17

17

அடுத்த சில நாட்களில் நடக்கவிருக்கும் சதித்திட்டம் – அனுர குமார திசாநாயக்க

நாட்டில் அடுத்த சில நாட்களில் நடக்கவிருக்கும் சதித்திட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க கருத்து வௌியிட்டுள்ளார்.

நேற்று (16) தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வௌியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், “இந்த தேர்தல் பிரச்சாரத்தில் எங்கள் நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதுதான். வெற்றி பெறுவதற்கான சாத்தியம் காணப்படுகிறது. அடுத்த இரண்டு நாட்களில் புதிதாக எதுவும் இல்லை. எங்களுடைய உண்மைகளை மீண்டும் மீண்டும் முன்வைப்பதுடன், அரசாங்கம் மற்றும் சஜித்தின் முகாமில் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் சாத்தியமான சதித்திட்டங்கள் பற்றிய உண்மைகளை சமூகத்திற்கு முன்வைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். நம் நாட்டில் பல சமயங்களில் தேர்தல் பணிகள் இப்படியே நடந்தாலும் எதிர்பாராத நிகழ்வுகள் நடப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எனவே பொதுமக்கள் மத்தியில் ஊகங்கள் எழுந்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரு சந்தர்ப்பங்களில் கலவரம் ஏற்படுவதற்கான அபாயம் பற்றி கூறியுள்ளார்.

அவ்வாறே ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலும் ஒரு சம்பவம் பதிவாகியிருப்பதைப் பார்த்தோம். எனவே, சதி செய்தாவது சமூகத்தில் மோதல் சூழ்நிலையை உருவாக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கலாம். அதை வெளிப்படுத்துவதும், எங்கள் உறுப்பினர்களை எந்த வகையிலும் இதுபோன்ற மோதலில் ஈடுபட வேண்டாம் என்பதும், மோதல் ஏற்பட்டால் பொலிஸாரும் ஆயுதப்படைகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்களுக்குள் இதுபோன்ற விடயங்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும்.” என்றார்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் தகுதி – யாழ்ப்பாணத்தில் இருந்து 593,187 வாக்காளர்கள்!

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

அதன்படி, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு கொழும்பு மாவட்டத்திலிருந்து 1,765,351 பேரும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 1,881,129 பேரும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 1,024,244 பேரும், கண்டி மாவட்டத்திலிருந்து 1,191,399 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 429,991 பேரும், நுவரெலியா மாவட்டத்திலிருந்து 605,292 பேரும், காலி மாவட்டத்திலிருந்து 903,163 பேரும், மாத்தறை மாவட்டத்திலிருந்து 686,175 பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து 520,940 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.

 

மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 593,187 பேரும், வன்னி மாவட்டத்திலிருந்து 306,081 பேரும், மட்டகளப்பு மாவட்டத்திலிருந்து 449,686 பேரும், திகாமடுல்ல மாவட்டத்திலிருந்து 555,432 பேரும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 315,925 பேரும், குருணாகல் மாவட்டத்திலிருந்து 1,417,226 பேரும், புத்தளம் மாவட்டத்திலிருந்து 663,673 பேரும், அநுராதபுரம் மாவட்டத்திலிருந்து 741,862 பேரும், பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து 351,302 பேரும், பதுளை மாவட்டத்திலிருந்து 705,772 பேரும், மொனராகலை மாவட்டத்திலிருந்து 399,166 பேரும், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 923,736 பேரும், கேகாலை மாவட்டத்திலிருந்து 709,622 பேரும் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுமந்திரன் சஜித் பிரேமதாசவுடன் நிற்பது ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகளவான வாக்குகளை சேர்ப்பதற்கான சதி நடவடிக்கை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கும் விடயமானது ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகளவான வாக்குகளை சேர்ப்பதற்கான சதி நடவடிக்கை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”தமிழ்த் தேசியக் கட்சிகள் சஜித் பிரேமதாசவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள நிலை சிங்கள மக்கள் மத்தியில் சஜித்திற்கான ஆதரவினை குறைக்கும் நடவடிக்கையாகும்.

சஜித் பிரேமதாச சிங்கள தேசிய வாதத்திற்கு நோ்மையாக நடந்து கொள்வாா் என்னும் நிலைப்பாட்டில் குழப்பத்தினை ஏற்படுத்தி அவரது தென்னிலங்கை வாக்குகளை ரணிலின் பக்கம் திரும்பும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சஜித் பிரேமதாசவினை ஆதாிக்கும் வடக்கு கிழக்கினைப் பிரதிநித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஆதரவு கிடையாது. எனினும் இந்த நிலைப்பாட்டில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தினையும் எற்படுத்தப்போவதில்லை.

