February

February

மக்களை அழைத்துவர 40 பஸ்கள் சேவையில்

bus.jpgவன்னியில் இருந்துவரும் மக்களை வவுனியாவுக்கு அழைத்துவருவதற்கென 40 பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வந்த சுமார் 12 ஆயிரம் பேர் ஓமந்தை மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கட்டம் கட்டமாக வவுனியா அழைத்து வரப்படுவதாகவும் அவர் கூறினார்.

மக்களை அழைத்துவர இ.போ.ச. மற்றும் தனியார் பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, வவுனியாவுக்கு அழைத்துவரப்படும் மக்கள் வவுனியாவிலுள்ள பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்ட பின் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்படவுள்ளனர்.

ஆஸ்திரேலியா காட்டுத்தீ: பலி 173 ஆக உயர்வு

forest_fire.jpgஆஸ்தி ரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு இறந்தோர் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது. தீயை அணைக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள காடுகளில் கடந்த சனிக்கிழமை அன்று தீ விபத்து ஏற்பட்டது. அங்கு வீசும் அனல் காற்று, வெப்பம் காரணமாக தீ மேலும் பல இடங்களுக்கு பரவியது. சுமார் 30 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் தொலைவுக்கு தீ கொளுந்து விட்டு எரிந்தது. தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் எவ்வளவோ முயற்சி மேற்கொண்டும் உடனடியாகப் பலன் உண்டாகவில்லை.

இந்த தீ விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இதுவரை 173 பேர் உயிரிழந்திருப்பது தெரிய வந்திருப்பதாக, காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், 750-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகின. பொது மக்களின் உடமைகளுக்கும் பலத்த சேதம் உண்டானது. காட்டுத் தீயில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த 100 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் இந்த அளவுக்கு பெரிய தீவிபத்து ஏற்பட்டதில்லை என்று ஆஸ்திரேலிய நிர்வாகம் தெரிவித்துள்ளது. காட்டுத் தீயால் கடும் பாதிப்பை சந்தித்திருக்கும் மேரிஸ்வில்லி, கிங்ஸ்லேக் ஆகிய இரு நகரங்களுக்கும் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஊர்களிலும்தான் அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

வவுனியா வரை யாழ்தேவி

train.jpgவவுனியா வுக்கான யாழ்தேவி கடுகதி ரயில்சேவை ஞாயிற்றுக்கிழமை முதல் வவுனியா வரையும் நீடிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக கடந்த சில தினங்களாக இந்த சேவை மதவாச்சி வரையுமே நடத்தப்பட்டு வந்தது. இதேவேளை, இரவு தபால் ரயில்சேவை தொடர்ந்தும் மதவாச்சி வரையுமே நடைபெற்று வருகிறது. யாழ்தேவி ரயில் சேவையும், இரவு தபால் ரயில் சேவையும் பாதுகாப்பு காரணங்களால் கடந்த சில மாதங்களாக மதவாச்சி வரையுமே நடத்தப்பட்டு வந்தது.

எனினும், கடந்த டிசம்பர் மாதம் யாழ்தேவி சேவை மட்டும் வவுனியா வரை நீடிக்கப்பட்டது. இதேவேளை, நாடு முழுவதும் நடத்தப்படுகின்ற ரயில்சேவைகளின் நேரங்களில் சில மாற்றங்களை மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாக். விஞ்ஞானி விடுதலைக்கு அமெரிக்கா, பிரான்சு எதிர்ப்பு – மீண்டும் அணு ஆயுதத்தை விற்பார் என ஒபாமா சந்தேகம்

