September

September

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் தகுதி – யாழ்ப்பாணத்தில் இருந்து 593,187 வாக்காளர்கள்!

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

அதன்படி, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு கொழும்பு மாவட்டத்திலிருந்து 1,765,351 பேரும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 1,881,129 பேரும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 1,024,244 பேரும், கண்டி மாவட்டத்திலிருந்து 1,191,399 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 429,991 பேரும், நுவரெலியா மாவட்டத்திலிருந்து 605,292 பேரும், காலி மாவட்டத்திலிருந்து 903,163 பேரும், மாத்தறை மாவட்டத்திலிருந்து 686,175 பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து 520,940 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.

 

மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 593,187 பேரும், வன்னி மாவட்டத்திலிருந்து 306,081 பேரும், மட்டகளப்பு மாவட்டத்திலிருந்து 449,686 பேரும், திகாமடுல்ல மாவட்டத்திலிருந்து 555,432 பேரும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 315,925 பேரும், குருணாகல் மாவட்டத்திலிருந்து 1,417,226 பேரும், புத்தளம் மாவட்டத்திலிருந்து 663,673 பேரும், அநுராதபுரம் மாவட்டத்திலிருந்து 741,862 பேரும், பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து 351,302 பேரும், பதுளை மாவட்டத்திலிருந்து 705,772 பேரும், மொனராகலை மாவட்டத்திலிருந்து 399,166 பேரும், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 923,736 பேரும், கேகாலை மாவட்டத்திலிருந்து 709,622 பேரும் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுமந்திரன் சஜித் பிரேமதாசவுடன் நிற்பது ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகளவான வாக்குகளை சேர்ப்பதற்கான சதி நடவடிக்கை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கும் விடயமானது ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகளவான வாக்குகளை சேர்ப்பதற்கான சதி நடவடிக்கை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”தமிழ்த் தேசியக் கட்சிகள் சஜித் பிரேமதாசவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள நிலை சிங்கள மக்கள் மத்தியில் சஜித்திற்கான ஆதரவினை குறைக்கும் நடவடிக்கையாகும்.

சஜித் பிரேமதாச சிங்கள தேசிய வாதத்திற்கு நோ்மையாக நடந்து கொள்வாா் என்னும் நிலைப்பாட்டில் குழப்பத்தினை ஏற்படுத்தி அவரது தென்னிலங்கை வாக்குகளை ரணிலின் பக்கம் திரும்பும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சஜித் பிரேமதாசவினை ஆதாிக்கும் வடக்கு கிழக்கினைப் பிரதிநித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஆதரவு கிடையாது. எனினும் இந்த நிலைப்பாட்டில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தினையும் எற்படுத்தப்போவதில்லை.

ஆனால் தென்னிலங்கையில் குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் அரசியல்வாதிகளின் நிலைப்பாடு குழப்பத்தினை ஏற்படுத்தும்.

ஆகவே நாம் இவை அனைத்தையும் தொகுத்துப் பாா்த்தால் இன்று தமிழ்த் தேசியத்திற்கு நோ்மையாக கொடுக்கக்கூடிய ஒரு நோ்மையான வழி தோ்தலைப் பகிஸ்காிப்பது மட்டுமே.

எனவே 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதே எமது கட்சியின் நிலைப்பாடு” என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் சுட்டிக் காட்டினாா்.

சுமார் 40 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள் – ஐ.நா கவலை !

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதையடுத்து காசாவின் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.

பலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ம் திகதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தது. போரில் இதுவரை 41,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 95,000 பேர் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் பலஸ்தீனத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்து ஐ.நா. “பலஸ்தீன போர் மூலம் இந்த உலகம் அப்பாவி மக்களை இழந்து வருகிறது” என்று கவலை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த போர் நிருத்தத்திற்கு “ஐ.நா 24 மணி நேரமும் உழைத்து வருகிறது. இந்த உலகில் நாங்கள் பணியாற்ற மிகவும் பாதுகாப்பற்ற இடமாக இதைத்தான் கருதுகிறோம்.

