2009

2009

இலங்கை தமிழரிற்கு ஓப்ரா வின்பிரே உதவ வேண்டும்: பாடகி மாதங்கி அருள் பிரகாசம் (MIA) கோரிக்கை

mia-01.jpgஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் , தாக்குதல், மனித உரிமை மீறல், தமிழர்களின் துயரங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட உதவ வேண்டும் என உலக டாக் ஷோக்களின் முன்னோடியான ஓப்ரா வின்பிரேக்கு இங்கிலாந்தில் பிறந்த, இலங்கைத் தமிழ்ப் பெண்ணான பிரபல பாடகி மாதங்கி அருள் பிரகாசம் (MIA ) கோரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த மாதங்கி பிரபல பாடகியாவார். ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திலும் இவர் பாடியுள்ளார். இந்தப் பாடல் பேப்பர் பிளேன்ஸ் என்ற மாதங்கியின் (MIA) இசைத் தொகுப்பில் இடம் பெற்றதாகும். இப்பாடலே, ஸ்லம்டாக் மில்லியனர் படத்திலும் இடம் பெற்றது.

இதேபோல பைனாப்பிள் எக்ஸ்பிரஸ் என்ற தொகுப்பையும் வெளியிட்டுள்ள. மாதங்கி பேப்பர் பிளேன்ஸ், கிராமி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீதான அடக்குமுறைகள், இனப்படுகொலைகள், பெண்களின் அவல நிலை குறித்து உலகத்திற்கு எடுத்துக் காட்டி அவர்களுக்கு உதவுமாறு ஓப்ரா வின்பிரேவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் MIA மாதங்கி

உள்ளூராட்சி தேர்தல் முறையை திருத்தும் சட்ட மூலத்தை ஒத்திவைக்க அமைச்சரவை தீர்மானம்

sri-lankan-government.jpgஉள்ளூராட்சி தேர்தல் முறையை திருத்துவதற்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை ஒத்திவைக்க அமைச்சரவை தீர்மானித்திருக்கின்றது. கடந்த 6 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த உத்தேசிக்கப்பட்ட திருத்தங்களின் மூலம் சிறு கட்சிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக அந்த கட்சிகளின் பிரதிநிதிகள் முன்வைத்த விடயங்களை கருத்திற் கொண்டே அமைச்சரவை இந்த தீர்மானத்திற்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தொகுதிவாரி முறை மற்றும் விகிதாசார முறை இரண்டும் கலந்த தேர்தல் முறைமையொன்றின் கீழ் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது உள்ளிட்ட பல யோசனைகள் இந்த சட்டமூலத்தின் மூலம் முன்வைக்கப்பட்டிருந்தன.

சட்டமூலம் இதற்கு முன்னர் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட போது அது அரசியலமைப்புக்கு முரணானதென ஆட்சேபித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்ததுடன் அந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதென்றால் அதற்கு மாகாண சபைகளின் அனுமதி பெறப்பட வேண்டுமென தீர்ப்பளித்தது.

இதற்கமைய அரசாங்கம் இந்த சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக் கொண்டதுடன் பின்னர் அதை மாகாண சபைகளின் அனுமதிக்காகவும் அனுப்பி வைத்திருந்தது. சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளில் இந்த சட்டமூலத்திற்கு அனுமதி கிடைத்த போதும் கிழக்கு மாகாண சபையில் அதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன் அனுமதி வழங்குவதும் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சிறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் சிலர் இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிந்தெடுக்க குறைந்த பட்சம் வாக்கு சதவீதத்தை 12 ஆக உயர்த்தியிருப்பதன் மூலம் சிறு கட்சிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக இந்த அமைச்சர்கள் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பான இந்த சட்டமூலமானது காலத்தின் அவசியமென ஆளுந்தரப்பின் பிரதம கொரடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனும் அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தியிருக்கின்றனர். இருந்தபோதிலும் சட்டமூலத்தை ஒத்திவைத்து அதை மீண்டும் ஆலோசனைக்கு உட்படுத்த அமைச்சரவை இறுதியாக முடிவு செய்துள்ளது.

மதத்தின் அர்த்தத்தை திரிப்பதை போப் கண்டித்துள்ளார்

pope_afp.jpgமத்திய கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் போப் பெனடிக்ட், மதத்தை அர்த்தம் திரித்து கற்பிப்பதை கண்டித்துள்ளார். ஜோர்டான் தலைநகர் அம்மானில் மசூதி ஒன்றில் முஸ்லிம் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இவ்வாறு அர்த்தத்தை திரிப்பதனால் சமுதாயத்தில் பாகுபாடுகள் மற்றும் வன்முறை ஏற்படுவதாக கூறினார்.

