2009

2009

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மாயம்- இதுவரை தகவல் இல்லை

02-rajasekara-reddy.jpgஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர், 7 மணி நேரத்துக்கு மேலாகியும் எங்கு சென்றது என்று கண்டுபிடிக்கப்படவில்லை. அதையடுத்து, ஆந்திர முதல்வர் எங்கு இருக்கிறார் என்பது குறித்தோ, அவரது பாதுகாப்பு குறித்தோ எந்தத் தகவலும் இல்லை.

ஆந்திராவின் கர்னூலில் இருந்து சித்தூருக்கு இன்று காலை ஹெலிகாப்டரில் சென்றார் ராஜசேகர ரெட்டி. சுமார் 9.35 மணிக்கு, அவரது ஹெலிகாப்டருனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதுவரை, முதல்வர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஆந்திர அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் உள்பட ஏழு ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு்ள்ளன. அதுதவிர, ஆளில்லாத விமானமும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதாலும், மோசமான வானிலை காரணமாகவும் தேடுதல் பணி பாதிக்கப்பட்டிருப்பதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

ஆந்திர முதல்வரின் ஹெலிகாப்டர் வனப்பகுதியில் இறங்கியதால், அவர் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லபப்படிருப்பதாகவும், அங்கு நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தத் தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், எந்தத் தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஸ்வைன் – இந்தியா முழுவதும் இதுவரை 107 பேர் மரணம்

swine.jpgபன்றிக் காய்ச்சலுக்கு ஆந்திராவில் இன்று இரண்டு பேர் உயிரிழந்தனர்.  இதன் மூலம் இதுவரை நாடு முழுவதும் 107 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் இந்த நோய் நேற்று வரை சுமார் 3 ஆயிரத்து 049 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2 லட்சத்து 68 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பிரேசில் நாட்டில் 644 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் 556, அர்ஜென்டினாவில் 465 பேர் உயிரை பறிகொடுத்துள்ளனர். இந்தியாவில் இந்த எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.

நடப்பு சாம்பியன்கள் இலகு வெற்றி

sania-mirza1111.jpgஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியன்களான ரொஜர் பெடரர் மற்றும் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் இலகு வெற்றியீட்டினர். இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி நேற்று முன்தினம் நியூயோர்க்கில் ஆரம்பமானது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர், அமெரிக்காவின் டெவின் பிரிட்டொனை எதிர்கொண்டார். போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய முதல் நிலை வீரர் பெடரர் 6-1, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றியீட்டினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்றுமொரு போட்டியில் அமெரிக்காவின் 5 ஆம் நிலை வீரர் அன்டி ரொடிக் ஜெர்மனியைச் சேர்ந்த பிஜோர்ன் பவோவை 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.

இதேபோன்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் இரண்டாம் நிலை வீராங்கனை செரீனவில்லியம்ஸ் தனது முதல் சுற்றுப் போட்டியில் சக நாட்டு வீராங்கனை ஒல்கா கொவொட்சோவாவை 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சற்றுக்கு முன்னேறினார். இதில் மற்றுமொரு முன்னணி வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்று போட்டியில் போராடி வெற்றியீட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா போராடி வெற்றியீட்டினார். பெலாரஸ் வீராங்கனை ஒல்கா கொவோர்ட்சோவாவை நேற்று முன்தினம் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் சந்தித்த சானியா 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வெற்றிபெற்றார். அடுத்து அவர் தனது இரண்டாவது சுற்றில் உலக தரவரிசையில் 10 ஆவது இடத்தில் இருக்கும் பிளவியா பெனட்டாவை சந்திக்கிறார்.

பெனட்டா தனது முதல் சுற்றுப் போட்டியில் ருமேனியாவின் எடினா கொலோவிட்ஸை 6-0, 6-4 என்ற நேர் செட் கணக்கில் இலகுவாக வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்கியசோதி சரவணமுத்துவிடம் குற்றத் தடுப்பு பொலிஸார் விசாரணை

sarawanamuttu.jpgமாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து .கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றத் தடுப்பு பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடொன்றுக்கு சென்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கொழும்புக்கு திரும்பும் போது பாக்கியசோதி சரவணமுத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், எதன் அடிப்படையில் அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இந்தோனேஷியாவில் இன்று நில நடுக்கம். இலங்கைக்கு ஆபத்தில்லை!

tunami.jpgஇந்தோ னேஷியா ஜாவா தீவுப்பகுதியில் இன்று 7.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.  இந்த நிலநடுக்கத்தின் போது இந்தோனேஷிய தலைநகரில் உள்ள குடியிருப்புகளின் சில கட்டிடங்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கபப்டுகிறது.

எனினும் இதன் காரணமாக இலங்கைக்கு எதுவித ஆபத்தும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மற்றும் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

லிபியாவில் பாகிஸ்தான் பிரதமருடன் ஜனாதிபதி சந்திப்பு!

pak-pm-sl-pr.jpgலிபிய தலைநகர் திரிபோலியில் நடைபெறும் அந்நாட்டின் 40வது சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானிய பிரதமர் யூசுப் ரசா கிலானியை சந்தித்து உரையாடினார். அத்துடன் அந்நிகழ்வில் பங்குபற்றுவதற்காக வருகை தந்திருக்கும் பல வெளிநாட்டுத் தலைவர்களையும்  தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்;.

