ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர், 7 மணி நேரத்துக்கு மேலாகியும் எங்கு சென்றது என்று கண்டுபிடிக்கப்படவில்லை. அதையடுத்து, ஆந்திர முதல்வர் எங்கு இருக்கிறார் என்பது குறித்தோ, அவரது பாதுகாப்பு குறித்தோ எந்தத் தகவலும் இல்லை.
ஆந்திராவின் கர்னூலில் இருந்து சித்தூருக்கு இன்று காலை ஹெலிகாப்டரில் சென்றார் ராஜசேகர ரெட்டி. சுமார் 9.35 மணிக்கு, அவரது ஹெலிகாப்டருனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதுவரை, முதல்வர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஆந்திர அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் உள்பட ஏழு ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு்ள்ளன. அதுதவிர, ஆளில்லாத விமானமும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதாலும், மோசமான வானிலை காரணமாகவும் தேடுதல் பணி பாதிக்கப்பட்டிருப்பதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
ஆந்திர முதல்வரின் ஹெலிகாப்டர் வனப்பகுதியில் இறங்கியதால், அவர் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லபப்படிருப்பதாகவும், அங்கு நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தத் தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், எந்தத் தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அருட்சல்வன்
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் பறக்கவே தகுதியற்ற ஒன்று என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
ராஜசேகர ரெட்டி இன்று பயணித்த ஹெலிகாப்டர் பெல் 430 ரக ஹெலிகாப்டர் ஆகும். இந்த ஹெலிகாப்டர் பறக்கவே தகுதியற்ற நிலையில் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக இதன் பயணத் தன்மை குறித்த சான்றிதழ் புதுப்பிக்கப்படவே இல்லை என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இப்படிப்பட்ட ஹெலிகாப்டரை தொடர்ந்து ஆந்திர அரசு ஏன் பயன்படுத்தி வந்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், இப்படிப்பட்ட ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருவது குறித்து முதல்வருக்குத் தெரிவிக்காமல் அதிகாரிகள் மறைத்து விட்டனரா அல்லது இதில் பெரும் சதி வேலை எதுவும் மறைந்துள்ளதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
அருட்செல்வன்
முதல்வர் ராஜசேகர ரெட்டியின் ஹெலிகாப்டர் மாயமானது குறித்து கண்டுபிடிக்க அமெரிக்க பாதுகாப்புத்துறையின் உதவியை ஆந்திர அரசு, மத்திய அரசின் மூலமாக நாடியுள்ளதாக ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் ரமாகாந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இன்று இரவு 7 மணிக்கு ஆந்திர மாநில நிதியமைச்சர் ரோசையா, தலைமைச் செயலாளர் ரமாகாந்த் ரெட்டி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது ரெட்டி கூறுகையில், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், நல்லமலை வனப்பகுதியில், காலை 9.15 முதல் 9.25 மணிக்குள் முதல்வர் சென்ற ஹெலிகாப்டரை சில கிராமத்தினர் பார்த்துள்ளனர். அதுதான் ஹெலிகாப்டர் கடைசியாக பார்க்கப்பட்டது. அதன் பின்னர் ரேடியோ சிக்னல் துண்டிக்கப்பட்டு விட்டது.
முதல்வரின் ஹெலிகாப்டர் கடைசியாக பார்க்கப்பட்ட இடம் நல்லமலைக் காட்டில், பிரகாசம் மற்றும் ஓங்கோல் மாவட்டத்தை நோக்கியுள்ள வனப் பகுதியாகும். எனவே அந்த பகுதியில் தற்போது தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
தேடுதல் பணியில் ராணுவ, விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தற்போது மோசமான வானிலை நிலவி வருவதாலும், மழை பெய்து வருவதாலும் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடத்துவது தடை பட்டுள்ளது.
இருப்பினும் சிஆர்பிஎப் மற்றும் ஆந்திர மாநில சிறப்புக் காவல் படையினர் தரை மார்க்கமாக தேடுதல் பணியில் ஈடுபடுவதற்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா – இஸ்ரோ உதவி…
சம்பந்தப்பட்ட வனப்பகுதியின் சாட்டிலைட் படங்களை பெறுவதற்காக அமெரிக்க பாதுகாப்புத்துறையின் உதவியை நாடியுள்ளோம். சந்தேகப்படும் வனப்பகுதியின் சாட்டிலைட் படங்கள் கிடைத்தால் அது தேடுதல் நடவடிக்கைக்கு உதவியாக இருக்கும்.
