14

14

ஒரே மாதத்தில் ஒரு பில்லியன் ரசிகர்கள் – யூடியூப்பில் கலக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ !

பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமூக வலைத்தளங்களில் ஒரு பில்லியன் இரசிகர்களால் பின் தொடரப்படும் முதல் நபராக பதிவாகியுள்ளார்.

 

Instagram, Facebook, Twitter, YouTube, மற்றும் சீன சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் ரொனால்டோவை ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட இரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.

 

மற்றுமொரு கால்பந்தாட்ட நட்சத்திரமான மெஸ்ஸியை 623 மில்லியன் இரசிகர்கள் பின்தொடர்வதுடன் பாடகர்களான ஜஸ்டின் பீபர், டெய்லர் ஸ்விஃப்ட் ஆகியோருக்கும் மில்லியன் கணக்கான இரசிகர்களே உள்ளனர்.

 

இந்தப் பட்டியிலில் இரண்டாமிடத்திலுள்ள செலினா கோமஸ் 690 மில்லியன் இரசிகர்களை தம்வசம் வைத்துள்ளார்.

 

கடந்த மாதம் யூ.டியூபில் இணைந்த ரொனால்டோவை ஒரு வாரத்திற்குள் 50 மில்லியன் இரசிகர்கள் பின்தொடர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு அடுத்த ஐந்து வருடங்களுக்குள் தீர்வு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

தேசிய காணி ஆணைக்குழு மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆகியவை தமது அரசாங்கத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இன்று தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு அடுத்த ஐந்து வருடங்களுக்குள் தீர்வு காண்பதற்கு நீதியரசர் நவாஸ் ஆணைக்குழுவின் ஊடாக செயற்படுவார் என யாழ்ப்பாணம்  நாவாந்துறையில் இன்று (14) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கின் பிரச்சினைகளை அரசியல் பிரச்சினைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது எனவும், அபிவிருத்தியும் தேவை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இல்லையேல் ஏனைய மாகாணங்கள் அபிவிருத்தியில் முன்னோக்கி செல்லும் போது வடக்கு பின்தங்கிவிடும் எனவும் வடக்கின் அரசியல் பிரச்சினைகளை மட்டுமன்றி அபிவிருத்தி பிரச்சினைகளையும் தீர்த்து வைப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களை தான் அச்சுறுத்தியதாக குறிப்பிட்ட அநுரகுமார திஸாநாயக்கவை  சுமந்திரன்  பாதுகாத்தாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

அநுர, சஜித் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க முயல்கின்றனர். அவ்வாறு செய்தால் நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்காது . வாழ்க்கை செலவை குறைப்பதே எமது முதலவாது குறிக்கோள்.அஸ்வெசும நிகழ்ச்சி திட்டம்.உர மானியம். வழங்கப்பட்டுள்ளது. தனியார் துறையினருக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு அடுத்த வருடம் முதல் சம்பளத்தை அதிகரிக்க முடியும். வரியையும் குறைக்க வழிசெய்ய முடியும்.

அநுர, சஜித் ஆகிய இரண்டு வேட்பாளர்களும் வரியை குறைக்க வேண்டும் என கூறுகின்றனர். அவ்வாறு செய்தால் மேலும் பல பாதிப்பை சந்திக்க நேரிடும்.

இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றார்கள். சலுகைகளை வழங்க வேண்டும். முதலீட்டாளர்களை இலங்கைக்கு வரவழைக்க வேண்டும். தனியார் துறையிலும் ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்க உள்ளோம்.சுய தொழில் முயற்சியாளருக்கு வட்டியில்லா கடன்களை வழங்க வேண்டும்.

