2009

2009

புலிகள் ஆயுதங்களை கீழே வைக்காதவரை யுத்த நிறுத்தத்தை முன்னெடுப்பதில் அர்த்தமில்லை – போகொல்லாகம

rohitha-sir-john.jpgபுலிகள் ஆயுதங்களை கீழே வைக்காத நிலையில் யுத்த நிறுத்தமொன்றை முன்னெடுப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லையென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லா கம கூறினார். அப்பாவி தமிழ் மக்கள் புலிகளினால் பாதிக்கப்படுவதை நிறுத்துவதற்காகவே இலங்கையில் யுத்தம் இடை நிறுத்தப்பட வேண்டுமென இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளதே தவிர புலிகளுக்கு சார்பாக வல்ல எனவும் அமைச்சர் போகொல்லாகம சுட்டிக் காட்டியுள்ளார்.

வன்னியில் புலிகளின் பிடிக்குள் சிக்கியிருக்கும் பொதுமக்களை மீட்பதற்கு அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் மனிதாபிமான உதவிகளை முன்னெடுத்து வருகின்றன. பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் என்னுடன் தொலைபேசியினூடாக தொடர்புகொண்டு இலங்கை நிலைவரங்கள் தொடர்பாகக் கேட்டறிந்ததாகவும் கூறினார்.

மோதல்கள் இடம் பெற்று வரும் பகுதிகளில் 30 சதுர கிலோமீற்றர் நிலப் பரப்புக்குள்ளேயே பொது மக்கள் சிக்குண்டிருக்கிறார்கள். இவர்களை மீட்பதற்கு அரசாங்கம் பல்வேறு வழிகளிலும் முனைத்து வருகின்றது. இதேவேளை இராணுவ கட்டுப்பாடில்லாத பகுதிகளிலிருந்து தப்பிவந்த மக்கள் பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் அங்கிருக்கும் எமது அதிகாரிகளூடாக மேற்கொண்டு வருகின்றது. புலிகளின் பிடியில் சிக்குண்டுள்ள மக்களுக்கு உதவுவதற்கு எமக்கிருக்கும் ஒரே வழி கடல் மார்க்கம் மட்டுமே எனவும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.

இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் அகதிகளும் பூரண திருப்தியுடனும் சந்தோஷத்துடனுமே இருக்கிறார்கள். அண்மையில் வவுனியா முகாம்களை நேரில் சென்று பார்வையிட்ட ஐ.நா. பிரதிநிதி ஜோன் ஹோம்ஸ்சும் தனது திருப்தியை வெளியிட்டிருந்தார். அகதிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு முன்னெடுத்துள்ளது.  பொதுமக்களுக்கு புலிகளால் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதனால் அகதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கியிருக்கின்றோம் என்றும் அமைச்சர் கூறினார்.

ஜனாதிபதி, சார்க் வெளிவிவகார அமைச்சர்களை நேற்று முன்தினம் சந்தித்தவேளை கூடிய விரைவில் வடக்கே பாரிய அளவிலான மீள்குடியேற்றத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விருப்பதாக கூறியுள்ளார். அப் பகுதிகளில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றிய பின்னர் உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக் கொடுத்ததும் மீள்குடியேற்றத் திட்டம் அமுல்படுத்தப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

வடக்கில் நீண்ட மற்றும் குறுகியகால அடிப்படையில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மோதல்கள் இடம்பெற்று வருவதனால் அரசியல் ரீதியான தீர்வு கைவிடப்பட்டு விட்டதாக கருதுவது தவறு. சர்வகட்சி குழு இது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது எனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நேபாளம் பயணம்

mahinda.jpgஇரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நேபாளம் பயணமானார். நேபாளப் பிரதமர் புஷ்பகமல் தஹலின் அழைப்பை ஏற்றே ஜனாதிபதி இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கைக்கும், நேபாளத்திற்குமிடையிலான இருபக்க நல்லுறவுகள் குறித்து நேபாள ஜனாதிபதி கலாநிதி ராம்பாரன் யாதெவ், பிரதமர் புஷ்ப கமல் தஹல, வெளி விவகார அமைச்சர் உபேந்திர யாதெவ் உட்பட அந்நாட்டு அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த விருக்கிறார்.

