2009

2009

வன்னியில் தினமும் அப்பாவி பொதுமக்கள் பலியாகும் நிலையில் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஏன்?

wanni.jpgவன்னியில் இடம்பெற்றுவரும் இராணுவ நடவடிக்கையின்போது நடத்தப்படும் அகோர ஷெல் தாக்குதல்கள், விமானக் குண்டு வீச்சுகள், பல்குழல் பீரங்கித் தாக்குதல்களினால் தினமும் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டும் படுகாயப்படுத்தப்பட்டும் வரும் நிலையில் அம்மக்கள் தொடர்பில் எவ்வித அக்கறையுமற்ற நிலையில் இன்று நடத்தப்படும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை பகிஷ்கரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ச.கனகரட்ணம், ந.சிவசக்தி ஆனந்தன், ச. வினோநோகராதலிங்கம், சிவநாதன் கிஷோர் ஆகியோர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வன்னியில் அரசபடையினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை காரணமாக என்றுமே இல்லாத மனிதப் பேரவலம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் வாழ்விடங்கள், அவர்களின் தற்காலிக இருப்பிடங்கள்

மீது தினமும் கண்மூடித்தனமான ஷெல், விமானத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. தினமும் அப்பிரதேசம் முழுவதும் மரண ஓலம் கேட்ட வண்ணம் உள்ளது. அங்கு பொதுமக்கள் இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்படாத நாட்கள் இல்லை. இராணுவத்தினரின் ஷெல்தாக்குதலில் பலியானவரின் இறுதிக் கிரியைகள் கூட நடத்த முடியாத அவல நிலையை பொதுமக்கள் அங்கு எதிர்நோக்கி உள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், போராட்டத்துடன் எவ்விதத்திலும் தொடர்பு படாத 4 இலட்சத்து 75 ஆயிரம் பொது மக்கள் மிகவும் குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கியுள்ளனர். இராணுவத்தினரின் கடுமையான ஷெல்தாக்குதலில் சிக்கி கடந்த ஒன்பது நாட்களில் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்து உள்ளனர். காயம் அடைந்தவர்களில் பலர் தமது அங்க அவயங்களை இழந்து உள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சாதாரண பொதுமக்கள் மீது தினமும் நடத்தப்படும் தாக்குதல் குறித்தோ அவர்களின் நிலை குறித்தோ அரசாங்கம் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. மக்களின் உண்மையான நிலை அறிந்தும் படையினரும் எதுவும் தெரியாதவர்கள்போல் உள்ளனர். மேலும் விடுவிக்கப்படாத வன்னி மக்களுக்கு பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பு வலயம் நிறுவப்பட்டுள்ளது.எனினும் குறித்த பாடசாலைகளில் இயங்கிவந்த வைத்தியசாலைகள் மற்றும் தேவாலயங்கள் உள்ள பகுதிகளிலும் ஷெல்கள் வீழ்ந்து வெடித்துள்ள இந்நிலையில் அங்கு தஞ்சமடைந்த மக்களின் நிலைமையும் அபாய கட்டத்தை அடைந்துள்ளது.

புதுக்குடியிருப்பு அரச வைத்தியசாலையை உடன் மூடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மனிதாபிமான அரச வைத்திய உதவிகளை எதிர்பார்த்திருக்கும் வன்னிமக்களின் உயிரோடு விளையாடும் பாதகச் செயலாகும்.

மேலும் யுத்த நடவடிக்கையில் காயம் அடைந்து மேலதிக அவசர சிகிச்சைக்காக வன்னிப்பகுதியில் இருந்து வவுனியா பொது வைத்திய சாலைக்கு கொண்டுவரப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு குணம் அடைந்த பலர் மீண்டும் வன்னிக்கு திரும்பிச் செல்ல முடியாத நிலையிலுள்ளனர். வவுனியாவிலேயே இவர்கள் தங்கவேண்டி உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் வன்னியில் இருந்து காயத்துடன் வந்து வவுனியா வைத்தியசாலையில் குணம் அடைந்தவர்கள் அவர்களின் குடும்பத்தை விட்டு வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டு வவுனியாவில் தங்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இராணுவத்தினரால் அழைத்து வரப்பட்டு செட்டிக்குளம் மெனிக் பாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை அவர்களின் உறவினர்களோ, நண்பர்களோ பார்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் இவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் முசலி சிலாவத்துறை அரிப்பு பகுதியில் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு இராணுவ நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது இதன் விளைவாக கொக்கு, படையான், கொண்டைச்சி, முள்ளிக்குளம், முசலி, சிலாவத்துறை, அரிப்பு, வேப்பங்குளம், பண்டார வெளி, புது வெளி, குளாங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 1500 இற்கும் அதிக தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.

