12

12

அனுர குமார திசாநாயக்கவை கைது செய்யுமாறு சீ.ஐ.டியில் முறைப்பாடு!

யாழ்ப்பாணத்தில் அநுரகுமார திசாநாயக்க வெளியிட்ட கருத்துக்களால் இன முரண்பாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் தலைவருமான அநுரகுமார திசாநாயக்கவை  கைது செய்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசப்பற்றுள்ள மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் சுகத் ஹேவாபத்திரனவினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென்பகுதி மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றார்கள் இந்த தேர்தல் மூலம் அந்த மாற்றம் வரும், ஆனால் வடபகுதி மக்கள் இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக மாறவில்லை என தென்பகுதி மக்கள் தெரிவிக்க கூடும் என யாழ்ப்பாணத்தில் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

அநுரகுமார திசாநாயக்கவின் குறித்த கருத்து இனக்குழுக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தியதாக தேசப்பற்றுள்ள மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் சுகத் ஹேவாபத்திரன குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில்  இனவாதத்தை அடிப்படையாக கொண்ட கருத்தினை வெளியிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஊழல் அற்ற அரசாங்கம் என்ற மாற்றத்தினை விரும்புகின்றோம், இந்த முயற்சியில் நாங்கள் அநுரகுமார திசாநாயக்கவின் பக்கம் நிற்கின்றோம் அதனை ஆதரிக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்ற முடிவில் எந்த மாற்றங்களும் இல்லை !

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்ற முடிவில் எந்த மாற்றங்களும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் அறிவித்துள்ளது.

 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதானிகள் குழு ஒன்று அண்மையில் கூடி இந்த முடிவு உறுதி செய்ததாக அதன் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

சஜித் பிரேமதாசவைத் தவிர ஏனைய எந்த வேட்பாளர்களுடனும் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப் போவதில்லை எனவும் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

கட்சியின் மத்திய செயற்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அமுலாக்குவது குறித்தே தற்போது ஆராயப்படுகிறது என்றும் சுமந்திரன் கூறியுள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை – அமெரிக்க நிறுவனத்துடனான ஒப்பந்தத்தையும் ரத்து செய்த கனடா !

இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனைக்கான 30 அனுமதிகளை கனடா  இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான அறிவிப்பை கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி நேற்றையதினம் (11) வெளியிட்டுள்ளார்.

அத்தோடு, கியூபெக்கில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்துகளை இஸ்ரேலிய இராணுவத்திற்கு விற்பனை செய்வதற்கான அமெரிக்க நிறுவனத்துடனான ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது, அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஜெனரல் டைனமிக்ஸின் கனடியப் பிரிவால் தயாரிக்கப்பட்ட கனேடிய வெடிமருந்துகளை – இஸ்ரேலுக்கு மறுவிற்பனை செய்வதற்காக மற்ற நாடுகளுக்கு விற்கவோ அல்லது அனுப்பவோ அரசாங்கம் அனுமதிக்காது என்றும் ஜோலி கூறியுள்ளார்.

கனேடிய ஆயுதங்கள், இஸ்ரேலில் விற்பனைக்கு செல்லும் ஒரு நாட்டிலிருந்து விற்பது சர்ச்சைக்குரியதாக மாறி உள்ளதாகவும், ஜெனரல் டைனமிக்ஸ் போன்ற வணிகப் பரிவர்த்தனைகள் வெளிப்படையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஜோலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் வெற்றியை நோக்கி இவ்வளவு தூரம் வந்தது ஆறு மாதங்களில் ஒரு அரசாங்கத்தை கைவிட அல்ல – நாம் ஆறு மாதங்களுக்குள் உறுதியாவோம்” – அனுர குமார திசாநாயக்க

நாம் ஆட்சியமைத்தால் ஆறு மாதங்களுக்குப் பின்னர் எமது அரசாங்கம் கவிழாது என தேசிய மக்கள் சக்தியின்  தலைவர் அநுரகுமார திஸாநாயக்க  உறுதியளித்துள்ளார்.

