2009

2009

வெள்ளத்தில் பலியானோர் இருநூற்றி நாற்பதாக உயர்வு – பிலிப்பைன்ஸில் நான்கு இலட்சம் பேர் வீடுகளை இழந்தனர்

280909.jpgபிலிப்பைன் ஸில் வீசிய கெற்சனா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 240 பேர் உயிரிழந்ததுடன், ஒரு இலட்சம் பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். சென்ற சனிக்கிழமை பிலிப்பைன்ஸில் கடும் மழை பெய்ததுடன், பாரிய சூறாவளியும் வீசியது. இதில் இருபது அடிக்கு மேல் வெள்ளம் நின்றது.

சுமார் நான்கு இலட்சம் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். மழை ஓய்ந்துள்ளதால் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. நாளாந்தம் இழப்புகளின் தொகை அதிகரித்த வண்ணமுள்ளது. இராணுவம், பொலிஸ் படையணிகள் ரோந்தில் ஈடுபட்டு வெள்ளத்தால் பாதி க்கப்பட்டோரை கரையேற்றி வருகின்றனர்.

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தையடுத்து அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துகள் இன்னும் வழமைக்கு வரவில்லை. விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மீன் பிடி படகுகள் துறைமுகத்துக்குத் திரும்பியுள்ளன. மின்சாரம் சில இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளன.

வீடுகளை விட்டு வெளியேறியோரைப் பராமரிப்பதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளம் பூரணமாக வடியும் வரை தேவையில்லாத பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. வியட்நாமை நோக்கி கெற்சனா சூறாவளி மணித்தியாலத்துக்கு 12 கி.மீற்றர் வேகத்தில் நகர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்காக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அரோயா தனது இரண்டு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கியு ள்ளார். இதையடுத்து ஏனைய அரசியல் தலைவர்களும் தங்கள் சம்பளங்களை வழங்க முன்வந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி, மன்னாரில் வேலைவாய்ப்பு பணியக பயிற்சி நிலையம்

வட மாகாணத்தில் இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கும் பொருட்டு இன்னும் சில வாரங்களில் அப்பிரதேசங்களில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான பயிற்சியளிக்கும் நிலையம் ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சேமநல அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கேகாலை மாவட்ட பயிற்சி நிலையத்தை 27ம் திகதி திறந்து வைத்துப் பேசும் பொழுதே அவர் மேற்கண்டவாறு கூறினார். யாழ்ப்பாணத்தில் முதலாவது பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்படுவதுடன் அதனை அடுத்து மன்னார், கிளிநொச்சி ஆகிய இடங்களிலும் இவ்வாறான பயிற்சி நிலையங்களை அமைச்சு ஏற்படுத்தும்.

5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் வெட்டுப்புள்ளிகள்

150909sri-lankas-students.jpgஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளிவருமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது வெட்டுப் புள்ளிகள் இந்த ஆண்டு சற்று அதிகமாக இருக்குமென பரீட்சைகள் ஆணையர் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு வெட்டுப்புள்ளிகள் 105 க்கும் 117 க்கும் இடைப்பட்டதாக இருந்தது.

பொதுநலவாய நாட்டு நிதியமைச்சர்கள் மாநாடு; அமுனுகம சைப்பிரஸ் பயணம் – துருக்கியில் இடம்பெறும் நாணய நிதிய கூட்டத்திலும் பங்குபற்றுவார்

பொதுநலவாய நாடுகளின் நிதிய மைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொதுநிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சரும் பிரதி நிதியமைச்சருமான சரத் அமுனுகம நேற்று சைப்பிரஸ் பயணமானார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சார்பில் மேற்படி மாநாட்டில் கலந்து கொள்ளும் அமைச்சர் அமுனுகம, அதனையடுத்து துருக்கிஸ்தான் புல் நகரில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியத்தின் விசேட மாநாட்டிலும் கலந்து கொள்ளவுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.