மீனவர்களாகவும் விவசாயிகளாகவும் மன்னார் மாவட்ட பொருளாதார தரத்துக்கு கணிசமான பங்களிப்பு நல்கிய மேற்படி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தற்பொழுது தமது அசையும் அசையா சொத்துக்களையும் முற்றாக இழந்து நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வயல் வெளிகளிலும் கைவிடப்பட்ட அரிசி ஆலைகளிலும் பொதுநோக்கு மண்டபங்களிலும் உறவினர் வீடுகளிலும் தற்காலிகமாக வசித்து வருகின்றனர்.

தற்பொழுது சிலாவத்துறை பகுதி முற்றாக விடுவிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறிவரும் நிலையில் அங்கிருந்து இடம் பெயர்ந்த மக்களை இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில் மீளக்குடி அமர்த்தவில்லை. வன்னித்தேர்தல் மாவட்டமானது முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மூன்று நிர்வாக மாவட்டமாக உள்ளது குறித்த மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் வாக்குகளிலேயே நாம் ஐந்து பேரும் பாராளுமன்ற உறுப்பினர்களாக வந்த நிலையில் நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் தற்போது முல்லைத்தீவில் நடைபெறும் மோதலை அடுத்து கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்த வகையில் கடந்த மூன்று நாட்களில் இராணுவத் தாக்குதல் காரணமாக வன்னிப்பகுதியில் ஐம்பதுக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதுடன் அதிக எண்ணிக்கையானோர் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக வன்னிப் பகுதியில் இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் காயம் அடைந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டவர்களில் சிலர் தீவிர சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. எனினும், குறித்த காயம் அடைந்தவர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என்ற காரணத்தினால் அவர்களை அனுராதபுர வைத்தியசாலைக்கு அனுப்பமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியான இடம்பெயர்வு, அகோர ஷெல் வீச்சு காரணமாக மிகவும் மரண அச்சம் நிறைந்த சூழ்நிலையில் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்கு அனுப்பும்போது தேசிய அடையாள அட்டையுடன் அனுப்பும் நிலை எச்சந்தர்ப்பத்திலும் எவருக்கும் ஏற்படாது. இவ்வகையில் தேசிய அடையாள அட்டை வரவில்லை என்ற காரணத்திற்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு தீவிர சிகிச்சைக்கு அனுப்பப்பட்டவர்கள் சிலர் மரணத்துடன் போராடிக் கொண்டிருக்கின்றனர். இவ்விடயம் எந்த நியாய புத்தி உடையவர்களாலும் கருணை உள்ளம் கொண்டவர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.

எமக்கு வாக்களித்து நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் இம் மக்கள் மோதலினால் உயிர்கள் உடமைகள் மற்றும் அவர்களுடைய அங்க அவையங்களை இழந்து பெரும் மனிதபேரவலத்துக்கு உள்ளாகி நடைபிணங்களாக உலாவித்திரியும் சந்தர்ப்பத்தில் இன்று நடைபெறும் மக்களின் நலனில் அக்கறை கொள்ளாத குறித்த மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தை நாம் எமது மக்களின் துன்ப நிலையை வெளிஉலகத்துக்கு தெரியப்படுத்தும் நோக்கில் பகிஷ்கரிக்கின்றோம்

லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவு

Lasantha_Wickramathunga“சண்டே லீடர்’ பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை பற்றி புலனாய்வு செய்வதற்கு பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பில் திருப்தியற்ற நிலை காணப்படுவதாக கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸார் தெரிவித்தனர்.  இது தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான ரஞ்சித் குணசேகர கருத்துத் தெரிவிக்கையில்; தாக்குதலுக்கு பயன்பட்ட மோட்டார் சைக்கிளின் பதிவிலக்கத்தை அறிவதற்காக சம்பவ இடத்திலிருந்தவர்களின் சாட்சியங்களை புலனாய்வுக் குழு பதிவு செய்தது. எனினும் அவர்களின் முயற்சி பயனளிக்கவில்லை.

இக் கொலை விசாரணைகள் முன்னேற்றமடைய பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. இந்நிலையில் விசாரணைகள் விஞ்ஞான பகுப்பாய்வு ரீதியான அறிக்கைகளிலேயே தங்கியுள்ளன. எனவே விசாரணைகளை முன்னோக்கி எடுத்துச் செல்ல நிச்சயமாக நீண்ட காலம் தேவைப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணைகளின் போது உரிய சாட்சியங்களைப் பதிவு செய்யவேண்டும். இல்லாவிடின் பொலிஸரால் சமர்ப்பிக்கப்படும் ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிடும்.

