04

04

தொடரும் இஸ்ரேலின் தாக்குதல் – நசீரத்தில் ஐம்பது வரையானோர் பலி !

காசாவின் நசீரத் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு தரப்பினரும் போரை துவங்கினர். கிட்டதட்ட 11 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த போரினால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகளும், பெண்களும்தான் அதிகம் இறந்துள்ளனர். இதனிடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.

 

இஸ்ரேலின் பயங்கரமான தாக்குதல்களால் காசா முழுவதும் உருக்குலைந்துள்ளது. போரால் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, நோய் தொற்று அபாயங்களும் ஏற்பட்டுள்ளன. இதனால் காசாவில் உள்ள 6.4 லட்சம் குழந்தைகளுக்காக, உலக சுகாதார அமைப்பு போலியோ சொட்டு முகாம் நடத்த முன்வந்தது.

 

அதற்காக இன்றுமுதல் 3 நாட்களுக்கு தினமும் 8 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்றைய தினமே பல இடங்களில் மாதிரி முகாம்கள் நடத்தப்பட்டன. சில குழந்தைகளுக்கு மருத்துவ அதிகாரிகள் போலியோ சொட்டு மருந்தும் வழங்கினர்.

 

தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த சொட்டு மருந்து முகாம்களுக்கு, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் சமூக நலப் பணியாளர்கள் தயாராக இருந்தனர். இச்சூழலில் காசாவில் இஸ்ரேல் படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த வான்வழித் தாக்குதலில், அகதிகள் முகாம்கள் அமைந்திருந்த பகுதிகளில் ஒன்றான நசீரத் பகுதியில் 19 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஒரே நாளிலில் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது.

இந்த நாட்டின் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவு எனக்கு இருக்கின்றது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளபோதும் இந்த நாட்டின் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவு எனக்கு இருக்கின்றது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விசேட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இனம், சாதி, மதம் அன்றி, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கருத்தில் கொள்ளப்படும் தேர்தலை எதிர்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை விரைவாக ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாற்றாவிட்டால் 2035-2040 காலப்பகுதியில் மற்றுமொரு நெருக்கடி ஏற்படக்கூடும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கடவுச் சீட்டு பெறுவதில் உள்ள நெரிசலை விரைவில் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனால் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்னர் தாம் விரும்பிய அமைச்சரவையை நியமிக்காது, நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை நியமிக்கவுள்ளதாகவும், இதற்காக மக்கள் தமக்கு விருப்பமானவர்களை புதிய பாராளுமன்றத்திற்கு அனுப்புவார்கள் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், சிறுபான்மை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ள போது, ​​இந்நாட்டின் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

“யாரும் எதிர்க்க முடியாத வெற்றிக்கான பயணத்தையும் நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்.” – ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர !

தம்மைத் தவிர மற்ற அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தம்மைச் சூழவுள்ள அரசியல் குழுக்களால் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ள கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாது என சர்வஜன அதிகார ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற சிநேகபூர்வ சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

அங்கு மேலும் கருத்து தெரிவித்த திலித் ஜயவீர,

“யாரும் எதிர்க்க முடியாத வெற்றிக்கான பயணத்தையும் நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். ஏனெனில் சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் வரலாற்று ரீதியாக வளர்ந்த பாரம்பரிய அரசியலில் ஏற்பட்ட அனைத்து தவறுகளையும் சரி செய்யக்கூடிய ஒரு மூலோபாய வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்கு நாங்கள் மிகவும் கடினமாக உழைத்துள்ளோம். உலகின் பிற நாடுகள் இந்த சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொண்டன, அவர்கள் என்ன மூலோபாயங்களை பயன்படுத்தினார்கள், ஒரு தேசமாக நாம் எங்கு தவறு செய்தோம், இவை அனைத்தையும் பார்த்து இது அமைக்கப்பட்டுள்ளது”. என குறிப்பிட்டார்.