பொதுநலவாய நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகைதரும் சர்வதேச நாடுகளின் நிதியமைச்சர்களுடன் அமைச்சர் சரத் அமுனுகம விசேட இருதரப்பு பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

மன்னார் – அகத்திமுறிப்பு பிரதேசத்தில் 2000 ஏக்கரில் நெற்செய்கை

190909paddy.jpgமன்னார் அகத்திமுறிப்பு குளத்தை அண்டியுள்ள சுமார் 2000 ஏக்கர் நெற் காணிகளில் பெரும்போக செய்கையை மேற்கொள்ள கமநல சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய நாளை முதலாம் திகதி அருவியாற்றிலிருந்து அகத்தி முறிப்பு குளத்திற்கும், கட்டுக்கரை குளத்திற்கும் நீர் திறந்துவிடப்படவுள்ளது.

வவுனியா, பரயனாளங்குளம் அருவியாற்றின் தேக்கம் அணைக் கட்டிலிருந்து இடதுபக்கமாகச் செல்லும் வாய்க்கால் ஊடாக அருவியாற்றுக்கும்,  அடுத்த கால்வாய் ஊடாக கட்டுக்கரை குளத்திற்கும் நீர் திறந்து விடப்படவுள்ளது. நாளை காலை 10.00 மணியளவில் அணைக்கட்டிலிருந்து நீர் திறந்து விடப்படுவதுடன் கடந்த 20 வருடங்களின் பின்னர் தரிசு நிலங்களாகக் கிடந்த விளைநிலங்களில் செய்கை பண்ணவும் விவசாயிகளுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

யுத்தம் காரணமாக தரிசு நிலங்களாக காடு மண்டிக் கிடக்கும் விளை நிலங்களை துப்புரவு செய்வதற்காக ஏக்கருக்கு 8870 ரூபா வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதுடன் நிலத்தை உழுவுவதற்காக ஏக்கருக்கு 4000 ரூபா வீதமும், விதை நெல், உரம் என்பனவும் வழங்கப்படவுமுள்ளன.

அகத்திமுறிப்பு குளத்தை அண்டிய 2000 ஏக்கர் நிலத்தில் சுமார் 1100 விவசாயிகளுக்கு செய்கை பண்ணுவதற்கு முதற்கட்டமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அடுத்த கட்டமாக நெற்களஞ்சியம் என்றழைக்கப்படும் மாந்தை மேற்குப் பகுதி விவசாயத்திற்கான அனுமதி வழங்கப்படவுள்ளது எனவும் மன்னார் நீர்ப்பாசன பொறியியலாளர் சிவபாத சுந்தரம் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகள் பொருளாதார நோக்குடனேயே வருகின்றனர்: எதிர்க்கட்சி எம்.பி.

அவுஸ்ரேலியாவுக்குள் பிரவேசிக்கும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் பொருளாதார நோக்கத்துடனேயே வருவதாக அந்த நாட்டின் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. இவர்கள் அகதிகள் என்ற போர்வையில் அவுஸ்ரேலியாவுக்குள் பிரவேசிக்கின்ற போதிலும், பெரும்பாலானோர் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டே பிரவேசிப்பதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ‘பானபி ஜோய்சி” தெரிவித்துள்ளார்.

புகலிடம் கோருவோராக நேற்று முன்தினம் 40 பேர் வரை அவுஸ்ரேலியாவுக்குள் பிரவேசித்தமையை அடுத்தே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.  அகதிகளாக வருவோரில் பெரும்பாலானோர் மல்டி விட்டமின் போசனை வில்லைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ள ஜோய்சி அவர்கள் மகிழ்ச்சியாகவே காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அவுஸ்ரேலியாவுக்குள் சட்டவிரோதமாக வரும் குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தற்போதைய குடிவரவு கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாலியல் தொழிலுக்காக பெண்கள் கடத்தல் – இந்திய பெண்கள் அமைப்பு ஆழ்ந்த கவலை

290909family.jpgபாலியல் தேவைகளுக்காக இந்தியாவில் பெண்கள், சிறுவர்கள் கடத்தப்படுவது குறித்து இந்திய பெண்கள் அமைப்பு அக்கறை செலுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்தரப் பிரதேஷ், குஜராத், ராஜஸ்தான், புதுடில்லி ஆகிய மாநிலங்களிலே பெருமளவான பெண்களும் சிறுவர்களும் கடத்தப்படுகின்றனர்.