அத்துடன் நீதிமன்றங்களில் சாட்சியங்களை மிகவும் கவனமாக சமர்பிக்க வேண்டும். இன்னமும் 10 நாட்களில் இன்னொரு தடயம் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கின்றோம். என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக விடுதி மேற்பார்வையாளர் மீது துப்பாக்கிச் சூடு

pistal.jpgயாழ். பல்கலைக்கழக விடுதி மேற்பார்வையாளர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் உரும்பிராயைச் சேர்ந்த மாணிக்கம் பிரேமச்சந்திரன் (வயது 41) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே காலில் காயமடைந்துள்ளார்.

ஆனந்தகுமாரசாமி விடுதியில் பணியாற்றிய இவர் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் மதிய உணவுக்காக கொக்குவிலில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்குச் சென்றுவிட்டு விடுதிக்கு திரும்பி வரும் வழியில் கொக்குவில் பொற்பதிப் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவர் இவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து இவர் யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெப்ரவரி 15 இற்குள் தி.மு.க. பொதுக்குழு இலங்கைப் பிரச்சினை குறித்து முக்கிய தீர்மானம்

w_n.jpgஇலங் கைப் பிரச்சினை குறித்து பெப்ரவரி 15 ஆம் திகதிக்குள் தி.மு.க. பொதுக்குழு கூடி முக்கிய முடிவெடுக்கும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சனிக் கிழமை “சங்கத் தமிழ் பேரவை’ என்ற அமைப்பு நடத்திய பாராட்டு விழாவில் அவர் பேசியதாவது; “இந்த விழாவில் என்னைப் பலரும் பாராட்டினார்கள். பொன்னாடைகள், பட்டாடைகள் அணிவித்தார்கள். ஆனால், நான் முழு மகிழ்ச்சி அடையவில்லை.

பக்கத்து நாட்டில் நமது தமிழ் மக்கள் தங்களது தாயகத்தில் வாழ முடியாமல் துரத்தப்படுகிறார்கள். அவர்களின் துன்பத்துக்கு நாம் எப்போதும் முடிவு கட்டப்போகிறோம்? அதற்காகத்தான் சட்டப்பேரவையில் மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தோம். இலங்கைப் பிரச்சினையை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் தேட முயற்சித்து வருகிறார்கள். நாங்கள் இந்தப் பிரச்சினையை அரசியலாக்க விரும்பவில்லை. மத்திய அரசு இப்பிரச்சினையில் தனது கடமையை ஆற்ற வேண்டும்.

வெள்ளிக்கிழமை (ஜன.23) சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்போது தி.மு.க. பொதுக்குழு கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் என்றேன். அதன்படி வரும் பெப்ரவரி 15 ஆம் திகதிக்குள் தி.மு.க. பொதுக்குழு கூடி முக்கிய முடிவெடுக்கும். இந்த அறிவிப்பு நான் உங்களுக்கு அளிக்கும் பட்டாடையாகும்.

தருமபுரத்திற்கு கிழக்கே புலிகளின் 3 படகுகள் அழிப்பு; 2 படகுகள் சேதம் – படைத்தரப்பு

_bort.jpgமுல்லைத் தீவில் தருமபுரத்திற்கு கிழக்கே நேற்று முன்தினம் சனிக்கிழமை பிற்பகல் படையினரின் முன்னரங்கக் காவல் நிலைகளை உடைத்து கொண்டு முன்னேற முயன்ற விடுதலைப் புலிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று படகுகள் அழிக்கப்பட்டும் இரு படகுகள் சேதமடைந்துமுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்புத் தரப்பு மேலும் கூறுகையில்;

கல்மடுக்குளக்கட்டைத் தகர்த்த புலிகள் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்த போது அதனூடாக ஐந்து படகுகளில் தாக்குதல் நடத்த வந்ததுடன், அதற்கு வசதியாகக் கடும் ஆட்லறி ஷெல் தாக்குதலையும் மோட்டார் குண்டுத் தாக்குதலையும் நடத்தினர். நான்கு அடி உயரத்திற்கு வெள்ளம் வடக்குப் பக்கமாகப் பாய்ந்த போது கால்நடைகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்கள் யாவும் அடித்துச் செல்லப்பட்டன. புலிகளின் தொடர்ச்சியான கடும் ஷெல் தாக்குதலுக்கு மத்தியில் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

எனினும், இதன் போது ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை மதிப்பிடப்படவில்லை. இதேநேரம், நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.45 மணிமுதல் தர்மபுரத்திற்கு தெற்கேயும் கல்மடுவுக்கு வடக்கேயும் 57 ஆவது மற்றும் 58 ஆவது படையணிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சமர் நடைபெற்றுள்ளது.