obama-2001.jpgபாகிஸ் தான் அணு விஞ்ஞானி விடுதலைக்கு அமெரிக்கா, பிரான்சு ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவர் தொடர்ந்து அணு ஆயுதத்தை பரப்பும் அபாயம் உள்ளதாக ஒபாமா அரசு கூறியுள்ளது.  அணு ஆயுத தொழில்நுட்பத்தை வடகொரியா, ஈரான், லிபியா ஆகிய நாடுகளுக்கு விற்றதால் 5 ஆண்டுகளாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்த பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல்காதிர்கான் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டார். இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ரொபர்ட் கிப்ஸ் கூறியதாவது:-  அப்துல் காதிர்கான் விடுதலை பற்றி பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. அணு ஆயுத பரவல் குறித்து ஜனாதிபதி ஒபாமா பல தடவை கவலை தெரிவித்துள்ளார். காதிர்கான், அவரது வீட்டுக்காவலுக்கு காரணமான அணு ஆயுத தொழில்நுட்பத்தை விற்கும் செயலில் மீண்டும் ஈடுபட மாட்டார் என்று பாகிஸ்தான் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஒபாமாவும், அவரது அரசும் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கார்டன் துகுயிட் கூறியதாவது:- அப்துல் காதிர்கான் விடுதலை மிகவும் வருந்ததக்கது. அவர் இன்னமும் அணு ஆயுதங்களை பரப்பும் ஆபத்தானவராக இருந்து வருகிறார். அவர் வடகொரியாவுக்கும், ஈரானுக்கும் அணு ஆயுத தொழில்நுட்பங்களை விற்றதால் சர்வதேச பாதுகப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகள், இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும்.  அப்துல் காதிர்கான் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலை, பாகிஸ்தானுக்கு நன்றாகவே தெரியும். அதையும் மீறி அவரை விடுவித்தது துரதிருஷ்டவசமானது. இவ்வாறு அவர் கூறினார்.

காதிர்கான் விடுதலைக்கு அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும் கவலை தெரிவித்துள்ளார். இது பற்றி பிறகு விரிவாக பேசுவதாகவும் அவர் கூறினார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் விவகாரங்களுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ரிச்சர்டு ஹால்ப்ரூக், அடுத்த வாரம் பாகிஸ்தான் செல்கிறார். அப்போது அவர் இவ்விவகாரம் குறித்து பாகிஸ்தான் அரசிடம் பேசுகிறார். காதிர்கான் விடுதலை குறித்து பிரான்சு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எரிக் செவாலியரும் கவலை தெரிவித்துள்ளார். அணு ஆயுத பரவலில் காதிர் கான் ஈடுபடக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, இவ்விவகாரத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் பதில் அளித்துள்ளது. பாகிஸ்தான் அணு ஆயுத தொழில்நுட்பங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், எனவே, காதரிர்கான் இனிமேல் அச்சுறுத்தலாக இருக்க மாட்டார் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி குரேஷி தெரிவித்தார்.

சேலத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இலங்கை குங்பூ அணி திரும்பியது

தற்காப்பு கலைப் போட்டியில் பங்கேற்க சேலம் வந்த இலங்கை வீரர்களை போட்டியிலிருந்து நீக்க வேண்டுமென்று கோரி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது இலங்கை தேசியக் கொடி எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து இலங்கை அணி பாதுகாப்பாக நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.சேலம் காந்தி மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை மாலை கராத்தே, குங்பூ, குத்துச்சண்டை, டேக்குவாண்டோ போன்ற தற்காப்பு

கலைப் போட்டிகள் நடந்தது. இதில் பங்கேற்க இலங்கையில் இருந்து 6 வீரர்கள்,2 வீராங்கனைகள் மற்றும் ஒரு பயிற்சியாளர் என மொத்தம் 9 சிங்களவர்கள் வந்திருந்தனர். விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் இலங்கை வீரர்கள் தங்கள் நாட்டு தேசியக் கொடியை ஏந்தி வந்தனர். சேலத்துக்கு சிங்கள வீரர்கள் வந்திருக்கிறார்கள் என்ற செய்தி காட்டுத் தீ போல் பரவியது. இதையடுத்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மைதானத்தின் முன்பு இலங்கை அரசுக்கு எதிராக கோஷம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். போட்டியில் இருந்து அந்த வீரர்களை நீக்க வேண்டும் என கோஷம் எழுப்பினார்கள்.

இலங்கை வீரர், வீராங்கனைகள் வைத்திருந்த அவர்களது தேசியக்கொடியையும் பறித்து தீவைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.வீரர்களின் பாதுகாப்புக் கருதி தற்காப்பு கலைப் போட்டி நிறுத்தப்பட்டது. தகவல் கிடைத்ததும் சேலம் மாநகர துணை கமிஷ்னர் ஜான்நிக்சன் விரைந்து வந்து அங்கிருந்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கை வீரர்களை போட்டியில் இருந்து வெளியேற்றுவதாக அவர் உறுதியளித்தார். இதையடுத்து இலங்கைக்கு வீரர்கள் பாதுகாப்புடன் திருப்பி அனுப்பப்பட்டனர்.

