2009

2009

தம்பலகாமத்தில் குழந்தைகளுக்கான ஆடைத் தொழிற்சாலை

திரு கோணமலை மாவட்டம் தம்பலகாமத்தில் ‘ரை ஸ்டார்’ நிறுவனத்தின் 34ஆவது ஆடைத் தொழிற்சாலையைக் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மாகாண ஆளுனர் ரியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம ஆகியோர் நேற்று வைபவ ரீதியாக திறந்து வைத்தனர். இத்தொழிற்சாலையில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா  மத்திய அமைச்சர்களான சுசந்த புஞ்சிநிலமே எஸ்.எம். சந்திரசேன, முதலீட்டு ஊக்குவிப்பு சபைத் தலைவர் தம்மிக்க பெரேரா, பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டறவு அபிவிருத்தி உதவி அமைச்சருமான நஜீப் ஏ மஜீத் மற்றும் ஜனாதிபதியின் புதல்வரும் ‘இளைஞர்களுக்கு நாளை’ அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ உட்பட மாகாண சபை உறுப்பினர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இத்தொழிற்சாலையில் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆடைகள் தயாரிக்கப்படும்; முதலாவது கேள்வி ஒப்பந்தம் பிரித்தானியாவிலிருந்து கிடைத்துள்ளதாக ரை ஸ்டார்’ நிறுவனத்தின் தலைவரான குமார் தேவபுர தெரிவித்துள்ளார்.

செனல் 4 விசாரணைக்காக அரச உயரதிகாரி லண்டன் செல்ல ஏற்பாடு!

ExtraJudicialKillingsஇலங்கை இராணுவத்திற்கு அபகீர்த்தி  ஏற்படுத்தும் நோக்கில் பிரித்தானியாவின் செனல் 4 ஊடக நிறுவனம் அண்மையில் வெளியிட்ட வீடியோக் காட்சி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் உயரதிகாரி ஒருவர் லண்டனுக்கு விஜயம் செய்யவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் சக்திகள் தொடர்பில் பிரித்தானியா அரசாங்கத்திற்கு குறித்த அதிகாரி தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் போலிப் பிரச்சாரங்களை தடுப்பதற்கு சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக  மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹலுகல்ல தெரிவித்துள்ளார்.

வீதி அபிவிருத்திக்கு ரூ.11,095 மில் செலவு: 7.513 கி.மீ. நீளமான பாதைகள் புனரமைப்பு

2004ம் ஆண்டு முதல் 2009 ஆகஸ்ட் 31ம் திகதி வரையான காலப் பகுதியில் மகநெகும திட்டத்தினூடாக 7,513 கிலோ மீட்டர் நீளமான பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. இதற்கு 11,095 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆனால் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் 10 கிலோ மீட்டர் நீளமான பாதை கூட அபிவிருத்தி செய்யப்பட்டது. கிடையாது என தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

தென் மாகாணத்தில் 978 வீதி அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இதற்கு 938 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச் சர், பாரிய நெடுஞ்சாலை அபிவிருத்தித் திட்டங்களுக்காக 148,734 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தற்போதைய ஆட்சியில் வீதி அபிவிருத்திக்கு எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஐ.தே.க. தலைவர் காலியில் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது,

தென்பகுதி உட்பட நாடு பூராவும் பாரிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். ஆனால் இந்த ஆட்சியில் வீதி அபிவிருத்திக்கு எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஐ.தே.க. தலைவர் கூறியிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

ஐ.தே.க. தலைவரின் இத்தகைய கருத்துக்களினால் மக்களின் எண்ணத்தை மாற்ற முடியாது. நாட்டிலுள்ள சகல வீதிகளையும் அபிவிருத்தி செய்ய ஐ.தே.க. திட்டமிட்டுள்ளதாக ஐ.தே.க. தலைவர் கூறியுள்ள போதும் எந்த ஒரு திட்டமும் செயற்படுத்தப்பட்டது கிடையாது. ஒவ்வொரு தேர்தலிலும் அவர் தேர்தல் விஞ்ஞாபனமொன்றை வெளியிட்டு பல திட்டங்களை முன்வைப்பார். ஆனால் அவற்றில் எதுவும் நடைமுறைப்படுத்தப்படாது.

பல பாரிய நெடுஞ்சாலைத்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. கொழும்பு -மாத்தறை நெடுஞ்சாலை திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதோடு 2010ல் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. கொழும்பு-கண்டி நெடுஞ்சாலை மற்றும் கொழும்பு-கண்டி மாற்று நெடுஞ்சாலை என்பன ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்துக்கு 95,244 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

இது தவிர மாகாணங்களுக்கான இணைப்பு வீதி இரத்தினபுரி- பலங்கொடை ஊடக பண்டாரவளை வரையான வீதி, பதுளை கண்டி மாற்று வீதி, ஒன்பது மாகாணங்களிலுமுள்ள வீதிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் வீதி விஸ்தரிப்பு, சுனாமியினால் சேதமான வீதிகளை மறுசீரமைத்தல், கண்டி-யாழ்ப்பாணம் ஏ-9 வீதியை அபிவிருத்தி செய்தல் உட்பட வீதி அபிவிருத்திக்கென 148,734 மில்லியன் செலவிடப்படவுள்ளது.

இது தவிர மத்திய அரசினூடாகவும் மாகாண சபைகளினூடாகவும் பல வீதி அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னார் பாலம், கடுகஸ்தொட்ட பாலம், மனம்பிடிய பாலம், கிண்ணியா பாலம், அருகம்பை பாலம் என்பன அமைக்கப்பட்டுள்ளதோடு கொழும்பு வாகன நெரிசலை தடுக்க நுகேகொடை, களனிய மேம்பாலங்கள் என்பனவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. தெஹிவளை மேம்பாலம் பூர்த்தியடையும் நிலையில் உள்ளது. 17 மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வடக்கு வசந்தம், கிழக்கு உதயம் திட்டங்களின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன என்றார்.

வடக்கில் மின் விநியோக விஸ்தரிப்பு – ரூ. 25 மில்லியன் செலவில் 5 மின் திட்டங்கள் ஆரம்பம்

வட மாகாணத்தில் மின்சார விநியோகத்தை விஸ்தரிக்கும் வகையில் ஐந்து மின் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கு 25 மில்லியன் செலவிடப்படுமென மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர். வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் இந்த திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படும்.

வவுனியாவில் இரண்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் மற்றும் பூநகரி ஆகிய இடங்களில் தலா ஒவ்வொரு திட்டங்களும், மன்னாரில் மற்றொரு திட்டமும் அடுத்த சில தினங்களில் ஆரம்பித்து வைக்கப்படும். வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு தேவையான மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பிலிருந்து வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பூநகரி, பரந்தன் பிரதேசத்திற்கு அதிஉயர் அழுத்தம் கூடிய மின்சாரம் கிடைக்கும்வரை மின்பிறப்பாக்கிகள் மூலம் மின்சாரம் வழங்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாக். சுல்பிகார் கப்பலை பாதுகாப்பு செயலர் பார்வை

ships000.jpgநல் லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்த மான ‘சுல்பிகார்’ கப்பலை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டார்.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள இந்தக் கப்பலை பார்வையிடச் சென்ற பாதுகாப்புச் செயலாளரை கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் சாஹித் இல்யாஸ் வரவேற்றார்.

பாதுகாப்புச் செயலாளருடன் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசரசமரசிங்க, கடற்படையின் பொது நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் ரியர் அட்மிரல் எஸ். ஏ. எம். ஜே. பெரேரா, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் கேர்ணல் சயில் குர்ராம் ஹஸ்ஸான் அலாம் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கப்பலை பார்வையிட்ட பாதுகாப்புச் செயலாளருக்கு கடற்படைத் தளபதியும் கப்பலின் கட்டளை அதிகாரியும் அந்தக் கப்பலின் வசதிகள் மற்றும் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக விளக்கமளித்துள்ளனர்.

14 அதிகாரிகள் மற்றும் 188 கடற் படைவீரர்களுடன் நான்கு நாள் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை வந்திருந்த இந்தக் கப்பல் தனது பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றுக் காலை கொழும்பு துறைமுகத்திலிருந்து கராச்சி நோக்கி புறப்பட்டுச் சென்றதாக கடற்படையின் பதில் பேச்சாளர் கொமாண்டர் அதுல செனரத் தெரிவித்தார்.

