2009

2009

வடமேல், மத்தி தேர்தல்: பிரசாரப் பணிகள் இன்று நள்ளிரவுடன் முடிவு; 18000 பொலிஸார் கடமையில்

election_.jpgவடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ள அதே வேளை சகல தேர்தல் பிரசாரப் பணிகளும் இன்று  நள்ளிரவு (11) 12.00 மணியுடன் முடிவடைவதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

18 ஆயிரம் பொலிஸார்

தேர்தல் பாதுகாப்புக் கடமைகளில் 18 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளதோடு அவர்கள் நேற்று (10) முதல் தேர்தல் நடைபெறும் 5 மாவட்டங்களுக்கும் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இது தவிர இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் இருந்து மட்டுமன்றி அண்டிய மாவட்டங்களில் இருந்தும் பொலிஸார் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார். இவர்கள் வாக்களிப்பு நிலையங்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் வீதிகள் என்பவற்றில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படுவர். இவர்கள் 15 ஆம் திகதி வரை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அரச ஊழியர்கள்

தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படும் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் 12ஆம் திகதி முதல் கடமையைப் பொறுப்பேற்க உள்ளனர். இவர்கள் 13ஆம் திகதி வாக்களிப்பு இடம்பெறும் பாடசாலைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் கண்காணிப்பு

தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் பெப்ரல், தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் அடங்கலான ஐந்து கண்காணிப்பு அமைப்புகள் ஈடுபடவுள்ளன. பெப்ரல் அமைப்பு 12ஆம் திகதி முதல் அப்பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் கிங்ஸ்லி ரொட்ரிகோ தெரிவித்தார். இம்முறை 3 ஆயிரம் பேர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளதோடு இதில் 600 பேர் நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார்.

2247 பேர் போட்டி

இம்முறை தேர்தலில் மத்திய மாகாணத்தில் இருந்து 56 பேரும், வடமேல் மாகாணத்தில் இருந்து 50 பேருமாக 106 பேர் தெரிவு செய்யப்பட உள்ளனர். 17 கட்சிகளும் 43 சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிட உள்ளன. 2247 பேர் களத்தில் குதித்துள்ளனர்.

மத்திய மாகாணத்தில் 15 கட்சிகளும் 26 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதோடு இம்மாகாணத்தில் 17 இலட்சத்து 46,449 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இங்கு 1389 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வடமேல் மாகாணத்தில் 15 கட்சிகளும் 17 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட உள்ளன. இங்கு 16 இலட்சத்து 61 ஆயிரத்து 733 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இங்கு 1209 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

வெளிநாட்டு உறவுகளில் புதிய கொள்கையை பின்பற்றப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு

hillary.jpgஉலக நாடுகளுடனான உறவில் புதிய கொள்கையொன்றைக் கடைப்பிடிக்க அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தீர்மானித்திருப்பதாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அண்மைய வருடங்களாக விரிசலடைந்திருந்த ரஷ்யாவுடனான உறவை மீண்டும் புதுப்பிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ள பைடன் ஈரானுடன் பேச்சுகளை ஆரம்பிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல விவகாரங்களை சாதகமான அணுகுமுறையினூடாக கையாள்வதற்கு அமெரிக்கா தயாராகவுள்ள அதேவேளை நட்பு நாடுகளும் இவ்வாறான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென எதிர்பார்ப்பதாக பைடன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தானை தவிர்த்து ஆப்கானிஸ்தானில் எந்தவொரு தந்திரோபாய வெற்றியையும் அடைய முடியாதென எச்சரித்துள்ள பைடன் இப்பிராந்தியத்தின் நிலைமை மோசமடைந்து வருவது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல அனைத்து நாடுகளுக்குமே பாதுகாப்பு அச்சுறுத்தலை தோற்றுவிக்குமென தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் மூனிச் நகரில் நடைபெற்று வரும் பாதுகாப்பு மாநாட்டில் சர்வதேச தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் மத்தியில் உரையாற்றிய பைடனின் உரையில் ஒபாமா நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை அணுகுமுறை, காலநிலை மாற்றம் மற்றும் உலக பொருளாதார நெருக்கடி போன்ற முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

