2009

2009

மீள் குடியேற்றத்திற்கு உதவுவதாக பஹ்ரேய்ன் உறுதி

kalifa-shik-binsalman.jpgஇலங் கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பஹ்ரேய்ன் பிரதமர் கலீபா பின் ஷல்மான் அலி கலீபா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

நேற்றுக் காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் பொதுவான விடயங்கள் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதுடன் மூன்று முக்கிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

வடக்கில் இடம்பெயர்ந்தோரின் புனர் வாழவு மற்றும் மீள்குடியேற்றம் சம்பந்தமாகவும் இப்பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இதற்கான பூரண ஒத்துழைப்பை தமது அரசாங்கம் வழங்குமென பஹ்ரேய்ன் பிரதமர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்டிய பஹ்ரேய்ன் பிரதமர், பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய நாடுகளுக்கும் இது சிறந்த முன்னுதாரணமாக அமையுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலக்கை நோக்கிய திடமான பயணத்தில் கொண்டிருந்த கொள்கையும் துணிச்சலுமே அரசாங்கம் பயங்கரவாதத்தை வெற்றிகொள்ள முக்கிய காரணமாக அமைந்தது என தெரிவித்த அவர், இத்தகைய சந்திப்புகள் இருநாடுகளுக்கிடை யில் நிலவும் நல்லுறவை பலப்படுத்தவும் அதன் மூலம் நாடுகளுக்கிடையிலான வர் த்தக, பொருளாதார நடவடிக் கைகளை மேம்படுத்தவும் உதவுமென தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ, பஹ்ரேய்ன் நாட் டில் தொழில் புரியும் 25,000 இலங்கை யருக்கு அவ்வரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்புகளுக்காக நன்றி தெரிவித்தார். அத்துடன் வடக்கில் அரசாங்கம் மேற்கொள் ளும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பஹ்ரேய்ன் அரசாங்கம் வழங்கி வரும் நிதி மற் றும் ஏனைய ஒத்துழைப்புகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது அமைதியான சூழல் நிலவுவதைக் குறிப்பிட்ட ஜனாதிபதி இத்தருணமானது முதலீடுகளுக்கான சிறந்த வாய்ப்பாக அமையுமெனவும் பஹ் ரேய்ன் முதலீட்டாளர்களுக்கும் இதற்கான வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இலங்கைக்கும் பஹ்ரேனு க்குமிடையில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இரு நாடுகளின் தலைவர்கள் முன்னி லையில் இவ்வொப்பந்தங்கள் கைச்சாத் திடப்பட்டன. இலங்கை மற்றும் பஹ்ரேய்ன் நாடுகளு க்கிடையிலான ஒத்துழைப்புக்கான ஒப்பந் தத்தில் இலங்கையின் சார்பில் வெளிவிவ கார அமைச்சர் ரோஹித போகொல்லா கமவும் பஹ்ரேய்ன் சார்பில் அந்நாட்டின் பிரதிப் பிரதமர் செய்க் மொகமட் பின் முபாரக் அல் காலிபாவும் கைச்சாத்திட்டதுடன் இரு நாடுகளுக்குமிடையிலான பொருளா தார, வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ஒத்து ழைப்புகளுக்கான ஒப்பந்தத்திலும் இவர்கள் கைச்சாத்திட்டனர்.

அத்துடன் இரு நாடுகளுக்குமிடை யிலான சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு மேம்பாடு தொடர்பான ஒப்பந்தம் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் பஹ்ரேய்ன் கலாசார மற்றும் தகவல் தொடர்பான அமைச்சுக்கிடையில் கைச்சா த்தாகின. இவ்வொப்பந்தத்தில் இலங்கை யின் சார்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் நந்தன குணதிலக்கவும், பஹ்ரேயின் சார் பில் அந்நாட்டின் பிரதிப் பிரதமர் செய்க் மொகமட் பின் முபாரக் அல் காலிபாவும் கைச்சாத்திட்டுள்ளனர்.

நேற்றைய இந்நிகழ்வில் அமைச்சர்களான ஏ.எச்.எம். பெளஸி, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், கெஹெலிய ரம்புக்வெல்ல, அநுர பிரியதர்ஷன யாப்பா, ஜோன் செனவிரத்ன, பிரதி அமைச்சர் ஹ¤சேன் பைலா ஆகி யோரும் கலந்துகொண்டனர்

கிழக்கில் அதிஉஷ்ணம்: தென்மேல் பருவ பெயர்ச்சியே காரணம்

கிழக்கு மாகாணத்தில் உஷ்ணம் அதிகரித்திருப்பதற்குத் தென்மேல் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி காலநிலையே காரணம் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்தி ஹெட்டிஹேவா நேற்றுத் தெரிவித்தார்.