மட்டு. மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையில் திடீர் ‘தீ’ – விமானப்படையால் நோயாளர்கள், ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்பு

mhantivu.jpgமட்டக் களப்பு மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலை அமைந்துள்ள பிரதேசத்தில் திடீரென நேற்று அதிகாலை ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் சிக்கிய நோயாளர்களையும் ஊழியர்களையும் விமானப்படையினர் பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளனர்.
 
நேற்றுக்காலை 6.00 மணியளவில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சுமார் ஐந்து மணித்தியால போராட்டத்திற்கு பின்னர் தீயை பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும் விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் எவ்வித உயிரிழப்புக்களோ பாரிய சேதகங்களோ ஏற்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார். விமானப்படையினர் துரிதமாக செயற்பட்டதை அடுத்து பாதுகாப்பாக மீட்டெடுக்கப்பட்ட 13 பேரும் மட்டக்களப்பு விமானப்படைத் தளத்தில் உள்ள வைத்தியசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த தீவிபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :- மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிருவாகத்தின் கீழ் இயங்கி வரும் மாந்தீவு தொழு நோய் வைத்தியசாலை பிரதேசத்தில் அதிகாலை சுமார் 5.30 மணியளவில் திடீரென தீ பிடித்துள்ளது.

வைத்தியசாலையிலிருந்து சுமார் அரை கிலோ மீற்றர் தொலைவில் மட்டு. விமானப் படைத் தளம் அமைந்துள்ளதால் தகவல் அறிந்து அங்கு உடனடியாக விரைந்த அவர்கள் தீ ஏனைய பிரதேசங்களுக்குப் பரவுவதற்கு முன்னர் விமானப் படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டரை பயன்படுத்தி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அங்கு சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, மட்டு. விமானப் படை அதிகாரி விங்.கொமாண்டர் ரி. டி. ஏ. ஹெரிசன் தலைமையிலான குழுவினர் படகுகளை பயன்படுத்தி 13 பேரை உடனடியாக மீட்டெடுத்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவத்தில் வைத்தியசாலையின் கட்டடத்திற்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதெனச் சுட்டிக்காட்டிய அவர் தீ விபத்துக்கான காரணங்கள் எதுவும் இதுவரை தெரியவரவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். மாந்தீவு தொழு நோய் வைத்தியசாலையில் ஏற்பட்ட இத்தீவிபத்தினால் இவ்வைத்தியசாலைக்கு பாரிய சேதம் எதுவும் ஏற்படவில்லையென பணிப்பாளர் டாக்டர் முருகானந்தம் தெரிவித்தார்.

இவ்வைத்தியசாலையில் நேற்று ஏற்பட்ட தீவிபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு விமானப் படை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம். முருகானந்தம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ ஊழியர்கள், பொலிஸ் உயரதிகாரிகள், வைத்தியசாலையின் அதிகாரிகள் இவ்வைத்தியசாலைக்கு சென்று சம்பவத்தை நேரில் பார்வையிட்டுள்ளனர்.

இவ்வைத்தியசாலையின் கட்டடத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும் இவ்வைத்தியசாலையைச் சுற்றி படர்ந்திருந்த பற்றைகள், புற்கள் தீப்பிடித்து எரிந்துள்ளதாகவும் வைத்தியசாலைக்குள் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

இங்கிருந்து நோயாளர்கள் விமானப் படை வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு வைக்கப்பட்டதாகவும் விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

(மட்டு. மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீயை விமானப்படை ஹெலிகொப்டர் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை படத்தில் காண்க}

மட்டக்களப்பு நகரில் பாரிய குண்டுச் சத்தம் – செயலிழக்கசெய்யப்பட்டதாக அறிவிப்பு

udaya_nanayakkara_brigediars.jpgமட்டக் களப்பு நகரில் நேற்று பிற்பகல் 1.25 மணியளவில் பாரிய குண்டுச் சத்தமொன்று கேட்டது. மட்டக்களப்பு பிரதேசத்தில் மீட்கப்பட்ட குண்டுகள், கல்லடியிலுள்ள இராணுவ முகாமில் செயலிழக்கச்செய்யப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தனர்.