அதபோல இஸ்ரோவின் உதவியையும் நாடியுள்ளோம். இஸ்ரோ தனது சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்துள்ளது. அது மிகவும் குறைந்த உயரத்தில் பறக்கக் கூடியது. இரவிலும், மழையிலும் கூட அது பறக்க முடியும். அதன் மூலமும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இதுவரை ஹெலிகாப்டர் எந்த இடத்தில் உள்ளது என்பது குறித்த தகவல் இல்லை.
அது பழைய ஹெலிகாப்டரா, பறக்கும் தகுதியுடன் உள்ளதா, இல்லையா என்பது குறித்து ஆராய இப்போது நேரம் இல்லை. முதல்வரை பத்திரமாக மீட்க வேண்டும் என்பதில் மட்டுமே நாங்கள் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம் என்றார் ரெட்டி.
பார்த்திபன்
அருட்செல்வன்
தற்போது மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் குறிப்பிட்ட அந்தச் செய்தி தமது இணையத்தளத்திலிருந்த பழைய செய்தி என்றும், பல காலமாக தமது இணையத்தளத்தில் புதிய செய்திகளைச் சேர்க்கவில்லையென்றும் குறிப்பிட்ட அந்த ஹெலிகாப்டர் தற்போது பறப்பதற்கு தகுதியானதாகவேயுள்ளது என மறுப்பறிக்கை விட்டுள்ளார்கள்.
பார்த்திபன்
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உள்ளிட்ட ஐந்து பேரும் பலியாகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்னூல் மாவட்டம் ரொல்லபென்டா என்ற இடத்தில் முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் மலைக் குன்றின் மீது நொறுங்கிய நிலையில் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. கர்னூலிலிருந்து 74 கிலோமீட்டர் தொலைவில் அந்த மலைக் குன்று உள்ளது.
ஹெலிகாப்டர் மலை மீது மோதி விழுந்துள்ளதாகவும், முற்றிலும் எரிந்து போன நிலையில் அது காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. அதில் பயணித்த யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பி்ல்லை என்றும் செய்திகள் கூறின.
ஹெலிகாப்டர் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதை இந்திய விமானப்படை அதிகாரி சாகர் பாரதி உறுதி செய்துள்ளார். விமானப்படை ஹெலிகாப்டர்கள்தான், ரெட்டி பயணித்த ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்ட இடம் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலைக் குன்று என்பதால் விமானப்படை ஹெலிகாப்டர்களால் அங்கு இறங்க முடியாத நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஹெலிகாப்டர் இறங்க முடியாத நிலையில் இருப்பதால் விமானப்படை பாராசூட் பிரிவு கமாண்டோக்கள் அனுப்பப்பட்டனர்.
அவர்கள் சற்று முன்னர் மலைப் பகுதியில் இறக்கி விடப்பட்டனர். இதையடுத்து ஹெலிகாப்டரை நெருங்கிய அவர்கள், அங்கு ஐந்து உடல்கள் இருப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து ரெட்டி உள்ளிட்ட ஐவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
ரெட்டி மரணச் செய்தி அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் விவரம்…
முதல்வர் ராஜசேகர ரெட்டி
சுப்ரமணியம்- முதல்வரின் முதன்மைச் செயலாளர்.
வெஸ்லி – முதல்வரின் முதன்மை பாதுகாப்பு அதிகாரி.
கேப்டன் எஸ்.கே.பாட்டியா – ஹெலிகாப்டர் கேப்டன்.
கேப்டன் எம்.எஸ். ரெட்டி- ஹெலிகாப்டர் துணை கேப்டன்.
இடைக்கால முதல்வர் ரோசய்யா
முதல்வர் ராஜசேகர ரெட்டி அகால மரணம் அடைந்ததைத் தொடர்ந்து மூத்த அமைச்சரும், நிதியமைச்சருமான கே.ரோசய்யா இடைக்கால முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Thatstamil