“முன்பு, நாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என்று சொன்னார்கள். எங்கள் அரசாங்கம் ஆறு மாதங்கள் நீடிக்காது என்று சொல்ல ஆரம்பித்தார்கள். நாங்கள் வெற்றியை நோக்கி இவ்வளவு தூரம் வந்தது ஆறு மாதங்களில் ஒரு அரசாங்கத்தை கைவிட அல்ல ” என்று நேற்று(11) குருநாகலில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய திஸாநாயக்க கூறினார்.

அத்துடன் தனது தலைமையில் அமைக்கப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நாட்டின் வரலாற்றில் வலுவானதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதிப் பத்து நாட்களில் போலிச் செய்திகள் மற்றும் தவறான செய்திகள் அலை வீசும் என திஸாநாயக்க தெரிவித்தார்.

இருந்த போதிலும், தேசிய மக்கள் சக்தியின் வெற்றியில் தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“எங்கள் எதிரிகள் கலக்கமடைந்துள்ளனர். எமக்கு எதிரான பாரிய சதித்திட்டம் தொடர்பில் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, அதற்கு நாங்கள் பலியாக மாட்டோம்” என்று அவர் மேலும் கூறினார்.

செயற்கையாக உருவாக்கப்பட்ட அரசியல் பேரணிகளைப் பார்த்து இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டாம் – ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர

செயற்கையாக உருவாக்கப்பட்ட அரசியல் பேரணிகளைப் பார்த்து இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டாம் என சர்ஜவஜன அதிகார ஜனாதிபதி வேட்பாளரும் தொழிலதிபருமான திலித் ஜயவீர மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று (11) காலை சர்வஜன அதிகார அமைப்பின் பல ஆசன அமைப்பாளர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து வௌியிட்ட சர்வஜன அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர,

“மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் இவ்வேளையில் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளது. தேர்தல் ஆணைக்குழு தெரிவித்ததைப் போன்று எங்களுடைய செலவினங்களை கட்டுப்படுத்தி இயன்றளவு பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். எனவே, நாங்கள் மக்களை ஈர்ப்பதற்காக பஸ்ஸில் மக்களை ஏற்றிசெல்லவோ, ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தவோ இல்லை. கூட்டங்களுக்கு வரும் அனைவருமே அந்த வேட்பாளருக்குதான் வாக்களிப்பார்கள் என்று யாராவது நினைப்பார்களாயின் அது முற்றிலும் தவறு. இவ்வாறான கூட்டங்களில் பங்கேற்பதற்காகவே மக்கள் குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள்தான் நாடு முழுவதும் செல்கின்றனர். எனவேதான் நான் சொல்கிறேன் இந்த கூட்டத்தை வைத்து மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்காதீர்கள். இறுதி ஆய்வு அறிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன. மக்கள் வாக்குப் பெட்டிக்கு அருகே சென்று தங்களது மனசாட்சிக்கு ஏற்ப புத்திசாலித்தனமான முடிவை மேற்கொள்ள வேண்டும்.” என்றார்.

பௌத்த மதத்தை பாதுகாப்பதோடு ஏனைய மதங்களுக்கும் உரிய அந்தஸ்தை வழங்கி செயற்பட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

புத்தசாசனத்தை பாதுகாத்து சுபிட்சமான நாட்டிற்குள் அறநெறிப் பண்புள்ள சமூகம் ஒன்றை உருவாக்க வேண்டும். அறநெறி பாடசாலைகளின் போட்டிகளுக்கேனும் அனுசரணையை வழங்க முடியாத அரசாங்கம் ஒன்று காணப்படுகின்றது. இது மிகவும் கவலைக்குரிய விடயம் என்பதோடு அறநெறி கல்வியை பாதுகாக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