திருமலையில் 36.5 சதவீதம், பொத்துவில் 35.1 சதவீதம், மட்டக்களப்பு 33 சதவீதம், அநுராதபுரம் 34 சதவீதம் என்றபடி நேற்று முன்தினம் உஷ்ணம் பதிவாகி இருப்பதாகவும் அவர் கூறினார்.

என்றாலும், இவ்வருடத்தில் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் கடந்த மார்ச், மாதம் குருநாகல் மாவட்டத்திலேயே அதிக உஷ்ணம் பதிவாகி இருப்பதாகவும், அதுவும் 38.1 சதவீதமாக இருந்ததாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டதாவது, தற்போது தென்மேல் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி கால நிலையாகும்.

அதனால் காற்று தென்மேற்காக வீசுகின்றது. இதன் விளைவாகத் தான் கிழக்கு மாகாணத்தில் தற்போது உஷ்ணம் அதிகரித்துக் காணப்படுகின்றது. அதேநேரம், இவ்வருடத்தில் ஜனவரி மாதம் இந்நாட்டில் மிகவும் குறைந்த உஷ்ண நிலை நுவரெலியாவில் காணப்பட்டது. அது 2.1 சதவீத மாகப் பதிவானது என்றார்.

மடுமாதா ஓகஸ்ட் உற்சவம்: பக்தர்கள் இறுதி 4 நாட்களே புனித பிரதேசத்தில் தங்க முடியும்

madhu_mary.jpgமடு மாதா ஓகஸ்ட் திருவிழாவில் கலந்துகொள்ள வரும் பக்தர்கள் இறுதி நான்கு நாட்களுக்கு மாத்திரமே மடு புனிதப் பிரதேசத்தில் தங்க முடியுமென உயர்மட்டத் தரப்பில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

மடு தேவாலயத்துக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இவ்விசேட கலந்துரையாடலில் மன்னார் மறை மாவட்ட ஆயர் உட்பட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் பிரார்த்தனையில் ஈடுபடும் வகையிலும் ஒழுங்குகள் இக்கூட்டத்தின் போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் எதிர்வரும் 06 ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரையில் மடு தேவாலய உற்சவத்துக்காக வரும் பக்தர்கள் மடு புனித பிரதேசத்தில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். உற்சவம் முடிந்ததும் பக்தர்கள் மதவாச்சி சோதனைச்சாவடிக்கூடாக அநுராதபுரம் சென்றுவிட வேண்டும்.

அதனைத் தொடர்ந்து 12 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையிலான இறுதி நான்கு நாட்களும் பக்தர்கள் மடு புனிதப் பிரதேசத்தில் தங்க அனுமதிக்கப்படுவர். ஓகஸ்ட் 06 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் மதவாச்சி சோதனைச் சாவடி திறந்திருக்கும்.

12, 13 ஆகிய தினங்களில் காலை 6 மணி முதல் மாலை 4 மணிவரையிலும், 14 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரையிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் சோதனைச்சாவடி திறந்திருக்கும். விசேட உற்சவ தினமான 15 ஆம் திகதியன்று அதிகாலை மூன்று மணி முதல் மாலை 4 மணி வரையிலும் சோதனைச் சாவடியினூடாக பக்தர்கள் தேவாலயத்தை தரிசிக்க வந்துபோக முடியும்.

இதேவேளை 06 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையில் இரவு 10 மணிக்குப் பின்னரும் 14 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னரும், 15, 16 ஆகிய திகதிகளில் இரவு 10 மணிக்குப் பின்னரும், 17 ஆம் திகதி இரவு 2 மணிக்குப் பின்னரும் மதவாச்சி சோதனைச் சாவடி திறக்கப்பட்டிருக்கும். 

மியன்மார் ஜனநாயகக் கட்சித் தலைவர் மீதான வழக்குத் தீர்ப்பு வெள்ளிக் கிழமை – குற்றவாளியானால் 5 வருட சிறைத்தண்டனை

miyanmar_s.pngமியன் மாரின் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆங் சாங் சுகீ மீதான வழக்கு விசாரணை தீர்ப்பு நாளை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட உள்ளது. இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தைக் கேட்ட பிறகு நீதிபதி தாயுங் நியுந்த் இதைத் தெரிவித்தார்.

அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற 64 வயதான மியன்மார் ஜனநாயகக் கட்சித் தலைவரான ஆங் சாங் சுகீ வீட்டுக் காவலை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்கர் ஒருவர் அவரது வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

வீட்டுக் காவலில் இருப்பவர்கள்,  வெளிநாட்டவர்களைச் சந்திக்கக் கூடாது என்பது விதியாகும். இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆங் சாங் சுகீ 5 ஆண்டு சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்  என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் வெளியாக இருந்த போதிலும் முன்னதாகவே தீர்ப்பு வெளியாக இருப்பதற்கான காரணம் புரியவில்லை என்று ஆங் சாங் சுகீ யின் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆங் சாங் சுகீ-யைச் சந்தித்த அமெரிக்கர் ஜான் டபிள்யூ யெட்டாவுக்கு அதிகபட்சம் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது. குடியேற்ற விதிகளை மீறியது மற்றும் நீச்சல் குளம் இல்லாத பகுதியில் குளித்தது உள்ளிட்ட குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன

கடந்த 20 ஆண்டுகளில் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார் ஆங் சாங் சுகீ

கொழும்பு யாழ்.பஸ் சேவை 1ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்

bussss.jpg“ஏ9′  வீதியூடாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குமான இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவை ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் ஒன்றுவிட்ட ஒரு நாள் ஆரம்பமாகவிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். அத்துடன் மதவாச்சி வரை செல்லும் இரவு நேர தபால் ரயில் சேவையை இவ்வார இறுதிக்குள் வவுனியா வரை நீடிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ஏ9 வீதியூடான யாழ் – கொழும்பு இ.போ.ச. பஸ் சேவை பற்றிக் கேட்டபோது அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்த விபரங்களை கூறினார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குமான இ.போ.ச. பஸ் சேவையை எதிர்வரும் 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. திங்கட்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு தரப்பினருடனான கூட்டத்தின் போது இது குறித்து முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த பஸ் சேவையானது ஒன்றுவிட்ட ஒருநாள் சேவையாகவே இருக்கும். அதாவது முதல்நாள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரும் பஸ்கள் ஒருநாள் கழித்து அதற்கு மறுதினமே மீண்டும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கும்.

இந்த பஸ் சேவைக்கு மக்களிடமிருந்து வரும் ஆதரவுக்கு அமையவே பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அல்லது குறைப்பதா என்பது பற்றி முடிவெடுக்கப்படும்.

இதேநேரம், தற்போது மதவாச்சி வரை செல்லும் இரவு நேர தபால் ரயில் சேவையை வவுனியா வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுடனும் வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ எம்.பி.யுடனும் பேசியிருக்கின்றேன்.

எனவே, இந்த சேவை நீடிப்பை இவ்வார இறுதிக்குள் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.

ஏனெனில், இந்த இரவு நேர தபால் சேவை ரயிலில் மதவாச்சி வரை செல்லும் மக்கள் அங்கிருந்து வவுனியா செல்ல கொழும்பிலிருந்து மதவாச்சி வரை பயணிக்க செலவிடப்பட்ட தொகையைவிட அதிகமாக செலவிடுகிறார்கள். இதை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அழகப்பெரும தெரிவித்தார்.

ரூ. 2200 மில். செலவு ஊவா வெல்லஸ்ஸ பல்கலை ஆக. 5 ஜனாதிபதியால் திறப்பு

university-of-sri.jpgஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கு 2200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, ஊவா மாகாணத்தின் கல்வி மற்றும் உயர் கல்வி மேம்பாட்டுக்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, ஊவா பிரதேச மக்களின் நலனுக்கென அமைக்கப்பட்டுள்ள ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தை ஜனாதிபதி திறந்து வைக்கிறார். இங்கிருந்து பட்டம் பெற்று வெளியேறும் முதலாவது மாணவர் குழுவுக்கு இப்பொழுதே தொழில் கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இலங்கைக்கு ஜி15 இன் தலைமைத்துவம்

இந்தியா உட்பட 15 வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி15 கூட்டமைப்பின் தலைவர் பதவியை ஏற்க இலங்கை இணங்கியுள்ளது. முதலீடு, வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பாகும் இது. இந்த அமைப்பின் தலைவர் பதவி தற்போது இலங்கை வசம் வந்துள்ளது.

கடந்த 1989 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இந்த ஜி15 அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் நிறுவன உறுப்பினர்களில் ஒன்றாக இலங்கை உள்ளது.

இந்த அமைப்பில் இந்தியா, அல்ஜீரியா, ஆர்ஜென்ரீனா, பிரேசில், சிலி, எகிப்து, இந்தோனேசியா, ஈரான், ஜமேக்கா, கென்யா, மலேசியா, மெக்சிக்கோ, நைஜீரியா, பெரு, செனகல், வெனிசூலா, சிம்பாப்வே ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன.