ஜனாதிபதியின் இவ்விஜயத்தின் போது இலங்கைக்கும், நேபாளத்திற்குமிடையில் பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார மேம்பாட்டுக்குமான இரு பக்க உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன. இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி புத்தபிரானின் பிறந்த இடமான லும்பினிக்கும் விஜயம் செய்யவிருக்கிறார்.

ஈழப்பிரச்சினைக்கான போராட்டமா? திமுக ஆட்சிக்கெதிரான போராட்டமா-கருணாநிதி

karunanithi.jpgஉச்ச நீதிமன்றம் விசாரணைக் கமிட்டியை அமைத்துள்ள சூழ்நிலையில் வழக்கறிஞர்கள் பொறுமை காக்கக் கூடாதா என முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து வெளியிட்ட அறிக்கை : சென்னை உயர் நீதிமன்றத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அறப்போர் என்று வழக்கறிஞர்கள் தொடங்கினர். பிறகு நீதிமன்றத்துக்குள் சுப்பிரமணியன் சுவாமி மீது வழக்கறிஞர்கள் முட்டை வீசியதாக வழக்கு அந்த வழக்கின் விஸ்வரூபமாக காவல்துறை-வழக்கறிஞர்கள் மோதல் என வன்முறைகள் நடைபெற்று, இறுதியாக உச்ச நீதிமன்றம் வரை இப்பிரச்னை சென்றுள்ளது.

தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் உதறித் தள்ளிவிட்டது. சில காவல்துறை அதிகாரிகளை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சென்னையிலிருந்து வேறு ஊர்களுக்கு இந்த அரசு மாற்றிவிட்டது. உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் ஸ்ரீகிருஸ்ணா தலைமையில் விசாரணைக் கமிட்டியையும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்த கமிட்டியின் முடிவை எதிர்பார்த்து அரசு காத்திருக்கிறது. வழக்கறிஞர்கள் மட்டும் பொறுமை காட்டலாகாதா? குறிப்பிடப்படும் இழப்பீடு தருவதற்கும், அதனை இருசாராரும் பெறுவதற்கும் அரசு தொகையும் ஒதுக்குகிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளையெல்லாம் செயல்படுத்த அரசு தயாராக உள்ளது.

அதேபோல் உச்ச நீதிமன்ற கருத்தை ஏற்று வழக்கறிஞர்கள் அனைவரும் மார்ச் 2-ம் தேதி நீதி மன்றங்களுக்கு செல்வதுதானே முறையாகும். இல்லையெனில், இது இலங்கைத் தமிழர் பிரச்னைக்கான போராட்டமல்ல இங்குள்ள தி.மு.க. ஆட்சிக்கு எதிரான போராட்டம் என்றுதான் உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது என கருணாநிதி கூறியுள்ளார்.

ஏ-9 வீதி இன்று திறப்பு

uthaya_nanayakara_.jpgயாழ்ப்பாணம்- கண்டி ஏ-9 வீதி இன்று (02) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவிருப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார். 24 வருடங்களின் பின்னர் பாதுகாப்பு படையினரின் போக்குவரத்துக்காகவும், விநியோக நடவடிக்கைகளுக்காகவும் இப்பாதை இன்று திறக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் குறிப்பிடுகையில், 1985ம் ஆண்டுக்குப் பின்னர் ஏ-9 வீதியை பாதுகாப்பு படையினர் மீண்டும் பயன்படுத்த ஆரம்பிப்பது இதுவே முதல் தடவையாகும்.