இப்பாரிய சத்தத்தினால் மட்டக்களப்பு நகர் மற்றும் கல்லடி போன்ற பகுதிகளிலுள்ள கட்டடங்களின் கண்ணாடிகள் உடைந்து நொருங்கியுள்ளதுடன், பல கட்டடங்கள் அதிர்ந்துள்ளன.

குறிப்பாக, கல்லடியிலுள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக் காரியாலயத்தின் கண்ணாடிகள் நொருங்கியுள்ளன. அத்துடன் கல்லடியிலுள்ள இலங்கை மின்சார சபையின் அலுவலகத்திலிருந்த கண்ணாடிகளும் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாணத்தின் புனர்நிர்மாணப் பணிகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க ஜப்பானின் ஜெயிக்கா நிறுவனம் முன்வந்துள்ளது.

080909japan.jpgஇலங்கை அரசுடன் இணைந்து வடமாகாணத்தின் புனர்நிர்மாணப் பணிகளுக்கு உதவி மற்றும் எனைய ஒத்துழைப்புக்களை வழங்க ஜப்பானின் ஜெயிக்கா நிறுவனம் முன்வந்துள்ளது.

ஜெயிக்கா நிறுவனத்தின் திட்டம்; மற்றும் பொருளாதார உட்கட்டமைப்பு திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நாயகம் மசாமி புவா தலைமையிலான குழுவினர் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாத் பதியுதீனை,அமைச்சின அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினர்.

உயிரியல்வாயு காற்று மூலம் 159 சிறிய மின் திட்டங்களுக்கு அனுமதி; 2 வருடங்களில் பூர்த்தி

காற்று, உயிரியல் வாயு மற்றும் சிறிய நீர் மின் திட்டங்களினூடாக 500 மெகாவோர்ட் மின்சாரம் பெறுவதற் காக 159 சிறிய ரக மின் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்தது. இந்தத் திட்டங்கள் இரு வருடங்களில் பூர்த்தி செய்யப்படவுள்ளன.

இலங்கையின் மொத்த மின்சாரத் தேவையில் 10 வீதத்தை சிறிய ரக மின் திட்டங்களினூடாக பெற மின்சக்தி எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. காற்றினூடாக 80 மெகாவோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ள தாகவும் அமைச்சு கூறியது.

குப்பை கூளங்கள், கரும்புச் சக்கை, உமி என்பவற்றினூடாக மின்சாரம் உற்பத்தி செய்யும் பல திட்டங்கள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இவற்றினூடாக 130 மெகாவோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்படுகிறது. இரண்டு வருட காலத்தினுள் ஆரம்பிக்கப்படாத மின் திட்டங்களின் அனுமதிகள் இரத்துச் செய்யப்பட்டு வேறு தரப்பினர்களுக்கு வழங்கப்படும் எனவும் அமைச்சு எச்சரி த்துள்ளது.

9. 9. 9 கற்பிட்டியில் 6 நட்சத்திர ஹோட்டல்

sri-lanka-hotels.jpgஇலங் கையில் முதல் தடவையாக ஆறு நட்சத்திர ஹோட்டலொன்று அமைக்கப்படவுள்ளது. கற்பிட்டி பகுதியில் அமைக்கப்படவிருக்கும் இந்த ஹோட்டலுக்கான அடிக்கல் இன்று காலை நடப்படும்.

உலகிலேயே முன்னணியில் திகழும் ஹோட்டல் நிர்வாக நிறுவனமான ‘சிக்ஸ் சென்ஸஸ்’ இந்த ஆறு நட்சத்திர ஹோட்டலை முகாமைத்துவம் செய்யவிருப்பது இலங்கையின் சமாதானத்துக்கும் புகழுக்கும் கிடைத்திருக்கும் பெரும் கீர்த்தி என சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

இலங்கை சுற்றுலாச் சபையில் நேற்று மாலை, கற்பிட்டியில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் ‘டச் பே ரிசோட்’ எனும் ஆறு நட்சத்திர ஹோட்டல் குறித்து விளக்கும் செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது.

