2009

2009

பிரபாகரன் தொடர்பான புலனாய்வுத் தகவலை இந்தியாவிடம் பெற்றுக்கொள்ள மலேசியா முயற்சி

Pirabaharan_Eelamவிடுத லைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருக்கும் இடங்கள் பற்றிய புலனாய்வுத் தகவலை இந்தியா மற்றும் இன்ரர்போலிடமிருந்து பெற்றுக்கொள்ள மலேசியா விரும்புகின்றது. இது தொடர்பாக மலேசிய பொலிஸ் மா அதிபர் மூஸா ஹுசெய்னிடமிருந்து உத்தியோகபூர்வமான கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கப் படவில்லையாயினும் இடம்பெறும் விசாரணைகள் மலேசியா இந்தப் பாதையில் செல்வதை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று “இந்து” பத்திரிகை  திங்கட்கிழமை குறிப்பிட்டுள்ளது.

மலேசிய அரசாங்கத்தின் இவ் விசாரணைகள், பிரபாகரன் ஏற்கெனவே வேறு பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுவிட்டார் என ஊடகங்கள் வெளியிட்ட ஊகங்களை அடிப்படையாகக் கொண்டே இடம்பெற்று வருகின்றன. இவ் ஊகங்கள் மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற இடங்களில் அதிகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும், புலிகள் அமைப்புடன் தொடர்புடையதென கருதி, ஒரு வருடத்தின் முன்னர் தடை செய்யப்பட்ட “இந்துராவ்’ என்ற மலேசிய, அமைப்பிற்கும் இதற்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

வன்னியில் காயமடைந்த 300க்கும் மேற்பட்டவர்களை வவுனியாவுக்கு கொண்டுவரும் முயற்சி பலனளிக்கவில்லை – ஐ.சி.ஆர்.சி.யுடன் சென்ற வாகனங்கள் மீண்டும் திரும்பின

redcrose2801.jpgவன்னியில் காயமடைந்த 300க்கும் மேற்பட்டவர்களை வவுனியாவுக்கு கொண்டுவரும் முயற்சி பலனளிக்கவில்லை – ஐ.சி.ஆர்.சி.யுடன் சென்ற வாகனங்கள் மீண்டும் திரும்பின

முல்லைத்தீவில் உடையார்கட்டு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நாள் முழுவதும் இடம்பெற்ற அகோர ஷெல் தாக்குதலில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையிலுள்ள 300க்கும் மேற்பட்டவர்களை மேலதிக சிகிச்சைக்காக வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டுவர நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட முயற்சி கைகூடவில்லை. படுகாயமடைந்தவர்களை வவுனியாவுக்கு கொண்டுவர புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி நோக்கி நேற்றுக் காலை17 அம்புலன்ஸ்களுடனும் ஐந்து பஸ்களுடனும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி.) சென்ற போதும் புதுக்குடியிருப்புக்கு தெற்கே கடும் மோதல்கள் நடைபெற்று வருவதால் இவர்களால் ஆஸ்பத்திரிக்குச் செல்ல முடியவில்லை.

திங்கட்கிழமை காலை முதல் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் உடையார்கட்டு முதல் தேவிபுரம் வரை அரசால் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப் படுத்தப்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கில் ஆட்லறி ஷெல்கள் வீழ்ந்து வெடித்துள்ளன. இதனால் 300க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துமுள்ளதாக “புதினம்’ மற்றும் “தமிழ் நெற்’ இணையத்தளங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் படுகாயமடைந்த நூற்றுக்கணக்கானோர் ஆபத்தான நிலையிலிருப்பதால் அவர்களுக்கு மேலதிக சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் அவர்களை வவுனியாவுக்கும் வேறு ஆஸ்பத்திரிகளுக்கும் கொண்டு செல்ல உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி நிர்வாகம் ஐ.சி.ஆர்.சி.யிடம் அவசர கோரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து வவுனியா ஆஸ்பத்திரியில் நான்கு வார்ட்கள் ஒதுக்கப்பட்டதுடன் இரு சத்திரசிகிச்சை பிரிவுகளும் முழு அளவில் தயார்படுத்தப்பட்டதுடன் புதுக்குடியிருப்புக்குச் சென்று, காயமடைந்த 300பேரை வவுனியாவுக்கு கொண்டுவருவதற்குரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. மன்னார் ஆஸ்பத்திரியிலிருந்து அவசரமாக ஐந்து அம்புலன்ஸ்கள் வவுனியா ஆஸ்பத்திரிக்கு வரவழைக்கப்பட்டதுடன் அங்கிருந்து 17 அம்புலன்ஸ்களும் 5 பஸ்களும் ஐ.சி.ஆர்.சி.யின் வழித்துணையுடன் நேற்றுக் கலை புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி நோக்கிச் சென்றன.

இவை மாங்குளம் முல்லைத்தீவு வீதியால் புதுக்குடியிருப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த போதும் புதுக்குடியிருப்புக்கு தெற்கே கடும் சமர் நடைபெறுவதால் அவர்களால் தொடர்ந்து பயணம் செல்லமுடியவில்லை. அங்கு நீண்டநேரம் காத்திருந்தும் அது சாத்தியப்படவில்லை. இதையடுத்து அப்புலன்ஸ்களும் பஸ்களும் நேற்று பிற்பகல் வவுனியாவுக்குத் திருப்பின

வவுனியா மனிக்பாம் முகாமில் 2ம் திகதி பாடசாலை ஆரம்பம்

school2701.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப் பாட்டுக்குள் வந்துள்ள பொதுமக்களின் பிள்ளைகளுக்கான இரண்டு தற்காலிக பாடசாலைகள் திங்கட்கிழமை முதல் வவுனியா மனிக்பாம் முகாமில் இயங்கவுள்ளன. மனிக்பாம் முகாமில் தங்கியுள்ள சுமார் 700 மாணவர்களுக்கு கல்விகற்கக் கூடிய விதத்தில் இரண்டு தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்குத் தேவையான சீருடைத் துணிகள், பாடநூல்கள், பாடசாலை உபகரணங்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படுவதுடன் பாடசாலைக்குத் தேவையான தளபாடங்களும் அன்றைய தினமே தற்காலிக கொட்டில்களுக்கு வழங்கப்படும் என வவுனியா கல்வி வலய பணிப்பாளர் திருமதி வீ. ரஞ்ஜனி எ. ஒஸ்வல்ட் தெரிவித்தார்.

மனிக்பாம் முகாமில் தற்காலிக பாடசாலைகள் அமைக்கப்படுவதற்கு முன்னதாக தற்காலிக கொட்டில்களில் மேற்படி பாடசாலைகள் இயங்கவுள்ளன.

கல்வி அமைச்சின் அனுமதி மற்றும் நிதி கிடைத்தவுடன் தற்காலிக பாடசாலைகள் விரைவில் அமைக்கப் பட்டுவிடும் என்றும் அவர் தெரிவித்தார். திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பமாகின்றபோதும் முகாமிலுள்ள மாணவர்கள் சீருடையின்றி வர்ண ஆடை யுடனேயே பாடசாலைக்குச் சமுகமளிக்கலாமென்றும் அவர் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படும் சீருடைத் துணிகளை முகாமுக்குள்ளேயே தைக்கக்கூடியவர்களின் உதவியுடன் மாணவர்களுக்கு தைத்துக் கொடுக்கவும் முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. முகாமுக்குள் 15 ஆசிரியர்கள் இருக்கின்றபோதும் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுக்குள் வந்து வேறு பகுதிகளில் தங்கியுள்ள சுமார் 255 ஆசிரியர்களுள் சிலரையும் மனிக்பாம் முகாம் பாடசாலைகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

மேலும் வன்னியிலிருந்து சுமார் 85,000 மாணவர்களும், 2500 ஆசிரியர்களும் வரவேண்டியுள்ளதாக வலய கல்விப் பணிப்பாளர் அலுவலகம் தரவுகள் தெரிவிக்கின்றன.