இங்கு மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கின்றனர். எங்களின் 300 பணியாளர்களை நாங்கள் களத்தில் இறக்கியிருந்தோம். இன்று இதில் மூன்றில் இரண்டு பங்கு அளவிளான பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டள்ளது.

பழமையான முறைமைகளை கைவிட்டுவிட்டு அரசியலை பொதுச் சேவையாக மாற்ற வேண்டும் என்பதே எமது நோக்கம் – அனுர குமார திசாநாயக்க

உணவு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் சேர்க்கப்பட்டுள்ள வற் வரி முற்றாக நீக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதித் தேர்தலுக்காக அக்குரஸ்ஸேவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அநுரகுமார , “உணவு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு கொண்டு வரப்பட்டுள்ள வற் வரி முற்றிலும் நீக்கப்படும்.மின் கட்டணத்தை குறைக்கும் திட்டம் மிகக்குறுகிய காலத்திற்குள் செயல்படுத்தப்படும்.

வாழ முடியாமல் தவிக்கும் குடும்பங்களுக்கு 10,000 ரூபாயும், மிகவும் கஷ்டப்படும் நபருக்கு 17,500 ரூபாயும் வழங்கப்படும்.உள்ளவற்றைக் கைவிட்டு அரசியலை பொதுச் சேவையாக மாற்ற வேண்டும் என்பதே நம்பிக்கை.

நாங்கள் வெற்றி பெற்றால் எரிபொருள் இல்லாமல் போய்விடும் என்கிறார்கள், ரணில் அரேபியாவின் சுல்தானா?ரணில் இல்லாவிட்டால் எரிவாயு இல்லாமல் போய்விடுமாம் அப்படியென்றால் ரணில் எங்காவது எரிவாயுக் கிணற்றைக் கண்டுபிடித்து விட்டாரா?

தேசிய மக்கள் சக்தி எண்ணெய், எரிவாயு மற்றும் மின்சாரம் தடையின்றி தொடர்ந்து வழங்கும் என்பதற்கு நாங்கள் உத்தரவாதம் அளிப்போம்”.என்றார்.

சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் அலுவலகம் யாழில் !

சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் தாயக மக்கள் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட தலைமைச் செயலக அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியில் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 

தாயக மக்கள் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

துண்டுப் பிரசுரம் ஒன்றை பெற்றுக்கொள்ள மறுத்த நபர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்திய சஜித் பிரேமதாச ஆதரவாளர்கள் !

கடையொன்றில் வைத்து துண்டுப் பிரசுரம் ஒன்றை பெற்றுக்கொள்ள மறுத்த நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் நாவலப்பிட்டியில் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
மேற்படி தாக்குதல் சம்பவம் அந்தக் கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
நாவலப்பிட்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள கடிகாரம் பழுதுபார்க்கும் கடையின் உரிமையாளரின் மகனே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதோடு, நேற்று (15) முற்பகல் 11 மணியளவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் ஆதரவாளர்கள் குழுவுடன் குறித்த கடைக்கு சென்று மேற்படி இளைஞனிடம் துண்டுப் பிரசுரம் ஒன்றை வழங்கியுள்ளார்.
அப்போது அந்த இளைஞர் அதனை வாங்க மறுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான இளைஞன், நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுதோடு, வைத்தியசாலையில் பொலிஸாரிடம் முறைப்பாட்டை வழங்கியதன் பின்னர் இன்று (16) வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் எனக்கு உடன்பாடு இல்லை – சிறீதரன் எம்.பி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை தாம் ஆதரிப்பதாக தமிழரசுக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், குறித்த தீர்மானத்தை தான் எதிர்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,  இன்றைய கூட்டத்தில் ஐந்து பேர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டில் இருந்தார்கள்.

அது தொடர்பாக ஒரு அறிக்கையும் எழுதப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிப்பதாகவே இருந்தது.