ஆனால் தென்னிலங்கையில் குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் அரசியல்வாதிகளின் நிலைப்பாடு குழப்பத்தினை ஏற்படுத்தும்.

ஆகவே நாம் இவை அனைத்தையும் தொகுத்துப் பாா்த்தால் இன்று தமிழ்த் தேசியத்திற்கு நோ்மையாக கொடுக்கக்கூடிய ஒரு நோ்மையான வழி தோ்தலைப் பகிஸ்காிப்பது மட்டுமே.

எனவே 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதே எமது கட்சியின் நிலைப்பாடு” என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் சுட்டிக் காட்டினாா்.

சுமார் 40 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள் – ஐ.நா கவலை !

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதையடுத்து காசாவின் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.

பலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ம் திகதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தது. போரில் இதுவரை 41,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 95,000 பேர் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் பலஸ்தீனத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்து ஐ.நா. “பலஸ்தீன போர் மூலம் இந்த உலகம் அப்பாவி மக்களை இழந்து வருகிறது” என்று கவலை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த போர் நிருத்தத்திற்கு “ஐ.நா 24 மணி நேரமும் உழைத்து வருகிறது. இந்த உலகில் நாங்கள் பணியாற்ற மிகவும் பாதுகாப்பற்ற இடமாக இதைத்தான் கருதுகிறோம்.

இங்கு மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கின்றனர். எங்களின் 300 பணியாளர்களை நாங்கள் களத்தில் இறக்கியிருந்தோம். இன்று இதில் மூன்றில் இரண்டு பங்கு அளவிளான பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டள்ளது.

பழமையான முறைமைகளை கைவிட்டுவிட்டு அரசியலை பொதுச் சேவையாக மாற்ற வேண்டும் என்பதே எமது நோக்கம் – அனுர குமார திசாநாயக்க

உணவு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் சேர்க்கப்பட்டுள்ள வற் வரி முற்றாக நீக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதித் தேர்தலுக்காக அக்குரஸ்ஸேவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அநுரகுமார , “உணவு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு கொண்டு வரப்பட்டுள்ள வற் வரி முற்றிலும் நீக்கப்படும்.மின் கட்டணத்தை குறைக்கும் திட்டம் மிகக்குறுகிய காலத்திற்குள் செயல்படுத்தப்படும்.

வாழ முடியாமல் தவிக்கும் குடும்பங்களுக்கு 10,000 ரூபாயும், மிகவும் கஷ்டப்படும் நபருக்கு 17,500 ரூபாயும் வழங்கப்படும்.உள்ளவற்றைக் கைவிட்டு அரசியலை பொதுச் சேவையாக மாற்ற வேண்டும் என்பதே நம்பிக்கை.

நாங்கள் வெற்றி பெற்றால் எரிபொருள் இல்லாமல் போய்விடும் என்கிறார்கள், ரணில் அரேபியாவின் சுல்தானா?ரணில் இல்லாவிட்டால் எரிவாயு இல்லாமல் போய்விடுமாம் அப்படியென்றால் ரணில் எங்காவது எரிவாயுக் கிணற்றைக் கண்டுபிடித்து விட்டாரா?

தேசிய மக்கள் சக்தி எண்ணெய், எரிவாயு மற்றும் மின்சாரம் தடையின்றி தொடர்ந்து வழங்கும் என்பதற்கு நாங்கள் உத்தரவாதம் அளிப்போம்”.என்றார்.

சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் அலுவலகம் யாழில் !

சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் தாயக மக்கள் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட தலைமைச் செயலக அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியில் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 

தாயக மக்கள் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

துண்டுப் பிரசுரம் ஒன்றை பெற்றுக்கொள்ள மறுத்த நபர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்திய சஜித் பிரேமதாச ஆதரவாளர்கள் !

கடையொன்றில் வைத்து துண்டுப் பிரசுரம் ஒன்றை பெற்றுக்கொள்ள மறுத்த நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் நாவலப்பிட்டியில் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
மேற்படி தாக்குதல் சம்பவம் அந்தக் கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
நாவலப்பிட்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள கடிகாரம் பழுதுபார்க்கும் கடையின் உரிமையாளரின் மகனே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதோடு, நேற்று (15) முற்பகல் 11 மணியளவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் ஆதரவாளர்கள் குழுவுடன் குறித்த கடைக்கு சென்று மேற்படி இளைஞனிடம் துண்டுப் பிரசுரம் ஒன்றை வழங்கியுள்ளார்.
அப்போது அந்த இளைஞர் அதனை வாங்க மறுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான இளைஞன், நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுதோடு, வைத்தியசாலையில் பொலிஸாரிடம் முறைப்பாட்டை வழங்கியதன் பின்னர் இன்று (16) வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.