2009

2009

மோசடி இடம்பெறும் வாக்குச் சாவடிகளின் வாக்குகள் கணக்கெடுப்பிலிருந்து நீக்கப்படும் – மீள்தேர்தலின் பின்பே இறுதி முடிவு அறிவிக்கப்படும்

election000.jpgஏதாவ தொரு வாக்குச் சாவடியில் மோசடிகள், குளறுபடிகள் இடம்பெற்றது நிரூபிக்கப்படுமாயின் அவ்வாக்குச் சாவடி வாக்குகள் கணக்கெடுக்கப்படுவதிலிருந்து நீக்கப்படுவதுடன் தேர்தலின் இறுதி முடிவு அறிவிக்கப்படுவதும் நிறுத்தப்படும் என்று தேர்தல் செயலகம் நேற்றுத் தெரிவித்தது.இவ்வாறு இரத்து செய்யப்படும் வாக்குச் சாவடிக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு அதன் பின்னரே இறுதி முடிவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்றும் தேர்தல் செயலகம் குறிப்பிட்டிருக்கிறது.

இதேநேரம் வாக்குச் சாவடிகளினுள் இருந்தபடி தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடவென பெப்ரல் இய க்கத்திற்கும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் செயலக உயரதிகாரியொருவர் கூறினார்.

அவ்வதிகாரி மேலும் கூறுகையில் ஊவா மாகாண சபைக்கும், யாழ்ப்பாண மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்குமான தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளன. தேர்தல் பிரசார பணிகள் யாவும் நேற்று நள்ளிரவுடன் நிறைவு பெற்றுள்ளன. திட்டமிட்டபடி நாளை மறுதினம் 8 ஆம் திகதி வாக்களிப்பு இடம்பெறும். வன்முறைகளின்றி அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப் படுத்தப்பட்டுள்ளன.

தேர்தல் சட்ட ஏற்பாடுகளை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் 5 இலட்சத்து 74 ஆயிரத்து 814 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 3 இலட்சத்து 642 பேரும், யாழ். மாநகரசபைக்கென ஒரு இலட்சத்து 417 பேரும், வவுனியா நகர சபைக்கென 24 ஆயிரத்து 621 பேரும் வாக்களிக்கவுள்ளனர்.

இவர்கள் வாக்களிக்கவென பதுளை மாவட்டத்தில் 507 வாக்கு சாவடிகளும், மொனராகலை மாவட்டத்தில் 307 வாக்குச் சாவடிகளும், யாழ்ப்பாணத்தில் 70 வாக்குச் சாவடிகளும், வவுனியாவில் 18 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட விருக்கின்றன.

இதேவேளை இடம்பெயர்ந்துள்ளவர்கள் வாக்களிக்கவென புத்தளத்தில் 6 வாக்குச் சாவடிளும், அனுராதபுரத்தில் 4 வாக்குச் சாவடிகளும், கொழும்பில் இரு வாக்குச் சாவடிகளும், கம்பஹாவில் இரு வாக்குச் சாவடிகளும் களுத்துறையில் ஒரு வாக்குச்சாவடியும் என்றபடி விசேட வாக்குச் சாவடிகளும் அமைக்கப்படவிருக்கின்றன என்றார்.

2011 இல் நாடளாவிய குடித்தொகை மதிப்பீடு 150 கோடி செலவாகுமென கணிப்பீடு

000sri-lanka.jpg30 ஆண்டுகளின் பின்னர் நாடளாவிய குடித்தொகை மதிப்பீட்டை 25 நிர்வாக மாவட்டங்களிலும் மேற்கொள்ள ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. “அடுத்த குடித்தொகை மதிப்பீடு 2011 இல் இடம்பெறும். அதற்காக இப்போது நாம் ஆயத்தமாகி விடுகிறோம்.இதற்கு எமக்கு நிதி தேவை’ என்று இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுரஞ்ஜன வித்யாரட்ண இணையத்தளமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

கடைசியாக 18 மாவட்டங்களில் 2001 இல் சனத்தொகை மதிப்பீட்டை மேற்கொண்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடைசியாக மேற்கொள்ளப்பட்ட குடித்தொகை மதிப்பீட்டுக்கு 80 கோடி ரூபா செலவானதாகவும் 2011 இல் மேற்கொள்ளப்படவுள்ள சனத்தொகை மதிப்பீட்டுக்கு 150 கோடி ரூபா தேவையென மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தொகை மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களம் கூறுகிறது.

