06

06

தமக்கு ஆடம்பரமான வாகனம் வேண்டும் என்று அயல்நாட்டுக்கு கடிதம் எழுதிய தமிழ்தேசிய குழுவினர் தான் சஜித் பிரேமதாசவுடன் நிற்கிறார்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக எடுத்த முடிவு மக்களின் முடிவல்ல அது கட்சி சார்ந்த முடிவு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தோவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் நாடாளுமன்றத்தில் மாகாண சபை தேர்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை முன்வைத்திருந்தார்.

அது தொடர்பான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் நிலையில், தமிழ் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவை அண்மையில் சந்தித்தபோது குறித்த பிரேரணையை நிறைவேற்றுவது தொடர்பில் சாதகமான கருத்துக்களை முன்வைத்ததாக அறிகிறேன்.

இவ்வாறான நிலையில் இறுதியாக இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட மாகாண சபை தொடர்பான தனிநபர் பிரேரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த இந்த ஒத்திவைப்பு சிலவேளை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கப் போவதான அறிவிப்பு வெளியாகியமை தாக்கத்தை செலுத்தி இருக்கலாம்.

ஏனெனில், தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், மாகாண சபை தொடர்பான விவாதம் சிலருக்கு தேவையாக இருக்கலாம் மற்றொரு தரப்பினர் அதை விரும்பாமல் இருக்கலாம்.

இருந்தாலும் தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொண்டு வந்த மாகாண சபை தேர்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை இறுதியாக இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் எடுத்துக் கொள்ளப்படுகிறது என தெரிந்தும் அதற்கு முன்னரே சஜித் பிரேமதாசவின் ஆதரவு அறிவிப்பை சுமந்திரன் வெளிப்படுத்தி விட்டார்.

தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக எடுத்த முடிவு மக்களின் முடிவல்ல அது கட்சி சார்ந்த முடிவு.

தற்போது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் இடம் பெற்று வரும் நிலையில் பாராளுமன்றத்தில் மாகாண சபை தேர்தல் தொடர்பான முடிவுகள் சாதகமாக அமையும் நிலையில் தமிழ் தலைமைகளின் சந்தர்ப்பவாத அரசியல் தமிழ் மக்களை பின்னோக்கி நகர்த்துகிறது.

13 வது திருத்தம் தமிழ் மக்களின் அரசியலுக்கான ஆரம்ப புள்ளி என அன்றிலிருந்து அதே நிலைப்பாட்டையே கூறி வருகிறேன்.

ஆனால் தமிழ் மக்களை ஏகப்பிரதிநிதிகள் என கூறுவோர் 13-ஐ தும்புக்கட்டையாலும் தொட்டுப் பாக்க மாட்டோம் என கூறிவிட்டு கடந்த மாகாண சபையில் தமிழ் இனத்தை பெற்று தர போகிறோம் என மக்களை உசிப்பேற்றி வாக்குகளை பெற்றார்கள்.

இறுதியில் மாகாண சபையை நடத்த முடியாமல் கட்சி ரீதியாகப் பிரிந்து நின்று சண்டை பிடித்ததும் தமக்கு ஆடம்பர வாகனம் வேண்டும் என அயல்நாடு ஒன்றுக்கு கடிதம் அனுப்பியதுமே நடந்தது.

சக தமிழ் காட்சிகள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை வழங்க விடாது தமது அரசியல் இருப்பு கலை தக்க வைத்துக் கொள்வதற்காக காலத்துக்கு காலம் மக்களை உசுப்பேத்தி அரசியல் நாடகம் நடத்தி வருகிறார்கள்.

இனியும் அவர்களின் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் ஏனில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதற்கான பதில்களை மக்கள் தமது வாக்குகளால் வழங்கியுள்ளார்கள்.

எனது அரசியல் பயணம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு அன்றாட பிரச்சனை மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எனது இலக்கு.