அதிகாலை 1.45 மணியளவிலும் 3 மணியளவிலும் நடைபெற்ற மோதல்களில் புலிகள் பலத்த இழப்புகளைச் சந்தித்துள்ளனர். இதேநேரம், விசுவமடுவுக்கு மேற்கேயிருந்து முன்னேறும் 57 ஆவது படையணியினர் சனிக்கிழமை புளியம்பொக்கனைப் பகுதியிலுள்ள புலிகளின் நிலைகள் மீது கடும் தாக்குதலைத் தொடுத்தனர். உடையார்கட்டுக்குளம், விசுவமடுக்குளம், புதுக்குடியிருப்பின் தென்பகுதியிலும் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. இந்த மோதல்களில் புலிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முல்லைத்தீவு முற்றுப் புள்ளியல்ல! புலிகளின் புதிய அத்தியாயம்! : த ஜெயபாலன்

Mahinda RajapaksaPirabaharan_Eelamபுலிகளின் கோட்டையாக விளங்கிய கடைசி நகரான முல்லைத்தீவு நேற்று (ஜனவரி 25) கைப்பற்றப்பட்டதாக இராணுவத் தளபதி சரத்பொன்சேகா உத்தியோகபூர்வமாக அறிவித்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆயுட்காலக் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட வே பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையிலான யுத்தம் சில மாதங்களுக்கு முன்வரை சற்றும் எதிர்பாராத புதிய திருப்பு முனையில் வந்து நிற்கின்றது. இலங்கை அரச படைகள் புலிகளின் ஒவ்வொரு கட்டுப்பாட்டுப் பகுதியையும் தம்வசப்படுத்துவதை நேரடியாக அஞ்சல் செய்து வர கிறிக்கட் ஆட்டத்தில் ஓட்டங்களை குவிக்கும் குதுகலத்தைப் போல தெற்கில் ஜனாதிபதி மகிந்தவின் ஆளும்கட்சி பட்டாசுகள் கொழுத்தி குதூகலித்தது. புலம்பெயர் நாடுகளில் உள்ள புலியெதிர்பாளர்களும் மகிந்த அரசின் வெற்றிக் களிப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர். புலம்பெயர் நாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்களோ பணம் கட்டிய குதிரை (புலி) பின்வாங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் செய்வதறியாது குழம்பிப் போயுள்ளனர்.

இதுவரை இராணுவம் கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் பிரதேசங்களில் இருந்த மக்கள் விரும்பியோ விரும்பாமலோ புலிகளுடைய திசையிலேயே செல்ல வேண்டியதாயிற்று. ‘Trapped and Mistreated : LTTE Abuses Against Civilians in the Vanni’ என்ற தலைப்பில் நியுயோர்க்கை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு யுத்தத்தில் பின்னடையும் விடுதலைப் புலிகள் வன்னி மக்களை ஆபத்தான யுத்த சூழலுக்குள் பலாத்காரமாக தடுத்து வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளது. ‘In research conducted by Human Rights Watch in Sri Lanka from October through December 2008 — including 35 interviews with eyewitnesses and humanitarian aid workers working in the north — we found extensive evidence of ongoing LTTE forced recruitment of civilians, widespread use of abusive forced labor, and improper and unjustified restrictions on civilians’ freedom of movement.” என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஜனவரி 9ல் வெளியிட்ட 21 பக்க அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

ஜனவரி 21ல் முல்லைத்தீவில் உள்ள தேவிபுரம் உடையார்கட்டு சுகந்திரபுரம் சுகந்திரபுரம் கொலனி சுகந்திரபுரம் மத்தி கைவேலி வடக்கு இருட்டு மடு போன்ற இடங்களை பாதுகாப்பு வலயங்களாக இலங்கை அரச படைகள் அறிவித்து இருந்தன. அடுத்த 48 மணி நேரத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு விடுத்த அறிக்கையில் யுத்த பிரதேசங்களில் இருந்து தப்பி வரும் தமிழ் மக்களுக்காக அமைக்கப்பட்ட நலவாழ்வு நிலையங்களை சிறைக் கூடங்களை இயக்குவது போல் இலங்கை இராணுவத்தினர் நடத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது. அரசாங்கம் யுஎன் மற்றும் சர்வதேச உதிவி அமைப்புகளை வெளியேற்றியதால் யுத்த பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உதவியே கிடைப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆசிய பிரிவு இயக்குநர் பிராட் அடம்ஸ் தெரிவித்து உள்ளார்.