வட,கிழக்கு மாகாணங்களின் பகுதிகள் அச்சமயம் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. அதனால்,வட,கிழக்கு மாவட்டங்களில் அச்சமயம் முழுமையான குடிசன மதிப்பீட்டை மேற்கொள்ளவில்லை.இப்போது யுத்தம் முடிவடைந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் முழுநாடும் கொண்டுவரப்பட்ட பின்னர் 2011 இல் குடிசன மதிப்பீட்டுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.2008 இல் இலங்கையின் சனத்தொகை 20.2 மில்லியன் (2 கோடி 20 இலட்சம்) என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.

ரணில் தலைமையிலான ஐ.தே.க.வினால் மட்டுமே தமிழர் பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்க முடியும்

ranil.jpgதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் அதிகாரப் பரவலாக்களை ரணில் தலைமையிலான ஐ.தே.க.வினால் மட்டுமே முன்வைக்க முடியுமெனத் தெரிவித்த அக்கட்சியின் பொருளாளர் டி.எம்.சுவாமிநாதன் தமிழ் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் வடக்கு உள்ளூராட்சி தேர்தலில் அரசின் சலுகைகளுக்காக வாக்குகளை வீணடிக்காது நீண்ட கால நன்மைக்காக ஐ.தே.க. வுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமெனவும் கோரினார்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து அரசு பலவற்றைக் கூறுகின்றது. தீர்வு தொடர்பில் புதிய அரசியலமைப்பை அரசு முன்னெடுத்தாலும் அது எழுத்தில் மட்டுமிருந்தால் எந்தப் பிரயோசனமுமில்லை. அத்துடன் அதனை தமிழ் மக்கள் ஏற்கப் போவது மில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாதாள உலக கோஷ்டி முக்கிய புள்ளிகள் இருவர் சுட்டுக் கொலை – மாதிவெல, இரத்மலானை பகுதியில் சம்பவம்

பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் இருவர் மாதிவெல மற்றும் இரத்மலானை பிரதேசத்தில் நேற்றுக் காலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆர்மி ரொஷான் என்று அழைக்கப்படும் 36 வயதுடைய கீர்த்தி குமார, பப்பா என்று அழைக்கப்படும் 32 வயதுடைய எம். ரிழ்வான் ஆகிய இருவருமே கொல்லப்பட்டவர்கள் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட சமயமே இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

64-7836 என்ற இலக்க டொயோடா ரக காரில் ஆர்மி ரொஷானை மிரிஹான பொலிஸின் விசேட பிரிவு நிறுத்தி சோதனையிட்டுள்ளது. அதன் போது அவரது காரில் பிஸ்டல் ரக துப்பாக்கிகளும், அதற்கு பயன்படுத்தப்படும் ரவைகளையும் பொலிஸார் மீட்டெடுத்ததையடுத்து அவரை கைது செய்த பொலிஸார், இவர் மறைத்து வைத்திருந்த மற்றைய ஆயுதங்களை கைப்பற்ற அழைத்து சென்றுள்ளனர்.

இவருடன் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்களை இலக்குவைத்து ரொஷான் கைக்குண்டு தாக்குதல் நடத்தியதையடுத்து பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதில் ரொஷான் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் அதிர்ச்சியடைந்த இரண்டு பொலிஸாரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்மி ரொஷான் பல்வேறு கொலை கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸாரால் முக்கியமாக தேடப்பட்டு வந்தவர் என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இரத்மலானை பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த ஒரு பாதாள உலக குழுவை பிடிப்பதற்காக பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளது.