காங்கேசன்துறை பிரதேசத்தில் முதலாவது முதலீட்டு வலயம் உருவாக்கப்படவுள்ளது. தொடர்நது பரந்தன், மாங்குளத்தில் முதலீட்டு வலயம் உருவாக்கப்படும். பூநகரி பிரதேசத்தில் சூரிய மின்சக்தி திட்டம் உருவாக்கப்படும். சஜித், அநுரவிடம் தீர்வுகள் இல்லை. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” என் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்காக நேட்டோ களமிறங்கினால் ரஷ்யா தகுந்த முறையில் பதிலளிக்கும் – விளாடிமிர் புட்டின்

ரஷ்யா மீது உக்ரேன் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நேட்டோ நீக்கினால் உக்ரேன் – ரஷ்ய யுத்தத்தில் நேட்டோ நேரடியாக களமிறங்குகின்றது என தான் கருதுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

நேட்டோ, அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் ரஷ்யா ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி, ஆயுத உதவிகள் அளித்து வருவதால், ரஷ்யாவுக்கு கடும் சவாலை உக்ரேன் தொடர்ந்தும் அளித்து வருகிறது.

இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் இந்தப் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இந்தப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் அண்மையில் அறிவித்தார்.

எனினும், ரஷ்ய பிராந்தியங்கள் மீது ஆளில்லா ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி உக்ரேன் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்த நிலையில், இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தும் திறன் உக்ரேன் இராணுவத்திற்கு கிடையாது என்றும் செயற்கைகோள் மூலமான உளவுத் தகவல்களை பெறாமல் இவற்றை பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா அல்லது நேட்டோ செயற்கைகோள்களை தான் உக்ரேன் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ஏவுகணைகளுக்கு தேவையான சில அதிநவீன கருவிகள் நேட்டோ அமைப்பிடம் தான் உள்ளதாகவும் எனவே, இந்த போரில் நேட்டோ படைகள் நேரடியாக ஈடுபடுகிறதா அல்லது இல்லையா என்பதே முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஏவுகணைகளை உக்ரேன் பயன்படுத்த அனுமதித்தால், அது போரின் தன்மையை மாற்றும் எனத் தெரிவித்துள்ள புடின், அது நேட்டோ படைகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் ரஷ்யாவுடன் நேரடியாக மோதுவதற்கு சமம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் தகுந்த முடிவுகளை ரஷ்யா எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முடங்கிய நூற்றுக்கணக்கான ஆடைத்தொழிற்சாலைகள் – ஆட்சி மாற்றத்தின் பின்பும் திணறும் பங்களாதேஷ்!

பங்களாதேஷில் உள்ள நூற்றுக்கணக்கான ஆடைத் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் கடந்த இரண்டு வாரங்களாக வேலையைப் புறக்கணித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

உரிய நேரத்தில் ஊதியம், சிறந்த ஊக்கத்தொகை வழங்கப்படாமை மற்றும் தன்னிச்சையான பணிநீக்கங்களை நிறுத்தக் கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தொழிலாளர்கள் வருகை போனஸ் மற்றும் உணவு கொடுப்பனவுகளை அதிகரிக்கவும், அதேபோல் பல்வேறு குழுக்களுக்கு இடையேயான ஆட்குறைப்பு மற்றும் ஊதிய பாகுபாடு மற்றும் ஆண் மற்றும் பெண் ஊழியர்களை பணியமர்த்துவதில் இருந்து விடுபட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த மாதம் நாட்டை விட்டு வெளியேறி, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது.

இந்த இடைக்கால நிர்வாகத்தில் ஹசீனாவின் நிர்வாகத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்த குழுக்களின் பிரதிநிதிகள் உள்ளனர்.

ஒரு முன்னணி பங்களா செய்திச் சேவையின் படி, ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து தொழிலாளர்களின் நடவடிக்கைகளால் 100 க்கும் மேற்பட்ட தொழிற்சாலை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தொழிற்சாலை வளாகங்களில் அரசாங்கம், இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகளை நிறுத்தியுள்ளது.

