January

January

யுத்தம் முடிந்ததும் படையினர் அபிவிருத்தி நடவடிக்கையில் – அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

maithiri-pala.jpg
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டுள்ள படையினர் அனைவரையும் யுத்தம் நிறைவடைந்ததும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகுமென அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

யுத்தம் நிறைவடைந்ததும் தெற்கின் தேவேந்திர முனையிலிருந்து வடக்கின் பருத்தித்துறை வரையிலான முழுநாடும் அபிவிருத்திக்குள்ளாக்கப்படும் அதற்காக யுத்தத்தில் ஈடுபட்ட சகல படையினரும் பயன்படுத்தப்படுவார்கள். எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினர் இது விடயத்தில் தேவையற்ற விமர்சனங்களை மேற்கொண்டு வருகின்றனர். அரசாங்கம் யுத்தம் நிறைவடைந்ததன் பின் அரசியலமைப்புக்கிணங்க முறையான எதிர்கால நடவடிக்கையை மேற்கொள்ளுமெனவும் அமைச்சர் தெரிவித்தார். கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின் அரசாங்கம் வெற்றிகரமான செயற்திட்டங்கள் பலவற்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

புத்தளப் பகுதியில் ஆயுதபாணிகளின் தாக்குதலில் 3 கிராமவாசிகள் உயிரிழப்பு – மூவர் காயம்

ak47.jpgமொன றாகல, புத்தள மாளிகாவில பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆயுதபாணிகளின் தாக்குதலில் மூன்று கிராமவாசிகள் கொல்லப்பட்டதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். காணாமல் போன மூவர் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.  மாளிகாவில சத்தாதிஸ்ஸ பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஞாயிறு மாலை அந்தப் பகுதியில் தங்கள் கால்நடைகளைத் தேடிச் சென்ற 12 கிராமவாசிகளே ஆயுதபாணிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.  இவர்களைச் சுற்றிவளைத்த ஆயுதபாணிகள் இவர்களைக் கடுமையாகத் தாக்கியதாகவும் அதில் இருவர் பலத்த வெட்டுக்காயங்களுக்கு இலக்காகி அந்த இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.  இவர்களுடன் வாள்வெட்டு மற்றும் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில், பின்னர் நால்வர் கண்டுபிடிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் புத்தள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மொனராகல ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு அவசர சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட பின்னர் இதிலொருவர் அங்கு மரணமானார்.

ஆயுதபாணிகளின் தாக்குதலிருந்து தப்பிச்சென்ற மூவர் வழங்கிய தகவலையடுத்து பொலிஸாரும் ஊர்காவல் படையினரும் அப் பகுதிக்கு வந்து தேடுதல் நடத்திய போதே படுகாயமடைந்த நால்வரும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கால்நடைகளைத் தேடிச்சென்ற போது தாக்குதல்களுக் கிலக்கான இவர்களுடன் சென்ற மூவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நால்வரையும் ஆயுதபாணிகள் தங்களுடன் கொண்டு சென்றிருக்கலாமெனவும் கூறப்பட்டது. எனினும் இந்த மூவரும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தையடுத்து படையினரும் பொலிஸாரும் இணைந்து மாளிகாவில பகுதியில் பாரியதேடுதலை நடத்தி வருவதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடரலாம் அந்த நாட்டின் பலவீனமே மும்பைத் தாக்குதல் – அமெரிக்க நிபுணர்கள்

world_news.jpgஇந்தி யாவில் மும்பைத் தாக்குதல் போன்ற மேலும் பல தாக்குதல்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பைத் தாக்குதல் தொடர்பாக, இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் பிளெக்வில் உள்ளிட்ட நிபுணர்கள் நடத்திய ஆய்வொன்றைத் தொடர்ந்தே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிபுணர் குழுவால் வெளிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இந்தியாவின் வர்த்தக மற்றும் உல்லாச மையமாக மும்பை திகழ்கிறது. அங்குள்ள முக்கிய கட்டிடங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மும்பை தாக்குதல் அம்சங்களை வைத்து பார்க்கும்போது இரக்கமற்ற கொலைகள் மட்டுமன்றி அதற்கான திட்டமிடலும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.

அதிகமான மக்களை கொல்வது மட்டுமன்றி சில குறிப்பிட்ட நாட்டினரை குறிவைத்து தாக்குவதும் தீவிரவாதிகளின் நோக்கமாக இருந்துள்ளது. இதன்மூலம் அவர்களின் வியூகம் புலப்படுகிறது.தீவிரவாதத்தை தடுப்பதில் இந்தியாவின் பலவீனத்தையே இத்தாக்குதல் வெளிப்படுத்துகிறது.