உலக நாடுகளுடனான உறவில் புதிய அணுகுமுறையொன்றைக் கடைப்பிடிப்பதென்ற புதிய நிர்வாகத்தின் தீர்மானத்துடன் நான் ஐரோப்பாவுக்கு வந்துள்ளேன். உலக நாடுகளின் விவகாரங்களை உள்வாங்கி அதனை அவதானித்து இது தொடர்பில் ஆலோசனை நடத்துவோம். அமெரிக்காவுக்கு உலகம் தேவை. உலகத்திற்கு அமெரிக்கா தேவையென கருதுகிறேன். எமது அரசாங்கம் மிக உயர்ந்த இலக்குகளைக் கொண்டுள்ளது. எமது நாட்டுக்கு வெளியில் படைப்பலத்தை பிரயோகிக்காமல் ஜனநாயக ரீதியில் விவகாரங்களைக் கையாள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா தொடர்பில் அதனுடனான உறவை மீள சீரமைக்க ஜனாதிபதி ஒபாமா விரும்புகிறார். பல விவகாரங்கள் தொடர்பில் எம்மால் இணைந்து பணியாற்ற முடியும். ஆனால், ஒவ்வொரு விடயத்திலும் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து செயற்படுவது சாத்தியமற்றது. சில விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆனால், பொதுவாக எமக்கிடையில் இணக்கம் ஏற்படும் விடயங்களில் நாம் தொடர்ந்து இணைந்து செயற்பட வேண்டும்.

மத்திய ஐரோப்பாவில் ஏவுகணைப் பாதுகாப்பு கவசத்தை அமைக்கும் திட்டத்தை அமெரிக்கா தொடர்ந்து முன்னெடுக்கும். இதேவேளை, ஈரானின் நடவடிக்கைகளுக்கேற்ப அந்நாட்டுடனான தொடர்புகள் பேணப்படும். நேட்டோ கூட்டமைப்பு மற்றும் ரஷ்யாவுடன் நாம் அதிகளவான ஆலோசனைகளை நடத்தும் அதேவேளை எமது நட்பு நாடுகளிடமிருந்து அமெரிக்கா உதவிகளை எதிர்பார்க்கும். உதாரணத்திற்கு குவாண்டனாமோ தடுப்பு முகாம் மூடப்படும்போது அங்கிருக்கும் கைதிகளை ஏனைய நாடுகள் ஏற்றுக்கொள்வது போன்ற விடயங்களில் நாம் ஏனைய நாடுகளுடன் தீவிர ஆலோசனைகளை நடத்துவதுடன் அவற்றிடமிருந்து உதவிகளையும் எதிர்பார்ப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு இன்று புதன்கிழமை அறுவை சிகிச்சை

0302-karunanidhi.jpgமுதுகுவலி குறையாத காரணத்தினால் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு இன்று (புதன்கிழமை) அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது என டாக்டர்கள் குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் காணப்படுவதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் முதுகில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக 15 நாட்களுக்கு மேலாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வலி குறையாத காரணத்தினால் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்கப்பட்டு, அவரது தண்டுவடத்தில் ஏற்பட்டுள்ள வலியை சரி செய்வதற்கு அறுவை சிகிச்சை செய்வதென்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்துள்ளார்கள்.

இதுகுறித்து 2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து வந்த டாக்டர் ஏ.ஜெய்ஸ்வாலும், மற்ற டாக்டர்களும் கலந்து பேசி அறுவை சிகிச்சை செய்வதென்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். இந்த அறுவை சிகிச்சை இன்று (11.2.2009) புதன்கிழமை  நடைபெற உள்ளது. முதல்-அமைச்சர் கருணாநிதியின் நலனை கவனிக்க விசேட டாக்டர்களைக் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு முதல்-அமைச்சர் கருணாநிதி விரைவில் நலம் பெற்றிடும் வகையில் பார்வையாளர்கள் கண்டிப்பாக ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காயமடைந்த நோயாளர்கள் கப்பல் மூலம் திருமலைக்கு கொண்டு வருகை

ship-10022009.jpgவன்னியில் இருந்து நேற்று ஒரு தொகுதி நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாத்தளன் கடற்பரப்பில் நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் கப்பல் தரித்துநின்று நோயாளர்களை ஏற்றிச் சென்றுள்ளது.

நோயாளர்கள் படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு கப்பலில் ஏற்றப்பட்டுள்ளனர்.  ‘ஓசின்’ எனும் கப்பலே மாத்தளன் கடற்பரப்புக்கு வந்து நோயாளர்களை ஏற்றிச் சென்றுள்ளது. நோயாளர்களுடன் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் வெளியேறியுள்ளனர்.கப்பலில் நோயாளர்கள் ஏற்றப்படுகின்றனர்.

கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்ட நோயாளர்கள் திருமலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் தஸநாயக்க கூறினார்.

இந்திய பொதுத் தேர்தலுக்கு முந்தைய கடைசி கூட்டம் – மக்களவை நாளை கூடுகிறது

lok-saba.jpgஇந்திய பொதுத் தேர்தலுக்கு முந்தைய மக்களவையின் கடைசி கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இதய அறுவை சிகிச்சைக்குப் பின் ஓய்வெடுத்து வருவதால் இந்த கூட்டத் தொடரில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளமாட்டார் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவையின் பதவிக் காலம் மே மாதம் முடிகிறது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், 14வது மக்களவையின் கடைசி கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உரையாற்றுகிறார்.

வழக்கமாக பிப்ரவரி இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தேர்தல் நடக்க உள்ளதால், புதிய அரசு அமைந்த பிறகே முழுமையான பட்ஜெட்  தாக்கல் செய்யப்படும். அது வரை அரசின் செலவுக்காக 16ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 14வது மக்களவையின் கடைசிக் கூட்டம் என்பதாலும் தேர்தலுக்கு முந்தைய கூட்டத் தொடர் என்பதாலும் மக்களின் கவனத்தை கவர, முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கைப் பிரச்சினையும் எடுத்துக் கொள்ளப்படலாமென கருத்துக்கள் தெரிவிக்கின்றன. 

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் 26ம் தேதி வரை நடக்கிறது. இதில் விடுமுறை போக, 10 நாட்களுக்கு நாடாளுமன்றம் செயல்படும்.

இப்போதைய மக்களவையின் கடைசிக் கூட்டத் தொடர் என்பதால் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பற்றிய மதிப்பீடுகளையும் கூற  உறுப்பினர்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்படும். கூட்டத்  தொடரை அமைதியாக நடத்த எல்லா எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு அல்-கய்டா எச்சரிக்கை

al-qaeda-yazid.jpgபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்தியாவை பின் லேடன் தலைமை‌யிலான அல்-கய்டா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் ம‌ற்று‌ம் பாகிஸ்தானில் செயல்படும் அல்-கய்டா பயங்கரவாத அமைப்பின் முஸ்தஃபா அபு யாஸீத் இவ்வாறு விடுத்துள்ள எச்சரிக்கை அடங்கிய வீடியோவை பி.பி.சி. தொலைக்காட்சி வெளியிட்டது.

இந்த 20 நிமிட வீடியோவில் யாஸீத் அரபு மொழியில் கூறியது: “நாங்கள் முஸ்லிம் நாடுகள் எங்கும் உள்ள முஜாஹிதீனையும், தற்கொலைத் தாக்குதல் பயங்கரவாதிகளையும் உங்களை எதிர்கொள்ள அழைத்து வருவோம். உங்கள் பொருளாதார மையங்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி அவற்றை மண்ணோடு மண்ணாக்குவர்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அதில் அவர் கூறிய போது, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவை கொலை செய்ய அல்-கய்டா தலைவர் ஐமான் அல்-ஸவாஹிரி என்பவர் முடிவெடுத்தார் என்றார்.

பாகிஸ்தான் அரசு மற்றும் அதன் ராணுவத்திற்கு‌ம் யாஸீத் கடும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.

இந்த வீடியோ ஒளிபரப்பினால் பாகிஸ்தான் முன்பு வெ‌ளி‌யி‌ட்ட செய்தி ஒன்றும் பொய் என்று தெரியவந்துள்ளது. அதாவது தற்போது இந்த மிரட்டலை வெளியிட்டுள்ள அபு யாஸீத் என்பவர் 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று பாகிஸ்தான் வெளியுலகிற்கு அனுப்பிய செய்தி பொய்யாகியுள்ளது.