எந்த மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுக்கப் போவதாக கூறி ஏட்டிக்குப் போட்டியாக இந்த யுத்தத்தை நடத்துகிறார்களோ அந்த மக்கள் பற்றி இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் கவனத்தில் கொள்ளவில்லை. தொடர்ச்சியான யுத்த சூழலுக்குள் 200000 – 300000 மக்கள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். தற்போது அவ்வளவு மக்களும் ஒரு குறுகிய பிரதேசத்தினுள் செறிவாகிப் போயுள்ளனர். 200000 – 300000 வைத்துக் கொண்டு புலியும் – சிங்கமும் யுத்தத்தில் இறங்கி உள்ளனர். கடந்த நான்கு வாரங்களாக இப்பிரதேசத்தில் இடம்பெறும் தாக்குதல்களால் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இம்மக்கள் மத்தியில் இந்த யுத்தத்தை நடத்துவது மிகப்பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

”As the LTTE has lost ground to advancing government forces, civilians have been squeezed into a shrinking conflict zone. The encroaching fighting has placed their lives increasingly in danger. Many spend their day under the constant sound of nearby small-arms fire, shelling, and bombing. Because of a near total government ban on access by humanitarian agencies and the media, the suffering of the civilian population of the Vanni receives scant attention outside Sri Lanka.” என மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு இம்மக்களின் வாழ்நிலையை விபரித்து உள்ளது.

இந்த 200000 – 300000 மக்கள் பற்றிய கவனத்திலும் பார்க்க இந்த யுத்தத்தின் வெற்றி தோல்வி பற்றிய ஆராய்ச்சிகளும் கல்மடு குளக்கட்டு உடைப்பின் இராணுவ முக்கியத்துவமும் பற்றியே கவனம் உள்ளது.

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுவதாகப் புறப்பட்ட புலிகள், தங்களது பாதுகாப்பு அரணாக வன்னி மக்களை பயன்படுத்த முனைகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முற்றாக மறுத்துவிட முடியாது. மக்களது இழப்புகளை அரசியலாக்கும் புலிகளின் மூன்றாம்தர அரசியல் பிரச்சாரம் ஒன்றும் புதிய விடயமல்ல. அதேசமயம் அந்த மக்கள் இலங்கை இராணுவத்தினர் மீது கொண்டுள்ள அச்சமும் கடந்தகால நிகழ்வுகளும் ‘தெரியாத பேயிலும் பார்க்க தெரிந்த பேய் மேலானது’ என்று எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கும். மேலும் இந்த மக்கள் நீண்ட காலம் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தவர்கள். விரும்பியோ விரும்பாமலோ அவர்களுடன் தொடர்புபட்டவர்கள். அவர்களுடைய உறவுகள் கட்டாய இராணுவப் பயிற்சி கட்டாய உழைப்பு ஆகியவற்றில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பார்கள். இவற்றை அரசபடைகள் எவ்வாறு கையாள்வார்கள் என்ற அச்சம் நியாயமானது.

மேலும் பரிதவிக்கும் மக்களை போரில் ஈடுபட்டு இருக்கும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் விடுவது மனிதாபிமானமற்ற செயல். சர்வதேச உதவி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்பட்டால் அவற்றை நோக்கி மக்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். இராணுவக் கட்டுப்பாட்டில் மக்களுக்கான பாதுகாப்பு வலயங்கள் அமைப்பதென்பது யதார்த்தமற்றது.

எந்தவொரு இராணுவ வெற்றியும் நிரந்தரமானதல்ல. இது புலிகளும் இலங்கை இராணுவமும் உணர மறுக்கின்ற உண்மை. இன்று இராணுவத்தின் கை ஓங்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் கடைசிக் கோட்டையான முல்லைத் தீவையும் கைப்பற்றியது விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கு வைக்கப்பட்ட முற்றுப் புள்ளியல்ல. விடுதலைப் புலிகளால் அதன் முளையிலேயே அழிக்கப்பட்ட இயக்கங்கள் இரு சகாப்தங்களைக் கடந்தும் இன்றுவரை இயங்குகின்றன. அப்படி இருக்கையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் புலிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது.

புலிகளுக்கும் இலங்கை அரச படைகளுக்குமான இந்த யுத்தத்தில் இலங்கை அரச படைகளை மரபுவழி இராணுவமாக புலிகளால் எதிர்கொள்ள முடியவில்லை என்பது உண்மையே. ஹமாஸ் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளால் இஸ்ரேலை எதிர்கொள்ள முடியவில்லை. தலிபானால் அமெரிக்க மற்றும் நேசநாட்டு படைகளை எதிர்கொள்ள முடியவில்லை. அதேசமயம் இஸ்ரேலாலும் அமெரிக்காவாலும் யுத்தத்தை வெல்லவும் முடியவில்லை. இதுவே இலங்கைக்கும் பொருந்தும். இன்னுமொரு ஆப்கானிஸ்தானையும் இன்னுமொரு ஈராக்கையும் இலங்கையில் உருவாக்கும் இராணுவ பலம் புலிகளுக்கு நிச்சயம் உண்டு. புலிகள் புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பிக்கத் தயாராகிவிட்டார்கள் என்பதனையே இந்த யுத்தத்தின் போக்கு காட்டுகிறது.

ரெலோ அழிக்கபட்டபோதும் சரி கருணா குழு அழிக்கப்பட்ட போதும் சரி அவ்வமைப்புகளின் வேறு  வேறு மட்டத் தலைமைகள் அழிக்கப்பட்டன. கட்டளைக் கட்டமைப்பு தகர்க்கப்பட்ட அவற்றின் உறுப்பினர்கள் சிதறி வெளியேறினர். உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர். ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இலங்கை அரசாங்கத்தின் இந்த விடுதலைப் புலிகளை அழிக்கும் யுத்தத்தில் இவையெதுவுமே நடைபெறவில்லை. இலங்கை அரச படைகளுக்கும் புலிகளுக்குமான இந்த யுத்தம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயெ இடம்பெற்று உள்ளது. யுத்தத்தின் பிற்பகுதிகளில் அங்குமிங்குமாக சிறு தாக்குதல்களே இடம்பெற்று இருந்தது. புலிகள் ஒவ்வொரு பிரதேசமாக மிகவும் நிதானமாக தங்கள் ஆயுத தளபாடங்களுடன் திட்டமிட்ட முறையில் பின்வாங்கி உள்ளனர். தமது பக்கத்தில் ஏற்படக் கூடிய உயிரிழப்புகளையும் தவிர்த்து உள்ளனர். குறிப்பிட்டு சொல்லக் கூடிய வகையில் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் தளபதிகள் யாரும் உயிரிழக்கவும் இல்லை. சரணடையவும் இல்லை. புலிகளின் பங்கர்களைத் தவிர ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்படவும் இல்லை. புலிகளின் கட்டளை அமைப்பு சீர்குலையவும் இல்லை. நிதானமாக தங்களின் ஆயுத தளபாடங்களுடன் பின் வாங்கி உள்ளனர். இலங்கை அரசாங்கம் புலிகளிடம் இருந்த கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை புலிகள் பின்வாங்கிச் செல்ல தன் வசப்படுத்தி உள்ளது. புலிகளின் இறுக்கமான கட்டமைப்பில் இந்த யுத்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கொள்ள முடியாது.

புலிகளின் மற்றுமொரு உறங்கு நிலைக் காலமாக இது அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த உறக்கம் இலங்கையின் வனப் பிரதேசங்களிலோ பணத்தால் எதனையும் வாங்கும் ஒரு நாட்டிலோ அல்லது சர்வதேச நாடுகளின் கொடிகள் பறக்கும் புலிகளின் கப்பல்களில் சர்வதேச கடலிலோ அல்லது இவை எல்லாவற்றிலுமாகவோ இருக்கலாம். இந்த உறங்கு காலத்தின் காலம் வே பிரபாகரனுக்கே வெளிச்சம். இந்த உறங்கு காலம் சில வாரங்களாகவோ அல்லது சில மாதங்களாகவோ இருக்கலாம். ஆனால் புலிகள் தங்கள் இருப்பை தெரியப்படுத்துவார்கள்.

புலிகள் தமிழ் மக்களது அரசியல் உரிமையை வென்றெடுக்கும் அரசியல் பலத்தை என்றைக்குமே கொண்டிருக்கவில்லை. அவர்களுடைய வரட்டுத்தனமான இராணுவப் போக்குக்கு கிடைத்த மிகப்பெரும் அடி இந்த யுத்தம். ஆனால் இந்த இராணுவக் கண்ணோட்டத்திற்கு வெளியே வரக்கூடிய ஆற்றல் வே பிரபாகரனுக்கு உண்டா என்பது சந்தேகமே. அப்படி ஒன்று நடந்தால் அது ‘தொப்பிக்குள் இருந்து முயல்’ எடுப்பதற்கு ஒத்ததாக இருக்கும்.