மும்பை தாக்குதலை முன்மாதிரியாக கொண்டு பாகிஸ்தானில் உள்ள வேறு சில தீவிரவாத அமைப்புகள் அதேபாணியில் இந்தியா மீது நிறைய தாக்குதல்களை நடத்தும் அபாயம் உள்ளது. நிறைய உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வகையில் இத்தாக்குதல்கள் நடக்கும். இந்த அபாயத்தை இந்தியாவோ அமெரிக்கவோ குறைக்க முடியாது.

இந்தியாவும்,பாகிஸ்தானும் அணுஆயுத நாடுகள். எனவே ஏதாவது இராணுவ நடவடிக்கை எடுத்தால் அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். அதே சமயத்தில் இந்தியா நடவடிக்கை எடுக்கத்தவறினால் அது இந்தியாவின் உறுதி இன்மையை காட்டுவதாக அமைந்து விடுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1200 வீடுகள் முழுமையாக பூர்த்தி: மார்ச்சில் ஜனாதிபதியால் கையளிப்பு

sarath-amunugama.jpgஅரசாங்க ஊழியர்களுக்கு ஐயாயிரம் வீடுகள் அமைக்கும் திட்டமொன்றை பொதுநிர்வாக அமைச்சு ஆரம்பித்துள்ளது. இதில் சுமார் 1200 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு முதலில் ஹபராதுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 576 வீடுகளும் மார்ச் மாதம் ஜனாதிபதியினால் அரச ஊழியர்களுக்கு கையளிக்கப் படவுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம கூறினார்.

அரசாங்க ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்றது. அமைச்சர் இங்கு மேலும் கூறியதாவது,

மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டவாறு அரசாங்க ஊழியர்களுக்கு வீடுகள் அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை முதலீட்டுச் சபையுடன் இணைந்து இந்தத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஹபராதுவ பகுதியில் 576 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மூன்று தரத்திலான வீடுகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகள் ஜனாதிபதியினால் அரச ஊழியர்களுக்கு கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர காலி வெகுனுகொடையில் 640 வீடுகள் அமைக்கப்பட்டு வருவதோடு பூர்த்தியடையும் நிலையில் உள்ளன.

கண்டி, குண்டசாலை பகுதியில் சுமார் 900 வீடுகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான காணி சுவீகரிக்கப்பட்டுள்ளதோடு சில தினங்களில் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க உள்ளோம்.

ராகம பகுதியில் சுமார் 800 முதல் 900 வரையான வீடுகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டமொன்றை ஆரம்பிக்க உள்ளோம். இதற்கான காணியை சுவீகரிக்க கடந்த வாரம் அமைச்சரவை அனுமதி வழங்கியது. அரசாங்கமும் மலேசிய ‘வின்கொண்ட்’ கம்பனியும் இணைந்து இந்த வீடமைப்புத் திட்டத்தை நிர்மாணிக்க உள்ளன.

5000 வீடுகளையும் நிர்மாணிக்க 50 மில்லியன் டொலர் செலவிடப்படவுள்ளது.

வரலாற்றில் ஒரு போதும் அரசாங்க ஊழியர்களுக்கென இந்தளவு அதிகமான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டது கிடையாது. வீடமைப்பு அமைச்சிற்குப் போட்டியாக அதிக மான வீடுகள் நிர்மாணிக்க முடிந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

இதேவேளை, கொழும்பு கெப்பிட்டிபொல மாவத்தையில் 16 மாடிகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டமொன்றை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. அத்தோடு 80 மாடிகளைக் கொண்ட வீடமைப்பு த்திட்டமொன்று பத்தரமுல்லையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா கம்பனியொன்று நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அரசாங்க ஊழியர்களுக்கான வீடுகளை வங்கிக் கடன் அடிப்படையிலா வேறு வகையிலா வழங்குவது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். ஹபராதுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் எந்த நிமிடமும் கையளிக்கக்கூடிய நிலையில் உள்ளன.