அல் – காய்தா மிரட்டலை சந்திக்க தயார் : ஏ.கே.அந்தோணி

மும்பையில் நடத்தப்பட்டதை போன்ற தாக்குதல் மீண்டும் நடத்தப்படும் என இந்தியாவுக்கு அல் – காய்தா மிரட்டல் விடுத்துள்ள நிலையில், எத்தகைய மிரட்டலையும் சந்திக்க இந்தியா தயாராக இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் மும்பையில் நடத்தப்பட்டதை போன்ற தாக்குதல் மீண்டும் நடத்தப்படும் என இந்தியாவுக்கு என இந்தியாவிற்கு ஆப்கானிஸ்தான் ம‌ற்று‌ம் பாகிஸ்தானில் செயல்படும் அல் – காய்தா பயங்கரவாத அமைப்பின் முஸ்தஃபா அபு யாஸீத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில்  செய்தியாளர்களை சந்தித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியிதம் இந்த மிரட்டல் குறித்து கேட்டபோது,” அல் – காய்தா அமைப்பு இந்தியாவுக்கு விடுத்துள்ள மிரட்டல் குறித்து நான் முழுமையாக பார்க்கவில்லை.இருப்பினும் எந்தப் பகுதியிலிருந்தும் நாட்டுக்கு விடுக்கப்படும் பாதுகாப்பு மிரட்டலை சந்திக்க இந்தியா சந்திக்க தயாராக இருப்பதாகவும், அதை சமாளிக்கும் திறமையும் நம்மிடம் உண்டு ” என்று பதிலளித்தார்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா.பாதுகாப்புச் சபையில் வரவிருந்த பிரேரணையை ரஷ்யா தடுத்தது

uno.gifஇலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் மெக்சிக்கோ கொண்டுவர இருந்த பிரேரணையினை ரஷ்யா தடுத்து நிறுத்தியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

இலங்கையின் தற்போதைய நிலமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் மெக்சிக்கோ கொண்டுவர இருந்த தீர்மானத்தை ரஷ்யா தடுத்து நிறுத்தியுள்ளது. இந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் உறுப்பினராக இணைந்துள்ள மெக்சிக்கோ கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இரகசிய கூட்டத்தில் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புசபைக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டுமென்ற திட்டத்தை முன்வைத்திருந்தது. எனினும் ரஷ்யா அதனை எதிர்த்ததுடன், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கூட்ட நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் இடம்பெறுவது தேவையற்றது எனவும் தெரிவித்திருந்ததாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, மெக்சிக்கோவின் தீர்மானம் அதிகாரபூர்வமற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதனால் அது அதிக முக்கியத்துவமற்றது. இலங்கை விவகாரம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நிகழ்ச்சி நிரலில் கொண்டு வரப்படுவதற்கு நீண்ட காலம் எடுக்குமென இலங்கை வெளிவிவகார அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியான ஜி.எஸ்.பலிகக்கரா மெக்சிக்கோ பிரதிநிதிகளை சந்தித்து இலங்கை நிலை தொடர்பாக விளக்குவார். எனவே, இந்த விவகாரம் பாதுகாப்புச் சபைக்கு வராது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கை விவகாரம் பாதுகாப்புச் சபைக்கு வருவதை ரஷ்யா மட்டும் எதிர்க்கவில்லை. பிரித்தானியாவும் எதிர்த்து நிற்பதாக சபையின் இந்த மாதத்தின் தலைவரான யுகியோ ரகாசு தெரிவித்தார். சூடானின் டாபர் பிராந்தியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளும், இலங்கையில் தோன்றியுள்ள பிரச்சினைகளும் ஒரே மாதிரியானையல்ல என பிரித்தானியாவின் தூதுவர் ஜோன் சாவெர் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வின்றேல் புதிய பிரபாகரன் உருவாகுவார்: அமைச்சர் திஸ்ஸ வித்தாரண

Minister Tissa Vitharanaதேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றை வைக்காவிட்டால் பிரபாகரன் அழிக்கப்பட்ட பின்னர் வேறொரு பிரபாகரன் உருவாகிவிடுவார் என சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், அமைச்சர் திஸ்ஸ வித்தாரண கூறினார்.  பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைப்பது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அரசாங்கத்தால் தயாரிக்கப்படும் தீர்வுத்திட்டமானது ஐக்கிய தேசியக் கட்சியின் இணக்கத்தையும் பெறுவது அவசியமானது. பிரதான இரண்டு கட்சிகளால் இணங்கப்படாத தீர்வுதிட்டமானது தமிழர்களாலும், சர்வதேச சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது” என அமைச்சர் கூறினார். அதேநேரம், ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் வித்தியாசமான கொள்கையையே கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், அனைத்துக் கட்சிகளும் இணைந்து இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான இணக்கப்பாடொன்றுக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகக் கூறினார்.