மாளிகாவத்தை பிரதேசத்தில் பாதாள உலக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த குழுவொன்றின் தலைவரான ரிழ்வான் என்பவரின் மறைவிடத்தை அண்மித்த பொலிஸார் அவரை பிடிக்க முற்பட்ட போது பொலிஸாரை ஏமாற்றியுள்ளார். இதனையடுத்து பொலிஸார் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார் என்று கல்கிஸ்ஸை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் மகேஷ் பெரேரா தெரிவித்தார்.

மூதூர் 17 பணியாளர் படுகொலை; சர்வதேச விசாரணைக்கு மீண்டும் வலியுறுத்தல்

body1.jpgபிரெஞ்சு தொண்டர் நிறுவனமான பட்டினிக்கு எதிரான செயற்பாட்டு அமைப்பின் 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சர்வதேச ஆணைக்குழுவொன்று தேவை என்று நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஜூலை நடுப்பகுதிவரை இச்சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லையென்றும் எவரும் குற்றவாளியாகக் காணப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், இது கவலைகளை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மூன்று வருடங்களாக நீதி வழங்கப்பட்டுள்ளது என்று சர்வதேச சமூகம் நம்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டது.”காட்சிப்படுத்துதல் முடிந்து விட்டது’ என்றும் தீவிரமான முறையில் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளுமாறு ஐ.நா.வும் கரிசனையுடைய அரசாங்கங்களும் கூறுவதற்கு இதுவே நேரம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்டக் கொள்கை விடயங்களுக்கான பணிப்பாளர் ஜேம்ஸ் ரோஸ் கூறியுள்ளார்.

இந்தப் பயங்கரமான குற்றச்செயல் தொடர்பாக நீதி வழங்குவதற்கு தன்னால் முடிந்த சகலவற்றையும் செய்வதற்குப் பதிலாகப் பாதிக்கப்பட்ட பட்டினிக்கெதிரான செயற்பாட்டு அமைப்பின் பணியாளர் குடும்பங்கள் மேலும் உள ரீதியாக பாதிப்படைவதற்கான நடவடிக்கைகளுக்கான முயற்சியில் அரசு ஈடுபட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டை ஏனையோர் மீது சுமத்த முயற்சிப்பதன் மூலம் இதனை மேற்கொள்வதாகவும் ரோஸ் கூறியுள்ளார்.

17 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு 3 ஆண்டுகளாகின்றன. பொறுப்பானவர்கள் தொடர்பாக விசாரணை செய்து உண்மையை வெளிப்படுத்துவதற்கு இலங்கை அரசு நெருங்கிவரவில்லை

பதிலாக உள்ளூர் உரிமைகள் குழுக்களுக்கும் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்படுவதாகவும் பிரெஞ்சு அரசுக்கு எதிராக அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு தினமும் 30 கொலை அச்சுறுத்தல்கள்

000-obama.jpgபராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவருக்கான அச்சுறுத்தல்கள் 400 சத வீதமாக அதாவது ஒரு வருடத்தில் மூவாயிரமாக அதிகரித்திருக்கிறது. ஜனாதிபதியின் இரகசிய சேவையில் நூலை எழுதிய ரொனால்ட் கெஸ்லர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் இரகசிய சேவையின் சங்கேதக்குறியீடு “ரெனிகேட்’ என்பதாகும்.