மத்திய குழுவில் கடந்த முதலாம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானம் பிழை என நான் எழுத்து மூலமாகவும் வழங்கி இருக்கிறேன். நான் ஒரு தெரிவு செய்யப்பட்ட தலைவர் என்ற ரீதியில் எழுத்து மூலமாக அறிவித்து விட்டு தான் பிரித்தானியா சென்று இருந்தேன்.

6 திகதி நான் மீளவும் இலங்கைக்கு திரும்புவேன். ஏழாம் திகதி வரை கூட்டத்தினை வைக்க வேண்டாம் என கூறியிருந்தேன். அவ்வாறு கூட்டங்கள் வைத்தாலும் தீர்மானங்கள் எடுக்கப்படாது என்று பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் எனக்கு உறுதிமொழியையும் தந்திருந்தார்.

தற்போதைய தலைவராக இருக்கின்ற மாவை சேனாதிராஜாவை 26 ஆம் தேதி சந்தித்து பேசுகின்ற போது நாங்கள் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றமாட்டோம் சில விடயங்கள் தொடர்பாக பேச இருக்கிறோம் என தெரிவித்திருந்தார்.

இவற்றையெல்லாம் தாண்டி 2024. 8. 18ஆம் திகதி ஆறு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு அந்தக் குழு கூடி தீர்மானம் எடுக்காத நிலையில் மத்திய குழுவில் அவசர அவசரமாக யாருடைய தேவைக்காக யாருடைய தீர்மானத்தை எடுத்தார்கள். சஜித் பிரேமதாசவுக்காக அந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

அந்த தீர்மானம் எடுத்த பின்னர் நான் கடிதம் மூலமாகவும் தெரிவித்திருந்தேன். இதனை நான் எதிர்க்கிறேன். என்னைப் பொருத்தவரை தமிழ் மக்களுடைய தேசிய உணர்வுகளை பிரதிபலிக்க கூடிய வகையில் நாங்கள் ஒரு பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.

பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்கின்ற ஒரு தெளிவான நிலைப்பாட்டை கொண்டு இருந்தேன். அதனை இப்போதும் கொண்டிருக்கிறேன். இன்றும் இந்தக் கூட்டத்தில் அதனை வலியுறுத்தி என்னுடைய கருத்து இவர்களுடைய தீர்மானத்திற்கு எதிரானது என்பதனை பதிவு செய்யுமாறு தெரிவித்து இருக்கிறேன்.

ஸ்ரீதரன் இதனை ஏற்கவில்லை அதாவது ஸ்ரீதரன் சஜித் பிரேமதாசாவுக்கு மட்டுமல்ல ரணில் விக்கிரமசிங்க, அனுரகுமார திசாநாயக்க உட்பட்ட தென்னிலங்கையினுடைய வேட்பாளர்கள் யாருக்கும் ஆதரவு இல்லை என்பதை பதிவு செய்யுமாறு குறிப்பிட்டு அந்த கூட்டத்திலிருந்து என்னுடைய நேரம் முடிந்ததும் புறப்பட்டேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது..? வெளியானது தமிழரசுக் கட்சியின் அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற எமது கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்காளர்கள் உரியவாறு தங்கள் வாக்கை அவருக்கு வழங்க வேண்டும் என தமிழரசுக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

வவுனியாவிலுள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதித்தேர்தல் தொடர்பான தீர்மானம்மிக்க உயர்மட்ட கலந்துரையாடலையடுத்தே குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது.

 

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது” இலங்கையில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கின்றது.

 

இத்தேர்தலில் மூன்று பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் பரிசீலிக்கப்பட்டன. இத்தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்களின் பிரதேசங்களின் பொருளாதார மேம்பாடு பற்றி கவனம் செலுத்தப்பட்டது.

இவ்விஞ்ஞாபனங்களில் புதிய அரசியலமைப்பு உருவாக்குதலும் ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுலாக்குவதும் ஆகும். ஒற்றையாட்சி மற்றும் புத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதவொன்றாகும்.

 

அதற்குப் பதிலாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஷ்டிக் கட்டமைப்பின் மூலம் தீர்வு காணப்படுதல் வேண்டும் என்பது பிரதானமாகும்.

