ஐக்கிய தேசியக் கட்சியை பூண்டோடு அழித்தொழிக்கும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து இருப்பதாகத்தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அந்த சதித்திட்டம் வெற்றி பெறுவதற்கு தான் ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லையெனவும் எந்தச்சக்தியாலும் ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்கமுடியாதெனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நாட்டில் நல்லாட்சியொன்று நடைபெறுவதைக் காண முடியவில்லையென்றும் அதிகாரத்தில் நிலைப்பதற்காக ராஜபக்ஷ அரசு யுத்தத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பிரதான எதிர்க்கட்சிகளையும் சாடுவதையுமே ஆயுதங்களாகப் பயன்படுத்தி வருகின்றது எனவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக் காட்டியுள்ளார்.
காலி மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சி புதிய கட்டிடத்தை சனிக்கிழமை திறந்து வைத்த பின்னர் அங்கு இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித்தலைவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில் கூறியதாவது;
“நாட்டில் இன்று உருவாகியிருக்கும் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் எந்தவிதமான தீர்வும் இல்லாமையால் 108 பேரைக் கொண்ட முழு அமைச்சரவையும் யுத்தத்தைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலைமை இவ்வாறே நீடித்துக் கொண்டுபோகுமானால் நாடு பாரிய பின்னடைவை நோக்கியே பின் தள்ளப்படும். நாடு இன்று முற்று முழுதான பொருளாதார சீரழிவுக்குள் தள்ளப்பட்டுள்ளது.
படைத்தரப்பினர் கிளிநொச்சியை, முல்லைத்தீவை தம்வசப்படுத்தியதன் மூலம் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. படையினர் தமது கடமையை நிறைவேற்றியுள்ளனர். இதற்காக நாம் அவர்களை பாராட்டுகின்றோம். நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம்.
யுத்தம் முடிந்துவிட்டபோதிலும் நாடு எதிர்கொண்டிருக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய திட்டங்கள் அரசிடம் காணப்படவில்லை. இந்தச் சவாலை எதிர்கொள்ளக் கூடிய சக்தியோ, திட்டங்களோ அரசாங்கத்திடம் இல்லை. இந்த அரசிடம் நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய பொருளாதார அபிவிருத்தித் திட்டம் எதனையும் காணக்கூடியதாக இல்லை.
எந்தவொரு கெரில்லா யுத்தத்தின் போதும் தீவிரவாத அமைப்புகள் ஒரு விடயத்தை தெரிந்து வைத்துள்ளன. ஏற்றுக் கொண்டுள்ளன. அது தான் “நாம் அரசாங்கத்தைப்போன்று பலம் கொண்டவர்கள் அல்ல. அதேபோன்று, அரசைப் போன்று அதிகாரம் கொண்டவர்களுமல்ல, எமது ஒரே நோக்கம் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவதாகும். அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் அரசைப் பலவீனப்படுத்தி நாட்டை ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளிவிடுவதே ஆகும்’
30 வருடகாலயுத்தம் காரணமாக நாடு பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டது. இவற்றினூடாக நாடு அரசியல் ரீதியில் பலவீனப்பட்டுப் போயுள்ளது. நாட்டில் இன்று நல்லாட்சியொன்று நடைபெறவில்லை. நல்லாட்சி இடம்பெறாத நாடு தோல்வியடைந்த நாடாகவே காணப்படும். அந்த நிலைக்கே இன்று எமது நாடும் தள்ளப்பட்டுள்ளது.
எமது நாட்டில் இன்று பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் மட்டும் நடக்கவில்லை. பொருளாதார யுத்தம் முழுநாட்டையும் ஆட்சிகொண்டுள்ளது. அரசாங்கத்திடம் சீரான பொருளாதாரக் கொள்கையே, திட்டமோ காணப்படாமையே இதற்கான பிரதான காரணமாகும்.
அரசாங்கத்தின் 108 போரைக் கொண்ட பாரிய அமைச்சரவையிலிருக்கும் சகல அமைச்சர்களும் ஆளும் தரப்பு எம்.பி.க்களும் கூட தமக்குரிய விடயம் தொடர்பில் பேசவில்லை. அவர்களால் பேசவும் முடியாது. அவர்கள் எல்லோருமே யுத்தம் என்ற மந்திரத்தையே ஜெபித்துக்கொண்டிருக்கின்றனர். எந்தவொரு அமைச்சரும் தமது அமைச்சுடன் தொடர்புபட்ட விடயங்களைப்பற்றி பேசுவதில்லை.
எமது நாட்டில் ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அராஜகம் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கின்றது. இந்த அராஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நாட்டு மக்கள் ஒன்றுபடமுன்வராவிட்டால் உலகின் மோசமான நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னணிக்கு வந்துவிடும். அதன்பின்னர் நாட்டை பேரழிவிலிருந்து மீட்டெடுப்பது கஷ்டமான காரியமாகிவிடும். மக்கள் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வுகாணத் தவறினால் அதன் விளைவுகள் பாரதூரமானதாகவே அமையும். அதன் பிரதிபலிப்பு உடனடியாகத் தெரியாதுபோனாலும் காலம் கடந்த பின்னர் முழுநாடுமே கைசேதப்படும் நிலை உருவாகும்.
மகிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் தலைவருமே பெரும் பிரச்சினையாகவுள்ளது. அதனால்தான் ஐக்கிய தேசியக் கட்சியை அழித்தொழிக்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளார். எம்மோடுள்ள சிலரும் அதற்குத் துணைபோய்க்கொண்டிருக்கின்றனர். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியை அழிப்பதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. எனது உயிரைப்பணயம் வைத்தேனும் கட்சியையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பேன். நாட்டை சர்வாதிகாரத்தின் பக்கம் இட்டுச்செல்ல நாம் இடமளிக்கக் கூடாது. இந்த விடயத்தில் ஜனநாயகத்தின் மீது பற்றுக்கொண்ட அனைவரும் ஒன்றுபடவேண்டும்’ என்று ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.