ஆகவே தமிழ் மக்கள் தமக்கான ஜனாதிபதியை தீர்மானித்துள்ள நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி சிறந்த ஒரு முடிவை எடுப்பார்கள் என நம்புவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பதவியேற்கவுள்ள 9வது ஜனாதிபதி இணைந்த வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான ஓர் தீர்வினை பெற்றுத்தர வேண்டும் – தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன்

நமக்காக நாம் என்ற தொனிப் பொருளிலான பிரசாரம், தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனால் திருகோணமலையில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

 

திருகோணமலை சிவன் கோவில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளுடன் கலந்து கொண்ட பின்னர் பிரசார நடவடிக்கையை ஆரம்பித்திருந்தார்.

 

இதேவேளை இலங்கை தமிழ் அரசு கட்சியியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள் தமக்கான பெரும்பான்மை ஆதரவினை வழங்கியிருப்பதாக அவர் மகிழ்ச்சி வெளியிட்டிருந்தார்.

 

மேலும் நாட்டின் பதவியேற்கவுள்ள 9வது ஜனாதிபதி இணைந்த வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான ஓர் தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என்றும் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரன் வலியுறுத்தியிருந்தார்.

உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்ட நான்கு இராஜாங்க அமைச்சர்கள் !

நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹொன் பிரியதர்ஷன டி சில்வா, நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47(3) (அ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் தேர்தல் முறைக்கேடுகள் – 2000ஐ தாண்டியது குற்றங்கள்!

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (04 ஆம் திகதி பி.ப 4.30 வரை) தேர்தல் தொடர்பாக 132 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 31 ஆம் திகதி தொடக்கம் 04 ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,227 என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் அரச ஊழியர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை !

அரச ஊழியர்கள் அனுமதியின்றி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில் பாகிஸ்தான் அரசாங்கம் புதிய உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.

பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராகத் தகவல்கள் வெளியிடுவதைத் தடுக்கும் வகையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அரச ஊழியர்கள் அனுமதியின்றி எந்தச் சமூக வலைத்தளத்தையும் பயன்படுத்த முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு ரிஷார்ட் பதியூதீனை அழைத்து சென்று பிரச்சாரம் செய்யும் சஜித் பிரேமதாச தென்னிலங்கைக்கு அவரை அழைத்து செல்ல மாட்டார்.” – அனுர குமார திசாநாயக்க

“நாட்டில் இனவாதத்தினை மூலதனமாக்கி ஆட்சி பீடம் ஏறிய மொட்டு கட்சி இன்று சுக்குநூறாக பிளவு பட்டுள்ளதாக” தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சம்பிக்க ரணவக்க, ரிசாட் பதியூதீன் ஆகியோர் சஜித்துடன் இருக்கின்றனர். சஜித் பிரேமதாச வவுனியாவுக்கும் மன்னாருக்கும் வருகைதரும் போது சம்பிக்க ரணவக்கவை கூட்டிவரமாட்டார்.

ஆனால், காலிக்கு செல்லும்போது சம்பிக்கவை அழைத்துச்செல்வார். எனினும் அங்கு ரிசாட் பதியூதீனை அழைத்துச் செல்லமாட்டார். என்ன அரசியல் இது. இதுதான் இரட்டை வேட அரசியல். கொள்கை இருப்பது தேசிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே. நாங்கள் அனைத்து இன மக்களின் உரிமைகளை உறுதிசெய்யும் புதிய ஒரு அரசியலமைப்பை உருவாக்குவோம்.

பிரதேச சபைகளில் இருந்து அதிகாரப்பகிர்வை வழங்கும்படியான ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்படும். இனவாதத்தினை மூலதனமாக்கி ஆட்சியினை பெற்ற மொட்டு கட்சி இன்று சுக்குநூறாகிப்போயுள்ளது. இனவாதம் சாதிவாதத்துக்கு தேசிய மக்கள் சக்தியில் இடமில்லை.