மாத்தளை மாவட்டத்தில் தற்காலிக அடையாள அட்டையை பெற “பவ்ரல்’ கிளையுடன் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை

paffre.jpgமாத்தளை மாவட்டத்தில் 34 ஆயிரம் வாக்காளர்கள் தேசிய அடையாள அட்டை இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இவர்கள் இல 261/6 பிரதான வீதி, மாத்தளை என்ற முகவரியில் அமைந்துள்ள நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலிற்கான மக்கள் அமைப்பான “பவ்ரலின்’ மாத்தளை கிளைக் காரியாலயத்துடன் தொடர்பு கொண்டால் வாக்களிப்பதற்கான தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டலை வழங்க முடியுமென மேற்படி அமைப்பின் மாத்தளை கிளை இணைப்பாளர்களான காமினி ஜயதிஸ்ஸ, பெ.வடிவேலன் ஆகியோர் தெரிவித்தனர். அண்மையில் மாத்தளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் முன் இதனைத் தெரிவித்த அவர்கள் மேலும் கூறியதாவது;

வேட்பு மனுத் தாக்கல் செய்த தினம்முதல் ஜனவரி மாதம் இறுதி வரையிலான காலப் பகுதிக்குள் மாத்தளை மாவட்டத்தில் 5 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. 2 தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன என்றும் பாரதூரமான சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை. கடந்த கால தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை மிகக் குறைவான தேர்தல் வன்முறைச் சம்பவங்களே இடம்பெற்றுள்ளன. பிரதான அரசியல் கட்சிகளான ஐ.தே.கட்சி, ஐ.ம.சு.மு., ஜே.வி.பி. ஆகிய 3 கட்சிகளினதும் முறைப்பாடுகளே பதிவு செய்யப்பட்டுள்ளன. இம்முறை மொத்தமாக 8 சுயேட்சைக் குழுக்கள் போட்டியிட்ட போதும் இவை தொடர்பான எந்தவித முறைப்பாடும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. தேர்தல் வன்முறைகளும் சம்பவங்களும் குறைந்துள்ள போதும் தேர்தல் சட்டத்திட்டதிற்கு முரணான செயற்பாடுகள் நாளாந்தம் அதுகரித்து வருகிறது. ஆளுங் கட்சியினரே பெருமளவில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு அரச அதிகாரமும் அரச பௌதிக வளங்களும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எதிர்காலத்தில் மேலும் தேர்தல் வன்முறை சம்பவங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.

நாம் தேர்தல் வாக்களிப்பை கண்காணிப்பதற்கென 200 இளைஞர், யுவதிகளை வாக்களிப்பு நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவுள்ளோம். இவர்கள் 295 வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். இவர்களைத் தவிர, இவர்களின் கடமைகளை மேற்பார்வை செய்ய தொகுதி மட்டத்தில் நான்கு தொகுதிகளுக்கும் தலா ஒருவர் வீதம் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மஞ்சள் நிற தொப்பியும், கைப்பட்டியும், சீருடையும் அணிந்த வண்ணம் சேவையில் ஈடுபடுவர். அன்றைய தினம் மாத்தளை மாவட்டத்தின் முழுமையான நடவடிக்கைகளை கண்காணிக்க 4 வாகனங்களிலும் 7 மோட்டார் சைக்கிள்களிலும் எமது ஊழியர்கள் கடமையில் ஈடுபட உள்ளனர். சென்ற தேர்தல்களில் போன்று இம்முறையும் வாக்குப் பெட்டிகளை களவாடுதல், வாக்களிப்பை தடைசெய்தல், வாக்காளர்களை அச்சுறுத்தல் போன்ற சம்பவங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. நாம் இயன்றளவு இவ்வாறான சம்பவங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கும் அதேசமயம், எமது சக்தியையும் மீறி தேர்தல் முறைகேடான சம்பவங்களும் இடம்பெறலாம்.

அவ்வாறு நடந்தால் உடனுக்குடன் தேர்தல் ஆணையாளருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் மாத்தளை மாவட்ட தேர்தல் ஆணையாளருக்கும் அறிவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகள் முறையாக பயன்படுத்தப்படுவதையும், அவர்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுப்போம் என தெரிவித்தார். இவர்கள் தமது அமைப்பின் செயற்பாடுகளை நீதியாகவும் நேர்மையாகவும் மேற்கொள்ள தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் தலைவர்கள், அரச அதிகாரிகள் ஆகியோர் தமக்கு பூரண ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

புலிகளின் விமானங்கள் உருத்தெரியாதவாறு தனித்தனிப் பாகங்களாக கழற்றப்பட்டுள்ளன இராணுவப் பேச்சாளர் தகவல்