தனியார் பஸ்களில் சீருடை, ரிக்கட் கட்டாயம்; உச்ச நீதிமன்று தீர்ப்பு

justice.jpgமேல் மாகாண தனியார் பஸ்களில் பயணச் சீட்டு வழங்குதல் மற்றும் சீருடை அணிதல் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தத் தவறுவோரின் வீதி அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் நேற்று போக்குவரத்து அதிகார சபைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் நேற்று விடுத்துள்ள இவ்வுத்தரவினை முழுமையாக ஏற்றுக் கொள்ளவதுடன் இதற்குப் பூரண ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாகத் தனியார் பஸ் போக்குவரத்து உரிமையாளர் சங்கம் தெரிவித்தது.

இத் தீர்மானம் தொடர்பில் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தினகரனுக்குத் தெரிவிக்கையில்,

உச்ச நீதிமன்றத் தீர்ப்பானது காலத்தின் தேவை கருதி மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். இது முழுமையாக நடை முறைப்படுத்தப்படுமானால் தனியார் பஸ் உரிமையாளர்க ளுக்கே பெரும் நன்மைகள் கிட்டும். பஸ்களில் பயணச் சீட்டு வழங்குதல் மற்றும் சீருடை தொடர்பில் கண்காணிப்புகளை மேற்கொள்வதற்கு இ. போ. ச. டிக்கட் பரிசோதகர்களின் உதவியைப் பெற்றுக் கொள்வதென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் இ. போ. ச. விற்கு வேண்டுகோளொன்றை விடுக்கவும் சங்கம் தீர்மானித்துள்ளதுடன் நீதிமன்ற உத்தரவை விரைவாக நடைமுறைப்படுத்த உதவியாக சகல பஸ் நடத்துநர்கள், சாரதிகளுக்குச் சீருடைகளை இலவசமாகப் பெற்றுக் கொடுக்கவும் சங்கம் தீர்மானித்துள்ளது.

பிரயாணச் சீட்டுக்களை முறையாக வழங்கும் வகையில் பஸ் உரிமையாளர்களே அதற்கான டிக்கட் மெஷின்களைக் கொள்வனவு செய்ய வேண்டுமென சங்கம் அவர்களைக் கோருவதாகவும் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.

எம்.ரி.வி’ மீதான தாக்குதல் குறித்து தான் கூறியதை பாதுகாப்புச் செயலர் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்

wijitha_herath_jvp.jpgஎம்.ரி.வி., எம்.பி.சி. நிறுவனத்தினர் தங்களது நிறுவனத்துக்கு தாங்களே தீ வைத்துக் கொண்டதாக தெரிவித்திருக்கும் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, பொறுப்புள்ள அதிகாரி என்ற வகையில் அது தொடர்பான தகவல்களை உரிய ஆதாரங்களுடன் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டுமென, நுகேகொடையில் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற ஊடக அடக்கமுறைக்கு எதிரான கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவரான அநுர குமார திஸாநாயக்கவும் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரான சனத் பாலசூரியவும் இந்தக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

“ஊடக அடக்குமுறைக்கு எதிராக அணிதிரள்வோம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முதலில் பேசிய சனத் பாலசூரிய; இன்று நிலவி வருவது ஊடகங்களுக்கோ, ஊடகவியலாளர்களுக்கோவான பிரச்சினையல்ல ஜனநாயகத்துக்கான பிரச்சினையே இன்று நிலவிக்கொண்டிருக்கிறது. ஒருவர் எதையும் பேசி விட்டு வீடு செல்ல முடியாத நிலைமை உருவாகியிருக்கிறது. கருத்துச் சுதந்திரமும் மக்கள் தகவல்களை தெரிந்து கொள்வதற்கான உரிமையும் மறுக்கப்படுகின்றன.

கடந்த காலங்களில் பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். எனினும் இந்தச் சம்பவங்கள் தெடர்பாக இதுவரை விசாரணைகள் நடத்தப்பட்டு இவற்றுக்குப் பொறுப்பான எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. இதன் மூலம் எவரும் ஊடகங்களையோ அல்லது ஊடகவியலாளர்களையோ தாக்கிவிட்டு துணிவாக இருக்க முடியுமென்ற நிலைமை உருவாக்கப்பட்டிருக்கிறது. இது ஆபாயகரமானது. ஊடகவியலாளர்கள் என்ற வகையில் நாம் நாட்டின் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கவில்லை. ஆனால் ஊடக சுதந்திர த்துக்காக போராடும் அதேநேரம், ஜனநாயகம் மற்றும் மக்கள் உரிமைகளுக்காகவும் போராட நாம் முன்நிற்கிறோம்.

