19

19

திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வை நடத்த நீதிமன்றம் அனுமதி!

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வை நடத்த அனுமதிக்க கூடாது என பொலிஸார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

 

சட்டத்தரணி மணிவண்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் திலீபனின் நினைவிடத்திற்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்த நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த நினைவேந்தல்களுக்கு தடை விதிக்கக் கோரி பொலிஸார் நீதிமன்றத்தை அணுகியிருந்த நிலையில்,இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்காக எடுக்கப்பட்டது.

 

இதன் போது சட்டத்தரணி மணிவண்ணன் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கிளிநொச்சியில் உள்ள வழக்கொன்றுக்காக சென்றதால் இந்த வழக்கில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

 

அத்துடன் எதிராளிகள் தரப்பில் மூத்த சட்டத்தரணி சிறீகாந்தா தலைமையில் சட்டத்தரணிகள் திருக்குமரன், மகிந்தன், றமணன், ரிசிகேசன், கௌதமன் உள்ளிட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலையானார்கள்.

 

இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர் ஏ.ஆனந்தராஜா, 2011ஆம் ஆண்டு புலிச் சின்னங்களைப் பயன்படுத்த தடைவிதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது .எனினும் இறந்தவர்களின் நினைவேந்தல் நடத்த தடை இல்லை. இதன் பின்னர் 13 வருடங்களாக மக்கள் நினைவேந்தலை அனுஷ்டித்து வருகின்றனர். அவற்றைத் தடுப்பதற்கு ஜனாதிபதியோ, பாதுகாப்பு அமைச்சோ, பாராளுமன்றமோ எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், அஞ்சலி நிகழ்வுகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என பொலிஸார் கோரிக்கை விடுத்து வருவதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.

 

இதேவேளை, தேர்தல் காலம் என்பதால், அதைக் கருத்திற்கொண்டு அஞ்சலிக்குத் தடை விதிக்கவேண்டும் என்றும் பொலிஸார் கோரினார்கள்.இதற்கு, தேர்தல் காலத்தின்போது வாகனப் பேரணிகள் நடத்துவதற்கு மட்டுமே தடை விதிக்க முடியும் என்று தெரிவித்த நீதிவான் அவ்வாறு வாகனப் பேரணிகள் இடம்பெறாது என்பதற்கான உத்தரவாதங்களை எதிர்த்தரப்பினரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அத்துடன் வழக்கை நீதிவான் முடிவுறுத்தினார்.

 

“மேலும், ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்கும் அதிகாரம் பொலிஸாரிடம் இருப்பதால், இது தொடர்பில் பொலிஸாரே இறுதி முடிவை எடுக்கலாம் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீவிர கண்காணிப்பில் இலங்கையர்களின் சமூக ஊடக கணக்குகள் !

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அமைதியான காலப்பகுதியில் சமூக ஊடகங்களின் செயற்பாடுகளை ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி தேர்தல் ஆணையாளர் பியூமி அடிகல தெரிவித்துள்ளார்.

ஐந்து பேர் கொண்ட குழு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளின் அறிக்கைகளின்படி, சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான தகவல்கள் அகற்றப்படும் என்று அவர் கூறினார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட இடங்களை புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்கு சாவடிகளில் ஆயுதங்களை வைத்திருப்பது, புகைத்தல், மதுபானம் அருந்துதல் மற்றும் போதைப்பொருள் பாவனை போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

எகிறும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் !

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஐயாயிரத்தை அண்மித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 208 முறைப்பாடுகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் , அந்தவகையில், ஜூலை 31ஆம் திகதியில் இருந்து செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை 4, 945 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

இதில் 1,515 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 3,429 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாகவும், இந்தக் காலப்பகுதியில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 34 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரகடனப்படுத்தப்பட்ட அமைதிக்கால பிரகடனம் – மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகள்!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான இறுதிப் பிரசாரக் கூட்டங்கள் நேற்று (18) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

 

அதன்படி நேற்று (18) நள்ளிரவு 12.00 மணி முதல் தேர்தல் நடைபெறும் 21 சனிக்கிழமை வரையிலான காலப்பகுதி “அமைதி காலமாக” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

 

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.

