல் பண்டாரநாயக சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் திறந்து வைத்தார்.

இலங்கையின் வரலாறு அதன் கௌரவம் பற்றிய அறிவு, மஹிந்த சிந்தனையின் பிரகாரம் நாட்டில் ஏற்படுத்தியுள்ள அபிவிருத்தி மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டம் என்பன பற்றி மக்களுக்கு தெளிவு படுத்துவதாகும். கண்காட்சி எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறும் இதில் இராணுவத்தினால் அன்மைக்காலத்தில் வெற்றி கொண்ட ஆயுதங்கள் படைக்கலங்கள் என்பனவும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களும்  சிரந்தி ராஜபக்கக்ஷ அவர்களும்  எல்ரிரிஈ யினரிடமிருந்து கைபற்றிய கடல் மூழ்கிப்படகை பார்வையிடுவதைப் படத்தில் காணலாம்

800 மேற்பட்டோர் இன்று (05) இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை

wanni-civilans.jpgபுலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து  800 க்கு மேற்பட்டோர் இன்று (05) இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளான விஸ்வமடு மற்றும் தர்மபுரம் பிரதேசங்களுக்கு வந்துள்ளரென பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

புதுக்குடியிருப்பில் இருந்து இன்னும் ஆழமான யுத்த பகுதிக்குள் மக்கள் நகர்வு – ‘புலிகளின் முக்கிய தலைவர்களுக்கு மன்னிப்பு இல்லை’ கோதபாய : த ஜெயபாலன்

Makeshift Hospitalபுலிகளுடன் சரணடைவது பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை அவர்கள் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் சரணடைய வேண்டும் என இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோதபாய ராஜபக்ச தெரிவித்து உள்ளார். புலிகளின் கீழ் நிலை உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் பிரதான சமூகத்துடன் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று தெரிவித்துள்ள கோதபாய ராஜபக்ச புலிகளின் தலைமை உறுப்பினர்களுக்கு எவ்வித மன்னிப்பும் இல்லை என்று தெரிவித்து உள்ளார். பிபிசி உலகசேவைக்கு இணைத் தலைமைநாடுகளின் வேண்டுகோள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே பாதுகாப்புச் செயலர் இதனைத் தெரிவித்து உள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் சகோதரரான இவரை குறிவைத்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதல் தோல்வியடைந்தது தெரிந்ததே. மேலும் தற்போதைய இராணுவத் தளபதி சரத்பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதலும் தோல்வியடைந்தது. அடிபட்ட பாம்புகளின் சீற்றத்தில் புலிகளுக்கு எதிரான இந்த யுத்தம் தற்போது முடக்கி விடப்பட்டு உள்ளது. மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது அவருடைய சகோதரர் கோதபாய ராஜபக்சவே முக்கிய முடிவுகளில் ஆளுமை செலுத்துகிறார் என்று அரசியல் வட்டாரங்கள் நம்புகின்றன.

இலங்கை அரசினால் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்கள் காரணமாக கடந்த சில தினங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் அங்கு இயங்கி வந்த ஒரே மருத்துவ நிலையமும் செயலிழந்து போய் உள்ளது. அங்கு கடமையாற்றிய 15 யுஎன் பணியாளர்களும் அவர்களது 81 குடும்ப உறுப்பினர்களும் மருத்துவமனையை விட்டு வெளியேற் உள்ளதாக கொழும்பில் உள்ள யுஎன் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்து உள்ளார்.

சர்வதேச அழுத்தங்கள் பலமுனைகளில் இருந்து வந்த போதும் புதுக்குடியிருப்பில் உள்ள 250000 மக்களது உயிர்களைப் பணயம் வைத்து இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் தங்கள் இராணுவ நடவடிக்கையைத் தொடர்கின்றனர். உலகின் முக்கிய தலை நகரங்களில் எல்லாம் ஆயிரக் கணக்கில் தமிழர்கள் ஒன்றுதிரண்டு குரல் எழுப்பிய போதும் அவை கவனத்திற்கொள்ளபடுவதாக இல்லை.

