இலங் கைப் பிரச்சினை குறித்து பெப்ரவரி 15 ஆம் திகதிக்குள் தி.மு.க. பொதுக்குழு கூடி முக்கிய முடிவெடுக்கும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சனிக் கிழமை “சங்கத் தமிழ் பேரவை’ என்ற அமைப்பு நடத்திய பாராட்டு விழாவில் அவர் பேசியதாவது; “இந்த விழாவில் என்னைப் பலரும் பாராட்டினார்கள். பொன்னாடைகள், பட்டாடைகள் அணிவித்தார்கள். ஆனால், நான் முழு மகிழ்ச்சி அடையவில்லை.
பக்கத்து நாட்டில் நமது தமிழ் மக்கள் தங்களது தாயகத்தில் வாழ முடியாமல் துரத்தப்படுகிறார்கள். அவர்களின் துன்பத்துக்கு நாம் எப்போதும் முடிவு கட்டப்போகிறோம்? அதற்காகத்தான் சட்டப்பேரவையில் மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தோம். இலங்கைப் பிரச்சினையை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் தேட முயற்சித்து வருகிறார்கள். நாங்கள் இந்தப் பிரச்சினையை அரசியலாக்க விரும்பவில்லை. மத்திய அரசு இப்பிரச்சினையில் தனது கடமையை ஆற்ற வேண்டும்.
வெள்ளிக்கிழமை (ஜன.23) சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்போது தி.மு.க. பொதுக்குழு கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் என்றேன். அதன்படி வரும் பெப்ரவரி 15 ஆம் திகதிக்குள் தி.மு.க. பொதுக்குழு கூடி முக்கிய முடிவெடுக்கும். இந்த அறிவிப்பு நான் உங்களுக்கு அளிக்கும் பட்டாடையாகும்.