நல்லவர்கள் போல ஜே.வி.பி நடித்தாலும் இன்னும் பழைய போக்குடனே உள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க

ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்து விட்டதாக நல்லவர்கள் போல ஜே.வி.பி நடித்தாலும் இன்னும் பழைய போக்குடனே உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தொிவித்துள்ளாா்.

பெல்மடுல்ல வாராந்த சந்தை வளாகத்தில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவா் இதனைத் தொிவித்தாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”ஜனநாயக வழிக்கு வருவதாக அறிவித்த ஜே.வி.பி 1988 தேர்தலின் போது தேர்தலில் போட்டியிடுவது மரண தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்தது. தேர்தல் கடமை மேற்கொண்டால் அதற்கான தண்டனை, மரணம் என மாவட்ட செயலாளர்கள் எச்சரித்தது.

மற்றும் வாக்களிப்போருக்கு மரணம் பரிசளிக்கப்படும் என்றும் பொதுமக்களுக்கும் அறிவிக்கப்பட்டது.

அன்று ஜே.வி.பியின் வன்முறைக்கு முகங்கொடுத்தவர் ரணில் விக்ரமசிங்க. சட்டம் ஒழுங்கை பேண முக்கிய பங்காற்றினார் ரணில் விக்ரமசிங்க. 1000 இற்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து விலகிச் சென்றுள்ளனர்.

ஜே.வி.பிக்கு எதிராக பல்கலைக்கழக தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த மாணவர்கள் துரத்தித் துரத்தி அடிக்கப்பட்டனர். இன்றும் அந்த நிலைமை காணப்படுகிறது. ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்து விட்டதாக நல்லவர்கள் போல ஜேவிபி நடித்தாலும் இன்னும் பழைய போக்குடனே உள்ளது” என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க மேலும் தொிவித்தாா்.

பிரச்சார நடவடிக்கைகளுக்காக அதிகமாக செலவு செய்யும் ஜனாதிபதி வேட்பாளர்கள் – குடியுரிமை மூன்றாண்டுகளுக்கு ரத்து செய்யப்படும் என்கிறது தேர்தல் ஆணையம் !

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒரு வாக்காளருக்குச் செலவிடும் தொகையை விட அதிகமாகச் செலவு செய்துள்ளதாக நீதிமன்ற விசாரணையில் தெளிவான தகவல் தெரியவந்தால், சம்பந்தப்பட்ட வேட்பாளரின் குடியுரிமை மூன்றாண்டுகளுக்கு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

வரலாற்றில் இவ்வாறு குடியுரிமைகள் இல்லாதொழிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் உண்டு என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

 

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் வகைப்பாடு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர்களின் வருமானம் மற்றும் செலவு விபரங்கள் தேர்தலின் பின்னர் பத்திரிகை விளம்பரங்கள் மற்றும் இணையத்தளங்களில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

செலவின விவரங்கள் முரண்பாடாகவோ அல்லது தவறான தகவல் தரப்பட்டிருந்தாலோ, காவல்துறையில் முறைப்பாடு செய்வதற்கும், எந்நேரத்திலும் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதற்கும் சட்டத்தின் மூலம் மக்களுக்கு அனுமதி உண்டு என ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இதேவேளை, ஒவ்வொரு தேர்தலின் முடிவிலும் முப்பத்தொரு நாட்களுக்குள் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கையை வழங்க வேண்டும் என ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேட்பாளர்களின் செலவு விவரங்களை 21 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 1 லட்சத்து தொள்ளாயிரத்து ஏழு வாக்காளர்கள் !

கிளிநொச்சி மாவட்டத்தில் 1 லட்சத்து தொள்ளாயிரத்து ஏழு வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அதற்கு அமைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கு மேலதிகமாக வாக்கெண்ணும் பணிக்காக பழைய மாவட்டச் செயலக வளாகத்தில் 8 நிலையங்களில் நடைபெறவிருக்கின்றது.

நாளை முதல் நடைபெறவிருக்கின்ற தபால் மூல வாக்களிப்பிற்காக 3656 அரச உத்தியோகத்தர்கள் கடமையாற்றவுள்ளார்கள்.