சிரச நிறுவனம் மீதான தாக்குதல் நடத்துவதன் மூலமோ, லசந்தவை படுகொலை செய்வதன் மூலமோ எம்மை தடுத்து நிறுத்தி விடமுடியாது. அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போது, லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை பற்றியும் “சிரச’ ஊடக நிறுவனம் மீதான தாக்குதல் பற்றியும் சில கருத்துகளை வெளியிட்டிருந்தார். பாதுகாப்பு செயலாளர் என்பவர் பொறுப்பு வாய்ந்த அதிகாரி. பொறுப்பிலிருந்து கொண்டு அவர் பொய் கூற மாட்டார். எனவே, அவர் போதிய விசாரணைகளின் பின்னரான அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கருத்தை வெளியிட்டிருக்க வேண்டும். அவர் கூறியதைப் பார்த்தால் விசாரணைகள் முடிந்து விட்டதாகவே தெரிகிறது. எனவே, அவர் மக்கள் முன்நிலையில் ஆதாரபூர்வமான தகவல்களை வெளியிட வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் வரை, அரசாங்கம் தன் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்க முடியாது என்று கூறினார்.

இதேநேரம், ஜே.வி.பி.யின் அநுர குமார திஸாநாயக்க எம்.பி.இங்கு பேசுகையில்; “கோதாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற பொறுப்புமிக்க பதவியில் இருக்கிறார். யுத்த நடவடிக்கைகளிலும் அவரது பங்களிப்பு இருக்கிறது. அதற்காக அவர் மீது மதிப்பும் இருக்கிறது. எனினும் ஒரு துறையில் சிறப்பாகச் செயற்பட்டதற்காக, மற்றொரு துறையை முடக்க இடமளிக்க முடியாது. சிரச ஊடக நிறுவனத்தின் மீது தீ வைக்கப்பட்டமையானது நிறுவனத்தினரே செய்து கொண்டதாக கோதாபய ராஜபக்ஷ கூறியிருக்கிறார். அவர் பொறுப்புள்ள அதிகாரி. அவர் ஜனாதிபதியின் தம்பியாக இருந்தாலும் அவருக்கு அப்படிக் கூற முடியாது. அதிகாரி ஒருவர் என்ற வகையில் அவர் கூறியது உண்மையாக இருக்க வேண்டும். அப்படியாயின் அந்த தகவல்களை தகுந்த ஆதாரங்களுடன் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்’ என்றார்.

கிளிநொச்சி , ஆனையிறவை வெற்றிகொண்ட எமக்கு எஸ்.பி. திஸாநாயக்க சவாலுக்குரியவரல்ல – கெஹெலிய

kkhaliya.jpgகிளி நொச்சி , ஆனையிறவு போன்ற இடங்களை வெற்றி கொண்ட இந்த அரசிற்கு  எஸ்.பி ஒரு சவால் அல்ல என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அண்மையில் அம்பிட்டியாவில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கூட்டத்தில் ஆதரவாளர்கள் மத்தியிலே உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது;

எஸ்.பி. திஸாநாயக்காவை தோற்கடிக்க நாம் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை அவர்கள் கட்சியே செய்து விடும். மத்திய வடமேல் மாகாணங்கள் மட்டுமல்ல இதன் பிறகு நடைபெறும் சகல தேர்தல்களிலும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெறும் . மகிந்த சிந்தனையின் படி நாட்டு மக்களுக்குப் பாரிய நன்மைகள் கிடைத்துள்ளன. எனவே மக்கள் எம்மை ஆதரிப்பர். கிளிநொச்சி , ஆனையிறவு இடங்களை வெற்றி கொண்ட எமக்குப் பொரமடுல்ல எஸ்.பி. சவாலுக்குரியவரல்ல.

ரணில் விக்கிரம சிங்க பாராளுமன்றத்திற்கோ, அமைச்சரவைக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ, தெரிவிக்காது பிரபாகரனின் காலடியில் வீழ்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற அடிப்படையில் பயங்கரவாதிகளிடம் எமது நாட்டின் ஒரு பகுதியை தாரை வார்த்தார். இன்று ஐ.தே கட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கத்துவம் பெறுகின்றவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

