2009
2009
அவுஸ்திரேலியா தனது வீசா வழங்கும் நடைமுறைகளின் போது இலங்கைத் தமிழர்கள் மற்றும் வடக்கு கிழக்கு வாழ் அகதிகளுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட மாட்டாதென அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமை திணைக்களம் தெரிவித்துள்ளது.
யுத்த சூழ்நிலை காரணமாக அதிக எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழர்களுக்கு அவுஸ்திரேலியா வீசா வழங்கும் என ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.எனினும், இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் இவ்வாறான விசேட சலுகைகளை வழங்கும் எவ்விதத் திட்டமும் இல்லை என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
நீண்ட காலமாக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை நாடு திரும்புமாறு கோர வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடையே தற்போது கருத்து வலுப்பெற்று வருவதாக கூறபப்டுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஜெயானந்தமூர்த்தி ( லண்டன்)பத்மினி சிதம்பரநாதன் ( லண்டன) செல்வராஜா கஜேந்திரன் ( ஐரோப்பிய நாடுகள் ) செல்வம் அடைக்கலநாதன் ( இந்தியா) ,எம்.கே. சிவாஜிலிங்கம் ( இந்தியா ) ஆகியோர் 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்காமல் தொடர்ந்தும் விடுமுறை நீடிக்கப்பட்ட நிலையில் இந் நாடுகளிலேயே தங்கியிருக்கின்றார்கள்.
தற்போதைய சூழ்நிலையில் கட்சியின் அரசியல் ரீதியான செயல்பாடுகளை மேலும் வலுப்பெறச் செய்ய வேண்டிய தேவை இருப்பதால் இவர்களை நாடு திரும்புமாறு கட்சி கோர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு முன்வைக்கப்பட்டு, அதனை அரசியலமைப்பில் சேர்ப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வருவதற்கான பாராளுமன்ற சூழல் தற்போது இல்லை. ஆகவே ஏற்கனவே உள்ள 13 ஆவது அரசியலமைப்;புத் திருத்தச் சட்டத்தின் கீழ் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே சிறந்தது, இந்தத் திருத்தம் ஏற்கனவே இலங்கையின் அரசியலமைப்பில் இருக்கின்றது. அத்துடன், இந்தியாவின் உதவியோடு கொண்டு வரப்பட்ட இந்தத்திருத்தச் சட்டத்திற்கு இந்தியாவின் ஆதரவும் உண்டு. எனவே இந்தத் திருத்தச் சட்டத்தி்ன் கீழ் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே இப்போதுள்ள ஒரேயொரு வழியாகும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதற்கான முயற்சிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகக் கூறிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாணம் விடுதலைப்புலிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டதும், அங்கு உள்ளுராட்சி சபைகள் மாகாண சபை என்பவற்றிற்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு. அங்கு சிவில் நிர்வாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது இதேபோன்று வடக்கிலும் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுத்துறையினரால் 4 ம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட இலங்கை தமிரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்னத்தை அவரது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பிரகாரம் கடந்த திங்கள் கிழமை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா பார்வையிட்டு அவருடன் உரையாடியுள்ளார். நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிஷோர் சிவநாதனும் சென்று பார்வையிட்டதாக அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்தார்.
12 நாடுகள் பங்கேற்கும் 2 வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஜுன் 5 ந் தேதி முதல் 21 ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியின் ஒளிபரப்பு உரிமையை இ.எஸ்.பி.என்.நிறுவனம் பெற்றுள்ளது. ஸ்டார் கிரிக்கெட் சேனலில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த போட்டி பல்வேறு டெலிவிஷன் சேனல்கள் மூலம் 216 நாடுகளில் ஒளிபரப்பாகிறது.