அவர்களுக்காக 96 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் நாளை 4ம் திகதியும், பொலிசார் 4ம் மற்றும் 6ம் திகதியும் ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்காக 5ம், 6ம் திகதியும் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நாட்களில் அவசர வேலை உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணத்தால் வாக்களிப்பை தவறவிடுகின்ற உத்தியோகத்தர்கள். 11 , 12ம் திகதிகளில் பழைய மாவட்டச் செயலகத்தில் தமது வாக்கை செலுத்த முடியும்.

“ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவினால் வெற்றி பெறமுடியாது” – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

“ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவினால் வெற்றி பெறமுடியாது” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

இயலும் ஸ்ரீலங்கா வெற்றிபேரணி பெல்மடுல்லை நகரில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”அரச சேவையாளர்களின் கொடுப்பனவை அதிகரித்தோம். நான் வாக்குறுதிகளை வழங்கி செல்பவர் அல்ல. நான் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்.

 

அரச சேவையாளர்களின் கொடுப்பனவை அதிகரிப்பதாக வாக்குறுதி வழங்கினேன் இன்று அதனை நான் நிறைவேற்றியுள்ளேன்.எனவே அநுரவும் சஜித்தும் தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்து அரச பணியாளர்களின் சம்பள விவகாரத்தினை நீக்கிக்கொள்ள வேண்டும்.

 

நான் இந்த நாட்டை பொறுப்பேற்றபோது கட்டம் கட்டமாகவே என்னுடன் பலர் இணைந்தனர்.வாழ்க்கை சுமை அதிகரிப்பு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

 

பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்து நாடு முழு வங்குரோத்து அடைந்தது. இன்று நாம் அந்த நிலையை மாற்றி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பியுள்ளோம்.அரச சேவையாளர்களின் கொடுப்பனவு மற்றும் சம்பளத்தினையும் இன்று நாம் அதிகரித்துள்ளோம்.

 

தேசிய உற்பத்தியை அதிகரிப்பதன் ஊடாக ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்த முடியும். உரிய பொருளாதார திட்டம் ஒன்றின் அடிப்படையில் பயணிக்கும் போது நாடு முன்னேறும்

நான் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் 5 முக்கிய விடயங்களை உள்ளடக்கியுள்ளேன்.

 

வாழ்க்கை செலவினை குறைத்தல் வேலைவாய்ப்பினை உருவாக்குதல் சம்பளத்தினை அதிகரித்தல் வரிச்சுமையைக் குறைத்தல் மற்றும் ஏற்றுமதி பொருளாதாரத்தினை ஊக்குவித்தல் ஆகியனவாகும்.

 

நாம் பணம் அச்சிடவில்லை.ரூபாவின் பெறுமதியை அதிகரித்ததனாலேயே வாழ்க்கையை சுமையை இந்தளவேனும் குறைக்க முடிந்தது. இது வெறும் ஆரம்பம் மாத்திரமே. நாட்டின் தேசிய உற்பத்தியை அதிகரிப்பதற்கு பல திட்டங்களை வகுத்துள்ளோம்.

 

வரியினை குறைத்து செலவினை அதிகரித்தமையினாலேயே அன்று கோட்டாபய ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. சஜித்தும் அநுரவும் வரியினை குறைப்பதாகவே கூறுகின்றனர்.

 

இதனூடாகவே மீண்டும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் நான் போலி வாக்குறுதிகளை வழங்கி இந்த நாட்டை பொறுப்பேற்க விரும்பவில்லை. அடுத்த வருடம் நாம் ஒரு லட்சம் வேலைவாய்பபுக்களை உருவாக்குவோம். நாட்டிற்கு அந்நிய செலாவணி கிடைக்கப்பெறாவிட்டால் எதிர்வரும் 10 ஆண்டுகளில் இந்த நாடு மீண்டும் கடுமையாக வீழ்ச்சியடையும்” இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.