வார இறுதிக்குப் பிறகு சனிக்கிழமையன்று (14) தொழிற்சாலைகள் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படாவிட்டால், பங்களாதேஷின் ஆடைத் துறை ஆழ்ந்த நெருக்கடியில் சிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தமிழ் பொது வேட்பாளரை இழிவாகப் பேசுபவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் – சி.வி.விக்கினேஸ்வரன்

தமிழ் பொது வேட்பாளரை இழிவாகப் பேசுபவர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக நீங்கள் ஒவ்வொரும் எதிர்வரும் 21ஆம் திகதி அரியநேத்திரனுக்கு வாக்களிக்க வேண்டும் என நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து இன்று (14) நெல்லியடியில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”ஜனாதிபதி தேர்தலில் பா.அரியநேத்திரனுக்கு (P. Ariyanethiran) நீங்கள் வெகுவாக வாக்களித்தால் அதற்கு மதிப்புண்டு மாண்புண்டு. அதை வைத்து தமிழ் மக்களின் அடையாளமாக காட்டி எமக்கு நடந்து வரும் அநியாயங்கள் பற்றி நாடுகளுக்கு கூறி இலங்கை அரசாங்கம் தொடர்ந்து எமக்கு இழைக்கும் இன்னல்களை தடுக்கலாம். இவர் இத்தனை இலட்சம் வாக்குகளைப் பெறறவர் என அடையாளம் காட்டக் கூடியதாக இருக்கும்.

பெரும்பான்மை அரசியல் வாதிகளை ஆதரிப்பது தமிழ் பேசும் அரசியல் வாதிகளுக்கு தனிப்பட்ட நன்மையினைத தரும் ஆனால் மக்களுக்கு எதுவும் கிடைக்காது.

சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாமென தொடங்கிய பகிஷ்கரிப்பாளர்கள் இப்போது தமிழ் பொது வேட்பாளரையும் பகிஷ்கரிக்க சொல்கின்றார்கள்.” என தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி இனவாத கட்சியா..? தமிழ் – முஸ்லீம் மக்களின் நிலைப்பாடு என்ன..? ஆய்வாளர் பஷீர் செய்யத் அவர்களுடனான தேசம் ஜெயபாலனின் கலந்துரையாடல்..!

ஜே.வி.பி இனவாத கட்சியா..? தமிழ் – முஸ்லீம் மக்களின் நிலைப்பாடு என்ன..? ஆய்வாளர் பஷீர் செய்யத் அவர்களுடனான தேசம் ஜெயபாலனின் கலந்துரையாடல்..!

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024 பிரச்சாரங்கள் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜே.வி.பி கட்சி பற்றிய இலங்கை சிறுபான்மை மக்களின் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது..? இலங்கை முஸ்லிம் மக்களின் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது என்பது தொடர்பாக ஆய்வாளர் பஷீர் செய்யத் அவர்களுடனான தேசம் ஜெயபாலனின் கலந்துரையாடல்..!

ஆறு மாதங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 2,142 முறைப்பாடுகள் !

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 2,142 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி , இலஞ்ச குற்றச்சாட்டு தொடர்பில் 158 முறைப்பாடுகளும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் 379 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

அத்துடன்,  சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்தமை தொடர்பில் 79 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இலஞ்சம் மற்றும்  ஊழல் தொடர்பில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 8 பேர் பொலிஸ் அதிகாரிகள் ஆவர்.

மேலும், இலஞ்சம் வாங்கியமை தொடர்பில் 25 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