அதில் ஒபாமாவுக்கான சில அச்சுறுத்தல்கள் குறித்து பிரசுரிக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் ரென்னீசீயில் வெள்ளையின மேலாதிக்கவாதிகளின் சதி முயற்சி குற்றச்சாட்டும் இதில் உள்ளடங்கியுள்ளதாக டெய்லி ரெலிகிராப் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

துப்பாக்கி விற்பனைசெய்யும் நிலையத்தில் திருடி 88 கறுப்பின மக்களை சுட்டு, மேலும் 14 பேரை காயப்படுத்தி அமெரிக்க வரலாற்றில் முதலாவது கறுப்பின ஜனாதிபதியை படுகொலை செய்ய சதிமுயற்சி மேற் கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் இந்த விடயத்தை இரகசிய சேவை மூடி மறைத்து விட்டது. ஏனெனில் இந்த விபரங்களை வெளியிடுவது இதே மாதிரியான குற்றச் செயல்களை மேலும் அதிகரிக்கச் செய்துவிடும் என்று இரகசிய சேவை அஞ்சியதே இதற்கு காரணமென இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அநேகமான அச்சுறுத்தல்கள் நம்பத்தகுந்தவையற்றவையாகும். ஆனாலும் ஒவ்வொன்றும் விசாரணை செய்யப்பட்டுள்ளன.

சோமாலியாவை தளமாக கொண்ட இஸ்லாமிய குழுவான அல் சாபாப் ஜனவரியில் ஒபாமாவின் பதவியேற்பு நிகழ்வை குழப்பக்கூடுமென புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு சவால்கிடைத்திருந்தது. இதனையடுத்து இரகசிய சேவையானது 94 பொலிஸ், இராணுவ, பாதுகாப்பு முகவரமைப்புகளை சேர்ந்த 40 ஆயிரம் பேரை பணியில் ஈடுபடுத்தியதாக இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோப்ப நாய்கள் அடங்கிய குழுக்கள் பதவியேற்கும் நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் நிலைகொண்டிருந்தன. அருகிலிருந்த கட்டிடங்கள் கடும் சோதனைக்குள்ளாக்கப்பட்டிருந்தன.  ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்றபின் அவருடைய இரு மகள்மாருக்கும் இரகசிய சேவை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மலியாவுக்கு (11) ரேடியன்ஸ் என்ற சங்கேத குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மற்ற மகள் சஸ்னாவுக்கு (8 வயது) ரோஸ்பட் என்ற குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது.

ஒபாமாவின் மனைவி மிச்சேலுக்கு ரீநைசன்ஸ் என்ற குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் துணை ஜனாதிபதி ஜோபைடனின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், தாயாருக்கு இரகசியசேவையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா கூமாங்குளத்திலிருந்து 366 கிலோ வெடிமருந்துகள் மீட்பு

வவுனியா, கூமாங்குளம் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 366 கிலோ எடையுள்ள சி – 4 ரக அதிசக்திவாய்ந்த வெடிமருந்துகளை விசேட பொலிஸ் குழு கைப்பற்றியுள்ளது. நிவாரணக் கிராமத்தின் நான்காவது பிரிவில் வைத்து கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இந்த பெருந்தொகையான வெடிமருந்துகள் மீட்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

மேற்படி நபர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மற்றுமொரு சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றை அடுத்து வவுனியா நிவாரணக் கிராமத்தின் நான்காவது பிரிவிலிருந்து 35 வயதுடைய விஜயன் என்று அழைக்கப் படும் கந்தைய்யா விஜயகுமார் என்பவரை கைது செய்த பொலிஸார் கடுமையான விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

இந்த விசாரணையின் போது அவர் வழங்கிய தகவலின் படி கூமாங்குளம் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 366 கிலோ எடையுள்ள சி-4 ரக வெடிமருந்துகளையும் மற்றும் உபகரணங்களையும் மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை இந்த நபர் வழங்கிய தகவல்களின் படி பூந்தோட்டம் பிரதேசத்திலிருந்து 24 வயதுடைய கரன் என்றழைக்கப்படும் தர்மலிங்கம் சிவகரன் என்பவரையும் கைது செய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்திற்கும் நெருக்கடிகளுண்டு