எஞ்சிய மாகாண சபைகளுக்கும் புதுவருடத்திற்கு முன் தேர்தல்

susil.jpgவிரைவில் ஏனைய மாகாண சபைகளையும் கலைத்து தேர்தல் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

முதலில் இரண்டு மாகாண சபைகளையோ அல்லது மூன்றையும் ஒரே தடவையிலோ கலைக்கப்படலாம். தமிழ்- சிங்கள புதுவருடத்திற்கு முன்னர் தேர்தலை நடத்தும் வகையில் இம் மாகாணசபைகள் கலைக்கப்படலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பொதுத்தேர்தல் சம்பந்தமாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அது தொடர்பில் உறுதியான தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்பட வில்லையெனவும் தேவையேற்படின் விரைவில் பொதுத் தேர்தலும் நடத்தப்படலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார். மத்திய மற்றும் வடமேல் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்க மளிக்கும் செய்தியாளர் மாநாடென்று நேற்று கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் காமினி லொக்கே, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம். பி. ஆகியோர் கலந்து கொண்ட இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்ததாவது,

வடமாகாணம் முழுமையாக மீட்கப்பட்ட பின் அங்கும் தேர்தல் நடத்தப்படும். எனினும் கிழக்கைப் போன்று ஆரம்பத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு அப்பகுதியின் உட்கட்டமைப்பு நடவடிக்கைகள் முதலில் மேற்கொள்ளப்படும். பல பகுதிகளில் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. முதலில் மக்களின் பாதுகாப்பான இயல்பு வாழ்க்கை உறுதி செய்யப்பட வேண்டும். அதனையடுத்து முதலில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலே நடத்தப்படும் அதன் பின்னர் மாகாண சபைத்தேர்தல் நடத்தப்படும்.

கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டது போன்று வடக்கும் அபிவிருத்தி செய்யப்படும். கல்வித்துறையைப் பொறுத்தவரை கிழக்கு 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதேபோன்று வடக்கிற்கும் கல்வித்துறை அபிவிருத்திக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு பாடசாலைகளுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்ட கணனி இயந்திரங்கள் உட்பட பெரும்பாலான வளங்களை புலிகளே உபயோகித்துள்ளனர் என்பதால் வளங்களில் பின்னடைவு காணப்பட்டது. இவையனைத்துமே மீளக்கட்டியெழுப்படும்.

புலிகள் ஆசிரியர்களையும் பலவந்தமாகத் தமது அமைப்பில் சேர்த்துக் கொள்ள முற்பட்டதையடுத்து பெரும்பாலான ஆசிரியர்கள் கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். அவர்களை மீள அவர்கள் கற்பித்த பாடசாலைகளுக்கே நியமிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உலக சாதனை- சனத் ஜயசுரிய

srilanka-india.jpgஇன்று தம்புள்ளை ரங்கிரிய மைதானத்தில் நடைபெறும் இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச ஆட்டத்தில் சனத் ஜயசுரிய சதம் அடித்ததினால் உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார். ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் கூடிய வயதில் சதம் அடித்தது இவரின் இந்த சாதனையாகும். இவர் சதம் அடிக்கும் போது இவரின் வயது 39 வருடங்களும் 254 நாட்களும் ஆகும். இதற்கு முன் இச்சாதனையை ஏற்படுத்தியவர் ஜெப்ரி பொய்கொட் (இங்கிலாந்து) என்பவராவார். அவர் சதம் அடிக்கையில் அவரது வயது 39வருடங்களும் 51நாட்களும் ஆகும்.  