ஜனாதிபதிக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்குமிடையிலான இறுக்கமான உறவினால் இலங்கையும் செல்வந்த நாடாகும் – அமைச்சர் பௌஸி

ahm-fawze.jpgபல வருடங்களாக மன்னாரில் தேங்கிக் கிடந்த பெற்றோலிய வள ஆராய்ச்சிகள் ஜனாதிபதியின் நடவடிக்கை காரணமாக வெகு விரைவில் முன்னெடுக்கப்பட உள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பளை ஆண்டியா கடவத்தை என்ற இடத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

மத்திய கிழக்கு நாடுகளுக்கும் எமது ஜனாதிபதிக்கும் இடையே உள்ள இறுக்கமான உறவு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று ஆட்சியில் உள்ள அரசு முஸ்லிம்களுக்கு அதிக சேவை செய்கிறது. காரணம் அதிகளவு முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர். கிழக்கைப் போன்றே ஏனைய பகுதிகளுக்கும் பரவலாக சேவைகள் இடம்பெறுகின்றன. இதே அடிப்படையில் மத்திய மாகாணத்திற்கும் பாரிய சேவை நடைபெற ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்த வேண்டும்.

ஜனாதிபதிக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே காணப்படும் நெருக்கம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் எமக்கு உதவ முன்வந்துள்ளன. இதில் ஒரு அங்கமாகவே மன்னார் பகுதியில் பெற்றோலிய அகழ்வு நடவடிக்கைகளுக்கும் உதவ முன்வந்துள்ளன. இதன் காரணமாக நாமும் செல்வந்த நாடாக முடியும்.  பல வருடங்களாக மன்னார் பெற்றோலிய ஆராய்ச்சி தேங்கிக் கிடந்தன. ஜனாதிபதியின் முயற்சியும், மத்திய கிழக்கு நாடுகளின் ஒத்துழைப்பும் இன்று எமக்கு சாதகமாகியுள்ளன. எனவே, நாம் அனைவரும் ஜனாதிபதி தலைமையிலான ஐ.ம.சு.கூட்டணிக்கு வாக்களித்து அதனை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார்.

ஐ.தே.க.வுக்கு எதிரான பிரசாரங்களை அரச ஊடகங்கள் நிறுத்தவேண்டும்- கருஜயசூரியா

karu_jayasuriya.jpgஅரச அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக மேற்கொள்ளும் பிரசாரத்தை நிறுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவரும் எம்.பி.யுமான கருஜயசூரியா வலியுறுத்தியுள்ளார். கம்பளை நகரில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்யின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய இவர் மேலும் கூறியதாவது;

ஐக்கிய தேசியக்கட்சி நாட்டை துண்டாட ஒரு போதும் துணைபோகாது. இலங்கையின் 61 ஆவது சுதந்திர தினத்தை சுதந்திரமாகக் கொண்டாடும் வாய்ப்பு ஏற்பட்டது. இதற்குப் பின்னணியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பெரும் தியாகங்களைப் புரிந்துள்ளனர். தேர்தல் ஜனநாயகத்தின் பிரதான அடையாளம். மக்கள் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் வாக்களிப்பர். மக்களில் 51 சதவீதமானோர் ஆளும் கட்சிக்கு வாக்களிக்கும் போது அம்மக்களை மட்டுமன்றி, எஞ்சிய 49 சதவீத மக்களின் நலனிலும் அரசு அக்கறை செலுத்தவேண்டும்.

நாட்டில் இனிமேல் தேர்தல்கள் அவசியமில்லை. தலைவர்கள் தேவையில்லை என்று சில அரசியல்வாதிகள் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தனர். ஜனநாயக நாட்டில் எவரும் கருத்துகளைத் தெரிவிக்க முடியும். எனினும் மேற்படி கருத்து வேதனையளிக்கின்றது. நாடு 99 சதவீதம் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதியும் மீட்கப்படவேண்டும். நாடு யுத்தத்தில் பல உயிரிழப்புகளைக் கண்டுள்ளது. ஐக்கியதேசியக்கட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரத்திற்கு பதிலளிக்கும் வாய்ப்புகளை அரசு ஊடகங்கள் வழங்க வேண்டும். தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்படவும் அரசதுறைக்கு தகுதியானவர்கள் நியமனம் பெறவும் அரசியலமைப்பு சட்டத்தின் 17 ஆம் பிரிவு அமுல் செய்யப்படவேண்டும்.