2009

2009

வழக்கு விசாரணையின் போது திசநாயகத்திற்கு கடும் தண்டனை வழங்குமாறு அரச தரப்பு கோரவில்லை – அமைச்சர் ராஜித

rajitha_senarathna00jpg.jpgஊடக வியலாளர் திசநாயகத்துக்கு வழங்கப்பட்ட 20 வருட கடூழிய சிறைத் தண்டனையை குறைக்கக் கூடிய வாய்ப்பு இருந்தும் அவரது தரப்பு சட்டத்தரணிகள் அதற்கு எதுவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. வழக்கு விசாரணையின் போது திசநாயகத்துக்கு கடுமையான தண்டனை வழங்குமாறு அரச தரப்பினால் எதுவித கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லையென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மகாவலி நிலையத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :-

ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதையோ காரணமின்றி தண்டிக்கப்படுவதை நாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை. புலிகளுடன் தொடர்பு வைத்து அரசாங்கத்தின் மீது சேறு பூச முயன்றதாலே திசநாயகம் கைதாகி நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்கப்பட்டார்.

மூன்று குற்றச்சட்டுகளுக்கும் அவருக்கு 20 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஒன்றாக கணிக்கும் வகையில் அமுல்படுத்துமாறு அவரின் சட்டத்தரணி கோரியிருந்தால் சில வேளை அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறைக்கப்பட்டிருக்கும். மேன்முறையீடு செய்வதன் மூலமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை குறைக்க வாய்ப்புள்ளது.

திசநாயகத்துக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  இந்த விடயத்தில் தலையிடவோ எதிர்ப்புத் தெரிவிக்கவோ அமெரிக்காவுக்கு எதுவித அருகதையும் கிடையாது.

ஈராக்கில் பணியாற்றிய பல வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பல வருடங்களாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். அல்கைதா போன்ற அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி இவர்கள் அமெரிக்க படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நமது நாட்டு ஊடகவியலாளர்கள் குறித்து பேச அமெரிக்காவுக்கு எதுவித அருகதையும் கிடையாது.

ஈராக்கிலுள்ள ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்காத சர்வதேச அமைப்புகள் திசநாயகத்துக்கு மாத்திரம் விருது வழங்கியுள்ளன, இலங்கை ஊடகவியலாளர்களின் உரிமை க்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு நாம் சகல ஒத்துழைப்பும் வழங்கத் தயாராக உள்ளோம்.

‘லங்கா’ ஊடகவியலாளர்கள்

தனிநபருக்குச் சொந்தமான இடமொன்றுக்கு சட்டவிரோதமாக நுழைந்ததாலே மூன்று லங்கா ஊடகவியலாளர்களும் கைது செய்யப்பட்டனர்.  ஒரு வாரத்திற்கு முன் ஜனாதிபதி இந்த இடத்துக்கு வந்து சென்றுள்ளார். அதனால் ஜனாதிபதி குறித்தே இந்த ஊடகவியலாளர்கள் துருவித் துருவி விசாரித்துள்ளனர். ‘லங்கா’ பத்திரிகை அச்சு ஊடகமாக இருந்தும் கூட இவர்கள் வீடியோ கமெராக்களையும் எடுத்துச் சென்று படப்பிடிப்புச் செய்துள்ளனர்.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஜனாதிபதியும் இந்த விடயத்தில் தலையிட்டு தேவையான பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.

நாடு திரும்பும் இந்திய மருத்துவ குழுவுக்கு கொழும்பில் பாராட்டு – ரூ. 25 மில். பெறுமதியான மருந்து பொருட்களும் கையளிப்பு

indiadr.jpgமோதல் கள் காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கென இந்தியாவிலிருந்து இலங்கை வருகை தந்திருந்த மருத்துவக் குழு தமது ஆறு மாதகால பணியை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ளது. புதுமாத்தளனிலும் வவுனியாவிலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இந்த மருத்துவக் குழுவைச் சேர்ந்த வைத்தியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு நேற்று தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் போஷாக்கு மற்றும் சுகாதார பராமரிப்பு சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இதன்போது நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் 25 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டன. இந்த மருந்துப் பொருட்களின் ஒரு தொகுதியினை நிகழ்வின் போது இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் அமைச்சர் நிமல் சிறிபாலவிடம் கையளித்தார்.

நாட்டில் மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தவேளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரால் கிரீன் ஓசன் கப்பல் மூலம் புல்மோட்டைக்கு கொண்டு செல்லப்பட்ட நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை உதவிகளை முன்னெடுப்பதற்காக கடந்த மார்ச் 09 ஆம் திகதி இந்தியாவிலிருந்து மருத்துவக் குழுவொன்ற இலங்கை வந்து மருத்துவ முகாமை நடத்தி வந்தது.