ஊடக முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை

mahi-raja.jpgஊடகங்களின் முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்தராஜ பக்ஷ நேற்று தெரிவித்தார். பத்திரிகை ஆசிரியர்களை ஜனாதிபதி நேற்று மாலை சந்தித்துப் பேசினார். அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி; ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக அரசாங்கம் பூரண விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. விசாரணைகளை மூடிமறைப்பதற்கோ, இழுத்தடிப்பதற்கோ அரசாங்கம் ஒருபோதும் முயற்சி செய்யவில்லை.

ஊடகவியலாளர்களைத் தாக்கும் நோக்கம் அரசாங்கத்திற்குக் கிடையவே கிடையாது. அப்படியானதொரு தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை.

அரசாங்கம் மிகவும் பலமான நிலையில் இருக்கிறது. அப்படியானதொரு நிலையில் இத்தகைய கேவலமான வேலையை செய்யவேண்டிய தேவையே இல்லை. ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்ற போது அரசாங்கத்தின்மீது குற்றம் சுமத்துவது மிகவும் அபாண்டமானதொரு செயலாகும். லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பாக முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பல முக்கியஸ்தர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை கைதுசெய்ய நடவடிக்கை எடுப்போம்.

ரிவிர ஆசிரியர் காமினி விஜயக்கோனும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இது மிகவும் மோசமானது. பதவியிலுள்ள அரசாங்கம் இதற்கு வகை கூறவேண்டுமென்பது உண்மை. அதற்காக எடுத்ததற்கெல்லாம் அரசின் மீது குற்றம் சுமத்தக்கூடாது என ஜனாதிபதி சுட்டிக் காட்டினார். ஊடகவியலாளர்களுக்கு ஏதும் அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் அனுஷ பல்பிட்டவுடன் தொடர்புகொள்ளுமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.தமிழ்ப் பத்திரிகைகள், தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள மக்களுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொள்கின்றன. இது நாட்டில் பாரதூரமான குரோதத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, அமைதியின்மையொன்றை தோற்றுவிக்கும்.

தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற பிரசாரங்களை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் தமிழ்ப் பத்திரிகைகள் செய்திகளைப் பிரசுரிக்கின்றன. தயவுசெய்து தமிழர்கள் மத்தியில் சிங்கள மக்களுக்கு எதிரான குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் எழுத வேண்டாமென மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வடக்கில் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கை தமிழ் மக்களுக்கெதிரானதல்ல. பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள தமிழ் மக்களை விடுவிப்பதற்கானது. வன்னியில் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் சிவிலியன்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் தமிழ்ப் பத்திரிகைகள் செயற்பட வேண்டும். அதாவது, புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதனை வலியுறுத்தும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டும். இத்தகைய பங்களிப்புக்களை தமிழ்ப் பத்திரிகைகள் செய்ய வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்கள் சுதந்திர தினத்துக்கு முன் முல்லைத்தீவு மீட்கப்படும்

susil.jpgசுதந்திர தினத்திற்கு முன் முல்லைத்தீவும் முழுமையாக மீட்கப்படும். வடக்கு உட்பட சகல நிலப் பிரதேசங்களும் உள்ளடக்கப்பட்ட இலங்கையிலேயே இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். படையினர் முல்லைத்தீவு நகரினைக் கைப்பற்றியுள்ளனர். இன்னும் சிறு பகுதியே மீட்கப்படவேண்டியுள்ளது. சுதந்திர தினத்திற்கு முன் இது மீட்கப்பட்டு விடுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெறுவது உறுதியெனவும் தெரிவித்தார். மேற்படி ஐந்து மாவட்டங்களிலும் 40 பிரதேச சபைகள் உள்ளன. இச்சகல பகுதிகளிலும் அரசாங்கமே வெற்றிபெறுமெனவும் அமைச்சர் உறுதியாகத் தெரிவித்தார். மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான செய்தியாளர் மாநாடொன்று நேற்று கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் விளக்கமளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இரு மாகாண சபை பிரதேசங்களிலும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்களென மூவினத்தவர்களும் செறிந்து வாழ்கின்றனர். இதற்கமைய அபேட்சகர் பட்டியலும் இன விகிதாசாரத்தை அடிப்படையாக வைத்தே தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாகாண சபைகளிலும் தேர்தல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக ஐ.தே.க பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. அவர் அதனை ஆதாரத்துடன் கூறவில்லை. எவரும் இதனை ஏற்கமாட்டார்கள்.

