‘
குடும்ப வன்முறை சமூகத் தனிமைப்படுத்தல்’ போன்ற காரணங்களே சசிகலா நவநீதன் தனது குழந்தைகளைக் கொலை செய்வதை நோக்கித் தள்ளியதாக வழக்கின் நீதிபதி பிரைன் பார்க்கர் தெரிவித்துள்ளார். ‘இது மிகவும் மனவருத்தமான கொடுமையான நிகழ்வு’ என்று தெரிவித்த நீதிபதி, ‘நீர் அந்த நேரத்தில் நீரும் உமது குழந்தைகளும் இறப்பதே மேல் என்று நம்பி உள்ளீர்கள். நீர் குடும்ப வருமானம், ஒழுக்கமற்ற உறுவு, குடும்ப வன்முறை சமூகத் தனிமைப்படுத்தல் ஆகியவற்றை கவனத்தில் எடுத்தள்ளீர். உம்முடைய மனக் குழப்பமும், நீர் எடுத்த நடவடிக்கையும் வெளியில் உள்ள ஒருவருக்கு விளங்கிக் கொள்ள முடியாது’ எனத் தெரிவித்தார். தாய்மைக்கால மன உளைச்சலால் தனது குழந்தைகளைக் கொலை செய்த சசிகலா நவநீதனின் வழக்கில் தீர்ப்பளிக்கையில் நீதிபதி அவ்வாறு தெரிவித்தார். காலவரையறையற்று சசிகலா நவநீதன் மனநோயாளர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு உடன்பட்டு உள்ளார்.
‘என்னைச் சுட்டுக் கொல்லுங்கள்’ தாய்மைக்கால மனஉளைச்சல் காரணமாக தன்னிரு குழந்தைகளினதும் தொண்டையில் வெட்டியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த தாய் சசிகலா நவநீதன் கதறினார். தான் தன் குழந்தைகளைக் கொலை செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் கூறிய அவர் தன்னைச் சுட்டுக் கொல்லுமாறு பொலிசாரை மன்றாடினார். சசிகலா நவநீதன் தனது குழந்தைகளான சன்ஞயன் (5), சாராணி (4), ரிசானா (6 மாதம்) ஆகிய தன் மூன்று குழந்தைகளையும் கொலை செய்ய முற்பட்டு இருந்தார். அதில் சன்ஞயன், சாரணி இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இச்சம்பவம் லண்டன் புறநகர்ப் பகுதியான கார்ஸ்கால்ரன் என்ற இடத்தில் இருந்த அவர்களின் வீட்டில் சென்றவருடம் மே 30ல் இடம்பெற்றது.
மருத்துவர்களின் போராட்டத்தின் பின் ரிசானா உயிர் தப்பினார். ரிசானாவும் ஜனவரியில் நவநீதன் சசிகலாவின் நான்காவது குழந்தையும் அவர்களுடைய தந்தை நவராஜா நவநீதனுடன் வாழ அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
20 யூலையில் ஓல்ட் பெயிலி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த சசிகலா நவநீதன், சொந்தமாகக் கடை வைத்திருந்து அதில் பணியாற்றிய கணவர் நவராஜா நவநீதன் திருமணத்திற்குப் புறம்பான உறவை வைத்திருந்தார் என்றும் தன்னை அடிப்பதாகவும் தனது தலையில் ஒலித்த யாருடையதோ குரல்கள் அதனை தான் நம்பும்படி உணத்தியதாகவும் தெரிவித்தார்.
சன்ஞயன் சாரணி ஆகியோரின் கொலைகளை புரிந்ததாகவும் ஆனால் தன்னுணர்விற்கு அப்பாற்பட்டு (diminished responsibility) நடந்ததாகவும் ரிசானா மீதான கொலை முயற்சியையும் ஏற்றுக்கொண்டார்.
