2009

2009

புதுக்குடியிருப்பு பகுதிகளில் கடும் மோதல்; புலிகளின் பாரிய மண்அணை படை வசம்

srilanka_army1.jpg முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதிகளில் படையினருக்கும், புலிகளுக்குமிடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

கரியமுல்லைவாய்க்கால் பகுதியில் புலிகளின் மண்ணனையொன்றைப் படையினர் கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். புலிகளிடமுள்ள மிகச் சிறிய பகுதியையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் 53, 57, 58ஆம் படைப்பிரிவின் இரண்டாம் தாக்குதல் படையணியுடனான மோதலில் புலிகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இராணு வத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பேச்சாளர் தெரிவித்தார். பின்னர் படையினர் நடத்திய தேடுதலின்போது புலிகளின் ஆறு சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் இதில் மூன்று சடலங்கள் பழுதடைந்திருந்ததாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேநேரம், பல ஆயுதங்களையும் படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இதேவேளை வன்னியில் மோதல்கள் இடம்பெறும் பகுதிகளிலிருந்து 381 பொதுமக்கள் நேற்று முன்தினம் மாலை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

சாளைப் பகுதிக்கு ஆறுபேரும், புதுக்குடியிருப்புக்கு 340 பேரும், முல்லைத்தீவுக்கு 35 பேரும் வந்துசேர்ந்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர்  தெரிவித்தார். அவ்வாறு தப்பி வந்தபோது பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்ததாகவும், இரண்டு ஆண்கள் காயமடைந்திருப்பதாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.

நேட்டோ படைகளின் 12 வாகனங்கள் தலிபான்களால் நேற்று தாக்கி அழிப்பு

நேட்டோ படைகளின் 12 ட்டிரக் வண்டிகள் பாகிஸ்தானில் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானிலுள்ள படைகளுக்கான விநியோகப் பணிகளில் ஈடுபட்டிருந்த ட்டிரக் வண்டிகள் மீதே தலிபான்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆப்கான் எல்லைகளிலுள்ள வெளிநாட்டு படைகளுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும் போதே வடமேற்கு நகரான பெசாவார் என்ற இடத்தில் வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆயினும், தாக்குதலுக்கு இலக்கான 12 வாகனங்களும் எரிந்து சாம்பலாகியதாக பொலிஸார் மேலும் கூறினர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தத் தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வன்மையாகக் கண்டித்துள்ளதோடு, “பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை ஒழிக்க அந்த நாட்டு அரசு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்” எனக் கேட்டுள்ளார். பாகிஸ்தானில் சட்டம் ஒழுங்கு சில பகுதிகளில் சீரழிந்து கிடக்கிறது. என்றாலும் இந்தத் தாக்குதலையடுத்து மேற்படி எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் தேடுதல் நடத்தினரென ஏ. எப். பி. செய்தி ஸ்தாபனம் அறிவித்தது.

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிகளில் தொகுதிப் பங்கீடு அறிவிப்பு

karunanidhi_sonia.jpg எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம் 21 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்ளிட்ட 16 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டு இடங்களிலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடத்திலும் போட்டியிடும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு பதியுதீன் மஹ்மூத் காலம் முதல் இன்று வரை அரசாங்கம் பாரிய பங்களிப்பு – கல்வி அமைச்சர் சுசில்

முஸ்லிம்களது கல்வி வளர்ச்சிக்கு முன்னாள் கல்வி அமைச்சர் பதியுத்தீன் மஹ்மூத் காலத்திலிருந்து தற்போது வரை அரசாங்கம் பாரிய பங்களிப்பைச் செய்து வருகிறதென கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். கொழும்பு நவரோதய மண்டபத்தில் நடைபெற்ற முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் 39வது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் என். எம். அமீன் கொழும்பு மாவட்டத்தில் உள்ள (23) முஸ்லிம் பாடசாலைகள் பிரச்சினைகள் பற்றி இங்கு உரையாற்றினார். ஆனால் அவர் தமிழ் மொழி மூலம் உள்ள றோயல், டி. எஸ்., இசிப்பத்தன போன்ற பாடசாலைகளது கல்வி வளர்ச்சியைப் பற்றி இங்கு பேசவில்லை.