போதைப்பொருள் பின்புலத்தில் இருப்பது அரசியல்வாதிகளே.

அது உங்கள் குழந்தைகளை பாதிக்கும். கிராமத்தை பாதிக்கும். அதனை முழுமையாக நாம் தடுத்து நிறுத்துவோம். ரணில் கடைசி நேரத்தில் தோல்வியடைவார். சத்தமில்லாமல் வீடு செல்வார். அது அவருக்கு பழக்கப்பட்ட ஒன்று” இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுவிஸ் நாட்டில் வசிக்கும் யாழ்ப்பாணத்து நபரை டிக்டொக் வீடியோக்கள் மூலம் ஏமாற்றி 45லட்சம் ரூபா மோசடி – 3 யாழ்ப்பாணத்து பெண்கள் கைது !

டிக்டொக் வீடியோக்களை அனுப்பி, சுவிஸ் நாட்டில் வசித்து வரும் 52 வயதுடைய நபர் ஒருவரிடம் இருந்து சுமார் 45 இலட்ச ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் தற்போது சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவரது வட்ஸ் அப் இலக்கத்திற்கு அழகிய பெண்ணொருவரின் டிக்டொக் வீடியோக்கள் அனுப்பப்பட்டுள்ளன. வீடியோக்களை பார்த்து, வீடியோக்கள் வரும் அந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகளை பேணி உள்ளார்.

அந்த இலக்கத்தில் இருந்து கதைத்த பெண்ணும் தனக்கு 22 வயது , தான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என கூறி பழக ஆரம்பித்து பழக்கம் நெருங்கிய தொடர்பாக மாறயுள்ளது. இந்நிலையில், குறித்த பெண் பல்வேறு கட்டங்களில், பல்வேறு காரணங்களை கூறி சுமார் 45 இலட்சத்துக்கும் மேலாக பணம் பெற்றுள்ளார்.

பெண்ணிடம் வீடியோகோல் கதைக்க பல முறை சுவிஸ் நாட்டவர் முயற்சித்த போதிலும், அந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அண்மையில் சுவிஸ் நாட்டவர் யாழ்ப்பாணம் வருகை தந்து, பெண்ணை நேரில் சந்திக்க கோரிய போதிலும் அப்பெண் நேரில் சந்திக்க மறுப்பு தெரிவித்து, தொடர்பை துண்டிக்க, சந்தேகம் அடைந்தவர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, டிக்டொக் வீடியோவில் காணப்பட்ட பெண்ணை கைது செய்து விசாரணை செய்த போது , அப்பெண்ணுக்கு இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

அதனை தொடர்ந்து சுவிஸ் நாட்டில் இருந்து பணம் போடப்பட்ட வங்கி கணக்கு இலக்கத்தின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து, கணக்கிலக்கத்திற்கு சொந்தமான பெண்ணை கைது செய்தனர்.

அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, தனக்கு தெரிந்த பெண்ணே தான் எனது கணக்கு இலக்கத்திற்கு சுவிஸ் நாட்டவரை பணம் போட சொல்லி , பணம் போடப்பட்டது என கூறியுள்ளார்.

அந்த பெண் கூறிய 47 வயதான பெண்ணை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , குறித்த 47 வயது பெண்ணுக்கும் , சுவிஸ் நாட்டில் வசித்து வந்தவருக்கு இடையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர் கடந்த முறை யாழ்ப்பாணம் வருகை தந்து அப்பெண்ணுடன் நெருக்கமாகவும் பழகியுள்ளார்.

பின்னர் அவர் சுவிஸ் நாட்டிற்கு சென்ற பின்னர் , இப் பெண்ணுடனான தொடர்பை குறைத்துள்ளார். இந்நிலையில் அவரின் பலவீனங்களை அறிந்திருந்த குறித்த பெண் , தனது நண்பியின் பெயரில் டிக்டொக் ஐடியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அழகிய பெண்ணொருவர் இருப்பதனை அவதானித்து, அப்பெண்ணின் வீடியோக்களை தரவிறக்கி, இவருக்கு வட்ஸ் அப் ஊடாக அனுப்பி, அப்பெண்ணின் பெயரில் உறவை வளர்த்துள்ளனர்.

