தற்காப்பு கலைப் போட்டியில் பங்கேற்க சேலம் வந்த இலங்கை வீரர்களை போட்டியிலிருந்து நீக்க வேண்டுமென்று கோரி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது இலங்கை தேசியக் கொடி எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து இலங்கை அணி பாதுகாப்பாக நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.சேலம் காந்தி மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை மாலை கராத்தே, குங்பூ, குத்துச்சண்டை, டேக்குவாண்டோ போன்ற தற்காப்பு
கலைப் போட்டிகள் நடந்தது. இதில் பங்கேற்க இலங்கையில் இருந்து 6 வீரர்கள்,2 வீராங்கனைகள் மற்றும் ஒரு பயிற்சியாளர் என மொத்தம் 9 சிங்களவர்கள் வந்திருந்தனர். விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் இலங்கை வீரர்கள் தங்கள் நாட்டு தேசியக் கொடியை ஏந்தி வந்தனர். சேலத்துக்கு சிங்கள வீரர்கள் வந்திருக்கிறார்கள் என்ற செய்தி காட்டுத் தீ போல் பரவியது. இதையடுத்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மைதானத்தின் முன்பு இலங்கை அரசுக்கு எதிராக கோஷம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். போட்டியில் இருந்து அந்த வீரர்களை நீக்க வேண்டும் என கோஷம் எழுப்பினார்கள்.
இலங்கை வீரர், வீராங்கனைகள் வைத்திருந்த அவர்களது தேசியக்கொடியையும் பறித்து தீவைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.வீரர்களின் பாதுகாப்புக் கருதி தற்காப்பு கலைப் போட்டி நிறுத்தப்பட்டது. தகவல் கிடைத்ததும் சேலம் மாநகர துணை கமிஷ்னர் ஜான்நிக்சன் விரைந்து வந்து அங்கிருந்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கை வீரர்களை போட்டியில் இருந்து வெளியேற்றுவதாக அவர் உறுதியளித்தார். இதையடுத்து இலங்கைக்கு வீரர்கள் பாதுகாப்புடன் திருப்பி அனுப்பப்பட்டனர்.