இந்த யுத்தத்தில் தீவிர ஆர்வம்காட்டும் ஜனாதிபதி மகிந்த நாட்டின் இந்நிலைக்கு காரணமான இன முரண்பாட்டிற்கான அரசியல் தீர்வு பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. தன்னிடம் சரணாகதி அடைந்துள்ள கிழக்கின் முதல்வரையே ஜனாதிபதியால் திருப்திப்படுத்த முடியவில்லை. அப்படி இருக்கையில் இந்த யுத்தத்தால புலிகளை வென்று தமிழ் மக்களுக்கு ஜனநாயகக் காற்றை சுவாசிக்க வைக்கப் போவதாகக் கூறும் வாய்ச்சவடால்கள் தமிழ் மக்களிடம் செல்லாது. புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் உண்மையிலேயே வெல்வதாக இருந்தால் முதல் தமிழ் மக்களின் உள்ளங்களை வெற்றி கொள்ள வேண்டும். அதற்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதனைச் செய்யாத வரை அது புலிகளுக்கு விளைநிலமாகவே இருக்கும்.

Related Articles:

தவறிப் போகும் பிரபாவின் தலைமை : த ஜெயபாலன்

2008ல் சொல்ல என்ன இருக்கிறது? : த ஜெயபாலன்

யுத்தத்தை நிறுத்துங்கள்!! வன்னி மக்களை விடுவியுங்கள்!!! – ஈஸ்ற்ஹாம் பிரதான வீதியில் ‘வேட்டையாடு விளையாடு’ : த ஜெயபாலன்

விடுதலைப் புலிகள் செலுத்தும் யுத்தத்தின் விலை : த ஜெயபாலன்

கோத்தபாய ராஜபக்ச மற்றும் சரத்பொன்சேகா மீது வழக்கு தொடரப்படும்: அமெரிக்க வழக்கறிஞர் புரூஸ் பெய்ன்

bruce-fein.jpgஇலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலை தொடர்பாக, அந்நாட்டு பாதுகாப்புத்துறை செயலாளர் கோதபய ராஜபக்ஷே மற்றும் இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய இருப்பதாக அமெரிக்க வழக்கறிஞர் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசின் உதவி தலைமை வழக்கறிஞராக இருந்து ஓய்வு பெற்ற புரூஸ் பெய்ன், சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அப்போது, அமெரிக்கப் பிரஜையான கோத்தபாய ராஜபக்ச மற்றும் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதியைப் பெற்றுள்ள இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராக அமெரிக்க தண்டனை சட்டக்கோவையின் 1091 ம் பிரிவின் கீழ் இனப்படுகொலை குற்றம் தொடர்பான 1000 பக்கங்களைக் கொண்ட மாதிரி குற்றப்பத்திரமொன்றை தயாரித்துள்ளதாகவும், அதை இரு வாரங்களுக்குள் வெளியிடுவதுடன் அமெரிக்க நாடாளுமன்றம் நீதி மற்றும் வெளிவிவகாரத் திணைக்களங்கள் ஆகியவற்றிடம் கையளிக்கவுள்ளதாகவும் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.இதனை ஆய்வு செய்து, அமெரிக்க அரசே, இந்த வழக்கை தொடர்ந்து நடத்தும் என்றும் அவர் கூறினார்.

சூரிய கிரகணம் இன்று

sun.jpgசூரிய கிரகணம் இன்று (26ம் திகதி) பிற்பகல் 1.59 மணி முதல் மாலை 4.10 மணிவரையும் இலங்கையில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பெளதீகவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், வானியல் குறித்த நவீன தொழில்நுட்பத்திற்கான ஆதர் – சி- கிளார்க் நிலைய ஆலோகருமான கலாநிதி சந்தன ஜயரட்ன தெரிவித்தார்.

வெறும் கண்களால் நேரடியாகவோ, சாதாரண கண்ணாடிகளைக் கொண்டோ, புகையூட்டப்பட்ட கண்ணாடிகள் மூலமோ, வர்ணப்புகைப்பட நெகடிவ்கள், எக்ஸ்ரே படம் எடுக்கப்பட்ட நெகடிவ்கள் என்பவற்றைக் கொண்டோ சூரிய கிரகணத்தைப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அவர் இவ்வாறு சூரிய கிரகணத்தைப் பார்ப்பதால் பார்வை முழுமையாகவோ பகுதியாகவோ பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். அதேநேரம் சூரிய கிரகணத்தை மொரட்டுவ, கட்டு பெத்த ஆதர் சி கிளார்க் நிலையத்தில் அமைக்கப் பட்டிருக்கும், விசேட நிலையத்திலிருந்த படியும், இப்பாகவமுக மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் விண்வெளி காட்டியகத்திலிருந்த படியும் பார்க்கலாம்.