புல்மோட்டையில் 02 மாத காலம் அமைக்க ப்பட்டிருந்த இந்த மருத்துவ முகாம் 21 தடவைகள் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட 7 ஆயிரம் இடம்பெயர்ந்தவர்களுக்கும் புல்மோட்டையை வதிவிடமாகக் கொண்ட 100க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கும் சிகிச்சையளித்து வந்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் கருத்து தெரிவிக்கையில் :-

இலங்கையில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது என்பதற்காக நாம் இந்தியாவிலிருந்து வைத்தியர்களை வரவழைக்கவில்லை. இங்கே போதுமானளவு வைத்தியர்கள் இருக்கின்ற போதும் இலங்கையுடனான மிகவும் நெருங்கிய நட்பு காரணமாகவே இந்த மருத்துவக் குழு இங்கு வந்து சேவையாற்றியது. புல்மோட்டை மணற் பரப்பில் 72 மணித்தியாலங்களுக்குள் 50 கட்டில்களுடன் மருத்துவ முகாமை ஆரம்பித்து சிகிச்சைகளை முன்னெடுத்தோம்.

இது பின்னர் 115 கட்டில்களாக விரிவுபடுத்தப்பட்டது. இந்திய மருத்துவர்கள் தமது சேவையை சரிவர முன்னெடுக்க சுகாதார அமைச்சின் அதிகாரிகள் எமக்கு பூரண ஒத்துழைப்பைத் தந்தனர். இந்நிலையில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் வவுனியாவில் தங்க வைக்கப்பட்டதையடுத்து அங்கு அம்மக்களுக்கு சிகிச்சையளிக்கும் நோக்கில் இந்திய மருத்துவ முகாம் வவுனியாவின் மெனிக்பாம் மற்றும் செட்டிக்குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டது.

அங்கே நான்கு மாத காலம் சேவையாற்றிய மருத்துவக் குழு 40 ஆயிரம் நோயாளர்களுக்கு சிகிச்சையளித்த அதேவேளை 1000 சத்திர சிகிச்சைகளையும் முன்னெடுத்துள்ளது. இந்திய அரசாங்கம் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக 125 மில்லியன் (இலங்கை) ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை வழங்குவதாக ஏற்கனவே வாக்குறுதியளித்திருந்தது.  இதன்படி 100 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மிகுதி 25 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டன.

இடைத்தங்கல் முகாம்களில் இருந்து மேலும் 10,000 பேர் வெள்ளிக்கிழமை விடுவிப்பு

badi000000.jpgஇலங் கையின் வடக்கே இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும மக்களில் மேலும் 10,000 பேர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கையின் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் BBC தமிழோசையிடம் தெரிவித்தார்.

இது குறித்த அறிவித்தல்கள் அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். விடுவிக்கப்படும் இந்த மக்கள் முதலில் ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் அவர்களின் இருப்பிடங்களுக்கு செல்லும் வரை மாவட்ட அரசாங்க பொறுப்பில் அவர்கள் இருப்பார்கள் என்றும், ஆறு மாத காலம் வரை அவர்களுக்கு தேவையான உலர் உணவுகள் அரசால் வழங்கப்படும் என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறுகிறார் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கான தொழில் வாய்ப்புகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

இடம்பெயர் மக்களை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் : இடதுசாரி முன்னணி கோரிக்கை

999protest.jpgயுத்த காலப்பகுதியில் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவித்தல், தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வினை வழங்குதல், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் திஸ்ஸநாயத்தை விடுவித்தல் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நேற்று  கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சுதந்திர மற்றும் ஜனநாயக அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இடதுசாரி முன்னணியைச் சேர்ந்த விக்கிரமபாகு கருணாரட்ண ஆர்ப்பாட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,

“யுத்த காலப்பகுதியில் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் பல துன்பங்களை இன்றுவரை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுவிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இது ஒரு தேசிய ரீதியான பிரச்சினை. எனவே இப்பிரச்சினைக்கான தீர்வினை முன்வைக்க உடனடியாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்.