மட்டக்குளியில் உள்ள சிங்கள மொழி மூலமான பாடசாலையில் கடந்த ஆண்டு க. பொ. த. (சா.த.) பரீட்சை எடுத்த எந்தவொரு மாணவரும் க. பொ. த. (உ.த.) கற்பதற்கு தகுதி பெறவில்லை. கொழும்பு மத்தியில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் சகல பாடசாலைகளது கல்வி முன்னேற்றம் இந்த நிலையில்தான் உள்ளது. இருபது வருடங்களுக்குப் பிறகு மெளலவி ஆசிரியர் பரீட்சை நடத்தியுள்ளோம். அந்நியமனமும் மிக விரைவில் வழங்கப்படும்.

காலஞ்சென்ற கல்வி அமைச்சர் ரிச்சர்ட் பத்திரனவின் முயற்சியில்தான் முஸ்லிம் பெண்களுக்காக அளுத்கம கல்விக் கல்லூரி திறந்து வைக்கப்பட்டது. கண்டியில் தேசிய பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். மாத்தளை ஸாஹிராவுக்கு 40 பேர்ச் காணி எடுத்துக் கொடுத்துள்ளோம்.

இலங்கை அகதி முகாம்களில் இடமில்லை: ஐரோப்பிய மனிதாபிமான உதவி அமைப்பு

mullairefugees.gifஇலங்கையில் போர் பகுதியிலிருந்து வெளியேறி வரும் பொதுமக்களைத் தங்கவைக்க வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் அளவுக்கு அதிகமான மக்கள் தங்கியிருப்பதாக எகோ எனப்படும் ஐரோப்பிய கமிஷனின் மனிதாபிமான உதவி அமைப்பு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் எகோ குழு வவுனியா முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டுத் திரும்பியுள்ளது. அந்த மக்களுக்கு எகோ சார்பில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுபற்றி புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எகோ குழுவின் ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்கப் பிரிவுத் தலைவர் எஸ்கோ கென்சின்ஸ்கி அவர்கள், இலங்கையில் மனிதாபிமான நிலைமை கவலைப்படும் வகையில் இருப்பதாகவும், இதில் சர்வதேச நாடுகளின் பங்களிப்பு இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சோதனைச் சாவடிகளில் பொதுமக்களைப் பரிசோதனை செய்யும் நடைமுறைகளில் சர்வதேச அமைப்புக்களையும் அனுமதிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்

மட்டக்களப்பு கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகளின் மாநாடு 1000 பேர் பங்கேற்பு; புதிய அணுகுமுறை குறித்து ஆராய்வு

கிராம அபிவிருத்திச் சங்கங்களின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய மாநாடு நேற்று மட்டக்களப்பு சென்மைக்கல் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட இம்மாநாட்டை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

கிழக்கின் பேண்தகு அபிவிருத்தியினை நோக்கி கிராமிய அபிவிருத்தியின் தந்திரோபாயங்களை ஆராயும் இலக்குடன் இம்மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டில், கிழக்கு மாகாண அமைச்சர்களான துரையப்பா நவரத்தினராஜா, எம். எஸ். உதுமாலெ வ்வை, கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் திருமதி ராமச்சந்திரன் பலரும் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 577 கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

புல்மோட்டைக்கு அழைத்துவரப்பட்டோரில் 188 பேர் பதவியா வைத்தியசாலையில்

navy.jpgமுல்லைத் தீவிலிருந்து கடல்மார்க்கமாக வியாழக்கிழமை புல்மோட்டைக்கு கூட்டிவரப்பட்ட 488 பொதுமக்களில் 188 பேர் பதவியா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இவர்களில் 76 பேர் நோயாளர்கள் (பெரியவர்களில் 32 பேர் ஆண்கள், 07 பெண்கள், சிறுவர் 8, சிறுமியர் 5) மற்றும் உதவியாளர்களாக வந்தவர்கள் 112 (பெரியவர்களில் 26 ஆண், 36 பெண், சிறுவர் 23, சிறுமியர் 28) வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களுக்கு 200 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர். புல்மோட்டை கள வைத்தியசாலையில் 129 பேருக்கு சிகிச்சை அழிக்கப்பட்டது.

தற்போது புல்மோட்டை கள வைத்தியசாலையில் தற்போது 100 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 47 பேர் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளர்கள் ஆவர். அவர்களில் பெரியவர்கள் 37 (ஆண்13, பெண்24) சிறார்கள் 10 (ஆண் 7, பெண் 3) உதவியாளர்கள் 53 பேர் (பெரியவர்களில் 10 ஆண்கள், 22 பெண்கள், சிறார்கள் 12, சிறுமியர் 10)

முல்லைத்தீவிலிருந்து கப்பல் மூலம் இன்னொரு தொகுதி நோயாளர்கள் இன்று சனிக்கிழமை மாலை புல்மோட்டைக்கு அழைத்து வரப்படவிருப்பதாக மாகாண சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

அன்னமலை சு.க அலுவலக தாக்குதலில் இருவர் பலி

சவளக்கடை அன்னமலை பிரதேசத்திலிருந்த சு. கட்சி அலுவலகம் மீது கடந்த வியாழன் இரவு இனந் தெரியாத ஆயுதக் குழுவினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் அலுவலகத்திலிருந்த இருவர் உயிரிழந்துள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர். முகுந்தன் (சதீஸ்), ஜீவராஜ் ஆகிய இருவருமே உயிரிழந்த உறுப்பினர்களாவர்.

