2009

2009

பொதுமக்களை இழந்துதான் ஒரு சமாதானம் கிடைக்குமென்றால் அவ்வாறான ஒரு முடிவு எமக்குத் தேவையில்லை.- வினோ

sri-lanka-parliament.jpgவன்னியில் மக்கள் பெரும் மனிதப் பேரவலத்தைச் சந்தித்திருக்கிறார்கள்.  இந்த நிலையில் வடக்கில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வட பகுதியில் ஒரு சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கோ அல்லது மக்கள் வாக்களிப்பதற்கோ பொருத்தமான சூழல் இல்லை.என்று வினோ நோகாதரலிங்கம் த. தே. கூ. எம்.பி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வன்னியில் சிக்குண்டுள்ள பொதுமக்களின் எண்ணிக்கை குறித்து மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அரசாங்கத்தின் கணக்கின்படி பார்த்தால் இனி அங்கு பொதுமக்கள் இல்லை என்ற கருத்தைத் தோற்றுவித்துள்ளது.

அப்படியானால் எஞ்சியிருக்கின்ற மக்கள் யார்? அவர்களுக்கு என்ன நடக்கப் போகின்றது? இதற்கு அரசாங்கம் உரிய பதிலை அளிக்க வேண்டும். பொதுமக்களை இழந்துதான் ஒரு சமாதானம் கிடைக்குமென்றால் அவ்வாறான ஒரு முடிவு எமக்குத் தேவையில்லை. ஐக்கிய இலங்கைக்குள் சிங்கள சகோதரர்களுடன் சந்தோசமாக வாழ நாம் தயாராக இருக்கின்றோம். எமக்கும் சமமான அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.

புலிகளின் முக்கிய இரு தலைவர்கள் படையினரிடம் சரண் – பாதுகாப்பு அமைச்சு :எங்கள் தலைவர்கள் சரணடையவில்லை- விடுதலைப்புலிகள்

dayamaster.jpgஎல்.ரி.ரி.ஈ.  இயக்கத்தின் முக்கிய தலைவர்களான தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் ஆகிய இருவரும் இன்று பிற்பகல் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசித்துள்ள இராணுவத்தின் 58ஆவது படைப் பிரிவினரிடம் புதுமாத்தளன் பகுதியில் வைத்து இவர்களிருவரும் சரணடைந்ததாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தயா மாஸ்டர் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தின் ஊடகத்துறைப் பெறுப்பாளராகவும் அதன் பேச்சாளராகவும் செயல்பட்டு புலிகள் இயக்கத்துக்குப் பெரும் சேவையாற்றியவராவார்.

geargemaster.jpgஜோர்ஜ் என்பவர் ஆங்கில மொழியில் சரளமாக பேசக்கூடியவர். இவர் எல்.ரி.ரி.ஈ. தலைவரான பிரபாகரனின் மொழி பெயர்ப்பாளரகவும் செயல்பட்டு வந்தார். அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையில் கடந்ட 2002ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட யுத்தநிறுத்த காலத்தில் பிரபாகரனுடனான பேட்டியின்போது இவர் மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டார் என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

எங்கள் தலைவர்கள் சரணடையவில்லை-ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர்: விடுதலைப்புலிகள்

புது மாத்தளன் பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தபோது, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் 2 பேர் தங்கள் குடும்பத்தினருடன் சரண் அடைந்ததாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. அவர்களில் ஒருவரான வேலாயுதம் தயாநிதி என்கிற தயாமாஸ்டர், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமை செய்தி தொடர்பாளராக இருந்தார்.

மற்றொரு தலைவரான வி.கே.பஞ்சரத்தினம் என்கிற ஜார்ஜ், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக பணிபுரிந்து போரில் கொல்லப்பட்ட தமிழ்ச்செல்வனின் உதவியாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தயா மாஸ்டர் மற்றும் ஜார்‌ஜ் ஆகியோர் தாங்களாக முன்வந்து சரணடையவில்லை என்றும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்து போது இலங்கை ராணுவத்தினர் வலுக்கட்டாயமாக பிடித்து சென்றுவிட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.

போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி நாளை பொது வேலைநிறுத்தம்: கருணாநிதி

20-karunanithi1.jpgஇலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும், இதை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி நாளை தமிழகத்தில் பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் போராட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு 2 முறை தந்தி அடித்தார் முதல்வர் கருணாநிதி. இந்த நிலையில் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.