அரசாங்கத் தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட செலசினே தொலைக்காட்சியின் பொறுப்புவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் ஊடகத் துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கடந்த 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
அதன்படி தற்போது வகித்துவரும் அரச தகவல் பணிப்பாளர் நாயகப் பதவிக்கு மேலதிகமாக அனுஷ பெல்பிட்டவுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், இலங்கை பத்திரிகை நிறுவனத்தின் தலைவர் போன்ற பதவிகளையும்; அனுஷ பெல்பிட்ட இதற்கு முன்னர் வகித்துள்ளார். பட்டதாரியான அவர் தமது பட்டப்பின் படிப்பை அவுஸ்திரேலியாவில் மேற்கொண்டுள்ளார்
மன்னாரிலிருந்து பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் ஏ 32 வீதியைப் புனரமைக்க 4,950 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவிக்கின்றது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கண்காணிப்பின் கீழ் 10 உள்நாட்டு ஒப்பந்தக்காரர்கள் நிர்மானப்பணிகளை மேற்கொள்ள உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் ஏ 32 வீதியை 6.2 மீட்டர் அகலம் கொண்டதாக 114.26 கிலோ மீட்டர் தூரத்துக்கு புனரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வட பகுதியில் நடைபெற்ற மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 3 இலட்சம் மக்களுக்கான ஒரு நாளைக்குரிய உணவு மற்றும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் (11 கோடியே 30 இலட்சம் ரூபா) நிதி தேவைப்படுவதாக “வேள்ட் விசன்’ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக “வேள்ட் விஷன்’ நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் சுரேஷ் பார்ட்லட் தெரிவிக்கையில்;
நிவாரண உதவிகளை வழங்கும் அமைப்புகளுக்கு நிதிஉதவி தற்போது பாரியதொரு பிரச்சினையாக உள்ளது.
ஏற்கனவே வழங்கப்பட்ட நிதிஉதவிகள் முன்னரே திட்டமிட்ட செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டுவிட்டநிலையில் தற்போது நிவாரண உதவிகளை வழங்குவதற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிதி உதவியை இலங்கைக்கு வழங்குவதா இல்லையா என்பது குறித்த அரசியலில் உலக நாடுகள் ஈடுபடக்கூடாது.
ஏனெனில் பாதிக்கப்பட்ட மக்களில் சிறுபிள்ளைகள் பெருமளவில் உள்ளனர். அவர்களின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மோதலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கான தேவை உள்ளது. அம்மக்கள் மீளக் குடியமர்த்தப்படவேண்டியவர்கள்.
இம்மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பலமில்லியன் டொலர் நிதி உதவி தேவைப்படுகிறது. சர்வதேச சமூகத்தின் ஆதரவில்லாமல் இம்மக்களுக்கான உதவித் திட்டங்கள் எதனையும் முழுவளவில் செயற்படுத்த முடியாது.
இலங்கையில் நடைபெற்ற மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை மேற்கொள்வதற்கும் வன்முறையற்ற இலங்கையை உருவாக்குவதற்கும் பங்களிப்புச் செய்வதற்கு சர்வதேச சமூகத்திற்கு இது ஒர் அரிய சந்தர்ப்பம் எனத் தெரிவித்தார்.
யாழ். மாநகரசபை, வவுனியா நகரசபை ஆகியவற்றுக்கான தேர்தலை ஒத்திவைக்கவேண்டும் என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபா அணி) ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டமைப்பான ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: யாழ். மாநகரசபை, வவுனியா நகரசபை ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை அரசு அறிவித்துள்ளது. ஜனநாயக சமூகத்தில் தேர்தல்கள் மக்களின் தெரிவு என்பன முக்கியத்துவம் வாய்ந்தவை எனினும் எமது மக்களின் ஒரு பகுதியினர் பெரும் இழப்புக்களைச் சந்தித்து சொல்லொண்ணா அவலத்திற்கு முகம் கொடுத்து முகாம்களிலும் வைத்தியசாலைகளிலும் வாழ்கின்றனர். இவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய ஆசுவாசப்படுத்த வேண்டிய இன பந்துக்களில் கணிசமானோர் தேர்தல் அறிவிக்கப்பட்ட மாநகரசபை பகுதிகளில் வாழ்கின்றார்கள். இவற்றை மனங்கொண்டு சிறிது காலத்திற்கேனும் தேர்தலை ஒத்திவைப்பது அவசியமானதென கருதுகிறோம்.
வடக்கில் வசந்தம் வீசவேண்டும்: ஜனநாயகம் மிளிர வேண்டும் எனினும் யுத்தம் முடிந்த கையோடு தேர்தல் நடைபெறுவது பொருத்தமற்றதென நாம் கருதுகிறோம் தேர்தலை சிறிது காலத்திற்கேனும் ஒத்திவைக்குமாறு அரசை கேட்டுக்கொள்கின்றோம்.