விகாரைகளில் மகா சங்கத்தினர் முன்னெடுக்கின்ற மத சாசன செயற்பாடுகளை பலப்படுத்த வேண்டும். மதங்களுக்கு இடையிலும் இனங்களுக்கு இடையிலும் காணப்படுகின்ற ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மிகப்பெரிய பலமாக கொண்டு, வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பௌத்த மதத்தை பாதுகாப்பதோடு ஏனைய மதங்களுக்கும் உரிய அந்தஸ்தை வழங்கி செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிக்குகள் ஆலோசனை பேரவையின் தேசிய மாநாடு மூன்று பீடங்களையும் சேர்ந்த சங்கைக்குரிய மகா சங்கத்தினர் தலைமையிலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பங்கேற்புடனும் இன்று (11) கொழும்பில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

மூன்று பீடங்களையும் சேர்ந்த பெருந்திரளான சங்கைக்குரிய மகா சங்கத்தினர் இதில் கலந்து கொண்டனர். இதில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிராமங்களிலும் நகரங்களிலும் அமையப் பெற்றுள்ள விகாரைகளிலே இருக்கின்ற மகா சங்கத்தினர் எமது நாட்டின் சமாதானம், சுபீட்சம், அபிவிருத்தி போன்றவற்றிற்காகவும், சிறந்த தார்மீக சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க சேவையை முன்னெடுக்கின்றனர்.

மகா சங்கத்தினருதும் ஏனைய மதத் தலைவர்களினும் ஆலோசனைகளினதும் அறிவுரைகளினதும் ஊடாக அரசாட்சி ஒன்று இடம்பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இன்று எமது நாடு பலவிதமான சவால்களை எதிர்கொள்கின்றது. கிராமிய அபிவிருத்தி திட்டங்கள் செயலிழந்து மக்களுடைய வாழ்க்கை தரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

நாட்டிற்கான சவால்கள் வருகின்ற போது வரலாறு நெடுகிலும் மகா சங்கத்தினரே ஆலோசனை வழங்கி இருக்கின்றனர்.

இந்த சந்தர்ப்பத்திலும் மகா சங்கத்தினரின் தேவை மிகவும் முக்கியமாக இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும் எமது நாட்டில் மனிதப் பண்புகள் குறைவடைந்து வருகின்றன. மத தலைமைத்துவங்களின் ஊடாக சிறந்த சமூகத்துக்குள் பிரவேசித்து வீழ்ச்சி அடைந்த நாட்டை அறநெறித் தன்மையுடன் சிறந்த பண்புகளின் பக்கம் விட்டுச் செல்ல வேண்டும்.

அறநெறி கல்வியை மையப்படுத்திய சிறந்த சமூகக் கட்டமைப்புக்கான அடித்தளம் இடப்பட வேண்டும்.

அறநெறி பாடசாலை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் சகல வசதிகளையும் கொண்ட கல்வியை வழங்குகின்ற நிலையமாக மத ஸ்தலங்கள் மாற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்தோடு விகாரை கட்டமைப்புக்குள் நாட்டிற்கான சிறந்த விடயங்கள் இடம் பெறுவது மழுங்கடிக்கப்பட்டு, மத ஸ்தானங்கள் மூடப்படுகின்றமையினால் அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரங்களில் சிறுவர்களை பயன்படுத்த தடை !

தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்துவது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பரவி வருகிறது.

 

இந்நிலையில் இது தொடர்பில் ‘சுரகிமு தருவன்’ தேசிய இயக்கம் இன்று (11) தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது.

 

இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்த வேண்டாம் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மருந்து கொள்வனவில் ஊழல் மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் கெஹலியரம்புக்வெலவுக்கு பிணை !

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

 

தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பெப்ரவரி 02ஆம் திகதி கைதுசெய்யப்பட்டதுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

 

அதன்படி கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு 7 மாதங்களின் பின்னர் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

வாகன விபத்தில் 17 வயது பாடசாலை மாணவி பலி – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.

 

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் டிப்பர் வாகனம் மோதுண்டதில் நேற்று குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

குறித்த மாணவி தனியார் வகுப்பொன்றிற்கு சென்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதனையடுத்து அவரை உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டுசென்ற போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.