இரு தினங்களில் 63, 000க்கும் அதிக – சிவிலியன்கள் படையினரால் மீட்பு

udaya_nanayakkara_brigediars.jpgபுலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்களை மீட்டெடுக்கும் பாரிய நடவடிக்கை தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். நேற்றைய தினமும் பெருந்தொகையான பொது மக்கள் கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி வருகை தந்ததாக தெரிவித்த அவர் கடந்த இரு தினங்களுக்குள் 62,609ற்கும் அதிகமான பொது மக்களை படையினர் வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, புலிகளின் பிடியிலிருந்து தப்பி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கி வந்த பொது மக்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 35 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார். பாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்களை மீட்டெடுக்கும் பாரிய நடவடிக்கை தற்பொழுது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

புதுமாத்தளன் பிரதேசத்திற்குள் பிரவேசித்துள்ள இராணுவத்தின் 58 வது படைப்பிரிவினர் புதுமாத்தளன் வைத்தியசாலையையும் நேற்றைய தினம் கைப்பற்றியுள்ளதாக பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார். பொது மக்களுக்காக பாதுகாப்பு வலயத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்த வைத்தியசாலையை புலிகளே பயன்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 புதுமாத்தளன் பகுதிக்குள் பிரவேசித்து முன்னேறி வரும் இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படைப்பிரிவினர் புதுமாத்தளன் மேற்கு பிரதேசத்திலிருந்து கிழக்கு பிரதேசம் வரையிலான கரையோரத்தையும் கைப்பற்றி தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் தமது நிலைகளை பலப்படுத்தி வரும் இராணுவத்தினர் புலிகளின் கவச வாகனம் ஒன்றையும் தாக்கியழித்துள்ளனர். பாதுகாப்பு வலயத்திலிருந்து தப்பிச் செல்லும் பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த புலிகளால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நால்வர் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதேசமயம், புலிகளின் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடும் இடம் ஒன்றை இலக்கு வைத்தும் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு வலயத்திலுள்ள பொது மக்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் ஆரம்பித்தனர்.

புதுமாத்தளன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மூன்று கிலோ மீற்றர் நீளமான மண் அணையை படையினர் கைப்பற்றியதை அடுத்து அங்கிருந்த பல்லாயிரக் கணக்கான மக்களை படையினர் மீட்டெடுத்தனர். அதனைத் தொடர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி சாரைசாரையாக மக்கள் வர ஆரம்பித்தனர்.

இதனையடுத்து, திங்கட்கிழமை மாத்திரம் 39,081 பொது மக்களை மிகவும் பாதுகாப்பாக மீட்டெடுத்தனர். இவர்களில் 36,914 பேரை இராணுவத்தினரும், 2,167 பேரை கடற்படையினரும் மீட்டெடுத்தனர் என்றும் தெரிவித்தார். இதேவேளை, பாதுகாப்புப் பிரதேசத்திலிருந்து தப்பி செல்லும் பொது மக்களை தடுக்கும் வகையில் புலிகள் தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகங்களையும், பீரங்கி தாக்குதல்களையும் நடத்தி வருவதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் ஒருபோதும் சரணடையப் போவதில்லை: புலித்தேவன் அறிவிப்பு

puli_thevan0.jpgதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டத் தாக்குதலைத் தொடுத்திருப்பதாக சிறிலங்கா படையினர் அறிவித்திருக்கும் அதேவேளையில், தாம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் சீவரட்ணம் புலித்தேவன் தெரிவித்திருக்கின்றார்.

அனைத்துலக செய்தி நிறுவமான ரொய்ட்டருக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ள புலித்தேவன், “நிரந்தரமான போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அனைத்துலக சமூகம் உடனடியாகத் தலையிட்டு அதற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்” எனவும் கோரியிருக்கின்றார்.

“நாம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை. நாம் தொடர்ந்தும் போர் புரிவோம். தமிழ் மக்களின் ஆதரவுடன் இந்தப் போரில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது” எனத் தெரிவித்த புலித்தேவன், முல்லைத்தீவின் கடற்கரைப் பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதியின் எல்லைக்கு அருகாமையில் தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் தம்முடனேயே இருப்பதாகவும் குறிப்பிட்ட புலித்தேவன், சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கு எதிரான போரை அவரே நெறிப்படுத்தி வருவதாகவும், மக்களுக்கு ஆதரவையும் உதவிகளையும் அவர் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழ் மக்களை படையினர் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டிய புலித்தேவன், “நேரம் வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றது. இரத்தக்களரி ஒன்று இடம்பெறவிருப்பதால் அனைத்துலக சமூகம் இந்த விடயத்தில் தலையிட வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

சிறுவர்கள் இரட்டைக் கொலை: பிரதான சந்தேக நபர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

baby-01.jpgஅக்மீமன பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேக நபர் நேற்றுமுன்தினம் காலை (20) பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்ததோடு மற்றைய சந்தேக நபர் இனந்தெரியாத கும்பலொன்றினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்மீமன நுகேகந்த பகுதியில் வைத்து 10 வயது சிறுமி ஒருவரும் மூன்று வயது சிறுவன் ஒருவனும் கடந்த 15ஆம் திகதி காணாமல் போயிருந்தனர். பின்னர் இவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். கடந்த 18ஆம் திகதி சிறுமியின் சடலமும் 19ஆம் திகதி சிறுவனின் சடலமும் பொலிஸாரினால் மீட்கப்பட்டன.

சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள வீட்டில் வசித்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து கிடைத்த வாக்குமூலத்தின்படி, மறைத்து வைத்துள்ள ஆயுதங்களை மீட்பதற்காக பிரதான சந்தேக நபர் நேற்றுமுன்தினம் காலை (20) சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதன்போது மறைத்து வைத்திருந்த கைக்குண்டை சந்தேக நபர் பொலிஸார் மீது வீசித் தாக்க முயன்றுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் சந்தேக நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சந்தேக நபர் கராபிடிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை, யக்கலமுல்ல கொட்டாவ காட்டுப் பகுதியில் இருந்து நபரொருவரின் சடலமொன்று நேற்றுக்காலை (20) மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த சடலம் பிரதான சந்தேக நபரின் உறவினர் ஒருவருடையது என பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர். இவருக்கும் சிறுவர்களின் கொலையுடன் தொடர்பு இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதுவரை சடலம் அடையாளங் காணப்படவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.

இருவரினதும் பிரேத பரிசோதனை பத்தேகம நீதவானின் முன்னிலையில் நேற்றுமுன்தினம் பிற்பகல் நடைபெற்றது. இதேவேளை, கொல்லப்பட்ட 10 வயது சிறுமியரின் இறுதிக் கிரியைகள் நேற்று பிற்பகல் நடைபெற்றது. ஊர் மக்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இதில் கலந்துகொண்டனர். இவரின் உடலில் 12 வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சட்டமூலத்தை வாபஸ்பெறுவதற்கு நான் அரசாங்கத்திற்கு மூன்று வார கால அவகாசம் வழங்குகின்றேன். – ரவூப் ஹக்கீம்

sri-lanka-parliament.jpgவடக்கில் மீட்கப்பட்ட பகுதிகளில் தேர்தலை நடத்துவதற்கு வசதியாக உள்ளூராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்ட மூலத்தை அரசாங்கம் முன்வைத்துள்ளது. வடக்கில் கட்டம் கட்டமாகத் தேர்தலை நடத்த அரசாங்கம் எண்ணுகிறது. இதன் முதற்கட்டமாக யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு நாம் ஆதரவு வழங்குவோம். ஆனால் அதற்கு முன்னதாக, தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் பங்கெடுக்கக் கூடியவாறான ஜனநாயக சூழலையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று ரவூப் ஹக்கீம் எம்.பீ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைகள் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டம், நாட்டைக் கட்டியெழுப்புதல், வரி திருத்தச் சட்டம், உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழான பிரேரணை, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் ஆகியவற்றின் மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரவூப் ஹக்கீம் எம்.பீ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதேபோன்று வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு தற்போது அகதி முகாம்களில் வாழ்வோர் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இந்த உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலம், கிழக்கு மாகாண சபையில் விவாதித்து நிறைவேற்றும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. இது சிறுபான்மைக் கட்சிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

எனவே, சிவிலியன்களை விடுவிப்பதற்கு புலிகள் இயக்கத்திற்கு அரசாங்கம் 24 மணித்தியாலத்தை வழங்கியிருக்கின்றது. அதுபோல் இந்தச் சட்டமூலத்தை வாபஸ்பெறுவதற்கு நான் அரசாங்கத்திற்கு மூன்று வார கால அவகாசம் வழங்குகின்றேன்.

மேலும், முஸ்லிம் பிரதேசங்களை சிங்களமயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. புல்மோட்டை ஜின்னா நகர் பகுதிகளில் முஸ்லிம் பெயர் கொண்ட கிராமங்களுக்குச் சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இது மேலும் நிலைமையைச் சிக்கலாக்கும். தயவு செய்து இதனைச் செய்யாதீர்கள்.’

தாக்குதல் தொடர்வதாக மருத்துவர்கள் தெரிவிப்பு

puthumathalan.jpg அம்பலவன் பொக்கணை பகுதியில் செவ்வாய்கிழமை குண்டு தாக்குதல்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன என்றும், தாக்குதலில் காயமடைந்த பொதுமக்கள் அங்கு இன்னும் இயங்கிக்கொண்டிருக்கும் வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் மருத்துவமனைகளை அணுகிக்கொண்டிருக்கிறார்கள் என்று அரச மருத்துவர் டாக்டர் சத்யமூர்த்தி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்த தாக்குதல்களில் சிவ மனோகரன் என்ற ஒரு இறுதியாண்டு மருத்துவ மாணவர் கொல்லப்பட்டார் என்றும் அவர் கூறினார்.

