கிளி நொச்சி , ஆனையிறவு போன்ற இடங்களை வெற்றி கொண்ட இந்த அரசிற்கு எஸ்.பி ஒரு சவால் அல்ல என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அண்மையில் அம்பிட்டியாவில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கூட்டத்தில் ஆதரவாளர்கள் மத்தியிலே உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது;
எஸ்.பி. திஸாநாயக்காவை தோற்கடிக்க நாம் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை அவர்கள் கட்சியே செய்து விடும். மத்திய வடமேல் மாகாணங்கள் மட்டுமல்ல இதன் பிறகு நடைபெறும் சகல தேர்தல்களிலும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெறும் . மகிந்த சிந்தனையின் படி நாட்டு மக்களுக்குப் பாரிய நன்மைகள் கிடைத்துள்ளன. எனவே மக்கள் எம்மை ஆதரிப்பர். கிளிநொச்சி , ஆனையிறவு இடங்களை வெற்றி கொண்ட எமக்குப் பொரமடுல்ல எஸ்.பி. சவாலுக்குரியவரல்ல.
ரணில் விக்கிரம சிங்க பாராளுமன்றத்திற்கோ, அமைச்சரவைக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ, தெரிவிக்காது பிரபாகரனின் காலடியில் வீழ்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற அடிப்படையில் பயங்கரவாதிகளிடம் எமது நாட்டின் ஒரு பகுதியை தாரை வார்த்தார். இன்று ஐ.தே கட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கத்துவம் பெறுகின்றவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.