இன்றைய காலக்கட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்தே காணப்படுகின்றன. ஆனால் அதற்கீடாக சம்பள உயர்வுகள் வழங்கப்படுவதில்லை. இந்த வகையில் தோட்டத் தொழிலாளர்கள் கேட்கும் 500 நாளாந்த சம்பளம் நியாயமானது. குறைந்த பட்சம் 15,000 ரூபாவையாவது அடிப்படை சம்பளமாக அரச, தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.  இன்று பலர் பயங்வாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள். அண்மையில் கூட ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, அவருக்குக் கடூழியச் சிறையும் வழங்கப்பட்டிருக்கின்றது.  அவர் ஓர் ஊடகவியலாளர். ஊடகவியலாளர் ஒருவருக்குத் தனது கருத்தையும், உண்மை நிலையை எடுத்துக் கூறும் உரிமையும் உள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் பலர் இன்று பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். எனவே அச்சட்டத்தை அரசு உடனடியாக நீக்க வேண்டும்” என்றார். 

ஸ்னேகா கொடும்பாவி எரிப்பு

999sneha.jpgதிரு வண்ணாமலையில் நடிகை ஸ்னேகா செருப்பு அணிந்து கிரிவலம் போனதை கண்டித்து நாமக்கல்லில் இந்து மக்கள் கட்சியினர் ஸ்னேகாவின் கொடும்பாவியை எரித்தனர்.

சமீபத்தில் திருவண்ணாமலை கோவிலுக்கு கிரிவலம் சென்ற இவர் காலில் செருப்பு அணிந்து சென்றார். இதையடுத்து இந்து மத அமைப்பினர் அவருக்கு செருப்புகளை பார்சல் அனுப்பி தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இதை தொடர்ந்து இந்து மக்கள் கட்சி போராட்டம்  நடத்தும் என கூறப்பட்டது. ஆனால், ஸ்னேகா தனக்கு காலில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால். வெறும் காலுடன் நடக்க முடியாது. அதனால் துணி செருப்பு போட்டு நடந்தேன் என விளக்கம் கொடுத்தார். இதை அடுத்து அந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஆனால், இந்த விளக்கம் இந்து மக்கள் கட்சியின் அனுமன் சேனா பிரிவினரை சமாதானப்படுத்தவில்லை. அவர்கள் நாமக்கல்லில் மோகனூர் ரோட்டில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகம் முன் ஸ்னேகாவின் கொடும்பாவியை எரித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்ட கூட்டத்தினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் லேசான பதட்டம் ஏற்பட்டது.

பல்கலைக்கழக அசம்பாவிதங்களுக்கும் ஒரு சில அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு- ஐ.தே.க. எம்.பி. குற்றச்சாட்டு

26parliament.jpgபல்கலைக் கழகங்களுக்குள் இடம்பெறுகின்ற அசம்பாவிதங்களுடன் ஒரு சில அரசியல்வாதிகளுக்கு நெருங்கிய தொடர்பிருக்கின்றது. அரசியல்வாதிகள் அங்கு கூத்தாடுவதற்கு இடமளிக்கப்படுகிறது என ஐக்கிய தேசியக்கட்சி எம்.பி. அகிலவிராஜ் காரியவசம் செவ்வாய்க்கிழமை சபையில் குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பல்கலைக்கழகங்கள் திருத்தச்சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அகிலவிராஜ் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இன்று நாடு முழுவதிலும் இயங்குகின்ற அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பின்பற்றப்படுகின்ற பாடநெறிகளில் 60 வீதமானவை எமது நாட்டுக்கும், எமது நாட்டு பொருளாதார நன்மைகளுக்கும் அபிவிருத்திக்கும் பொருத்தமானதாக அமையவில்லை. இத்தகைய பாடத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டியது உயர் கல்வி அமைச்சின் பொறுப்பாகும். மேலும் கொழும்பு பல்கலைக்கழகம் தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழகங்களில் பாரிய வளப்பற்றாக்குறைகள் நிலவுகின்றன. கணினிப் பற்றாக்குறை அதற்கான விரிவுரையாளர்களின் குறைபாடுகள் என பல விடயங்கள் தீர்க்கப்படவேண்டியுள்ளன. இவ்விடயங்களில் அமைச்சு கவனம் செலுத்தவேண்டும் என்றார்.

கையடக்க தொலைபேசிகளை மாணவர் பாவிக்க முற்றாகத்தடை

mobile-phone.jpgஅரச, தனியார் பாடசாலை வளவினுள் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளை பாவிப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். பாடசாலை மாணவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கையடக்கத் தொலைபேசிகளை பாட சாலை வளவினுள் கொண்டு வருதல் அல்லது பாவித் தல், கையடக்கத் தொலை பேசி மூலம் படம் பிடித்தல் போன்ற அனைத்து செயற்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று பாடசாலை வளவினுள் ஆசிரியர்களும் பாடசாலை பணியாளர்களும் பாடசாலை நேரத்தில் கையடக்கத் தொலைபேசிகளை செயலிழக்க வைத்த நிலையில் வைத்திருக்க வேண்டும். வகுப் பறைகளிலோ மாணவர்களுக்கு முன்னிலையிலோ இத்தொலைபேசிகள் மூலம் உரையாடக்கூடாது.