பொதுமக்கள் அரச பகுதிகளுக்கு இடம்மாறுவது குறித்த செய்திகள் பற்றி, கருத்துவெளியிட்ட அவர், தாம் இது குறித்து வரும் செய்திகளைக் கேள்விப்படுவதாகவும் ஆனாலும் எண்ணிக்கை குறித்து தம்மால் உறுதிப்படுத்த முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

விடுதலைப்புலிகள் தப்பியோடும் பொதுமக்களை சுடுவதாக அரச தரப்பு வெளியிட்டுள்ள படங்கள் குறித்தும் தம்மால் உறுதிப்படுத்த முடியாமல் இருப்பதாக அவர் கூறினார். தமது பகுதிக்கு வரும் மக்களில் பலர் ஷெல் காயங்களுடனும் சிலர் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடனும் வருவதாக அவர் கூறினார்.

ஜனாதிபதி இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது எட்டு மாவட்டங்கள் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன

sri-lanka-parliament.jpgஜனாதிபதி இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது எட்டு மாவட்டங்கள் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. இதற்கான ஏற்பாடுகளை நான் முன்னர் அங்கம் வகித்த ஐக்கிய தேசியக் கட்சியே மேற்கொண்டிருந்தது. என்று அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நானும் ஐக்கிய தேசியக் கட்சியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவன்தான். நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க அரசாங்கத்தில் இணைந்துகொண்டேன். இன்று புலிகள் மூன்று சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் முடக்கப்பட்டுள்ளார்கள். இலங்கை வரலாற்றில் சுதந்திரத்திற்குப் பின்னர் இந்த முறைதான் கிழக்கு மாகாணத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியினர் தலைகால் புரியாமல் செயற்படுகிறார்கள். எதனைச் செய்வதற்கும் நமக்கு நாடு ஒன்று வேண்டும். நாடு இருந்தால்தான் எதுவும் சாத்தியமாகும். ஐ. தே. கவினர் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். மாவிலாறு அணையை மூடியதன் சாபத்தைத்தான் இன்று பிரபாகரன் அநுபவிக்கின்றார். அந்தப் பாவத்தால்தான் இன்று அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.’

தமிழ் பிள்ளைகளின் கழுத்தில் சயனைட்; பிரபாகரனின் பிள்ளைகளுக்கு லண்டனில் சொகுசு வாழ்க்கை – அமைச்சர் ஹேமகுமார

hemakumara.jpgஅப்பாவி தமிழ் பிள்ளைகளின் கழுத்தில் சயனைட் வில்லைகளை அணிவிக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமது பிள்ளைகளுக்கு லண்டனில் சொகுசு வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் என்று அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைகள் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டம், நாட்டைக் கட்டியெழுப்புதல், வரி திருத்தச் சட்டம், உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழான பிரேரணை, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் ஆகியவற்றின் மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது, தமது இனத்தையே கொன்று உண்டு வாழுபவர் தான் பிரபாகரன். அப்பாவி தமிழ் மக்களையே துன்பப்படுத்தி மகிழுகின்ற பிரபாகரன் அவரது மகனையும், மகளையும் லண்டனிலுள்ள சொகுசு பாடசாலைகளில் படிக்க வைத்துள்ளார். ஆனால் அவர் உருவாக்கிய படைகளுக்கு அப்பாவி தமிழ் பிள்ளைகள் பலவந்தமாக சேர்க்கப்பட்டனர். அப்பிள்ளைகளின் கழுத்தில் சயனைட் வில்லைகளை அணிவிக்கின்றனர்.

புலிகளின் பிடியிலுள்ள அப்பாவி மக்களை விடுவிக்கவென எமது பாதுகாப்பு படையினர் புலிகள் அமைந்திருந்த அணையை உடைத்தனர். மக்கள் வெள்ளம் போல வந்தனர். அந்த அப்பாவி மக்களைக் கூட புலி தற்கொலைதாரிகள் குண்டுகளை வெடிக்கச் செய்து கொன்று குவித்தனர், காயப்படுத்தினர்.

இவ்வாறு குரூரமான பயங்கரவாதிகளுக்குத் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், எம்.பி. என். ஸ்ரீகாந்தா போன்றோரும் ஆதரவு நல்குகின்றனர். எம்.பி என். ஸ்ரீகாந்தா புலிகளின் உளவாளியாவார். இவர் 1994ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மறைந்த காமினி திஸாநாயக்கவின் அல்பிரட் ஹவுஸ் இல்லத்திற்கு வந்து போனார். அதன் பின்னரே மறைந்த காமினி திஸாநாயக்க படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் ஸ்ரீகாந்தா புலிகளிடம் சென்றிருந்தார்.