அரச, தனியார் பாடசாலை வளவினுள் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளை பாவிப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். பாடசாலை மாணவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கையடக்கத் தொலைபேசிகளை பாட சாலை வளவினுள் கொண்டு வருதல் அல்லது பாவித் தல், கையடக்கத் தொலை பேசி மூலம் படம் பிடித்தல் போன்ற அனைத்து செயற்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
இதேபோன்று பாடசாலை வளவினுள் ஆசிரியர்களும் பாடசாலை பணியாளர்களும் பாடசாலை நேரத்தில் கையடக்கத் தொலைபேசிகளை செயலிழக்க வைத்த நிலையில் வைத்திருக்க வேண்டும். வகுப் பறைகளிலோ மாணவர்களுக்கு முன்னிலையிலோ இத்தொலைபேசிகள் மூலம் உரையாடக்கூடாது.
பாடசாலை வளவினுள் புகைப்படக் கருவிகளையோ, வீடியோ கருவிகளையோ மாணவர்கள் பாடசாலை வளவினுள் கொண்டு வர அனுமதிக்கக் கூடாது. ஏதாயினும் தேவையொன்றிற்காக இவற்றைக் கொண்டு வர தேவையேற்படின் அது பற்றிய அனுமதியை பாடசாலை அதிபர் எழுத்து மூலம் வழங்குதல் வேண்டும்.
இவ்வாறு அமைச்சின் செயலாளர் எம்.எம்.என்.டி. பண்டார சகல பாடசாலை அதிபர்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக அறிவித்துள்ளார்.