Ahilan Gobalakrishnanஒவ்வொரு மனிதனும் அவனது வாழ்க்கைக் காலத்தின் ஒரு கட்டத்தில் உள நெருகடிக்கு உள்ளாகிறார்கள். தமிழ் சமூகத்திலும் கணிசமான பகுதியினர் உளப் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஆனால் உளப் பாதிப்பு தொடர்பான சமூகப் பார்வை காரணமாக அதனை பலரும் வெளிப்படுத்த விரும்புவதில்லை. அதனால் விளைவுகள் பாராதூரமாகின்றது. புலம்பெயர்ந்த நாடுகளின் வாழ்நிலை அவர்கள் மத்தியில் பல்வேறு வாழ்வியல் சவால்களை விட்டுள்ளது. அதில் முக்கியமானது இந்த உளவியல் பாதிப்பு.

இந்த உளவியல் தாக்கம் பற்றிய சில செய்திகளுக்கான இணைப்பு அருகில் உள்ளது. அவையே புலம்பெயர் வாழ்வியலில் உளவியல் தாக்கத்தை எடுத்துக் கூறும்.

வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கொடும்துயரம். – மூன்று வாரங்களில் லண்டனில் நால்வர் தற்கொலை! : த ஜெயபாலன்

தனது குழந்தைகளைக் கொலை செய்த பின் தற்கொலை செய்ய முயன்ற தாய்

அந்த மழழைகளின் இறுதி நிகழ்வு : த ஜெயபாலன்

இவை பரவலாக அறியப்பட்ட சில செய்திகள் ஆனால் மௌனமான அழுகைகள் எமக்குத் தெரிவதில்லை.

உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்திற்கும் நெருக்கடிகளுண்டு விபரீதங்கள் ஏற்படமுன் உதவியை நாடுவது அவசியம். அந்த நோக்கிலேயே உள ஆலோசனைச் சேவையை மறைந்த அகிலன் கோபால கிருஸ்ணனின் நினைவாக அரம்பிக்கப்பட்டு உள்ளது.

உள ஆலோசனைச் சேவைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள் : 0333 123 0 123 அல்லது 0203 371 0006 (உள்ளுர் கட்டணம் மட்டுமே)

Advise_Line_04Aug09ஆகஸ்ட் 4ல் பன்னிரண்டு மாதங்களுக்கு முன் அகிலன் கோபாலகிருஸ்ணன் மருத்துவ காரணங்களால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணத்தினால் தன்னுயிரை தானே மாய்த்துக் கொண்டார். நேற்று (ஓகஸ்ட் 4ல்) அகிலனை நினைவு கூரும் வகையில் உள ஆலோசனை வழங்குவதற்கான தொலைபேசிச் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டு உள்ளது. அகிலன் கோபாலகிருஸ்ணனின் பெற்றோர்கள் அகிலன் பவுண்டேசனூடாக இந்தத் தொலைபேசிச் சேவையை ஆரம்பித்து வைத்தனர். கிழக்கு லண்டன் நியூஹாமில் அலுவலகத்தைக் கொண்டுள்ள இச்சேவையை வெளிநாடுகளில் உள்ளவர்களும் அணுக முடியும். ஆனால் நேரடியான சந்திப்புக்கள் லண்டனிலேயே தற்போது ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

உளவியல் மருத்துவர்களான டொக்டர் சுஹாசினி டொக்டர் யோகன் ஆகியோர் தற்போது ஆலோசனைகளை வழங்க உடன்பட்டு உள்ளனர். மேலும் சில உளவியல் மருத்துவர்களும் ஆலோசனை வழங்க முன்வந்துள்ளனர். தொலைபேசிச் சேவையூடான ஆலோசனைகளுக்கு உளவியல் ஆலோசனைத் துறையில் பயிற்சி பெற்ற லீனா என்பவர் பொறுப்பாக உள்ளார். அவருடன் பிரிசாந்தி, கிறிஸ்ரின், சொருபீம், மோகன் ஆகியோர் கடமையாற்றுவர்.

