28

28

இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் திரண்ட அமெரிக்கர்கள்!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக இஸ்ரேலிய பிரதமர் நியுயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக நேற்று பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக இஸ்ரேலிய பிரதமர் பென்ஞமின் நெத்தன்யாகு நியுயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், ஐ.நா. தலைமையகத்திற்கு முன்பாக இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாஸ்தீன கொடிகளையும் பாதாதைகளையும் இஸ்ரேல் பிரதமரின் உருவப் படங்களையும் ஏந்தியவாறு இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சிறுவர்களை கொலை செய்வதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும் பணயக் கைதிகளை காப்பாற்ற இராணுவத்தின் ஊடாக அன்றி அரசியல் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பிரதானமாக இரண்டு தரப்புக்கும் இடையே தொடரும் யுத்தத்தை உடனடியாக சர்வதேசம் தலையிட்டு நிறுத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். பாலஸ்தீன பகுதிகளில் யுத்தம் மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள யூத – இஸ்ரேலிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் என தங்களை காண்பித்துக் கொண்டவர்களினாலேயே இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இவர்களது இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் பெரும் பதற்றமானதெரு சூழல் காணப்பட்டதோடு, பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரச நிறுவனங்களில் ஊழலுக்கு இடமில்லை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்களை கண்டறிய நிறுவன ரீதியான குழுக்களை நியமிக்கப் போவதில்லை. அதற்கான ஒழுங்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று தெரிவித்தார்.

 

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்குட்பட்ட நிறுவனங்களின் பிரதானிகளுடன் நேற்று (27) காலை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் செலவுகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் இருந்த போதிலும் அதன் மூலமான முன்னேற்றம் குறித்து முறையான கணக்காய்வு அவசியமென்றும், கூடிய விரைவில் உள்ளக கணக்காய்வுகள் நடத்தப்பட வேண்டுமென்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அறிவித்துள்ளார்.

பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

“பிரதமர் என்ற முறையில் எனது பொறுப்பிலுள்ள அனைத்து அமைச்சுகளிலும் இதுவரை நடக்க வேண்டிய மற்றும் முன்னெடுக்கப்படாத முன்னுரிமைகளை அடையாளம் கண்டு வருகிறேன். குறிப்பாக விளையாட்டுத்துறை அமைச்சில் பல விஷேட விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அரச நிதி வீண் விரயம் மற்றும் துஷ்பிரயோகம் குறித்து ஒரு அரசாங்கமென்ற வகையில் நாம் உன்னிப்பாக கவனம் செலுத்தி வருகிறோம். அதேபோன்று செலவினங்களை கட்டுப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறோம். இதன் காரணமாக விழாக்கள், கொண்டாட்டங்களுக்காக செய்யும் வீண் விரயம் குறைக்கப்பட வேண்டும். அரசாங்கத்திடமிருந்து பெற்ற நிதி மற்றும் செலவழிக்கப்பட்ட தொகைகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் அமைச்சிடம் உள்ளன. ஆனால் அந்த நிதி மூலம் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து இதுவரை எந்த மதிப்பீடும் மேற்கொள்ளப்படவில்லை. செலவு செய்யப்பட்ட பணத்தில் என்ன நடந்தது என்பதை உள்ளக கணக்காய்வின் ஊடாக கண்டறியுமாறும் பிரதமர் வலியுறுத்தினார்.

இக்கலந்துரையாடலின் போது மற்றுமொரு முக்கிய விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. விளையாட்டுத்துறை நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகத்தில் நிகழும் முறைகேடு மற்றும் துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சிடம் குறிப்பிட்ட வேலைத்திட்டம் இல்லை. இதன் காரணமாக துஷ்பிரயோகம் குறித்து விசாரணை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்தேன் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா பலி – உறுதிப்படுத்தியது ஹிஸ்புல்லா !

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பெய்ரூட்டில் நேற்றிரவு நஸ்ரல்லா மற்றும் மூத்த தளபதிகளை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் கூறியிருந்தது.

இந்நிலையில், ஹிஸ்புல்லா தலைவர் குறித்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

தமது தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா அமைப்புஉறுதிப்படுத்தியுள்ளது. அவர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் இறந்துவிட்டார் என்று குழு உறுதிப்படுத்தியது, “தெற்கு புறநகர்ப் பகுதியில் துரோகத்தனமான சியோனிசத் தாக்குதலைத் தொடர்ந்து” அவரது மரணம் நிகழ்ந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நஸ்ரல்லாவை ஒரு தியாகி என்று விபரித்த ஹிஸ்புல்லா,இஸ்ரேலுக்கு எதிரான தமது போராட்டம் தொடரும் எனவும் சூளுரைத்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி தேர்தலும் போலித்தமிழ்தேசியவாதிகளின் நிர்வாணமும் !