இதற்கிடையே, கடந்த 2006 ஆம் ஆண்டு இஸ்லாம் வன்முறையானது என கிறிஸ்துவ பேரரசர் ஒருவர் கூறியதாக போப் பெனடிக்ட் கூறினார், அதற்கு பின்னர் அவர் வருத்தம் தெரிவித்தார். அவ்வாறு போப் பெனடிக்ட் வருத்தம் தெரிவித்தமைக்கு ஜோர்டன் மன்னரின் மூத்த ஆலோசகர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் முஸ்லிம்கள் வருத்தம் அடைந்ததாகவும், எனினும் அந்த பேரரசரின் கருத்தை போப் பெனடிக்ட் கொண்டிருக்கவில்லை என்பதை முஸ்லிம்கள் ஏற்பதாகவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவிலிருந்து ஐ.சி.ஆர்.சியின் உதவியுடன் 518 பேர் புல்மோட்டை அழைத்துவரப்பட்டனர்

icrc.jpg
முல்லைத்தீவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் மூலம் நேற்றிரவு மேலும் 518 பேர் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நோயாளர்கள் ,காயமுற்றவர்கள் ,கர்ப்பிணிகள் மற்றும் இவர்களது உதவியாளர்களும் உறவினர்களும் என 518 பேர் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகளின் தகவல்களின் படி கடந்த மார்ச் முதல் இது வரை இப்படி 10 ஆயிரத்து 174 பேர் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

லண்டன் ‘சனல் – 4’ தொலைக்காட்சி ஊடகவியலாளர் மூவர் நேற்று திருமலையில் கைது.

channel-4news.jpg வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுடைய முகாம்களின் நிலைமை தொடர்பான சர்ச்சைக்குரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரித்த பிரித்தானியாவைச் சேர்ந்த ‘சனல் – 4’ தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்கள் திருகோணமலையில் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் இவர்கள் மீதான விசாரணைகள் தொடர்வதாக காவல்துறைப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர நேற்று சனிக்கிழமை இரவு தெரிவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதற்காக திருகோணமலை சென்றிருந்த வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். ‘சனல் – 4’ தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான நிருபரான நிக் பட்ரன் வோல்ஸ், அதன் தயாரிப்பாளர் பெசி டூ, படப்பிடிப்பாளர் மற் ஜஸ்பர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையில் தொடரும் போர் தொடர்பான பல செய்திகளை ‘சனல் – 4’ தொலைக்காட்சி தொடர்ந்தும் ஒளிபரப்பி வந்திருக்கின்றது. இருந்தபோதிலும் கடந்த வாரம் ஒளிபரப்பான வவுனியா முகாம்கள் தொடர்பான தகவல்கள்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதேவேளையில் நிக் பட்ரன் வோல்சின் விசா அனுமதி உடனடியாக இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளர் பி.பி. அபயக்கோன் அறிவித்திருக்கின்றார்.

செய்தியாளர் சபேரியின் மேல்முறையீடு மீது விசாரணை

rokchana.jpgஇரானில் சிறை வைக்கப்பட்டுள்ள இராக்கிய அமெரிக்க செய்தியாளரான ரோக்சானா சபேரியின் மேல்முறையீட்டு மனு ஞாயிறன்று விசாரணைக்கு வரவுள்ளதாக அவருடைய வக்கீல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு வேவு பார்த்ததாக குற்றம் சுமத்தி இவருக்கு கடந்த மாதம் எட்டு ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டு விசாரணையின் போது தங்கள் தரப்பு கால அவகாசம் கோரவிருப்பதாக சபேரியின் தந்தை தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் கருணாநிதியுடன் இணைந்து சோனியா பிரசாரம்

06-sonia.jpgகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மாலை சென்னை வரவுள்ளார். முதல்வர் கருணாநிதியும், அவரும் இணைந்து பிரசாரப் தீவுத் திடலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். இக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகின்றது. சோனியா வருகைக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாலும், போராட்டங்களை அறிவித்துள்ளதாலும், பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இலங்கையில் உள்ள உறவினர்களை தொடர்பு கொள்ளாமல் புலம்பெயர்ந்தவர்கள் தவிப்பு

teliphone.jpgஇலங்கையில் விடுதலைப் புலிகளின் பகுதிகளில் தொலைபேசி வசதிகளை அரசு பல மாதமாக துண்டித்து விட்டது. போர் உக்கிரமடைந்ததுவிட்டதன் காரணமாக புலிகளின் அனுசரணையுடன் நடத்தப்படும் செய்மதி தொலைபேசி வழியாக வன்னியில் இருப்பவர்கள் தமது உறவினர்களை தொடர்பு கொள்வதும் குறைந்து விட்டது. மற்றொரு புறம் வவுனியா முகாம்களில் இருப்பவர்களை எப்படி தொடர்பு கொள்வது என்பது தெரியாத நிலையும் உள்ளது.