சொஹைப் அக்தார் மீண்டும் சிக்கலில்…

cricket.jpgகிரிக்கெட் உலகில் அடிக்கடி பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சர்ச்சைக்குரிய வேகப்பந்து வீச்சாளர் சொஹைப் அக்தர் மீண்டும் ஒரு சிக்கலில் சிக்கி உள்ளார்.

சொஹைப் அக்தார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்துத் தெரிவித்தது  பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் அனுமதி பெறாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்ற விதிமுறையை அவர் மீறியதாகவும் அதற்கு விளக்கம் அளிக்கும்படியும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன் பதில் அளிக்குமாறு அக்தாரிடம் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்தரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவும்,  அதிசயம் நிகழ்ந்தால்தான் அவரால் தேசிய அணிக்கு திரும்ப முடியும் என்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வஸீம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

லங்காபுத்ர அபி. வங்கியின் கிளை மட்டக்களப்பில் திறப்பு

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்புக் கிளை நேற்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ இவ்வங்கியினை திறந்து வைத்தார்.

இவ்வங்கியின் தலைவர் தலைமையில் நடைபெற்ற இவ்வங்கித் திறப்பு விழாவில் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர்அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண ஆளுநர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம, மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இவ்வங்கியின் கொடுக்கல், வாங்கல் நடவடிக்கை யினை பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார். ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் கிழக்கு உதயத்தின் மூலம் மட்டக்களப்பு மாவ ட்டத்தில் திறக்கப்பட்ட முதலாவது லங்கா புத்ர அபிவிருத்தி வங்கியின் கிளை இதுவென்பது குறிப்பிட த்தக்கது

மைக்கல் ஜாக்சனின் மரணத்தில் புதிய தகவல் – அவரின் டாக்டர் மீதான சந்தேகம் அதிகரிப்பு

maical-jak.jpgமைக்கல் ஜாக்சனின் திடீர் மரணத்திற்கு அவரின் தனிப்பட்ட டாக்டர் கன்ராட் முரே கொடுத்த மயக்க மருந்தே காரணம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. பாப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன், லாஸ் ஏஞ்சல்சின் ஹோல்ம்பி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்த போது, கடந்த மாதம் 25ம் தேதி திடீரென மரணம் அடைந்தார். அப்போது அவருடன் இருந்தவர் அவரின் தனிப்பட்ட டாக்டர் கன்ராட் முர் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த இதய சிகிச்சை நிபுணர்.

ஜாக்சன் மரணம் அடைவதற்கு 24 மணி நேரத்திற்கு முன், “புரபோபல்’ அல்லது “டிப்ரீவன்’ என அழைக்கப்படும் மயக்கம் தரும் மருந்தை அவருக்கு கொடுத்துள்ளார். அதுவே ஜாக்சனின் மரணத்திற்கு காரணமாகியுள்ளது என்றும் புலனாய்வுத் துறையினர் கூறியுள்ளனர். ஜாக்சனின் மரணம் தொடர்பாக பல வதந்திகள் கிளப்பி விடப்படுகின்றன. அவற்றுக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது.  ஜாக்சனின் உயிரை பறிக்கக் கூடிய மருந்துகள் எதையும் என் கட்சிக்காரர் பரிந்துரை செய்யவில்லை என இதற்கு பதிலளிக்கும் டாக்டர் முரேயின் வக்கீல் எட் செர்னோப் கூறியிருக்கின்றார்.

ஜாக்சன் மரணமடைந்த போது,  டாக்டர் முரேதான் அங்கு இருந்துள்ளார். அதனால், அவரின் மீது குற்றம் சாட்டப்படுகிறது. தனக்கு எதிராக பரப்பப்படும் செய்திகளால் டாக்டர் முரே வேதனை அடைந்துள்ளார். 24 மணி நேரமும் பாதுகாவலருடன் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரால் தன் டாக்டர் பணியை தொடர முடியவில்லை. எங்கு சென்றாலும்,  அவருக்கு பல வகையிலும் தொந்தரவுகள் உருவாவதால்,  அவரால் நிம்மதியாக டாக்டர் பணியாற்ற முடியவில்லை என்று எட் செர்னோப் மேலும் கூறியுள்ளார்.

ஜாக்சனின் மரணம் தொடர்பாக டாக்டர் முரேயிடம்,  போலீசார் இதுவரை இரண்டு முறை விசாரணை நடத்தியுள்ளனர். மூன்றாவது விசாரணை கடந்த 24ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால்,  திடீரென ஒத்திவைக்கப்பட்டது. அதற்குப் பதிலாக ஹஸ்டனில் உள்ள அவரின் மருத்துவமனை அலுவலகம் மற்றும் மருந்துகளை தேக்கி வைக்கும் பிரிவை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.