இதில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டில் சுமார் 30 வருடகாலமாக நீடித்துவந்த பயங்கரவாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் முடிவுக்கு வந்ததையடுத்து சர்வதேச தரம் கொண்ட நிறுவனங்கள் நாட்டில் முதலீடு செய்யவும் முகாமைத்துவம் செய்யவும் முன்வந்துள்ளன. இதன் மூலம் சுற்றுலாத்துறை என்றுமில்லாதவாறு உயர்ந்த ஸ்தானத்தை அடையவுள்ளதெனவும் அவர் தெரித்தார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் சுற்றுலா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க, ‘டச்பே ரிசோட்ஸ்’ தலைவர் நீல் த சில்வா, இலங்கை சுற்றுலாத்துறை ஊக்கவிப்பு பணியகத்தின் தலைவர் பேர்னார்ட் குணதிலக்க, டச்பே ரிசோட்ஸ் பிரதம அபிவிருத்தி அதிகாரி பெட்ரிக் கூட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் நவீன் திஸாநாயக்க கருத்து தெரிவிக்கையில்:- உலகின் முன்னணியில் திகழும் ‘சிக்ஸ் சென்ஸஸ்’ நிறுவனம் இலங்கை கரையோரத்துக்கு வருவது எமது நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விடயமாகும். இது நீண்ட கால திட்டமாகும். 2011 இல் இது நிறைவு பெறுமென எதிர்ப்பாக்கின்றோம். ஆறு நட்சத்திர ஹோட்டலை அமைப்பதன் மூலம் 2010 ஆம் ஆண்டு இறுதியில் சுமார் ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கற்பிட்டி டச்பே தீவில் 09-09-2009 ஆம் திகதியாகிய இன்று காலை 9 மணி 9 நிமிடமும் 9 செக்கனில் ஆறு நட்சத்திர ஹோட்டலுக்கான அடிக்கல் நடப்படவுள்ளது. இந்நிகழ்வுக்காக நான்கு மதங்களைச் சேர்ந்த மத குருமாரும் வரவழைக்கப்பட்டிருப்பதாக ‘டச்பே ரிசோஸ்ட்’ ஹோட்டலின் தலைவர் நீல் த சில்வா கூறினார்.

‘டச்பே ரிசோட்ஸ்’ ஆறு நட்சத்திர ஹோட்டலானது 175 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்படவுள்ளது. 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பப்பில் இயற்கையான சதுப்பு நிலத்திற்கு மத்தியில் இது அமைக்கப்படும். முதற்கட்டமாக 5 ஆயிரம் அறைகள் அமைக்கப்படவுள்ளன.

பின்னர் அவை விரிவு படுத்தப்படும். ஒரு அறைக்கு ஒரு இரவுக்கு முதற்கட்டமாக ஆகக் குறைந்தது 850 டொலர் வீதம் அறவிடத் தீர்மானித்திருப்பதாகவும் நீல் த சில்வா தெரிவித்தார்.

இரண்டு கட்டடங்களை மாத்திரமே கொண்டு உருவாக் கப்படவிருக்கும் இந்த ஆறு நட்சத்திர ஹோட்டலின் முகப்பு வழமைபோல் கடலை நோக்கி அமையாது வித்தியாசமாக ஏரிப்புறமாக அமையவிருப்பது இதன் சிறப்பம்சம் எனவும் அவர் கூறினார்.

நாட்டில் சமாதானம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இலங் கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து ள்ளது. இயற்கை எழில் கொண்ட கற்பிட்டி பகுதிக்கான மவுசு அதிகரித்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் 4 ஆயிரம் அறைகள் மாத்திரமே அப்பகுதியிலுள்ள விடுதிகளில் இருக்கிறது.

இது எமக்கு கவலையளிக்கிறது. அதனை நிவர்த்தி செய்யும் விதமாக ‘டச்பே ரிசோட்ஸ்’ எனும் ஆறு நட்சத்திர ஹோட்டல் ‘சிக்ஸ் சென்ஸஸ்’ முகாமைத்து வத்தின் கீழ் அங்கு அமைக்கப்படவிருப்பது சுற்றுலாத்து றைக்கு மட்டுமன்றி இலங்கைக்கே பெருமை சேர்க்கும் விடயமென செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் பேர்னார்ட் குணதிலக்க தெரிவித்தார்.