இதனால் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் இலங்கையில் உள்ள தமது உறவினர்கள் பற்றிய தகவல்களை அறிய முடியாமல் தவித்து வருகின்றனர்.

வவுனியா முகாம்களில் உள்ளவர்களின் வசதிக்காக தபால் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு நிவாரணக் கிராமங்களுக்கு தொலைபேசி இணைப்புகள் ஏற்கனவே ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்த அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதியுதீன், முகாம்கள் இருக்கும் பகுதியில் வங்கிக் கிளைகள் திறக்கும் பணியும் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். வவுனியா முகாம்களுக்கு ஏராளமானோர் வந்துள்ள நிலையில் வந்தவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்

பாக். – அமெரிக்கா கூட்டு இராணுவ நடவடிக்கை

w_news.jpgபாகிஸ்தான் வடமேற்கிலிருந்து 5 இலட்சம் மக்கள் இடம்பெயர்வு பாகிஸ்தானின் வடமேற்கில் இருந்து 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளி யேறியுள்ளதாக ஐ. நா. அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெ ரிக்காவும், பாகிஸ்தானும் கூட்டு இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சிவிலியன்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்டுள்ளதாக சீ. என். என். ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நிலைமை எப்படி இருந்தாலும் தலிபான்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொடருமென பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் வட மேற்கில் பழங்குடியினர் வாழும் பகுதியில் தலிபான் தீவி ரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள். ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள அமெரிக்க இராணுவத்தினர் மீது இவர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இதனால் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும், பாகிஸ்தானும் கூட்டாக சேர்ந்து இராணுவ நடவடிக்கை எடுத்து வருகிறது. தலிபான்கள் மீது அமெ ரிக்க இராணுவம் ஏவுகணைகளை வீசியும் பீரங்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு வசிக்கும் மக்களை கேடயமாக வைத்து தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர்.

கடந்த 2 நாட்களாக வடமேற்கு பாகிஸ்தானில் இராணுவ தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. அதில் 170 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது.

இராணுவ தாக்குதல் காரணமாக வட மேற்கு பகுதியில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர். அவர்கள் அகதிகளாக மலைகளிலும் காடுகளிலும் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். தொடர்ந்து மக்கள் வெளியேறிய வண்ணம் உள்ளனர்.

ஆனால், மக்களை வெளியேற விடாமல் தீவிரவாதிகள் தடுத்து வருகிறார்கள். ஏற்கனவே இராணுவ நடவடிக்கை காரணமாக 2 இலட்சம் மக்கள் வெளியேறி விட்டனர். தற்போது மேலும் 3 இலட்சம் பேர் அங்கிருந்து வெளியேறி வருவதாக ஐ. நா. அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே தலிபான்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை நீடிக்கும் என்று பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி அறிவித்துள்ளார். வடமேற்கு பகுதியில் 45 ஆயிரம் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியையும் பிரதமர் யூசுப் ரசாக் கிலானியையும் குடும்பத்தோடு கொல்லப்போவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். தொலைபேசி மூலம் பேசிய தலிபான்களின் பேச்சாளரொருவர், “முஸ்லிம்கள் என்ற வகையில் போராட்டத்திற்கு உதவுவார்களென எதிர்பார்த்தோம். முடியவில்லை. இவர்களை பழிவாங்கியே தீருவோம்” எனக் கூறியதாக இணையச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனையிலிருந்து கருணாநிதி வீடு திரும்பினார்.

karunanithi.jpgஉடல் நலக்குறைவு காரணமாக கடந்த 3ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் கருணாநிதி உடல் நலம் தேறியதைத் தொடர்ந்து நேற்று இரவு வீடு திரும்பினார். கடந்த 3ம் தேதி முதல்வருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. கூடமே முதுகு வலியும், தொண்டை வலியும் ஏற்படவே அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு முதல்வர் கருணாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இரவு ஒன்பதரை மணியளவில் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.