இலங்கையில் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தும் பதாதைகளுடன் நான்கு பார்வையற்ற இளைஞர்கள் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். சென்னையைச் சேர்ந்த கே.வீரப்பன் (வயது 34), என்.மாரிசாமி (வயது 36), எஸ்.ஆறுமுகம் (வயது 40) மற்றும் எம்.சக்திவேல் (வயது 34) ஆகிய நால்வருமே சுடும் வெயிலில் அதிவேக வாகன போக்குவரத்துடைய சாலைகளினூடாக பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையிலுள்ள மரீனா கடற்கரையிலிருந்து கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இவர்களின் பாதயாத்திரை திட்டமிட்டவாறு மார்ச் 28 ஆம் திகதியான கன்னியாகுமரியில் நிறைவடையும் என்ற நம்பிக்கை காணப்படவில்லை. இருப்பினும், மாரிசாமி தலைமையில் அந்நான்கு இளைஞர்களும் மெதுவாகவும், அதேசமயம் திடமாகவும் தமது இலக்கை நோக்கிச் செல்வதை மக்கள் ஆச்சரியத்துடன் நோக்குகின்றனர்.
இலங்கையில் இடம்பெறும் பாரிய படுகொலைகளுக்கு எதிராக பெரும்பான்மையான தமிழர்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களுடன் நாமும் கரம் கோர்க்கும் நோக்குடன் இலங்கையில் உடனடியாக யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தியே சென்னை முதல் கன்னியாகுமரி வரையான இப்பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளோம் என வீரப்பன் தெரிவித்தார்.
தினமும் சராசரியாக 30 கிலோ மீற்றர் தூரத்தை, இவர்கள் கடந்து செல்கின்றனர். எமது சமூகத்திற்கு சிறந்த ஆக்கபூர்வமான விளைவுகளைப் பெற்றுத் தரும் இலக்கை நாம் முன்னெடுக்கின்றோம். இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் தொடர்பாக நாம் சந்தித்த சிலரும் வேறு விதமான போராட்டங்களை மேற்கொள்வார்கள் என நம்புகின்றோம். அத்துடன் எமது போராட்டம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது மகிழ்வை அளிக்கின்றது என வீரப்பன் மேலும் தெரிவித்தார்.