இச்சேவை ஆரம்ப நிகழ்வு ஈஸ்ற்ஹாம் ஹைஸ்ரீற் மனோ பார்க்கில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் உள ஆலோசனைச் சேவையின் தேவையை வலியுறுத்தி தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். நியுஹாம் துணை மேயர் போல் சத்தியநேசன் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.

தேர்தல்கள் வரலாம், போகலாம் தமிழரின் அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுக்க இடமளியோம் – சம்பந்தன்

tna-logo.jpgதேர்தல் கள் வரலாம், போகலாம். ஆனால், தமிழ் மக்களின் அடிப்படைக் கொள்கைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது. சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சகல அதிகாரங்களுடனும் கூடிய சுயாட்சித் தீர்வை தமிழ்க் கூட்டமைப்பு தயாரித்துக் கொண்டிருக்கிறது. அதனை விரைவில் ஜனாதிபதியிடமும் இந்திய அரசிடமும் தமிழ்க் கூட்டமைப்பு முன்வைக்கும் என்று அக்கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவரும் திருமலை மாவட்ட எம்.பி.யுமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சம்பந்தன், யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலை முழு உலகும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது. அதனாலேயே தேர்தலில் போட்டியிடுகின்றோம் என்றும் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது;

தனித்துவமான வகையில் சுய நிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ் மக்களுக்கு சகல அதிகாரங்களுடனுமான முழுமையான சுயாட்சி வழங்கப்பட வேண்டும். காணி, பாதுகாப்பு, விவசாயம், கல்வி, கைத்தொழில்கள் அனைத்தும் உள்ளடங்கிய ஆட்சி எமது மக்களின் கைகளில் இருக்க வேண்டும். இவற்றை நிர்வகிப்பதற்கான நிதியை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் திரட்டுவதற்கு அனுமதி இருக்க வேண்டும். இனப்பிரச்சினைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கின்ற தீர்வுத் திட்டம் இதுவேயாகும்.

ஏற்கனவே, இந்திய வெளிவிவகார அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்தியாவுடன் இணைந்தே இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று நாம் வலியுறுத்தியுள்ளோம். இந்தியாவும் அதற்குச் சம்மதித்துள்ளது. எமது இனப்பிரச்சினைக்கு 13 ஆவது அரசியல் திருத்தம் தீர்வாக அமையாது. 1997 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல்களின் போது தங்களைத் தாங்களே ஆள்கின்ற சுய நிர்ணய உரிமைக்காகவே கூட்டமைப்புக்கும் அதனோடிணைந்த கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் வாக்களித்தனர். இது தொடர்பாக அரசுடனும் சர்வதேசத்துடனும் பேசுவதற்கு கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது என்று குறிப்பிட்டார்.

சர்வதேச அழுத்தத்தின் காரணமாக சர்வதேச மகாநாட்டைக் கூட்டிய ஜனாதிபதி 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக பேச்சை ஆரம்பிக்கலாமென்று கூறியதாகவும் இதனால் ஜே.வி.பி. வெளியேறியதாகவும் ஏனைய தரப்புகளும் ஜனாதிபதியை இரகசியமாகச் சந்தித்து எச்சரித்ததாகவும் தெரிவித்த சம்பந்தன் இவ்விடயங்களைத் தொடர்ந்து 13 ஆவது திருத்தச் சட்டம் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டதாகவும் கூறினார். தமிழ் மக்கள் யாருக்கும் அடிமைகள் அல்லவென்றும் அவர்களை யாரும் ஏமாற்ற முடியாதென்றும் கூறிய சம்பந்தன் அங்கு தொடர்ந்தும் தெரிவித்ததாவது;

தேர்தல்கள் வரலாம், போகலாம். ஆனால், நாங்கள் எமது அடிப்படைக் கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது. எங்களுடைய எதிர்காலச் சந்ததி சுதந்திரமாகவும் கௌரவமாகவும் வாழ வேண்டும் என்பதே எமது நோக்கம். தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகின்ற அமைச்சர்கள் மக்களுக்குச் சில உதவிகளை வழங்குகிறார்கள். குறிப்பாக நாங்கள் யாழ்ப்பாணம் சென்ற விமானத்தில் கூட சில கணினிகளைக் கொண்டு வந்த அமைச்சர்கள் அதனை யாழ்ப்பாணத்தில் வைத்து வழங்கியிருக்கிறார்கள்.