அரசியல் ஆய்வாளர் மயில்வாகனம் அருள்குமார் அவர்களுடனான தேசம் ஜெயபாலனின் கலந்துரையாடல்.

தலைப்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலும் போலித்தமிழ்தேசியவாதிகளின் நிர்வாணமும் !

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ‘நிரந்தர’ அரசியல்வாதிகளை நீக்கி, ஆற்றல்மிக்க புதிய முகங்கள் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

நாட்டில் ஏற்பட்ட மாற்றம் தமது பிரதேசங்களிலும் ஏற்படவேண்டும் என விரும்பும் தமிழ் மக்களின் அபிலாஷைக்கு அமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் ‘நிரந்தர’ அரசியல்வாதிகளை நீக்கி, ஆற்றல்மிக்க புதிய முகங்கள் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடந்த செவ்வாய்க்கிழமை (24) நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

அதனையடுத்து, சகல அரசியல் கட்சிகளும் இம்முறை பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கான வியூகங்களை அமைத்துவருகின்றன. இந்நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சி இப்பொதுத்தேர்தலை அணுகவிருக்கும் விதம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன் மேலும் கூறியிருப்பதாவது:

 

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக் கட்சி போட்டியிடும்போது, நாடளாவிய ரீதியில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் எமது பிரதேசங்களிலும் நிகழுமா என்ற கேள்வி பலரால் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக ‘நிரந்தர’ அரசியல்வாதிகளை நீக்கி, இளையவர்கள், பெண்கள், ஆற்றல் உடையவர்கள், அனுபவசாலிகள் எனப் பொருத்தமான தரப்பினரை அரசியல் கட்சிகள் முன்னிறுத்துமா என்ற அங்கலாய்ப்பு நம் மக்கள் மத்தியில் உள்ளது.

 

அதனைப் புரிந்துகொண்டு இம்முறை பொதுத்தேர்தலில் ஆற்றல்மிக்க முதிய முகங்களைக் களமிறக்கவேண்டும் என்பதே என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடாகும். எமது கட்சி உறுப்பினர்கள் பலரும் அத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். அதற்கமைய கட்சியின் மத்திய செயற்குழுவே இதுகுறித்துத் தீர்மானிக்கும். இருப்பினும் அந்தத் தீர்மானம் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் அமையவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் கூட்டமைப்பு – வீட்டுச்சின்னத்தில் இணைய புளோட், ரெலோவுக்கு கால அவகாசம்!

தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்றைய தினம் வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்று வருகின்றது.

மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு தொடர்பாகவும் வீட்டுச் சின்னத்தில் கூட்டமைப்பாக போட்டியிடவும் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் கூட்டமைப்பிலிருந்து  கட்சியில் இருந்து விலகிய  ரெலோ புளொட்டுக்கு கட்சியில் இணைய மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரியவருகிறது.

இக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், க.குகதாசன், ஈ.சரவணபவன்,இரா.சாணக்கியன், கலையரசன்,சாந்தி சிறீஸ்கந்தராஜா, சி.சிவமோகன்,அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், சட்டத்தரணி கே.வி தவராசா கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், உட்பட கட்சியின் பெரும்பாலான மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி செயலகம் உட்பட பல அரச நிறுவனங்களில் சுமார் 4000 வாகனங்கள் மாயம் – ஆரம்பித்தது விசாரணை!

சுகாதாரம், கல்வி, தபால், நீர்ப்பாசனம் ஆகிய ஜனாதிபதி செயலகம் உட்பட பல அரச நிறுவனங்களில் சுமார் 4000 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

இதன் படி, அனைத்து அரச நிறுவனங்களையும் உள்ளடக்கும் வகையில் தேசிய கணக்காய்வு அலுவலகம் விசேட கணக்காய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

 

இந்தக் கணக்காய்வின் பின்னர், காணாமல் போன அல்லது இடம்பெயர்ந்த அரச வாகனங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கத்தின் பிரதான கணக்காய்வாளர்டபிள்யூ.பி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

 

காலி முகத்திடலத்தில் ஒப்படைக்கப்பட்ட 110 சொகுசு வாகனங்கள் தொடர்பிலான தகவல்களை ஆராய விசேட கணக்காய்வு குழுவொன்று அங்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்துடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்த கணக்காய்வாளர் நாயகம், வாகனங்களை பயன்படுத்தியவர்கள் யார் என்பது தொடர்பில் உரிய தகவல்களைச் சரிபார்க்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில், சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 1794 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக அல்லது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதில் 679 கார்கள் மற்றும் 1115 மோட்டார் சைக்கிள்கள் உள்ளன.

 

மேலும், கல்வி அமைச்சுக்குச் சொந்தமான 212 வாகனங்களும், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 880 வாகனங்களும், தபால் திணைக்களத்திற்குச் சொந்தமான 45 வாகனங்களும் காணமல் போயுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.