இவர்கள் பின்னர் பாலியல் தேவைகளுக்காகவும் தொழிலுக்காகவும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த வேலையை குறிப்பிட்ட குழுவொன்று செய்து வருகின்றது. நேபாளத் திலிருந்தும் பெண்கள் இந்தியாவுக்குள் அழைத்து வரப்பட்டு பாலியல் தொழில்களுக்காக அனுப்பி வைக்கப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

இது குறித்து பெண்கள் அமைப்பு அதிக அக்கறை செலுத்தியுள்ளது.

கண்ணிவெடி அகற்றும் பணிக்கு 5மில்.டொலர்: யு.என்.எச்.சி.ஆர்.இணக்கம் – ஜெனீவாவில் பேச்சு

வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கென ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 10 கண்ணிவெடி அகற்றும் இயந்திரங்களை வழங்க அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகராலயம் இணக்கம் தெரிவித்துள்ளது.

வட மாகாணத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று (29) அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகர் எந்தோனியோ கெட்டஸ¤டன் பேச்சு நடத்தினார்.

இதன் போதே மிதிவெடி அகற்றும் இயந்திரங்களை வழங்க இணக்கம் காணப்பட்டது. ஜெனீ வாவில் நடைபெறும் அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகராலயம் நிறை வேற் றுக்குழுக் கூட்டத்தில் இலங்கை சார்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க கலந்து கொண்டு ள்ளார்

கே. கே. எஸ். வரையான ரயில் நிலையங்களை மீளமைக்கும் பணி – 27 நிறுவனங்களிடம் இன்று கையளிப்பு

260909srilanka.jpgயாழ். தேவி ரயில் சேவையை யாழ்ப்பாணம் வரை விஸ்தரிக்கும் வகையில் காங்கேசன் துறை வரையான ரயில் நிலையங்களை மீளமை க்கும் பணிகள் 27 உள்நாட்டு வெளி நாட்டு நிறுவனங்களுக்கு இன்று (30) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

யாழ்தேவி ரயில் சேவையை காங்கேசன்துறை வரை விஸ்தரிக்கும் திட்டத்தின் கீழ் இந்த வருட முடிவுக்குள் தாண்டிக்குளத்தில் இருந்து முகமாலை வரையான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

தாண்டிக்குளத்தில் இருந்து காங்கேசன்துறை வரையுள்ள 27 ரயில் நிலையங்களையும் நிர்மாணிக்கும் பொறுப்புகளை 27 உள்நாட்டு வெளிநாட்டு அனுசரணையாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

மேற்படி ரயில் நிலையங்களை மீளமைக்கும் பணிகள் போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெருமவினால் இன்று (30) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட உள்ளது. இது தொடர்பான வைபவம் இன்று மாலை மேல் மாகாண கலாசார மையத்தில் இடம்பெற உள்ளது.

தாயகம் திரும்பிய அகதிகளின் குழந்தைகளுக்கு இலங்கைக் குடியுரிமை

இலங்கையின் வடக்கே யுத்தச் சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து, இந்தியாவில் தஞ்சமடைந்திருந்த பின்னர் தாயகம் திரும்பியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலங்கைக் குடியுரிமை வழங்குவதற்கான நடமாடும் சேவையொன்று திங்களன்று வவுனியாவில் நடைபெற்றது.

ஐக்கியநாடுகளின் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ”நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டத்தின்” அனுசரணையோடு, இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் இணைந்து இந்த நடமாடும் சேவையை ஒழுங்கு செய்திருந்தது.

குடியுரிமைப் பத்திரம் மட்டுமல்லாமல் ஏனைய அத்தியாவசிய ஆவணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருப்பதாக ஐக்கியநாடுகளின் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ”நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டத்தின்” வடபிராந்திய இணைப்பதிகாரியான ஹனிபா மொகமட் சியால் கூறுகின்றார்.