 

முக்கியமாக இவ்விடயங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் கூட்டணி தலைவர் சஜித் பிரேமதாச, ஜேவிபீ தலைவர் அநுர குமார திசாநாயக ஆகியோருடன் நேரடியாக பேச்சுக்கள் இடம்பெற்றன.

 

தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ்ப் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு இணைப்பாட்சி அடிப்படையிலான சமஷ்டிக் கட்டமைப்பில் முழுமையான தன்னாட்சி சம்பந்தமாக தொடர்ந்து போராடி வந்துள்ளோம். ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் பொருட்டு தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தீர்வுக்கான பிரேரணை முன்வைக்கப்படுதல் வேண்டும்.

 

தமிழ்ப் பேசும் மக்கள் என்ற வகையில் முஸ்லீம் சமூகத்துடனும் மலையக தமிழர்களுடன் இணைந்து செயற்படுதல் வேண்டும்.

 

13ஆவது அரசியல் திருத்தம் அரசியலமைப்பின் ஒற்றையாட்சிக்குட்பட்டது. இதனை அரசியல் தீர்வாக எம்மால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். இருப்பினும் தமிழினத்தின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை அடையும் வரை இந்திய அரசின் நட்புறவுடன் 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நடைமுறையிலிருக்கும் மாகாண அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.

 

2002 டிசம்பரில் ஏற்பட்ட ஒஸ்லோ உடன்பாட்டில் சில அடிப்படைக் கோட்பாடுகளின் மீது இணக்கம் காணப்பட்டது. அக்கோட்பாடு பின்வருமாறு அமைந்தது. இந்த வரலாற்று நிகழ்வு இன்றும் பரிசீலனைக்குரியது. ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ்பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப்பகுதிகளில் உள்ளக சுயநிர்ணய கொள்கையின் பிரகாரம் சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையிலமைந்த தீர்வொன்றை ஆராய்தல் என்பதாகும்.

 

சர்வதேச நியமங்களின் படியும், சர்வதேச சாசனங்களின் படியும் தமிழர்களாகிய நாங்கள் தனிச்சிறப்புமிக்க மக்கள் குழாமாவோம்.

 

ஒருமக்கள் குழாமான நாங்கள் பேரினவாதத்தின் பிடிக்கு ஆட்படாது கெளரவத்துடனும் சுயமரியாதையுடனும்,

சுதந்திரமாகவும், அச்சமின்றியும் நாட்டின் ஏனைய மக்களுடன் சமத்துவமுள்ள மக்களாக வாழ விரும்புகிறோம்.

 

2015 இல் இலங்கை வந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மார்ச் 13இல் இலங்கையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது பின்வருமாறு கூறினார். ‘எமது சமூகத்திலுள்ள அனைத்துப் பாகங்களின் அபிலாசைகளுக்கு நாம் மதிப்பளிக்கும் போது எம்நாட்டின் ஒவ்வொரு பிரஜையின் சக்திகளையும் எமதுநாடு உள்வாங்கிக் கொள்ளும். மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் கிராமங்களை இவ்வாறு வலுவூட்டும் பொழுது நாடு மென்மேலும் மேம்படும் கூட்டுச் சமஷ்டியில் நான் திடமான நம்பிக்கை கொண்டவன்’ என்பதையும் குறிப்பிட்டார்.

 

‘இறையாண்மை என்பது மக்களிடமே உண்டு அரசிடம் அல்ல என்பதை நாம் வலியுறுத்துகிறோம். ‘ஜனாதிபதித் தேர்தல் முடிந்தபின் எங்களால் சமர்ப்பிக்கப்படும் அரசியலமைப்புக்கான அறிக்கையில் குறிப்பிடப்படும் தமிழ்த்தேசிய இனத்திற்கான அரசியல் தீர்வை அடைவதற்கும், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கும் தீர்வுகாண வெற்றிபெறும் ஜனாதிபதியுடனும் அரசுடனும் வேண்டிய பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்போம்.’ தமிழ்த்தேச மக்கள் அரசியல் தீர்வைத் தீர்மானிப்பதிலும் அந்த இலட்சியத்தை அடைவதற்கும் இடர்களோ முரண்பாடுகளோ ஏற்படாமல் நல்லெண்ணத்துடன், ஒற்றுமை உணர்வுடன் தேர்தலின் போதும், எதிர்காலத்திலும் ஒன்றாக நின்று உழைப்போம் என திடமான தீர்மானத்தைக் கொண்டிருக்கிறோம்.’