பாடசாலை வளவினுள் புகைப்படக் கருவிகளையோ, வீடியோ கருவிகளையோ மாணவர்கள் பாடசாலை வளவினுள் கொண்டு வர அனுமதிக்கக் கூடாது. ஏதாயினும் தேவையொன்றிற்காக இவற்றைக் கொண்டு வர தேவையேற்படின் அது பற்றிய அனுமதியை பாடசாலை அதிபர் எழுத்து மூலம் வழங்குதல் வேண்டும்.

இவ்வாறு அமைச்சின் செயலாளர் எம்.எம்.என்.டி. பண்டார சகல பாடசாலை அதிபர்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக அறிவித்துள்ளார்.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த யாழ். கோட்டை படையினரால் புனரமைப்பு

999jaffna_fort.pngபுலிகளால் சேதப்படுத்தப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த யாழ். கோட்டையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரும் வகையில் புனரமைக்கப்படவுள்ளது. வடமாகாண ஆளுநரின் உத்தரவுக்கிணங்க யாழ். படைத் தளபதியின் வழிகாட்டலில் இராணுவத்தின் 51 ஆவது படைப்பிரிவினர் இந்த புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுவருவதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

1618 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கீஸர் இந்தக் கோட்டையை அமைத்தனர். அதன்பின்னர் 1658 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் இக்கோட்டையை மேலும் விஸ்தரித்து புனரமைத்தனர்.

பின்னர் புலிகள் தமது பயங்கரவாத நடவடிக்கைக்கு இக்கோட்டையைப் பயன்படுத்தினர். இங்கிருந்துதான் புலிகள் படையினருக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்த யுத்த நடவடிக்கை காரணமாக யாழ் கோட்டை பெருஞ்சேதத்துக்குள்ளனது. புராதன நினைவுச்சின்னங்களையும் புலிகள் அழித்தனர்.

1996 ஆம் ஆண்டு படையினர் மேற்கொண்ட ரிவிரஸ  நடவடிக்கையால் யாழ் கோட்டையை படையினர் முற்றாகக் கைப்பற்றினர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இக்கோட்டையைப் பாதுகாத்து உல்லாசப் பயணிகளைக் கவரும் இடமாக மாற்றியமைக்கும் நோக்கில் இங்கு இப்போது புனரபை;புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் மேலும் அறிவித்துள்ளது.

ஐ நா அதிகாரி வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது:பான் கீ மூன்

banki-moon_elter.jpgஇலங் கையில் ஐக்கிய நாடுகளின் சிறார்கள் நல அமைப்பான யூனிசெஃப்பின் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டரை நாட்டை விட்டு வெளியேறுமாறு இலங்கை அரசு கூறியுள்ளதை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் விமர்சித்துள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறப்பட்டுள்ள ஜேம்ஸ் எல்டர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரங்களை செய்து வந்தார் என்று இலங்கை அரசு அவர் மீது குற்றம் சாட்டுகிறது. இலங்கையில் போர் நடைபெற்ற நேரத்தில் அதில் சிக்கிய சிறார்களின் நிலைமை தொடர்பில், தொடர்ந்து ஊடகங்களுக்கு ஜேம்ஸ் எல்டர் தகவல்களை வழங்கி வந்தார்.

இலங்கையில் யுனிசெஃப் அமைப்பின் பேச்சாளரான ஜேம்ஸ் எல்டர் அவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு இலங்கை அரசு எடுத்துள்ள முடிவு குறித்து ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலர் தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் ஐக்கிய நாடுகள் அமைப்பினர் செய்து வரும் பணிகள் குறித்தும் ஐ நா வின் தலைமைச் செயலர் தனது முழு நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார் என்று ஐ நா வின் பேச்சாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சீன நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 35 பேர் பலி

999china.jpgசீனாவில் ஹனான் மாநிலத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் காஸ் வெடிப்பு ஏற்பட்டதில் 35 தொழிலாளிகள் பலியானார்கள். 44 பேரைக் காணவில்லை. காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதுபற்றி அதிகாரிகள் விசாரித்து வருவதாகப் பீக்கிங் செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்து ஏற்பட்டபோது அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களில் 14 பேர் மட்டும் காயமின்றி உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு விதிமுறைகள் சரிவர கடைப்பிடிக்கப்படாததால், சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன என்றும் கடந்த ஆண்டு மட்டும் நிலக்கரி சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் 3 ஆயிரம் பேர் பலியானார்கள் என்றும் கூறப்படுகின்றது.