பாகிஸ்தான் பிரதமருடன் நடத்திய இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது இரு நாடுகளுக்குமிடையில் சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதற்கு இரு தரப்பு கலந்துரையாடல்களின் முக்கியத்துவம் குறித்து இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.

அதனூடாக ஏற்படும் இராஜதந்திர உறவுகள் நாடுகளுக்கிடையில் வர்த்தக,  பொருளாதார,  சமூக உறவுகளை வலுப்படுத்துவதற்கு காரணமாக அமையுமெனவும் பாகிஸ்தான் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

தகவல் மற்றும் தொடர்புசாதன தொழில்நுட்பப் பரிமாற்று வேலைத் திட்டமொன்று இரு நாடுகளுக்குமிடையில் செயற்படுத்துவதற்கும் இலங்கையில் செயற்படுத்தப்பட்டு வரும்

“ஈ அறிவகம்” திட்டத்தை முன்மாதிரியாக கொண்டு பாகிஸ்தான் அரசின் மூலம் தகவல் தொழில்நுட்ப வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பிலும் இரு நாட்டுத் தலைவர்களும் இச் சந்திப்பின்போது கவனம் செலுத்தினர்

யாழ். மேயராக யோகேஸ்வரியை நியமிக்க ஐ.ம.சு.முன்னணி தீர்மானம் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தகவல்

jaffna_mayor-2009-08-11.pngயாழ்ப் பாண மாநகர சபையின் மேயராக யோகேஸ்வரி பற்குணராஜாவை நியமிக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளதாக முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார். தென் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு நேற்று கொழும்பு,  மகாவலி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார். அங்கு அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

யாழ். மாநகர சபையின் பிரதி மேயராக என். இளங்கோவை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவர்களின் பெயர் விபரங்கள் நேற்று தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. யாழ். மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர்களுக்கான பெயர்களை ஈ.பி.டி.பி. சிபார்சு செய்திருந்ததோடு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ{ம் பிரதி மேயர் பதவி தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கோரியிருந்தது.

எனினும், ஐ.ம.சு. முன்னணி கூடி இது குறித்து ஆராய்ந்து ஈ.பி.டி.பி. முன்வைத்த இருவரையும் நியமிக்க முடிவு செய்யப்பட்டது. யாழ். குடாவில் குறைந்தளவு முஸ்லிம்களே வசிக்கின்றனர். இத்தேர்தலில் புத்தளம் உட்பட ஏனைய பகுதிகளில் இருந்தே அதிகமான முஸ்லிம்கள் வாக்களித்தனர். இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்தில் அதிக எண்ணிக்கையான முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்ட பின்னர் பிரதி மேயர் பதவியை அ.இ.மு.காங்கிரஸக்கு வழங்க அக்கட்சிக்கும் ஈ.பி.டி.பி.க்கும் இடையில் உடன்பாடு காணப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். 

இலங்கை – நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது 20க்கு 20 போட்டி இன்று

kumar-sangakkara.jpgஇலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது 20க்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டு அரங்கில் இரவுப் போட்டியாக ஆரம்பமாகவுள்ளது. இரண்டு அணிகளும் இரண்டு 20க்கு 20 போட்டிகளில் மோதவுள்ளன.  இரண்டாவது போட்டி எதிர்வரும் 4ம் திகதி நடைபெறும்.

இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதிய 2 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று தொடரையும் அள்ளிச் சுருட்டியது. இலங்கை அணியிடம் டெஸ்ட் போட்டியில் தோல்வியுற்ற நியூசிலாந்து அணி 20க்கு 20 போட்டியில் வெற்றி பெறும் எண்ணத்தில் களத்தில் குதிக்கும் இப்போட்டியில் வெற்றி பெற்றால் இலங்கை அணிக்கு பழி தீர்த்தாற் போல் ஆகிவிடும்.

இலங்கை அணிவீரர்களும் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இப்போட்டியில் நிரூபிப்பார்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கனடாவில் “உண்மையைப் பேசவிடு” ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்

canada.jpgகனடிய தமிழர் சமூகமும், கனடிய தமிழ் மாணவர் சமூகமும் கனடிய ஊடகவியலாளர் சமூகத்தை இணைத்து முன்னெடுக்கும் “உண்மையைப்  பேசவிடு” ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் எதிர்வரும் 4 ம் திகதி வெள்ளிக்கிழமை 205  Wellington Street (Front & John) Toronto வில் அமைந்துள்ள கனடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முன்பாக நடைபெறவுள்ளது. 

டாக்டர் சிவபாலனும் பிணையில் விடுவிப்பு

வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவேளை, அரசுக்கு எதிரான அவதூறுச் செய்திகளை செய்தி ஏஜென்ஸிகளுக்கு வழங்கிக் குற்றமிழைத்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்தாவது தமிழ் டாக்டரும் பிணையில் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் பணியாற்றிய டாக்டர் எஸ்.சிவபாலன் நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நிஷாந்தஹப்பு ஆராய்ச்சி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.

அவரை விடுவிப்பதற்கு ஆட்சேபம் இல்லை என பொலிஸார் தெரிவித்ததை அடுத்து இரண்டு லட்சம் ரூபா உறுதிப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார். அவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு டாக்டர்களையும் கடந்த 24ஆம் திகதி நிபந்தனைப் பிணையில் செல்ல கொழும்பு பிரதம நீதிவானால் அனுமதிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே.