2009

2009

வட மாகாண மாவட்ட போட்டிகள் நிறைவு – யாழ் மாவட்டம் முதலாம் இடம்

northa-pro-spo.jpgவட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் வட மாகாண மாவட்டங்களுக்கு இடையே நடத்தப்பட்ட விளையாட்டு விழா நேற்று இரவு நிறைவு பெற்றது. கடந்த மூன்று நாட்களாக யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம் பெற்ற இந்தப் போட்டிகளில் யாழ் மாவட்டம் வவுனியா மாவட்டம் மன்னார் மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம் முல்லைத்தீவு மாவட்ட அணிகள் கலந்து கொண்டன.

இறுதி நாள் நிகழ்வுகள் வட மாகாண கல்வி விளையாட்டு அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் தலைமையில் இடம் பெற்றன. இந் நிகழ்வில் பிரதம விருந்தினாகளாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட மாகாண ஆளுனர்  ஜீ.எ.சந்தரஸ்ரீ ஆகியோர் கலநது கொணடு பரிசில்களை வழங்கி கௌரவித்தார்கள். 151 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தை யாழ் மாவட்டமும் 114 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை வவுனியர் மாவட்டமும் 94 புள்ளகளைப் பெற்று மன்னார் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.

அடுத்தாண்டு வட மாகாண விளையாட்டுப் பேர்டிகள் கிளிநோச்சி மாவட்டத்தில் நடைபெறும் என வட மாகாண விளையாட்டுத் தினைகக்ளத்தின் உதவிப் பணிப்பாளர் என் அண்ணாத்துரை அறிவித்துள்ளார் .

இன்று பிற்பகலில் பேராதனையில் ஏழரை லட்சம் ரூபா கொள்ளை

பேராதனை கலகா சந்தியில், இன்று பிற்பகலில் ஏழரை லட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒருவர் வங்கியில் மேற்படித் தொகையை வைப்பிலிடச் சென்ற போதே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள், ஏழரை லட்சம் ரூபாவைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் எனப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத செயலுடன் தொடர்புடைய இருவர் தெனியாயவில் கைது

220909prisoner1.jpgதெனியாய – இத்தகந்த லங்காபேரி தோட்டத்தைச் சேர்ந்த இருவர், பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டவர்களாவர்.

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல். ஏ. குலரட்னவின் கண்காணிப்பின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிமல் மதிவக தெரிவித்தார்.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்

பன்றிக் காய்ச்சல் புதிய பரிமாணம் – 6 மாதத்தில் 2,180 பேர் பலி :உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

16-swine-flu.jpgஉலகை உலுக்கிக் கொண்டிருக்கும் பன்றிக் காய்ச்சலின் அடுத்த அவதாரம் தலைதூக்க தயாராகி விட்டது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பன்றிக் காய்ச்சலின் இரணடாவது பரிமாணம் இது. இந்த புதிய வகை ஹெச்1 என்1 வைரஸ் காய்ச்சல் உலகின் வட பகுதி நாடுகளில் ஓசைப்படாமல் பரவி வருகிறது. சில நாடுகளில் இந்நோயால் 15 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஜப்பானில் மிக கடுமையாகப் பரவிய பன்றிக் காய்ச்சல் குளிர் காலங்களில் உலகின் தென் பகுதி நாடுகளில் வேகமாக பரவியது. இதனால் முன்னெச்சரி க்கை நடவடிக்கைகள் எடுக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது.

இப்போது, வட பகுதியில் உள்ள நாடுகளில் இப்பன்றிக் காய்ச்சல் புதிய பரிமாணம் எடுக்க ஆரம்பித்துள்ளது. நல்ல உடல் ஆரோக்கியமுள்ள இளைய நடுத்தர வயதினர் இந்நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நேரடியாக நுரையீரலைத் தாக்கி சுவாச மண்டலத்தை செயலிழக்க வைக்கிறது.  வீரியமிக்க இந்தப் புதுவகை பன்றிக் காயச்சலை போக்க மருத்துவ செலவும் அதிகமாகும்.  இந்தப் புதிய வகை நோய் பரவுவது எப்படி என்பது தெரியவில்லை. எனினும், சுகாதாரமற்ற வாழ்க்கை, ஆஸ்துமா, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவைகளால் இக்காய்ச்சல் பரவ அதிக வாய்ப்புள்ளது.

வெப்ப மண்டல நாடுகளில் இது வேகமாகப் பரவும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மற்ற வைரஸ் காய்ச்சல்களைவிட நான்கு மடங்கு வேகத்துடன் இந்தப் புது வகை பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. பிற வைரஸ் காய்ச்சல்கள் ஆறு மாதங்களில் தாக்கும்.

இது ஆறே நாட்களில் தாக்கி விடுகிறது. இதன் தாக்குதலைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவதற்கு முன் கடந்த ஏப்ரலில் இருந்து இதுவரை 2,180 பேர் இறந்துள்ளனர். இதற்கான தடுப்பூசிகள் தயாராவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் மார்கரெட் சான் கூறினார்.

இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவேண்டும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை

220909malcom_ranjith.gifஇலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம்,  ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையையும்  ஏனைய சகல உதவிகளையும் வழங்கவேண்டும் என பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஐரோப்பிய ஒன்றியத்திடம் தனிப்பட்டவகையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நட்பு ரீதியான உதவிகள் மூலமே உண்மையான சமாதானத்தைப் பெற்று,  நீதியை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் நிலைநாட்ட முடியும் எனவும் ஆண்டகை விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை பேராயர் இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்துப் பல மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதன் பின்னரே பேராயர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பு பேராயர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை மட்டுமன்றி,  ஏனைய அனைத்து விதமான உதவிகளையும் இலங்கைக்கு சர்வதேசம் வழங்கவேண்டும். இனவாதம் காரணமாக ஏற்பட்ட யுத்தத்தினால் மக்கள் பாரியளவு பாதிப்புக்களை எதிர்கொண்டனர். மேற்குலக நாடுகளின் நட்பு ரீதியான உதவிகள் மூலமே இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் ஒற்றுமை,  கௌரவம்,  தனி மனித சுதந்திரம் போன்றவற்றை உறுதிப்படுத்த முடியும்.

மாறாக,  தடைகளை ஏற்படுத்துவதன் மூலம் இவற்றைச் செய்யமுடியாது. இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் காணப்படுகின்றன என்பதனால்,  இந்த வேண்டு கோளை விடுக்கின்றேன் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நிறமூர்த்தங்கள் மாற்றியமைக்கப்பட்டதால் மனிதருக்கு உணவாகும் பருத்தி விதை.

cotton-buds.jpg7000 வருடங்களுக்கு மேலாக மனிதரினால் பயிரிடப்படும் பருத்தி இன்று 20 மில்லியன் (million) விவசாயிகளினால் 80 நாடுகளில் பயிரிடப்படுகின்றது.

உலகில் 40 சதவிகிதமான உடுபுடவைகள் பருத்தியினாலே தயாரிக்கப்படுகின்றது. ஆனால் 23 சதவிகித புரட்டீனைக் கொண்ட இப்பருத்தி விதைகள் மனிதரினால் உண்ணப்படுவதில்லை. காரணம் இந்த விதைகளில் உள்ள நச்சுத் திரவத்தை மனித உடலால் கட்டுப்படுத்த முடியாதிருந்தது.

பருத்தி விதையை பறவைகள், பன்றியிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டுள்ள இந்த நச்சுத்திரவம் (Toxin) ஆடு, மாடு போன்ற இரை மீட்டு உண்ணும் பிராணிகளால் மட்டுமே உட்கொள்ளக் கூடியதாக இருந்தது.

Texas A&M University இந்த நச்சுத்திரவம் சுரந்து கொள்ள முடியாதவாறு பருத்தி விதைகளின் நிறமூர்த்தங்களில் (RNA யில்) மாற்றங்களை ஏற்படுத்தி புதிய பருத்தி விதைகளை உருவாக்கியுள்ளனர். இதன்மூலம் வருடாந்தம் 44 மில்லியன் தொன் உற்பத்தி செய்யப்படும் பருத்தி விதைகள் மிகவும் பெறுமதிமிக்க புரட்டீன்களை மனிதருக்கு உணவாக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

0.5 பில்லியன் (Billion)உற்பத்தி செய்யப்படும் பருத்தி விதைகள் மனித உணவாக பயன்படுத்தப்பட்டு மனிதர்களின் உணவுத் தட்டுப்பாட்டில் பெரும்பகுதிப் பிரச்சினைகள் தீர்க்கப்படக் கூடியதாகவும் உள்ளது.

இந்த நிறமூர்த்தங்களினால் மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகள் கடலை போன்ற சுவையுடையதாக கூறப்படுகிறது.

கடல் உள்வாங்கி சேற்றில் சிக்கி இறந்த மீன்கள்

தூத்துக்குடி கடல் பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியதால் ஆயிரக்கணக்கான மீ்ன்கள் கடலோரத்தில் உள்ள சேற்றில் சிக்கி இறந்தன. இந்த மீன்களை மீனவர்கள் அள்ளிச் சென்றனர். தூத்துக்குடி பீச்ரோட்டில் உள்ள கடல் பகுதியில் நேற்று காலை கடல்நீர் திடீரென உள்வாங்கியது. நீண்ட தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்பட்டதால் அந்த பகுதி, வற்றிய குளம் போல காட்சி அளித்தது.

பச்சை வயல்வெளி போல காணப்பட்டது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் இல்லாததால் ஏராளமான மீன்கள் சகதியில் சிக்கி கிடந்தன. இதனை கொத்த பறவைகள் குவிந்தன. சகதிக்குள் பாம்புகளும், மீன்களும் அதிக அளவில் சிக்கியிருந்தன. இதைத்தொடர்ந்து பொது மக்கள் சகதியில் சிக்கி கிடந்த மீன்களை சேகரித்தனர். ஏராளமான மீன்களை மீனவர்களும் எடுத்துச் சென்றனர்.

செமென்யா விவகாரம் ஐ.நா.விடம் கொண்டு செல்லப்பட்டது

caster_semenya_testosterona.jpgபெர்லினில் நடைபெற்ற உலக தடகள 800மீ. ஓட்டத்தில் முதலிடம் வந்து தங்கம் வென்ற தென் ஆப்பிரிக்க வீராங்கனை கேஸ்டர் செமென்யாவின் உடலமைப்பில் கோளாறு உள்ளது, அவர் ஆணா பெண்ணா என்று தெரியவில்லை என்று கூறி அவர் மீது பாலின பரிசோதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து ஏமாற்றமடைந்த தென் ஆப்பிரிக்க அரசு இந்த விவகாரத்தில் நீதி வழங்குமாறு ஐ. நா.விடம் முறையிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க அமைச்சர் நொலுதாண்டொ மெயெந்தே சிபியா ஐ. நா.விடம் இது குறித்து புகார் செய்துள்ளார். 800மீ ஓட்டத்தில் முதலிடம் பெற்ற செமென்யாவை தென் ஆப்பிரிக்கா முழுதும் மக்களும், அரசியல் தலைவர்களும் போற்றிப் புகழ்ந்து, கொண்டாடி வருகின்றனர். நெல்சன் மன்டேலாவையும் அவர் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் செமென்யா மீது நடத்தப்பட்ட பாலின சோதனை பெண்ணினத்துக்கு எதிரானது என்றும்,  நிறவெறித்தனமானது என்றும் சாடியுள்ளது. சோதனை முடிவுகளை ஐ.ஏ.ஏ.எஃப். இன்னமும் வெளியிடவில்லை. ஆனால் முடிவுகள் செமென்யாவிற்கு சாதகமாக வராவிட்டாலும் அவரது சாதனையை திரும்பப் பெறப்போவதில்லை என்று ஐ.ஏ.ஏ.எஃப். தெரிவித்துள்ளது. ஆனால் அவர் வேறு எந்த ஓட்டப்பந்தயங்களிலும் கலந்து கொள்ள முடியாது.

இதற்கிடையே அவருக்கு ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு இரண்டுமே இருப்பதாக ஆஸ்ட்ரேலிய பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளதும் இந்த விவகாரத்தை சர்ச்சைக்குரியதாக்கியது. இந்த நிலையில்தான் தென் ஆப்பிரிக்க அரசு ஐ. நா.விடம் தீர்வு கோரியுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு: போலி முகவர்களை கட்டுப்படுத்த பாராளுமன்றில் சட்டத்திருத்தம்