சர்வதேச ரீதியாக இது பாரிய குற்றமாகும். தேர்தல் காலங்களில் இவ்வாறான உதவிகளைச் செய்ய முடியாது. இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிளெல்லாம் இதற்கான தடைகள் இருக்கின்றன. ஆனால், யாழ்ப்பாணத்தில் அவை மீறப்படுகின்றன. விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டது. அதனோடு எல்லாப் பிரச்சினையும் முடிந்து விட்டது என்பதை உலகுக்கு வெளிக்காட்டவே அரசாங்கம் இந்தத் தேர்தலை நடத்துகின்றது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புசபை, ஐ.நா. செயலாளர் நாயகம், ஐரோப்பிய ஒன்றியம், கனடா, அவுஸ்திரேலியா, ஐக்கிய இராஜ்ஜியம் உட்பட பல உலக நாடுகள் இந்தத் தேர்தலை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன. இதனாலேயே இந்தத் தேர்தல் முக்கியமானதாக இருக்கின்றது. இதற்காகவே நாங்கள் இந்தத் தேர்தல்களில் போட்டியிடுகின்றோம்.

வவுனியா நகரசபை, யாழ்ப்பாணம் மாநகரசபை போன்றவற்றுக்காக நடைபெறவுள்ள இந்தத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு உள்ளக சுய நிர்ணய உரிமையுடனான தீர்வு வழங்கப்பட வேண்டுமென்று ஒஸ்லோவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவோ அப்போது எதிர்க்கவில்லை. ஏனெனில், தமிழ் மக்களுக்கான தீர்வு அதுவே என்பது அவர்களுக்கும் தெரியும்.

13 ஆவது திருத்தச் சட்டத்தின் படி காணி வழங்கல், பொலிஸ் உட்பட விவசாயம், கைத்தொழில் போன்ற அனைத்தும் மத்திய அரசிடம் இருக்கின்ற நிலையில் அங்கு பொறுப்பாக இருக்கின்ற ஒருவரைச் சார்ந்ததாக இருக்கின்ற நிலையிலான தீர்வு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது. குறிப்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் போன்றோர் தனித்து எந்தவிதமான முடிவையும் எடுக்க முடியாத நிலையில் இருக்கின்றமை இன்று அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில், தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய ஆட்சியே இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையும். இது எங்களால் பெற முடியாதது அல்ல. பெற முடியாதென்று கருதுபவர்கள் ஒதுங்கியிருங்கள். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பானது இந்தத் தீர்வுத் திட்டத்தையே தயாரித்துக் கொண்டிருக்கின்றது. மிக விரைவில் இதனை அரசிடமும் இந்தியா உட்பட்ட சர்வதேச சமூகத்திடமும் முன்வைப்போம் என்றும் தெரிவித்தார்.

இவ்ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார், பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன், சொலமன் சு.சிறில், துரைரட்ணசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவில் அகதியாகக் குடியேறிய முதலாவது இலங்கையர் மரணம்

us-flag.jpgஇலங்கை யில் இருந்து முதன் முறையாக அமெரிக்காவுக்கு அகதியாகச் சென்று குடியேறிய ராஜா ரட்ணம், தமது 75ஆவது வயதில் கடந்த வியாழக்கிழமை காலமானதாக இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.

ராஜா ரட்ணம், கடந்த 1953ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமது 19ஆவது வயதில், இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு அகதியாகச் சென்று குடியேறினார். அமெரிக்காவில் வெளியாகிய முதலாவது இலங்கை செய்தித் தாளையும் கலிபோர்னியா மாநிலத்தில் வைத்து இவர் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.