சம்பவம் இடம்பெற்றதற்கு ஒரு மாதத்திற்கு முன்னிருந்து குழந்தைகளைக் கொலை செய்யும்படியாக அந்தக் குரல்கள் தனது தலையில் ஒலித்து வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்த சசிகலா சம்பவதினமும் அந்தக் குரல்கள் மீண்டும் ஒலித்தாகவும் அன்று தான் அந்தக் குரல்கள் கூறியபடி நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
சசிகலா சார்பில் ஆஜரான கியூசி டேவிட் எதரிங்ரன், ‘சசிகலா தனது காலாச்சார காரணங்களுக்காக தனக்கு ஏற்பட்ட உடற்காயங்களை மருத்துவருக்கு காட்டினார். ஆனால் தனது மனநிலையை வெளிப்படுத்தவில்லை’ எனத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘தனது வாழ்க்கையில் இனிமேல் எவ்வித அர்த்தமும் இல்லை என்ற முடிவுக்கு வந்த சசிகலா தனது குழந்தைகளை தனது கணவனுடன் விட்டுச் செல்லவும் விரும்பவில்லை’ என்று தெரிவித்தார். ‘தற்போது அவர் தான் மிகப் பயங்கரமான விடயத்தைச் செய்திருப்பதை அறிய வந்துள்ளது. அவர் அப்போதும் மிக நோயாளியாக இருந்தார். இப்போதும் அவர் மிகவும் நோயாளியாகவே உள்ளார்’ என கியூசி டேவிட் எடிங்ரன் நீதிமன்றில் தெரிவித்தார்.
சம்பவம் பற்றி நவநீதன் பொலிஸாருக்கு அவசர அழைப்பை விடுத்தார். தனது மனைவி குழந்தைகளைக் கொலை செய்துவிட்டதாகவும் தெரிவித்தார். பொலிஸார் வந்ததும் நவநீதன் மனைவி கொலைக்குப் பயன்படுத்திய கத்திகளை கட்டில் மெத்தைக்குக் கீழ் வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார். வீட்டைச் சோதணையிட்ட பொலிஸார் கட்டில் மெத்தைக்குக் கீழிருந்த 3 கத்திகளையும் ஒரு கடிதத்தையும் நவநீதன் சசிகலாவிற்கு தங்கள் திருமணத்தின் ஞாபகார்த்தமாக வழங்கிய நெக்லஸையும் கண்டெடுத்தனர்.
அக்கடிதத்தில் நவநீதனுக்கு ‘திருமணத்திற்குப் புறம்பாக இரு உறவுகள்’ இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்ததுடன் ‘நான் கண்ணீர் வர அழுது புலம்புகின்றேன்’, ‘உதவிக்கு யாரும் இல்லை’, ‘நாங்கள் எல்லோரும் இறப்பதே நல்லது’ போன்ற வரிகள் இருந்தது.
பொலிஸார் கைது செய்வதற்கு முன்னர் தனக்கு வாழ விருப்பமில்லை தன்னை கொலை செய்யுமாறு சசிகலா பொலிஸாரைக் கேட்டுக் கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்கொலை செய்யும் முயற்சியில் எலிகளைக் கொல்வதற்கு வைக்கின்ற மாத்திரைகளை தான் உட்கொண்டாதகவும் சசிகலா பொலிஸாருக்கு தெரிவித்து இருந்தார்.
1999ல் இங்கிலாந்து வந்த சசிகலாவை இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தமும் பாதித்து இருந்தது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு யுத்தம் தொடர்பான கெட்ட கனவுகள் வந்து போயிருந்ததாகவும் பழைய சம்பவங்கள் மீண்டும் வந்து சென்றதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டு இருந்தது.
சசிகலாவை பரிசோதணை செய்த மூன்று மருத்துவர்களும் அவர் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததை உறுதிப்படுத்தி இருந்தனர்.
இச்சம்பவத்திற்குப் பின்னர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற சம்பவத்திலும் தனது குழந்தைளுடன் தற்கொலை செய்ய முற்பட்ட தாய் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டார். குழந்தைகள் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்திற்கு முன்னர் கனடாவைச் சேர்ந்த இளம்தாயொருவர் தனது கணவனது இறப்பைத் தாங்க முடியாமல் தனது பிள்ளைகளுடன் தற்கொலை செய்ய முயன்றார். இச்சம்பவத்தில் பிள்ளைகள் உயிரிழந்தனர். தாய் காப்பாற்றப்பட்டார்.