இந்த நோக்கத்தை நாடளாவிய ரீதியில் செயல்படுத்துவதற்கென நாம் கடந்த காலத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் எமது பெரும் பங்களிப்பை வழங்கி இருந்தோம். ஆனால் பெரும் ஏமாற்றங்களும், வெறுப்பும், வேதனைகளுமே எஞ்சியுள்ளன. இப்போதைய ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எம்மால் பரிசீலிக்கப்பட்ட மூன்று பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் எதுவும் எமது அடிப்படை அரசியல் கோரிக்கைகளை முழுமையாக உள்ளடக்கவில்லை என்பதைக் கருத்தில் கொள்கிறோம். இந்த விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் எமது தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற எமது அடிப்படைக் கோட்பாடுகளில் எந்தவித விட்டுக்கொடுப்பும் இல்லாத வகையில் ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனம் ஒப்பீட்டு ரீதியில் ஓரளவு திருப்தியாகக் காணப்படுகின்றது.

 

எனவே, 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பின் போது ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரிப்பதென்ற எமது கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்காளர்கள் உரியவாறு தங்கள் வாக்கை அவருக்கு வழங்க வேண்டும் என அன்புடன் கோருகின்றோம் ” எனக் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதேவேளை இன்றையதினம் கலந்துகொண்ட ஆறு உறுப்பினர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மாத்திரம் குறித்த தீர்மானத்திற்கு இணக்கப்பாடு தெரிவிக்காதநிலையில் ஏனைய ஐவரும் தமது இணக்கப்பாட்டினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் பொது வேட்பாளர் எனும் மாயமானை நம்பி ஏமாறாதீர்கள் – சஜித் பிரேமதாச மேடையில் சுமந்திரன்!

தமிழ் பொது வேட்பாளர் எனும் மாயமானை நம்பி ஏமாறாதீர்கள் – சஜித் பிரேமதாச மேடையில் சுமந்திரன்

 

வெற்றி பெற்று 50 நாட்களுக்குள் 150 பாராளுமன்ற உறுப்பினர்களை வீட்டுக்கு அனுப்புவேன் – அனுர குமார திசாநாயக்க

தற்போதைய பாராளுமன்றத்தில் உள்ள 150 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வெளியேற வேண்டியவர்கள் எனவும், தான் வெற்றிபெற்று ஒன்றரை மாதங்களுக்குள் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

 

பன்னல பகுதியில் நேற்று (14) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் ​போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

“ரணில் விக்கிரமசிங்க எவ்வளவு சொன்னாலும், சஜித் பிரேமதாச எத்தனை பொய்க் கதைகள் சொன்னாலும் பரவாயில்லை. எமது பயணத்தை இனி தோற்கடிக்க முடியாது. ரணில் சஜித், நீங்கள் அறிய மிகவும் தாமதமாகிவிட்டீர்கள். விரைவில் பாராளுமன்றத்தை கலைப்போம். இந்த பாராளுமன்றத்தில் அநாகரீகமாக அலறல். கொலை செய்து சிறை சென்ற குற்றவாளிகள், கப்பம் வாங்கி சிறை சென்ற குற்றவாளிகளின் புகலிடமாக மாறியுள்ளது.

 

இப்படிப்பட்ட பாராளுமன்றம் தேவையா? இன்னும் ஒன்றரை மாதங்களில் பொதுத் தேர்தல் வரவுள்ளது. இந்த பாராளுமன்றத்தில் உள்ள 150 இற்கும் மேற்பட்டோர் வீட்டுக்கு அனுப்பப்படுவர்.” என்றார்.