மாகாண சபை முறைமைக்கு எதிராக அன்று போர்க்கொடி தூக்கிய ஜே.வி.பியினருக்கு வடக்குக்குச் சென்று வாக்குக் கேட்பதற்குரிய உரிமை கிடையாது. – ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கை – இந்திய ஒப்பந்தம் மற்றும் மாகாண சபை முறைமைக்கு எதிராக அன்று போர்க்கொடி தூக்கிய ஜே.வி.பியினருக்கு வடக்குக்குச் சென்று வாக்குக் கேட்பதற்குரிய உரிமை கிடையாது. ஆனால், எமக்கு அதற்குரிய உரிமை உள்ளது. ஏனெனில் அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்கும் கட்சிதான் எமது கட்சியாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிராக மக்களைக் கொன்ற கட்சிதான் ஜே.வி.பி. மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டவர்களையும் ஜே.வி.பி. கொன்றது. இந்திய மருத்துகளைக் கொண்டு வந்த அதிகாரிகளையும் இந்தக் கட்சி கொலை செய்தது. இந்தியப் பொருட்களைப் புறக்கணிக்குமாறு அழைப்பும் விடுத்தது. எனவே, இந்தக் கட்சியினருக்கு வடக்குக்குச் சென்று வாக்கு கேட்கும் உரிமை கிடைக்காது.
வடக்கு மக்கள் எதிர்பார்க்கும் அதிகாரப் பகிர்வு மற்றும் அபிவிருத்திகளைச் செய்யக்கூடிய தலைவர் சஜித் பிரேமதாஸதான் என்பதை அந்தப் பகுதி மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
வடக்கில் உள்ள தமிழ்த் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனை அவர்கள் வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர்.
அதேபோல் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களும் சஜித்துக்கு பேராதரவு வழங்கும் நிலைப்பாட்டில் உள்ளனர். குறித்த பகுதிகளுக்குச் சென்றபோது சஜித்துக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க கோரிய கஜேந்திரன் கைதாகி விடுதலை!

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேர்தலைப் புறக்கணிக்குமாறு வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்கு அறிவிக்கும் வகையில், தமிழ்த் தேசிய மக்கள் கூட்டமைப்பு அண்மையில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. இவ்வாறு நேற்று (13-) கிளிநொச்சியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த செல்வராஜா கஜேந்திரனை பொலிஸார் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வறுமையிலிருந்து மக்களை முதலில் விடுபட செய்வதே எமது பிரதான கொள்கையாகும். – அனுர குமார திசாநாயக்க

நமது வெற்றியை இனிமேல் மாற்ற முடியாது எனவும், மக்களுக்கான அரசாங்கத்தை நாம் ஸ்தாபிக்க இருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அநுரகுமார திஸாநாயக்கா இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எமது வெற்றியை இனிமேல் மாற்ற முடியாது. மக்களுக்கான அரசாங்கத்தை நாம் ஸ்தாபிக்கவுள்ளோம். நாட்டு மக்கள் எவ்வளவு துன்பத்தில் இருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்து வருகிறோம். வறுமையிலிருந்து மக்களை முதலில் விடுபட செய்வதே எமது பிரதான கொள்கையாகும்.

ஆட்சியாளர்கள் மட்டுமன்றி, மக்களும் சுகபோகமாக வாழ வேண்டும். எம்மைப் போன்ற வறுமையான நாடுகள், முன்னேற வேண்டுமெனில் கல்வித்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும். இன்று எமது கல்வி முறைமையானது பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் பாரமாக மாறியுள்ளது.

 

ஜப்பான் போன்ற நாடுகளில் எல்லாம் நடந்தே பாடசாலைக்கு சென்று விட முடியும். ஆனால் இங்கோ பேருந்துகளிலோ வேனிலோ நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் நோக்கில், 3 கிலோ மீற்றருக்குள் சிறந்த பாடசாலையை மாணவர்களுக்காக நிறுவுவோம்.

 

நகரத்திற்கு ஒரு வகையான கல்வியும் கிராமத்திற்கு ஒரு வகையான கல்வியும் கற்பிக்கப்படும் கட்டமைப்பை மாற்றி, அனைவருக்கும் சமமான கல்வியை வழங்க நடவடிக்கை எடுப்போம். 2030 ஆம் ஆண்டில் 2 இலட்சம் ஐ.டி. பொறியியலாளர்களை உருவாக்க நடவடிக்கை எடுப்போம்” இவ்வாறு அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.