பணம் போட சொல்லி கொடுக்கப்பட்ட வங்கி கணக்கிலக்கத்தில் உள்ள பெயரும் , டிக்டொக் வீடியோவிலும் உள்ள பெயரும் ஒன்றாக இருந்ததமையால் , அவரும் சந்தேக படாது பணத்தினை அந்த கணக்கு இலக்கத்திற்கு போட்டுள்ளார்.

பணத்தினை தொடர்ந்து ஒரு கணக்கு இலக்கத்திற்கு பெறாது, மற்றுமொரு பெண்ணின் கணக்கு இலக்கத்தினையும் கொடுத்து அந்த பெண்ணின் கணக்கு இலக்கம் ஊடாகவும் பணத்தினை பெற்றுள்ளனர் என்பது விசாரணைகள் ஊடாக பொலிஸார் கண்டறிந்தனர்.

அதனை அடுத்து பிரதான சந்தேக நபரான 47 வயதான பெண்ணும் , வங்கி கணக்கு இலக்கத்தின் உரிமையாளர்களான இரு பெண்களுமாக மூன்று பெண்களையும் கைது செய்து, மேலதிக விசாரணைகளின் பின்னர் , யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (04) முற்படுத்தியவேளை , மூவரும் தம் மீதான குற்றங்களை ஏற்றுக்கொண்டதுடன் , பணத்தினையும் மீள வழங்குவதாக மன்றில் உறுதி அளித்தனர்.

அதனை தொடர்ந்து மூவரையும் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.

நாமல் ராஜபக்ச சட்டவிரோதமாக சம்பாதித்த 15 மில்லியன் ரூபா – 2025ஆம் ஆண்டில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று எடுத்துகொள்ளப்பட நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாமல் ராஜபக்ச சட்டவிரோதமாக சம்பாதித்த 15 மில்லியன் ரூபாவை முதலீடு செய்தமை தொடர்பில் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த விசாரணை தொடர்பான அனைத்து ஆலோசனைகளும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

வட்டுக்கோட்டையில் வீடொன்றின் மீது வன்முறை கும்பல் தாக்குதல் – பொலிஸ் நிலையம் முன்பு குவிந்த மக்கள்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், குறித்த தாக்குதல் தாரிகளை கைது செய்யுமாறு வலியுறுத்தி, பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையம் முன்பாக ஒன்று கூடியமையினால் நேற்று இரவு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பதற்றமானதொரு சூழல் ஏற்பட்டது.

 

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள உள்ள வீட்டுக்கு நேற்று இரவு அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பலொன்று, சிறுவர்கள் பெண்கள் உள்ளிட்ட ஐவர் மீது தாக்குதல் நடத்தி, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

 

ஆறு பேர் கொண்ட வன்முறை கும்பலால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் பெண் ஒருவரும், 5 வயதான சிறுவன் ஒருவரும் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சம்பவத்தில் காயமடைந்த பெண் ஒருவர் யாழ்., போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

மேலும், இந்தத் தாக்குதல் சம்பவத்தினால் அங்கிருந்து மோட்டார் சைக்கிள், வீட்டு மதில் மற்றும் வீட்டு உபகரணப் பொருட்களும் சேதமடைந்துள்ளன.

 

இந்த நிலையில், இந்த தாக்குதல் தாரிகளை கைது செய்யுமாறு வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன், அயலவர்கள் இணைந்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் முன்பாக நேற்று இரவு ஒன்றுக் கூடியமையால், அங்கு பதற்றமானதொரு சூழல் ஏற்பட்டது.

 

வன்முறைக் கும்பலின் அட்டகாசங்களால் தங்களால் நிம்மதியாக உறங்கக்கூட முடியாதுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.