பாதுகாப்பு படையினரின் மனிதாபிமான நடவடிக்கைகள் மூலம் ஏ-9 வீதியிலுள்ள பிரதான நகரங்களான பரந்தன், கிளி நொச்சி, ஆனையிறவு என் பன புலிகளின் பிடியிலிருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்டன.

இதன் பயனாக ஏ-9 தரைவழியைத் திறந்து விடக்கூடிய வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிறது.

பாதுகாப்பு படையினரின் தரைவழி போக்குவரத்து மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்காக இப்பாதை முதலில் திறக்கப்படுகின்ற போதிலும் இப்பாதைக்கு அருகிலுள்ள சில பிரதேசங்களில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும் பணிகள் பூர்த்தியானதும் பொது மக்கள் போக்குவரத்துக்காகவும் இப்பாதை திறந்துவிடப்படும்.

2002ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை மூலம் ஏ-9 வீதி பொது மக்கள் போக்குவரத்துக்காக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே திறக்கப்பட்டது. பொது மக்கள் புலிகளுக்கு வரி என்ற போர்வையில் கப்பம் செலுத்தி மிகுந்த சிரமங்களுடனேயே இப்பாதை வழியாக பயணிக்க இடமளிக்கப்பட்டனர். இச்சமயம் பாதுகாப்பு படையினர் இப்பாதையைப் பயன்படுத்தவில்லை.

பாதுகாப்பு படையினர் ஆகாய மற்றும் கடல் வழியாகவே யாழ். குடாநாட்டுக்கான போக்குவரத்து மற்றும் விநியோக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இப்பாதை திறக்கப்படுவதன் மூலம் பாதுகாப்பு படையினர் பெரிதும் நன்மை பெறுவது போல யாழ்ப்பாணம் உட்பட முழு நாட்டு மக்களும் நன்மை அடைவர். இப்பாதை திறக்கப்படுவதன் மூலம் பொருளாதாரத்துறை பெரிதும் மேம்பாடு அடையும்.

இப்பாதையை உத்தியோகபூர்வமாகத் திறக்கும் வகையில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி ஒரு இராணுவ குழுவினரும், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி மற்றொரு இராணுவகுழுவும் இன்று பயணத்தை முதலில் ஆரம்பிக்கும் என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியை பூண்டோடு அழிக்க முற்படும் அரசின் சதித்திட்டம் ஒருபோதும் நிறைவேறாது – ரணில் விக்கிரமசிங்க

ranil.jpgஐக்கிய தேசியக் கட்சியை பூண்டோடு அழித்தொழிக்கும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து இருப்பதாகத்தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அந்த சதித்திட்டம் வெற்றி பெறுவதற்கு தான் ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லையெனவும் எந்தச்சக்தியாலும் ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்கமுடியாதெனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நாட்டில் நல்லாட்சியொன்று நடைபெறுவதைக் காண முடியவில்லையென்றும் அதிகாரத்தில் நிலைப்பதற்காக ராஜபக்ஷ அரசு யுத்தத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பிரதான எதிர்க்கட்சிகளையும் சாடுவதையுமே ஆயுதங்களாகப் பயன்படுத்தி வருகின்றது எனவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக் காட்டியுள்ளார்.

காலி மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சி புதிய கட்டிடத்தை சனிக்கிழமை திறந்து வைத்த பின்னர் அங்கு இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித்தலைவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில் கூறியதாவது;

“நாட்டில் இன்று உருவாகியிருக்கும் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் எந்தவிதமான தீர்வும் இல்லாமையால் 108 பேரைக் கொண்ட முழு அமைச்சரவையும் யுத்தத்தைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலைமை இவ்வாறே நீடித்துக் கொண்டுபோகுமானால் நாடு பாரிய பின்னடைவை நோக்கியே பின் தள்ளப்படும். நாடு இன்று முற்று முழுதான பொருளாதார சீரழிவுக்குள் தள்ளப்பட்டுள்ளது.