கடந்த நான்கு நாட்களாக பெப்ப்ரவரியில் மட்டும் 85க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவர் ஐசிஆர்சி மருத்துவப் பணியாளர்.
01 பெப் 13 பேர் கொல்லப்பட்டனர்
02 பெப் 9 பேர் கொல்லப்பட்டனர்
03 பெப் 52 பேர் கொல்லப்பட்டனர்
04 பெப் 12 பேர் கொல்லப்பட்டனர்
05 பெப் 7 பேர் கொல்லப்பட்டனர்

மருத்துவமனை மீதான தொடர்ச்சியான தாக்குதலை அடுத்து காயப்பட்டவர்கள் நோயாளர்கள் இன்னும் ஆழமான யுத்த பகுதிகள்  நோக்கி நகர நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளதாக அல்ஜசீரா செய்தி தெரிவிக்கின்றது. கரையோரப் பிரதேசமான அங்கு குடிநிர் வசதிகளே இல்லையென ஐசிஆர்சி பெச்சாளர் சரசி விஜயரட்னே தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் காயப்பட்டவர்களும் நோயாளிகயளும் மருத்துவப் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதற்கு அல்லது யுத்தப் பகுதியில் இருந்து வெளியேறுவதற்கான பாதுகாப்பான வழி ஒன்றை ஏற்படுத்தமாறு அரச படைகளையும் புலிகளையும் கேட்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்றும் உடையார்கட்டு மருத்துவமனை மீது பாரதுரமான தாக்குதல் நடத்தப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள Office for the Coordination of Humanitarian Affairs (OCHA) உலக உணவுத் திட்டம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான உணவு விநியோகத்தை மேற்கொள்வதற்கான வழியை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்தும் போச்சு வார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கிறது. நாளை உணவு விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்து உள்ளது.

இணைத் தலைமை நாடுகளின் சரணடைவது பற்றிய வேண்டுகோள் தொடர்பாக புலிகள் உத்தியோகபூர்வமாக எதனையும் குறிப்பிவில்லை. குறிப்பாக நோர்வேயும் அந்த வேண்டுகோளில் தன்னையும் இணைத்துக் கொண்டது புலிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்ததாகவே உள்ளது. பேச்சு வாரத்தைகளின் போது நோர்வே விடுதலைப் புலிகளுக்கு சாதகமாகச் செயற்பட்டது என்று குற்றச்சாட்டப்பட்டது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்த யுத்தம் முற்றிலும் இந்தியாவின் அணுசரணையுடன் மேற்கொள்ளப்படுகிறது என்பது இந்தியாவின் நீண்ட மெளனத்தில் இருந்து தெரியவருகிறது. தமிழ்நாட்டை உசுப்பி இந்தாயவைப் பணிய வைக்கும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை. அமெரிக்காவில் பதவியேற்றுள்ள புதிய ஆட்சியாளர்களும் வழமையான கோரிக்கைகள் கண்டனங்களுடன் நிறுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுடன் பிரித்தானியாவும் இணைந்து தனது கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட புலிகள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் ஒதுக்கப்பட்டு உள்ளனர்.

எவ்வித அரசியல் செயற்பாடுகளையும் கொண்டிராத முற்றிலும் இராணுவ அமைப்பான புலிகள் சக இன மக்களுடன் நல்லுநவைக் கொண்டிராத சக தேசிய சர்வதேசிய விடுதலை அமைப்புகளுடன் உறவுகளைக் கொண்டிராத மக்களை நம்பாது ஆயுதங்களை மட்டுமே நம்பிய புலிகளை அந்த ஆயுதங்கள் இன்று காப்பாற்றவில்லை. 250 000 மக்கள் விரும்பியோ விரும்பாமலோ இன்று தங்களைப் பணயம் வைத்து புலிகளைக் காக்கின்றனர்.

