சென்னைக்கு வந்தும் கூட திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதியை, ராகுல் காந்தி சந்திக்காமல் புறக்கணித்திருப்பதால், திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார். பல்வேறு ஊர்களுக்குச் சென்று இளைஞர் காங்கிரஸார் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரை சந்தித்துப் பேசியுள்ளார்.
நேற்று சென்னைக்கு வந்து இரவு சென்னையில் தங்கினார். ஆனால் முதல்வர் கருணாநிதியை அவர் சந்திக்கவில்லை. இது திமுகவினரை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. வழக்கமாக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் யாராவது சென்னை க்கோ அல்லது தமிழகத்திற்கோ வந்தால் மறக்காமல் கருணாநிதியை சந்திப்பது வழக்கம். சத்தியமூர்த்தி பவனுக்குப் போகிறார்களோ இல்லையோ, கோபாலபுரத்திற்குப் போகத் தவற மாட்டார்கள்.
ஆனால் மிக முக்கியத் தலைவரான ராகுல் காந்தி, மரியாதை நிமித்தமாகக் கூட கருணாநிதியை சந்திக்காதது திமுகவினரை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாம்.
ராகுல் காந்தி கருணாநிதியை சந்திக்க இதுவரை நேரம் கேட்டு காங்கிரஸ் தரப்பில் தங்களை யாரும் அணுகவில்லை என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது. இன்றுடன் ராகுல் காந்தியின் தமிழக பயணம் முடிவடைவதால், கருணாநிதியை ராகுல் சந்திக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
முதல்வர் கருணாநிதியை ராகுல் காந்தி ஏன் சந்திக்கவில்லை என்று தெரியவில்லை. அதேசமயம், நேற்று பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு ராகுல் பேட்டி அளித்தபோது திமுகவுடன் நல்ல உறவு உள்ளது. மூத்த தலைவரான கருணாநிதியை நான் பலமுறை சந்தித்துள்ளேன். பல வழிகளில் என்னை அவர் வெகுவாக கவர்ந்துள்ளார் என்று பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.