விடுதலைப்புலிகள் வசம் இருந்த விமானங்கள் உருத்தெரியாதவாறு தனித்தனியாக வெவ்வேறு பாகங்களாகக் கழற்றி வைக்கப்பட்டுள்ளன என்று கருதப்படுகின்றது. அவற்றை தேடும் பணியில் படையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார அரச ஊடகம் ஒன்றுக்கு மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் விமானப் படை, கடற்படை என்பவற்றின் செயற்பாடுகளை படையினர் முழு அளவில் சீர் குலைத்துள்ளனர். கடற்பகுதியில் 24 மணிநேரமும் கடற்படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

172 சதுர கிலோமீற்றர் பிரதேசத்துக்குள் விடுதலைப்புலிகள் முடக்கப்பட்டுள்ளனர். சுமார் 700 உறுப்பினர்கள் வரையிலேயே தற்போது அங்கு முடங்கியுள்ளனர். படையினர் எல்லாத் திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்துவதால் விடுதலைப்புலிகள் தாக்குதல் திறனை இழந்து விட்டனர்  என்று இராணுவப் பேச்சாளர் விவரித்தார்.

ஈழப்பிரச்சனை: முல்லைத்தீவு நோக்கி சென்ற தமிழக வக்கீல்கள் 14 பேர் கைது

tamilnadufishing.jpgஈழத் தமிழர்களை போரில் இருந்து காப்பாற்ற தமிழக வக்கீல்கள் 14 பேர் கள்ளத் தோணியில் தூத்துக்குடியில் இருந்து முல்லைத்தீவை நோக்கி சென்றனர். கரூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முருகையன் தலைமையில் ஈழத்தமிழர்களை காக்கக் கோரி, போராட்டம் நடத்தி வந்தனர். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லையெனில் முல்லைத்தீவு சென்று பேராடுவோம் என்றும் அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று தூத்துக்குடி வழக்கறிஞர்கள் 6 பேரும், கரூர் வழக்கறிஞர்கள் 8 பேர் முருகையன் தலைமையில் முல்லைத்தீவு செல்ல முடிவு செய்தனர். தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், வழக்கறிஞர்கள் 14 பேரும் தூத்துக்குடிக்கு முன்பு 3 கி.மீ. தொலையில் இருந்து ஒரு கள்ளத் தோணியில் புறப்பட்டனர்.

முல்லைத்தீவு நோக்கி சென்றுக்கொண்டிருந்த முருகையனை தொடர்பு கொண்டு பேசியபோது, நாங்கள் இன்னும் இரண்டு மணி நேரத்தில் முல்லைத்தீவு சென்று விடுவோம் என்று தெரிவித்தார். வக்கீல்கள் முல்லைத்தீவு பயணம் செய்வதை அறிந்த கடலோர காவல்படையினர் அவர்களை பிடிக்க விரைந்தனர். நடுக்கடலில் சுற்றி வளைத்த கடலோர காவல்படையினர் அவர்களை கைது செய்தனர்.

ஈழத்தமிழர்களுக்காக தமிழக வக்கீல்கள் முல்லைத்தீவு பயணம் மேற்கொண்டுள்ள செய்தி தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்களிடையே பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களது விபரம் :

1 ) சுப.இராமச்சந்திரன் ,(தூத்துக்குடி)
2) முருகையன் ( கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் )
3) நடேசன் ( கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர்)
4 ) நெடுஞ்செழியன் ( கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் )
5) முகமது பரூன் ஹக் ( கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் )
6) சின்னச்சாமி ( கரூர் )
7) லெட்சுமணன் ( கரூர் )
8 ) முருகேசன் ( கரூர் )
9) சுதாகர் ( கரூர் )
10 ) வேலுச்சாமி ( தூத்துக்குடி )
11 ) அரிகரன் ( தூத்துக்குடி )
12)பொன்ராசு ( தூத்துக்குடி )
13) இரகு (( தூத்துக்குடி ) மாணவர் திமுக மாவட்ட அமைப்பாளர் )
14 ) தூத்துக்குடி வழக்கறிஞர்

