நீர்த்தேக் கங்களில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சு பொதுமக்களிடம் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது. நீரேந்து பகுதிகளில் வறட்சியான காலநிலை காணப்படுவதன் காரணமாக அங்கு நீர்மட்டம் பெருமளவு குறைந்துள்ளதோடு நீர்மின் உற்பத்தியும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது.
எனவே மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்குமாறும் தேவையில்லாத மின் குமிழ்கள் மற்றும் மின்சார உபகரணங்களை அனைத்து வைக்குமாறும் பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர். நீர்மின் உற்பத்தி குறைந்துள்ளதால் எரிபொருள் மூலம் கூடுதலாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் இதற்கு அதிக செலவு ஏற்படுவதாகவும் அறிவிக்கப்படுகிறது.
கடந்த 2 மாதங்களாக நீரேந்து பகுதிகளில் வறட்சியான காலநிலை காணப்படுவதோடு இந்நிலை இம்மாத பிற்பகுதி வரை தொடரும் என காலநிலை அவதான நிலையம் கூறியது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வறட்சியான காலநிலை காணப்படுவதோடு இந்த மாத நடுப் பகுதியில் மழையை எதிர்பார்க்க முடியும் எனவும் அவதான நிலையம் தெரிவித்தது.