 

வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்ட நாளிலிருந்து, வேட்பாளர்கள் தங்கள் முக்கிய பேரணிகள் உள்ளிட்ட பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

 

பிரதான வேட்பாளர்களின் இறுதிப் பிரச்சார கூட்டங்கள் நேற்று பிற்பகல் கொழும்பு மற்றும் பல புறநகர் பகுதிகளில் நடைபெறவுள்ளன.

 

இறுதிப் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெறும் கொழும்பு நகரம், நுகேகொட, கொட்டாவை மற்றும் பிலியந்தலை ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி, விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

 

இதேவேளை, நேற்று நள்ளிரவு தொடக்கம் தேர்தல் நடைபெறும் 21 ஆம் திகதி சனிக்கிழமை வரையான அமைதி காலப்பகுதியில் எந்தவிதமான பிரச்சார நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் 21 ஆம் திகதி போன்று 22 ஆம் திகதியும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

தேர்தல் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஜி. குணசிறி தெரிவித்தார்.

 

இதேவேளை, நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் செப்டெம்பர் 20ஆம் திகதி மூடப்படும் எனவும், எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை வழமை போன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் தேவைக்கேற்ப பாடசாலை நேரத்தின் பின்னர் செப்டம்பர் 19 ஆம் திகதி உரிய கிராம அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

வாக்களிப்பில் இரண்டாம், மூன்றாம் தெரிவு குறித்து எதனையும் சிந்திக்க வேண்டாம். – அனுர குமார திசாநாயக்க

ஜனாதிபதித் தேர்தலில் தங்களின் வெற்றி உறுதியாகிவிட்டதாகவும், இந்த வெற்றியின் பின்னர் எந்தவொரு நபரும் வன்முறைச் சம்பவங்களின் ஈடுபடக்கூடாது என்றும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

 

நேற்று பிற்பகல் களுத்துறையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எதிர்காலம் குறித்த கனவவை நிறைவேற்றிக் கொள்ளவதற்காக தேசிய மக்கள் சக்தியுடன் இலட்சக்கணக்கான மக்கள் இன்று இணைந்துள்ளனர்.

 

செப்டெம்பர் 21 ஆம் திகதி எங்களுடைய நாட்டின் பாரிய நடவடிக்கைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான முதல் கட்ட நடவடிக்கை நிறைவேற்றப்படும். ஆரம்பத்திலேயே நாங்கள் ஒரு மாற்றத்தை காட்ட வேண்டும்.

 

நீங்கள் அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று திசைக்காட்டி முன்பாக புள்ளிடியிடுங்கள். இரண்டாம், மூன்றாம் தெரிவு குறித்து எதனையும் சிந்திக்க வேண்டாம்.

 

பெயர் உள்ளது. சின்னமுள்ளது. அதற்கு முன் புள்ளடியிடுங்கள் போதும். தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது நாங்கள் வெற்றிபெற்றிருப்போம். தேர்தல் வெற்றிக்கு பின்னர் நாங்கள் எந்தவொரு வன்முறைகள், ஏனைய தரப்பினர், கட்சியினர் மற்றும் பணிபுரியும் எந்தவொருவருக்கும் தெரியாமலும் பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம்.

 

நாங்கள் நாட்டின் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தேர்தல் மேடைகளில் மாற்றமடையுமாறு வலியுறுத்தினாலும், ஏனைய கட்சிகளுக்காக பணியாற்றும் உரிமை, வாக்களிக்கும் உரிமையை மதிக்கிக்கின்றோம்.

 

அது ஜனநாயக உரிமையாகும். ஆகவே, எங்களுடைய வெற்றிக்கு பின்னர் வரலாற்றில் இடம்பெற்றது போன்று தாக்குதல், துப்பாக்கிச்சூடு, பஸ்களை எரித்தல், ஏனையோரை கொலை செய்வதாக மிரட்டுதல், பணிபுரியும் இடங்களில் இருப்போரை இடமாற்றம் செய்வதாக மிரட்டுவது போன்ற எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுக்கக் கூடாது.

 

வாக்களிக்கும் வரை நாம் பொறுமையாக இருப்பது போன்று, வெற்றிக்கு பின்னரும் பொறுமையாக இருந்து அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டிய தேவையுள்ளது.

ஆகவே, எதிர்தரப்பினர் திட்டமிட்ட வகையில் வன்முறைகளில் ஈடுபட முயற்சித்தாலும் நீங்கள் யாரும் அதில் எவ்விதத்திலும் தலையிட வேண்டாம்.