26parliament.jpgசட்ட விரோதமான முறையில் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் முகவர் நிலையங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாராளுமன்றத்தில் விரைவில் சமர்பிக்கப்படவிருக்கும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் தொடர்பான திருத்தச் சட்ட மூலங்களுக்கு அமையவே இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சட்ட ரீதியாக மற்றும் சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான ஆட்சேர்ப்போர் மீது கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் திருத்த சட்டமூலம் அமைந்துள்ளது. இந்தத் திருத்த சட்ட மூலம் எதிர்வரும் வியாழக்கிழமை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் போலி முகவர் நிலையங்களிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா வீதம் தண்டப் பணம் அறவிடவும் ஆகக் குறைந்தது மூன்று வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கும் வகையிலும் சட்டங்களை மீளதிருத்தியமைத்துள்ளது. இதேவேளை, சட்ட விரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு எதிராக விதிக்கப்படும் தண்டப்பணத்திலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. முன்வைக்கப்பட்டிருக்கும் புதிய கொள்கைகளின் அடிப்படையில், தகுதியுடைய ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக வாக்குறுதியளித்து ஏமாற்றிய ஒருவருக்கு 1500 ரூபா முதல் 20 ஆயிரம் ரூபா வரையில் தண்டப் பணம் அறவிடப்படும்.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் துப்பறிபவர்களின் உதவியுடன் தேவையான சந்தர்ப்பத்தில் அனைத்து முகவர் நிலையங்களையும் அதன் ஆவணங்களையும் சோதனையிட வேலை வாய்ப்பு பணியகம் அனுமதி வழங்கியுள்ளது. வெளிநாட்டுக்கு பணியாட்களை அனுப்புவதில் இலங்கை முதலிடத்தில் திகழ்கின்றது. தற்போது வெளிநாடுகளில் வேலை செய்யும் 1.6 மில்லியன் இலங்கைப் பணியாளர்களினால் 35 சதவீதமான அந்நியச் செலாவணி நாட்டுக்கு கிடைக்கின்றது.

தற்போது நாடளாவிய ரீதியில் வெளிநாட்டுக்கு செல்ல முயற்சிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப் பதனை போலி முகவர் நிலையங்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன.

வவுனியாவில் மீளக்குடியேறியோருக்கு அடிப்படை வசதிகள் யாவும் இலவசம்

210909va-re-set.jpgவவுனியா தெற்கில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 320 பேருக்கும் எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு இலவசமாக அத்தியாவசிய உலர் உணவுகள், மின்சார இணைப்பு, நிவாரண உதவிகள் ஆகியன வழங்கப்படவிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சாள்ஸ் தெரிவித்தார்.

மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள ஆயிரம் குடும்பங்களுக்கும் அவர்களது சொந்த காணிகளில் வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பாக கருத்திற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அது குறித்து உயர்மட்ட பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.

பெரும்போக பயிர்ச் செய்கையை முன்னிட்டு வவுனியா வடக்கில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டிருந்த ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த மூவின மக்களும் வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள தமது சொந்த காணிகளில் மீளக்குடியமர்த்தப்பட்டிருப்பதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மீளக்குடியமர்த்தப்பட்டவர்கள் தமது காணிகளை சுத்திகரித்து பெரும்போக பயிர்ச் செய்கையில் ஈடுபட தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். உத்தியோகபூர்வமாக இவர்களை குடியேற்றும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா கலாசார மண்டபத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பியின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மீளக்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபா பெறுமதியான மண்வெட்டி, கோடரி ஆகியன உள்ளிட்ட காணி சுத்திகரிப்பு உபகரணங்களும் தற்காலிக கூடாரங்களை அமைத்துக் கொள்வதற்கான 16 தகரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். வீதிகள், குளங்கள், ஆலயங்கள், பாடசாலைகள், கூட்டுறவுச் சங்கங்கள், சனசமூக நிலையங்கள், வைத்தியசாலைகள், தபாலகங்கள் ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டிருப்பதுடன் ஒவ்வொருவரது காணிகளுக்கும் நீர் மற்றும் மின் வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மின் இணைப்புக்கள் ஆறு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படவிருப்பதால் கட்டணங்கள் எதுவும் அறவிடப்படமாட்டாதெனவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, இவர்களுடைய சுத்திகரிப்பு பணிகளை ஊக்குவிக்கும் முகமாக ஒரு ஏக்கர் நிலபரப்புக்கு 4 ஆயிரம் ரூபா வீதம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிலரது காணிகள் பற்றைக் காடுகளாக மாறியிருப்பதனால் அவற்றை சுத்திகரிக்க சிறிது காலம் தேவைபடுமென்பதனால் இந்திய அரசாங்கம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவிகள் கோரப்பட்டிருந்தன. அந்த வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வரும் 06 மாதகாலத்துக்கு அக்காணிகளைச் சேர்ந்தோருக்கு நிவாரணமாக குறிப்பிட்ட உதவித் தொகையை வழங்க முன்வந்துள்ளது. ணிகளில் தூர்ந்துபோன கிணறுகளை மீள வெட்டி புதுப்பிப்பதற்காக இந்திய அரசாங்கம் உதவுவதாக வாக்குறுதியளித்திருப்பதாகவும் அரசாங்க அதிபர் கூறினார்.

பெரும்போக பயிர்ச் செய்கையை முன்னிட்டு மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப் பட்டமையினால் இவர்களுக்கான வீடுகளை அமைத்துக்கொடுப்பது தொடர்பில் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் 06 மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களை வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.