இரவு 7.45 மணியளவில் திடீரென கைக்குண்டுத் தாக்குதல்களும், துப்பாக்கி வேட்டுச் சத்தங்களும் சரமாரியாகக் கேட்டுள்ளது. உடன் ஸ்தலத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினரும், சவளக்கடை பொலிஸாரும் அலுவலகத்திலிருந்து இரு சடலங்களை மீட்டுள்ளனர்.

இலங்கை தமிழ் மக்களின் இன்னல் தீர தமிழக இந்துத் துறவியர் பேரவையின் சார்பாக உண்ணாவிரத போராட்டம்

hindu.pngஇலங்கை தமிழ் மக்களின் இன்னல் தீர தமிழக இந்துத் துறவியர் பேரவையின் சார்பாக சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு எதிரே நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

பல்வேறு தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் போராடி பலனில்லாததால் தடைகளை களைந்து விடை காண தமிழக துறவியர் பேரவியின் சார்பில் இந்த அடையாள உண்ணா நிலை அறப்போராட்டம் நடைபெற்று வருவதாக இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்தி வரும் தமிழக இந்து துறவியர் பேரவையின் அமைப்பாளர் சுவாமி ஸ்தாசிவானந்தா தெரிவித்தார். இந்த போராட்டத்தில் திரளான இந்து துறவிகள் பங்கேற்றனர். உண்ணாவிரதத்தின் முடிவில் இலங்கைக்கு செல்லும் தூதுக்குழுவில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து தீர்மானம் இயற்றப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி பார்வையற்ற இளைஞர்கள் பாதயாத்திரை

இலங்கையில் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தும் பதாதைகளுடன் நான்கு பார்வையற்ற இளைஞர்கள் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை பாதயாத்திரை மேற்கொள்கின்றனர்.  சென்னையைச் சேர்ந்த கே.வீரப்பன் (வயது 34), என்.மாரிசாமி (வயது 36), எஸ்.ஆறுமுகம் (வயது 40) மற்றும் எம்.சக்திவேல் (வயது 34) ஆகிய நால்வருமே சுடும் வெயிலில் அதிவேக வாகன போக்குவரத்துடைய சாலைகளினூடாக பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

சென்னையிலுள்ள மரீனா கடற்கரையிலிருந்து கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இவர்களின் பாதயாத்திரை திட்டமிட்டவாறு மார்ச் 28 ஆம் திகதியான கன்னியாகுமரியில் நிறைவடையும் என்ற நம்பிக்கை காணப்படவில்லை. இருப்பினும், மாரிசாமி தலைமையில் அந்நான்கு இளைஞர்களும் மெதுவாகவும், அதேசமயம் திடமாகவும் தமது இலக்கை நோக்கிச் செல்வதை மக்கள் ஆச்சரியத்துடன் நோக்குகின்றனர்.

இலங்கையில் இடம்பெறும் பாரிய படுகொலைகளுக்கு எதிராக பெரும்பான்மையான தமிழர்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களுடன் நாமும் கரம் கோர்க்கும் நோக்குடன் இலங்கையில் உடனடியாக யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தியே சென்னை முதல் கன்னியாகுமரி வரையான இப்பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளோம் என வீரப்பன் தெரிவித்தார்.

தினமும் சராசரியாக 30 கிலோ மீற்றர் தூரத்தை, இவர்கள் கடந்து செல்கின்றனர். எமது சமூகத்திற்கு சிறந்த ஆக்கபூர்வமான விளைவுகளைப் பெற்றுத் தரும் இலக்கை நாம் முன்னெடுக்கின்றோம். இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் தொடர்பாக நாம் சந்தித்த சிலரும் வேறு விதமான போராட்டங்களை மேற்கொள்வார்கள் என நம்புகின்றோம். அத்துடன் எமது போராட்டம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது மகிழ்வை அளிக்கின்றது என வீரப்பன் மேலும் தெரிவித்தார்.