பிலிப்பைன் ஸில் வீசிய கெற்சனா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 240 பேர் உயிரிழந்ததுடன், ஒரு இலட்சம் பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். சென்ற சனிக்கிழமை பிலிப்பைன்ஸில் கடும் மழை பெய்ததுடன், பாரிய சூறாவளியும் வீசியது. இதில் இருபது அடிக்கு மேல் வெள்ளம் நின்றது.
சுமார் நான்கு இலட்சம் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். மழை ஓய்ந்துள்ளதால் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. நாளாந்தம் இழப்புகளின் தொகை அதிகரித்த வண்ணமுள்ளது. இராணுவம், பொலிஸ் படையணிகள் ரோந்தில் ஈடுபட்டு வெள்ளத்தால் பாதி க்கப்பட்டோரை கரையேற்றி வருகின்றனர்.
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தையடுத்து அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துகள் இன்னும் வழமைக்கு வரவில்லை. விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மீன் பிடி படகுகள் துறைமுகத்துக்குத் திரும்பியுள்ளன. மின்சாரம் சில இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளன.
வீடுகளை விட்டு வெளியேறியோரைப் பராமரிப்பதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளம் பூரணமாக வடியும் வரை தேவையில்லாத பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. வியட்நாமை நோக்கி கெற்சனா சூறாவளி மணித்தியாலத்துக்கு 12 கி.மீற்றர் வேகத்தில் நகர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்காக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அரோயா தனது இரண்டு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கியு ள்ளார். இதையடுத்து ஏனைய அரசியல் தலைவர்களும் தங்கள் சம்பளங்களை வழங்க முன்வந்துள்ளனர்.