மதுரையில் வக்கீல்கள்-காங். பயங்கர மோதல்: அடிதடி, கல்வீச்சு, கடையடைப்பு

மதுரையில் வக்கீல்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது பெரும் மோதல் மூண்டது. அவர்களுக்கும், காங்கிரஸாருக்கும் இடையே ஏற்பட்ட பெரும் அடிதடியால் பல கடைகள் தாக்கப்பட்டன. கல்வீச்சும் நடந்தது. கடைகள் அடைக்கப்பட்டன. அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வக்கீல்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தினசரி ஆர்ப்பாட்டம், பேரணி உள்ளிட்டவற்றை அவர்கள் நடத்தி வருகின்றனர். மேலும் காங்கிரஸாரையும் குறி வைத்து அவர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வக்கீல்கள் போராட்டம் நடத்துவதை கண்டித்தும், காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பனின் வீடு, அலுவலகங்கள் தாக்கியவர்களை கைது செய்யக் கோரியும் மதுரை மாவட்ட கோர்ட் முன்பு வக்கீல் பெருமாள் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்து கோர்ட்டு வளாகத்துக்குள் இருந்த வக்கீல்கள், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வக்கீல்களையும், காங்கிரசாரையும் அந்த இடத்தை விட்டு செல்லுமாறு எச்சரித்தனர். அப்போது அவர்களுக்குள் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக வெடித்தது.

இரு தரப்பினரும் போர்க்களத்தில் மோதுவது போல கைக்குக் கிடைத்த பொருட்களை எடுத்து வீசி எறிந்து தாக்குதல் நடத்தினர். கற்களாலும் சரமாரியாக வீசித் தாக்கிக் கொண்டனர். வக்கீல்கள், காங்கிரஸாரின் இந்த கல்வீச்சால் அந்தப் பகுதியில் இருந்த சில கடைகள் சேதமடைந்தன. இதையடுத்து கடைகள் அனைத்தும் வேகம் வேகமாக அடைக்கப்பட்டன.
 

இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பவேண்டும்: எம்.பி சிறீகந்தா

srikantha-mp.jpgஇலங்கை தமிழர் பிரச்சினையில் ஐ.நா.சபை உடனடியாக தலையிட வேண்டும். அப்போதுதான் போர் நிறுத்தம் கொண்டுவரமுடியும். இதற்காக ஐ.நா.சபை அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு கோவையில் வக்கீல்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கை தமிழ் எம்.பி சிறீகந்தா பேசினார். 

பாதுகாப்பு வலயங்களை நோக்கி தாக்குதல்களை நடத்த வேண்டாம்

pranaf.jpgதமிழ்க் குடிமக்களையும் விடுதலைப் புலிகளையும் வேறுபடுத்தி பார்க்குமாறு இலங்கை அரசிடம் பிரணாப் முகர்ஜி கோரிக்கை இலங்கைப் பாதுகாப்புப் படைகள் தமிழ்க் குடிமக்களையும் விடுதலைப் புலிகளையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்றும் பாதுகாப்பான வலயங்கள் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகள் நோக்கி தாக்குதல்களை நடத்தக் கூடாது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தியிருக்கிறார்.

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் காங்கிரஸ் தொண்டர்களின் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய முகர்ஜி, விடுதலைப் புலிகள் இயக்கம் மீது இந்தியாவுக்கு எந்த அனுதாபமும் இல்லை என்றும் அந்த இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நாடுகடத்துமாறு வருடாந்தம் இலங்கை அரசாங்கத்தை புதுடில்லி கேட்டுக் கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டார். காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்தியும் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் முகர்ஜி மேலும் கூறியதாவது;

“பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகள் மீது இந்தியாவுக்கு எந்தவிதமான அனுதாபமும் இல்லை. இலங்கையிலும் இந்தியாவிலும் உலகின் பல நாடுகளிலும் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டிருக்கிறது. இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் தமிழ்க் குடிமக்கள் பாதிக்கப்படாதிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை இந்தியா கேட்டிருக்கிறது. தமிழ்க் குடிமக்களையும் விடுதலைப் புலிகளையும் வேறுபடுத்திப் பார்க்குமாறு இலங்கை அரசாங்கத்தை நாம் கேட்டுக் கொள்கிறோம்.

அண்மையில் நான் கொழும்புக்கு விஜயம் செய்த பின்னர் 48 மணிநேர போர் நிறுத்த அறிவிப்பைச் செய்த இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான வலயங்களுக்கு வருமாறு தமிழ்க் குடிமக்களைக் கேட்டுக் கொண்டது. உணவையும் பாதுகாப்பையும் அந்த மக்களுக்கு வழங்குவதற்காகவே இலங்கை அரசாங்கம் அத்தகைய ஏற்பாடொன்றைச் செய்தது. பாதுகாப்பான வலயங்களை நோக்கி தாக்குதல்களை நடத்த வேண்டாம். மனிதாபிமான உதவிகள் குடிமக்களைச் சென்றடைய வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பதவிக் காலத்தில் 1987 ஜூலையில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்’.