தற்போதைய யுத்தத்தில் சிக்குண்டுள்ள 250 000 மக்களில் கணிசமானவர்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் குடும்பங்கள் அவர்களது அலுவலகங்களில் பணியாற்றியவர்கள் விரும்பியோ விரும்பாமலோ இராணுவப் பயிற்சிக்கு உட்பட்டவர்கள். கடந்த இரு தசாப்தங்களாக தங்களது பூரண கட்டுப்பாட்டில் இருந்த மக்களை புலிகள் தங்களது நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி இருப்பார்கள் என்பதும் அதனை அந்த மக்களால் மறுப்பதற்கு வாய்ப்பிருந்திருக்காது என்பதும் யதார்த்தம்.

அந்த வகையில் இலங்கை அரசு அந்த மக்களின் நம்பிக்கையைப் பெறாத வரையில் அவர்கள் ஒரு போதும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழையமாட்டார்கள் என்பது உறுதி. இதற்கிடையே யுத்தப் பகுதியில் இருந்து தப்பி வந்த சிலர் கைது செய்யப்பட்டு காணாமல் போகிறார்கள் என்ற செய்திகள் வெளியெ கசிகின்றன. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுபவர்களதும் நிலை மோசமாக உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் பொறுப்பில் பாதுகாப்பு வலயங்களை ஒப்படைக்க வேண்டும். சரணடைய விரும்புபவர்கள் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளிடம் சரணடைவதற்கான வழிவகைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இலங்கை இராணுவத்தை எந்தவொரு வன்னிக் குடிமகனும் குடிமகளும் நம்புவார்கள் என்று அரசோ சர்வதேச சமூகமோ எதிர்பார்க்க முடியாது.

மாற்றுக் கருத்து தளத்தில் செயற்பட்டவர்கள் மாற்றுக் கருத்து என்பது  புலியெதிர்ப்பு என்றளவில் செயற்படாமல் இலங்கை அரசு மீதான தங்களுடைய அழுத்தங்களை பிரயோகிப்பது அவசியம். இந்த வன்னி மக்கள் சந்திக்க உள்ள அவலத்தை தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். பெயருக்கு அறிக்கைவிட்டு தங்கள் கடமை முடிந்துவிட்டது என்றளவில் இல்லாமல் தொடர்ச்சியான அழுத்தங்களை நேரடியாகவும் சர்வதேச சமூகத்திற்கு ஊடாகவும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். புலி எப்ப காலியாகும் நாங்கள் எப்ப போய் குந்தலாம் என்ற எண்ணத்தில் செயற்பட்டால் அது அவர்கள் வன்னி மக்களுக்கு இழைக்கும் பாரிய துரோகச் செயலாக அமையும்.

இன்றைக்கு தமிழ் மக்களுடைய போராட்டங்கள் யுத்தத்தை நிறுத்துவதையும் சர்வதேச சமூகத்தின் பொறுப்பில் பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்படுவதையும் அரசியல் தீர்வு முன் வைக்கப்படுவதையும் மையமாக வைத்து நடத்தப்பட வேண்டும். மாறாக புலிகளின் நலன்கருதி மேற்கொள்ளப்படும் எவ்வித போராட்டமும் பயனற்றதாகவே அமையும். எங்கள் தலைவர் பிரபாகரன் புலிகளின் தடையை நீக்குங்கள் எங்களுக்கு தமிழீழம் வேண்டும் என்ற கோசங்கள் வன்னி மக்களுக்கு எவ்வகையிலும் உதவாது. யதார்தத்தைப் புரிந்து கொண்டு ஏற்படப் போகும் மனித அவலத்தை தடுத்து நிறுத்த போராடுவதே இன்றுள்ள முக்கிய கடமை.

பெயர் குறிப்பிட விரும்பாத ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார் ”நாங்கள் எங்களுடைய வரலாற்றுத் தவறுகளை எழுதப் போனால் புத்தகம் புத்தகமாக எழுதலாம். பாவம் மக்கள். ரொம்பவும் கஸ்டப்படுத்திவிட்டோம்” என்று. அவர் மேலும் கூறுகையில் ”இன்றைக்கு பணயம் வைக்கப்பட்டுள்ள 250 000 மக்களில் 5000 – 10 000 மக்களைப் பலிகொடுத்துத் தான் அரசியல் பேரம் பேச வேண்டி இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.