படைத்தரப்பினர் கிளிநொச்சியை, முல்லைத்தீவை தம்வசப்படுத்தியதன் மூலம் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. படையினர் தமது கடமையை நிறைவேற்றியுள்ளனர். இதற்காக நாம் அவர்களை பாராட்டுகின்றோம். நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம்.

யுத்தம் முடிந்துவிட்டபோதிலும் நாடு எதிர்கொண்டிருக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய திட்டங்கள் அரசிடம் காணப்படவில்லை. இந்தச் சவாலை எதிர்கொள்ளக் கூடிய சக்தியோ, திட்டங்களோ அரசாங்கத்திடம் இல்லை. இந்த அரசிடம் நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய பொருளாதார அபிவிருத்தித் திட்டம் எதனையும் காணக்கூடியதாக இல்லை.

எந்தவொரு கெரில்லா யுத்தத்தின் போதும் தீவிரவாத அமைப்புகள் ஒரு விடயத்தை தெரிந்து வைத்துள்ளன. ஏற்றுக் கொண்டுள்ளன. அது தான் “நாம் அரசாங்கத்தைப்போன்று பலம் கொண்டவர்கள் அல்ல. அதேபோன்று, அரசைப் போன்று அதிகாரம் கொண்டவர்களுமல்ல, எமது ஒரே நோக்கம் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவதாகும். அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் அரசைப் பலவீனப்படுத்தி நாட்டை ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளிவிடுவதே ஆகும்’

30 வருடகாலயுத்தம் காரணமாக நாடு பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டது. இவற்றினூடாக நாடு அரசியல் ரீதியில் பலவீனப்பட்டுப் போயுள்ளது. நாட்டில் இன்று நல்லாட்சியொன்று நடைபெறவில்லை. நல்லாட்சி இடம்பெறாத நாடு தோல்வியடைந்த நாடாகவே காணப்படும். அந்த நிலைக்கே இன்று எமது நாடும் தள்ளப்பட்டுள்ளது.

எமது நாட்டில் இன்று பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் மட்டும் நடக்கவில்லை. பொருளாதார யுத்தம் முழுநாட்டையும் ஆட்சிகொண்டுள்ளது. அரசாங்கத்திடம் சீரான பொருளாதாரக் கொள்கையே, திட்டமோ காணப்படாமையே இதற்கான பிரதான காரணமாகும்.

அரசாங்கத்தின் 108 போரைக் கொண்ட பாரிய அமைச்சரவையிலிருக்கும் சகல அமைச்சர்களும் ஆளும் தரப்பு எம்.பி.க்களும் கூட தமக்குரிய விடயம் தொடர்பில் பேசவில்லை. அவர்களால் பேசவும் முடியாது. அவர்கள் எல்லோருமே யுத்தம் என்ற மந்திரத்தையே ஜெபித்துக்கொண்டிருக்கின்றனர். எந்தவொரு அமைச்சரும் தமது அமைச்சுடன் தொடர்புபட்ட விடயங்களைப்பற்றி பேசுவதில்லை.

எமது நாட்டில் ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அராஜகம் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கின்றது. இந்த அராஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நாட்டு மக்கள் ஒன்றுபடமுன்வராவிட்டால் உலகின் மோசமான நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னணிக்கு வந்துவிடும். அதன்பின்னர் நாட்டை பேரழிவிலிருந்து மீட்டெடுப்பது கஷ்டமான காரியமாகிவிடும். மக்கள் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வுகாணத் தவறினால் அதன் விளைவுகள் பாரதூரமானதாகவே அமையும். அதன் பிரதிபலிப்பு உடனடியாகத் தெரியாதுபோனாலும் காலம் கடந்த பின்னர் முழுநாடுமே கைசேதப்படும் நிலை உருவாகும்.

மகிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் தலைவருமே பெரும் பிரச்சினையாகவுள்ளது. அதனால்தான் ஐக்கிய தேசியக் கட்சியை அழித்தொழிக்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளார். எம்மோடுள்ள சிலரும் அதற்குத் துணைபோய்க்கொண்டிருக்கின்றனர். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியை அழிப்பதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. எனது உயிரைப்பணயம் வைத்தேனும் கட்சியையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பேன். நாட்டை சர்வாதிகாரத்தின் பக்கம் இட்டுச்செல்ல நாம் இடமளிக்கக் கூடாது. இந்த விடயத்தில் ஜனநாயகத்தின் மீது பற்றுக்கொண்ட அனைவரும் ஒன்றுபடவேண்டும்’ என்று ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஐ.நா. மனித உரிமை அமர்வு இன்று ஜெனீவாவில் ஆரம்பம் இலங்கையின் உண்மை நிலைவரம் குறித்து அமைச்சர் மஹிந்த சமரசிங்க விளக்குவார்

mahinda_samarasinghe.jpgஇடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு அரசாங்கம் வழங்கி வரும் உதவிகள் குறித்தும் அந்த மக்களின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற நாட்டு பிரதிநிதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க விளக்கமளிக்க உள்ளதாக அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை அமர்வு இன்று (02) ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. இந்தஅமர்வில் கலந்து கொள்வதற்காக அனர்த்த முகாமைத்துவ சேவை மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான உயர்மட்ட குழு நேற்று முன்தினம் இரவு ஜெனீவா பயணமானது.

மேற்படி அமர்வு எதிர்வரும் 27ஆம் திகதி வரை நடைபெற உள்ளதோடு மோதல் காரணமாக இடம் பெயர்ந்துள்ள மக்கள் குறித்தும் இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் அமைச்சர் இங்கு விளக்கமளிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா ஆகிய நாட்டு ஐ. நா. மனித உரிமை பேரவை பிரதிநிதிகளை தனித்தனியாக சந்தித்துப் பேசவுள்ளார்.

வடக்கில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கை காரணமாக அப்பகுதி மக்கள் உணவு மற்றும் தங்குமிட வசதி மற்றும் சுகாதார வசதிகளின்றி கஷ்டப்படுவதாகவும் சில தரப்பினர் சர்வதேச மட்டத்தில் தவறான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் இது தொடர்பான உண்மை நிலைமைகளை அமைச்சர் இங்கு எடுத்துரைப்பார் எனவும் அமைச்சு உயரதிகாரி குறிப்பிட்டார்.

மனித உரிமை கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு அனுப்பும் யோசனை இங்கு முன்வைக்கப்பட்டால் அதனை இலங்கை ஆட்சேபிக்கும் என்றும் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு அதிகாரி மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் அமைச்சின் செயலாளர் ரஜீவ விஜேசிங்க, சட்டமாஅதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோரும் ஜெனீவா சென்றுள்ளனர்.

தேர்தல் திகதி எக்காரணம் கொண்டும் மாற்றப்படாது – மேலதிக தேர்தல் ஆணையாளர்

sri-lanka-election-01.jpgஏப்ரல் 25ம் திகதியே மேல் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும். எக்காரணம் கொண்டும் தேர்தல் திகதி மாற்றப்படாது என மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமனசிரி நேற்று தெரிவித்தார்.

தேர்தல் திகதியை மாற்றுமாறு ஐ. தே. க., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடங்களான பல எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையாளரை கோரியுள்ளன. இது குறித்து வினவிய போதே மேலதிக ஆணையாளர் மேற்கண்வாறு கூறினார்.

சகல விடயங்களையும் ஆராய்ந்த பின்னரே தேர்தல் ஆணையாளர் தேர்தல் தினத்தை முடிவு செய்துள்ளார். தமிழ்- சிங்கள புதுவருடம் மற்றும் விசேட தினங்கள் குறித்து ஆராய்ந்த பின் பொருத்தமான திகதியை தேர்தல் ஆணையாளர் முடிவு செய்ததாகவும் மேலதிக தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்.

வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படும் இறுதி திகதியில் இருந்து 5 வாரங்களுக்கும் 8 வாரங்களுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தேர்தல் திகதி அறிவி க்கப்பட வேண்டும். தேர்தல் சட்ட விதிகளின் படியே திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றம் செய்யும் திட்டமெதுவும் கிடையாது எனவும் அவர் கூறினார்.

தீவிரவாதத்துக்கு எதிராக தேசிய அளவில் பிரசாரம் அவசியம் – அப்துல் கலாம்

abdhulkalam.jpgதீவிர வாதத்துக்கு எதிராக தேசிய அளவில் அனைவரும் ஒன்றிணைந்து பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தெரிவித்தார். மங்களூரில் பள்ளி மாணவர்களிடையே நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலாம் கலந்து கொண்டார். அப்போது “நானும் எனது இந்தியாவும்” என்ற தலைப்பில் கலாம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது :

தீவிரவாதம் நமது நாட்டுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அதை வேருடன் அழிக்க வேண்டும். இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும். அப்போது மட்டுமே தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க முடியும். தீவிரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து தேசிய அளவில் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும். தீவிரவாதம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். தீவிரவாதத்தில் சில இளைஞர்கள் ஈடுபட வறுமை, வேலையின்மையும் ஒரு காரணமாகும். அதே நேரத்தில் குறிப்பிட்ட சில நாடுகள் அரசியல் நோக்கத்தோடு தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றன.

இதைக் கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை தீவிரவாதத்துக்கு எதிராக தனிப்படையை ஏற்படுத்த வேண்டும். எங்கு தீவிரவாதம் தலைதூக்கினாலும் அங்கு ஐ.நா. சபை அனுப்பிவைக்கப்பட்டு தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக ஆக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள். இதற்கு இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அப்போது மட்டுமே இந்த இலக்கை அடைய முடியும். விவசாயம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், அடிப்படைக் கட்டமைப்பு பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார் கலாம்.

மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்குமாறு வேண்டுகோள்

நீர்த்தேக் கங்களில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சு பொதுமக்களிடம் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது. நீரேந்து பகுதிகளில் வறட்சியான காலநிலை காணப்படுவதன் காரணமாக அங்கு நீர்மட்டம் பெருமளவு குறைந்துள்ளதோடு நீர்மின் உற்பத்தியும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது.

எனவே மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்குமாறும் தேவையில்லாத மின் குமிழ்கள் மற்றும் மின்சார உபகரணங்களை அனைத்து வைக்குமாறும் பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர். நீர்மின் உற்பத்தி குறைந்துள்ளதால் எரிபொருள் மூலம் கூடுதலாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் இதற்கு அதிக செலவு ஏற்படுவதாகவும் அறிவிக்கப்படுகிறது.

கடந்த 2 மாதங்களாக நீரேந்து பகுதிகளில் வறட்சியான காலநிலை காணப்படுவதோடு இந்நிலை இம்மாத பிற்பகுதி வரை தொடரும் என காலநிலை அவதான நிலையம் கூறியது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வறட்சியான காலநிலை காணப்படுவதோடு இந்த மாத நடுப் பகுதியில் மழையை எதிர்பார்க்க முடியும் எனவும் அவதான நிலையம் தெரிவித்தது.

காயமடைந்த 52 பேர் வவுனியா ஆஸ்பத்திரியில்

vanni-injured.gifவன்னியி லிருந்து படுகாயமடைந்த நிலையில் கப்பல் மூலம் திருகோணமலை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டவர்களில் 52 பேர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  11 அம்புலன்ஸ்களில் இவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சுகமாகும் நோயாளர்கள் நலன்புரிநிலையங்களில் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது. எக்காரணம் கொண்டும் வெளியே தங்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களை வவுனியாவில் உள்ள உறவினர்கள் பொறுப்பேற்றால் அனுமதிக்கப்படுவர். எவரும் இல்லாதவர்கள் முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.