அத்தோடு www.actimt.ac.lk என்ற இணை முகவரி ஊடாகவும் பொருத்துனர்கள் (Welders) பயன்படுத்தும் பாதுகாப்பு கண்ணாடிகளை பாவித்தும் இதனைப் பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.

அரச பகுதிக்கு செல்ல விரும்பும் மக்களின் விருப்பத்தை புலிகள் நிராகரிக்க கூடாது;

yasusi.jpgவடக்கில் சிவிலியன்களை பாதுகாப்பதற்கும் இடம் பெயர்ந்தோருக்கு நிவாரணமளிப்பதற்கும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஜப்பானிய தூதுவர் யசூசி அகாஷி திருப்தி வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த யசூசி அகாஷி திருகோணமலைக்கும் வவுனியாவுக்கும் சென்று நிலைமைகளை ஆராய்ந்து விட்டு தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

தனது விஜயத்தின் நிறைவில் கொழும்பில் நேற்று செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்திய யசூசி அகாஷி, அரசாங்கக் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு செல்லவிரும்பும் பொதுமக்களின் சுதந்திரத்தை புலிகள் நிராகரிக்கக் கூடாதெனவும் கேட்டுக் கொண்டார். சிவிலியன்களையும், ஐ.நா பணியாளர்களையும் கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் முடக்கி வைத்திருக்கும் புலிகளின் செயல்பாடுகள் குறித்து தமது விசனத்தையும் தெரிவித்துள்ளார்.

அந்த பிரதேசத்தில் வாழ்பவர்களின் சுதந்திரமான வெளியேற்றத்தை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் அகாஷி சுட்டிக்காட்டினார். இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கும் அபிவிருத்திக்கும் ஏனைய சர்வதேச நாடுகளோடு இணைந்து ஜப்பான் தொடர்ந்து முக்கிய பங்காற்றுமென்றும் அகாஷி தெரிவித்தார்.

சிவிலியன்களின் பாதுகாப்புக் குறித்தும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்தும் ஜப்பான் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமென்றும் தெரிவித்தார். அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி சர்வதேச பிரதிநிதிகள் குழுவினூடாக அரசியல் பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.சமாதான முன்னெடுப்பு தொடருமென நம்பிக்கை தெரிவித்த அகாஷி, அரசியல் தீர்வொன்றின் மூலமே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தமுடியுமென வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பின் போது ஊடகவியலாளர்களின் பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும். தென்னிலங்கை கட்சிகள் மத்திய முரண்பாடுகள் இருப்பின் அதனை நாடாளுமன்றத்திற்குள்ளேயே தீர்த்துக்கொள்ளவேண்டும் வெளியில் சென்று அதனை தீர்த்துக்கொள்ள முயற்சிக்கக்கூடாது என்றும் யசூசி தெரிவித்தார்.

இதேவேளை 61 நாடுகள் மற்றும் 21 தொண்டு நிறுவனங்களுடன் இலங்கை அரசாங்கம் மாத்திரமே டோக்கியோவில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டது. அந்த மாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளும் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அதனை நிராகரித்தனர். இது தொடர்பில் தாம் கவலையடைவதாக தெரிவித்த யசூசி அகாசி காரணம் அந்த மாநாட்டின் போது 4. 5 மில்லியன் டொலர் நிதிகள் கிடைத்தது. தமிழீழ விடுதலைப் புலிகளும் இதில் கலந்து கொண்டிருந்தால் அது தமிழர்களுக்கு மாத்திரம் இன்றி ஏனைய இனங்களுக்கும் பெரிய வரப்பிரசாதமாக இருந்திருக்கும் என அவர் இதன் போது குறிப்பிட்டிருந்தார்.

புலிகளின் யுத்த தாங்கியை இலக்கு வைத்து விமானத் தாக்குதல்

mi24-1301.jpgவிசுவமடு பகுதியிலுள்ள புலிகளின் இலக்குகள் மீது விமானப்படையினர் நேற்று தாக்குதல்களை நடத்தியுள்ளனர். விமானப்படைக்குச் சொந்தமான எம். ஐ. 24 ரக விமானங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

விசுவமடு குளத்திலிருந்து வடக்கே இரண்டு கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருந்த புலிகளின் யுத்த தாங்கியொன்றை இலக்கு வைத்து விமானப்படையினர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.

விமானத் தான்குதலுக்கு இலக்கான யுத்த தாங்கியை மீட்கும் நோக்கில் முன்னேறிய இராணுவத்தின் 58வது படையணிக்கு உதவியாக நேற்று நண்பகல் மீண்டும் எம். ஐ. 24 ரக விமானம் மூலம் விமானத் தாக்குதலை மேற்கொண்டதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.