மத்திய மாகாண அபிவிருத்தி சம்பந்தமாக எஸ்.பி. திசாநாயக்க பேசி வருகின்றார். மத்திய மாகாணத்தில் அரசாங்கம் 3,779 தமிழ் ஆசிரியர்களையும், 600 முஸ்லிம் ஆசிரியர்களையும் நியமித்துள்ளது. அவர் சமுர்த்தி அமைச்சராக இருந்த காலத்தில் எத்தனை பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கினார் எனக் கூறட்டும் பார்க்கலாம்.

மத்திய மாகாணத்தில் அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளை மும்முரமாக முன்னெடுக்கிறது. நாட்டின் சகல பகுதியும் அரசாங்கத்தின் கீழ் இருக்கும். அனைத்துப் பிரதேசங்களும் அபிவிருத்திக்குள்ளாக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

முகர்ஜி நேற்று இலங்கை வருகை

prathaf-mahi.jpgஇலங்கை அரசின் அழைப்பை யேற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார். இவர், நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினாரென வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பொது மக்களை புலிகளின் பயங்கரவாதப் பிடியிலிருந்து விடுவிப்பதற்கான இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து வெற்றியளித்துக் கொண்டு இருக்கும் இவ் வேளையில் அமைச்சர் முகர்ஜியின் வருகை இடம் பெறுகின்றது.

இவ்வருகையானது பாரம்பரியமாக இந்தியா மற்றும் இலங்கையின் அதி உயர்மட்ட அரசியல் தலைவர்களிடையே நடைபெறும் பரஸ்பர – நன்மை பயக்கும் முக்கிய விடயங்கள் சம்பந்தமாக வெளிப்படையானதும் ஆக்கபூர்வமானதுமான கலந்துரையாடலாக அமைந்திருந்ததெனவும் வெளிவிவகார அமைச்சு கூறியது.

வடக்கு வெற்றியை வைத்துக்கொண்டு தெற்கில் அரசால் வன்முறைகள் கட்டவிழ்ப்பு -சாடுகிறது ஐ.தே.க.

palitha_bandara.jpgவட பகுதியில் பல இடங்களை புலிகளிடமிருந்து மீட்டு அவர்களை தோற்கடித்துள்ளதாக கூறும் அரசாங்கம், அதனை வைத்துக்கொண்டு நாட்டின் தெற்குப் பகுதியின் சகல இடங்களிலும் வன்முறைகளைக் கட்டவிழ்த்துள்ளதாக புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலிதரங்க பண்டார குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்;புலிகளைத் தோற்கடித்து வடபகுதியின் பெருமளவான பிரதேசங்களை மீட்டுள்ளதாக அரசு கூறி தம்பட்டம் அடித்துக்கொண்டு அந்த வெற்றிகளை வைத்துக்கொண்டு நாட்டின் தெற்குப் பகுதியிலும் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதன் உச்சக்கட்டமாகவே புத்தளம் மாவட்டத்தில் பத்துதேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனது வாகனசாரதியும் கூட தாக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் ஆயுதங்களை பறித்த காடையர் குழுவொன்று அதனை பயன்படுத்திய சம்பவங்களும் உள்ளன.