 

பொலிஸ் மற்றும் முப்படையினரின் அதிகாரத்துக்கு உட்பட்டு நாட்டில் இடம்பெறும் வன்முறைகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாம் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

“20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் கூட்டணி வெற்றிபெறும்” – சஜித் பிரேமதாச

“புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் கூட்டணி வெற்றிபெறும்” என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

 

மொனராகலயில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” 21 ஆம் திகதி நாங்கள் 20 இலட்ச வாக்குகளால் வெற்றிபெறுவோம். இது புலனாய்வுத் துறையின் அதிகாரப்பூர்வ தகவலாகும். ரணில் – அனுர ஜோடி வாக்கு வீதம் கீழ் மட்டத்திலே இருக்கின்றது.

 

புனித தலதா மாளிகையில் தேர்தல் விஞ்ஞாபனத்தை முதன் முதலில் சமர்ப்பித்து ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்ட பின்னரே நாம் தேர்தல் பணிகளை ஆரம்பித்தோம்.

 

தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் அனைத்தையும் புத்தபெருமானின் ஆசீர்வாதங்கள் பாதுகாக்கும் என்பதோடு நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம். இந்த வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

 

வன்முறை என்பது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையல்ல. எனவே மாற்றுக் கொள்கையோடு இருக்கின்ற எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த நாட்டை கட்டி எழுப்புகின்ற பயணத்தில் அனைவரையும் பங்காளர்களாக இணைத்துக் கொள்வோம்.

 

மத சுதந்திரத்தை கௌரவப்படுத்துவதோடு, பௌத்தம், இந்து, இஸ்லாம், கத்தோலிக்கம் ஆகிய மதங்களை பின்பற்றுவதற்கு எவருக்கும் உரிமை இருப்பதனால், அந்த உரிமையை பாதுகாக்கப்படும். மதசார்பற்ற நாட்டை உருவாக்க மாட்டோம்.

 

அதிகாரத்திற்கு வந்து ஆறு மாதங்களுக்குள் போதைப்பொருள் விநியோகத்தை நிறுத்துவதற்கு தேவையான அதிகபட்ச தீர்மானங்களை எடுத்து, போதைப் பொருள் மாபியாவை நிறைவுக்கு கொண்டு வருவோம்.

 

மக்கள் விடுதலை முன்னணியினர், பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் இறுதித் தருணத்தில் உங்கள் வாக்குகளை வீணடிக்காமல் தொலைபேசிக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

தபால் மூல வாக்களிப்பு நெருங்கியபோது சம்பள அதிகரிப்பை அறிவித்தமையானது தேர்தல் சட்டங்களை மீறும் செயல் – பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம

”அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தபோது சம்பள அதிகரிப்பை வழங்காத அரசாங்கம் தபால் மூல வாக்களிப்பு நெருங்கியபோது சம்பள அதிகரிப்பை அறிவித்துள்ளமையானது தேர்தல் சட்டங்களை மீறும் செயல்” என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தலைவர், பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம குறிப்பிட்டுள்ளார்.

 

இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ தேர்தல் வன்முறைகள் தொடர்பாக எங்களிடம் 125 முறைப்பாடுகள் உள்ளன, ஆனால் 30 முறைப்பாடுகள் மட்டுமே தேர்தலகள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

அரச அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு இந்தத் தேர்தலின் தன்மையைக் கூட மாற்ற முடியும். வாகன இறக்குமதி தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக,

5 அரச ஊழியர்களின் பணி இடைநிறுத்தப்பட்டனர்.

 

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்காமல்,

தபால் வாக்களிப்பு திகதி நெருங்கியபோது கொடுப்பனவுகளை வழங்குவதன் மூலம் தேர்தல் சட்டங்களும் மீறப்படுகின்றன.

 

பட்ஜெட்டில் வாகன இறக்குமதி குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. நாங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அக்கறை கொண்டுள்ளோம்.

 

சமகி ஜன பலவேக கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இந்த விஷயங்களில் ஒரு பிரிவினர் மட்டும் ஈடுபடவில்லை.

 

சில இடங்களில் பொலிஸார் சுதந்திரமாக இல்லை என்பதை நாம் அவதானித்துள்ளோம்.

மொத்தத்தில் கடுமையான பிரச்சனைகள் எதுவும் எழவில்லை“இவ்வாறு பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம குறிப்பிட்டுள்ளார்.