வடமராட்சி கிழக்கு,வன்னியிலிருந்து இதுவரை 1,796 பேர் தென்மராட்சிக்கு வருகை

displace.jpgவடமராட்சி கிழக்கு மற்றும் வன்னியில் படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களிலிருந்து தென்மராட்சிக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 1,796 பேர் வந்துள்ளதாக யாழ். செயலக புனர்வாழ்வுத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில்167 குடும்பங்களைச் சேர்ந்த 440 பேர் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக்கல்லூரி இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியிலுள்ள திருநகர் இடைத்தங்கல் முகாமில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 416 குடும்பங்களைச் சேர்ந்த 1,296 பேர் மிருசுவில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும் அருகாமையிலுள்ள தேவாலயக் கட்டிடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மூன்று நாட்களுக்கு சமைத்தஉணவு வழங்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஷ் தெரிவித்தார். அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள், பாய்கள்,அரிக்கன் லாம்புகள்,உடுதுணிகள், பாவனைப் பொருட்களை வழங்கி வருகின்றன. அகதிகள் வருகை அதிகரித்து வருவதால் இடைத்தங்கல் முகாம்களை அமைப்பது, நிவாரணப் பணிகளை மேற்கொள்வது குறித்து அரசசார்பற்ற நிறுவனங்களுடன் யாழ். செயலகத்தில் நேற்று அவசர சந்திப்பொன்றையும் அரசஅதிபர் நடத்தியுள்ளார்.

வன்னியில் இருந்து இடம்பெயரும் மக்கள் தனித்தனி வீடுகளில் குடியமர்த்தப்படுவார்கள் – அமைச்சர் ரிசாட் பதியுதீன்

risard.jpgவன்னியில் தொடரும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வருகின்ற மக்களுக்கு ஐந்து நலன்புரி நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கும் மீள் குடியேற்ற அநர்த்த நிவாரண அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு , இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகின்ற மக்களின் விடயத்தில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்து வருபவர்களில் வவுனியா வடக்குப் பிரதேச மக்களுக்கு ஓமந்தையிலும், மன்னார் பிரதேச மக்களுக்கு கட்டைஅடம்பனிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் மக்களுக்கு செட்டிக்குளம் மெனிக்பாம் பண்ணையிலுமாக ஐந்து நலன்புரி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இடம்பெயர்ந்து வருகின்றவர்களுக்கு தனித்தனியாக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு அவற்றில் அவர்கள் குடியமர்த்தப்படுவார்கள். சகல அமைச்சுகளும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மீள்குடியேற்ற அநர்த்த நிவாரண அமைச்சு இந்த வேலைத்திட்டத்தை மேற்பார்வை செய்யும். கொழும்பில் நடைபெற்ற உயர் மட்ட மநாட்டில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன எனவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

இதேவேளை, வன்னியில் இருந்து ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 3,900 பேர் வவுனியாவுக்கு வந்துள்ளனர் எனவும் இவர்களுக்கு வேண்டிய சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எம். எஸ். சாள்ஸ் தெரிவித்தார். நாளுக்குநாள் வன்னியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து வருவதால் உரிய வசதிகளைச் செய்யுமாறு ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

புலிகளின் 3 இலக்குகள் மீது விமானத் தாக்குதல்

mi24-1301.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தில் இனங்காணப்பட்ட புலிகளின் வெவ்வேறு மூன்று இலக்குகள் மீது இலங்கை விமானப் படையினர் நேற்று கடும் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.  விமானப்படைக்குச் சொந்தமான ஜெட் மற்றும் எம். ஐ. 24 ரக விமானங்களே கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இத்தாக்குதல்கள் நேற்றுக் காலை 9 மணி தொடக்கம் 11.30 மணிக்குட்பட்ட காலப் பகுதியில் இடம்பெற்றன.

முல்லைத்தீவுக்குத் தெற்கே நேற்றுக் காலை 9 மணிக்கு முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது முன்னேறிவரும் இராணுவத்தின் 59ஆம் படைப்பிரிவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அதற்கு எதிர்த்திசையில் தாக்குதல் நடத்தியதாக ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

இதனையடுத்து நேற்றுக் காலை 11.30 மணியளவில் முல்லைத்தீவுக்கு தெற்கே புலிகளின் முக்கியஸ்தர்கள் கூடும் இன்னுமொரு இடத்தில் விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரமண்டான்குளத்திற்கு வட மேற்கே இரண்டு கிலோமீற்றர் தொலைவில் மணல்மேடு அமைப்பதில் ஈடுபட்டிருந்த புலிகள் மீதும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இவ்விமானத் தாக்குதல்கள் அனைத்தும் வெற்றியளித்திருப்பதனை விமான ஓட்டிகள் உறுதி செய்திருப்பதாகவும் மத்திய நிலையம் கூறியது.