எனினும், சம்பந்தப்பட்டவர்களை பொலிஸார் கைது செய்த போது உயர்மட்ட அழுத்தத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு நாட்டின் தென்பகுதியில் நாலாபுறங்களிலும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்ட அரசிடம் நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியும். இது இவ்வாறிருக்க, அரசாங்கம் தனது தேர்தல் வெற்றிக்காக அரச சொத்துகள் உட்பட அனைத்து வளங்களையும் பயன்படுத்துகின்றது. தேர்தல் வெற்றி என்றால் ஏன் இவ்வாறு செயற்பட வேண்டும். உண்மையில் மக்கள் எம்முடன் இருப்பதே காரணமாகும்.

இதேவேளை, தேர்தல் வன்முறை தொடர்பில் எனக்கோ அல்லது எனது கட்சிக்கோ எதிராக எதுவித முறைப்பாடும் பொலிஸில் செய்யப்படாத நிலையில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அரசுக்கு எதிராக நான் வன்முறைகளில் ஈடுபடுவதாகக் கூறியுள்ளார். இவரை நான் பொலிஸ் சேவையில் இருக்கும் போதே நன்கறிவேன். இவர் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை மக்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் அணிதிரண்டிருப்பதால் மாகாண சபை தேர்தலில் எமக்கு வெற்றி என்றார

இலங்கை- இந்திய அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று

doni-maha.jpgஇலங்கை இந்திய அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று ரன்கிரி தம்புள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகிறது. இலங்கைக்கு எதிரான தொடரில் ஹர்பஜன்சிங் இல்லாவிட்டாலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்றுமுன் தினம் பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு வந்து சேர்ந்தது. இங்கு இலங்கை கிரிக்கெட்சபை நிர்வாகிகள், இந்திய அணியினரை வரவேற்றனர்.

இந்திய அணி வீரர்கள் கொழும்புக்கு புறப்படும் முன்பு நேற்று முன்தினம் காலையில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சி முடிந்தும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள சுழற்பந்து வீசக்கூடிய புதுமுக சகலதுறை வீரரான ரவீந்திர ஜடேஜாவிடம், இலங்கை பயணத்துக்கான இந்திய அணியில் காயம் காரண மாக ஹர்பஜன்சிங் இடம்பெறாதது பின்னடைவா? என்று கேட்டதற்கு பதில் அளித்து கூறியதாவது:-

சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் அணியில் இடம்பெறாததால் அணிக்கு பின்னடைவு என்று சொல்ல முடியாது. நாங்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடுவோம். வீரர்கள் எல்லோரும் தங்களது துறையில் சிறப்பான ஆட்டத்தை அளிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

இந்திய அணி வருமாறு:-

டோனி (கப்டன்), ஷெவாக் (துணை கப்டன்), டெண்டுல்கர், யுவராஜ்சிங், கவுதம் கம்பீர், ரோகித் சர்மா, யூசுப் பதான், சகீர்கான், இஷாந்த் ஷர்மா, பிரக்யான் ஒஜா, முனாப் பட்டேல், இர்பான் பதான், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பிரவீன்குமார்.

இலங்கை அணி வருமாறு:-

ஜயவர்த்தன (கப்டன்), சங்கக்கார, ஜயசூரிய, தரங்க, கப்புகெதர, முபாரக், தில்ஷான், கன்டம்பி, முரளிதரன், மெண்டிஸ், மஹ்ரூப், பெர்னாண்டோ, குலசேகர, துஷார, மெத்தியு.

இந்திய – இலங்கை இடையேயான போட்டி அட்டவணை விவரம் வருமாறு:-

போட்டி அட்டவணை

ஜன  28:  முதல் ஒரு நாள் போட்டி தம்புள்ள
ஜன  31  2 வது ஒரு நாள் போட்டி கொழும்பு (பகல் -இரவு)
பெப்.  3  3வது ஒரு நாள் போட்டி கொழும்பு (பகல் – இரவு)
பெப்.  5  4 வது ஒரு நாள் போட்டி கொழும்பு (பகல் – இரவு)
பெப்.  8  5 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பு
பெப்.  10  20 ஓவர் போட்டி, கொழும்பு (பகல் – இரவு)