September

September

இலங்கையின் 09 ஆவது ஜனாதிபதித் தேர்தல் இன, மத, பேதங்களை மையப்படுத்தி பிரிவினைகளை ஊக்குவிக்காத, மிகவும் அமைதியான தேர்தல் – ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு

இலங்கையின் 09 ஆவது ஜனாதிபதித் தேர்தல் இன, மத, பேதங்களை மையப்படுத்தி பிரிவினைகளை ஊக்குவிக்காத, மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தலாக அமைந்திருந்ததாக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது.

 

இலங்கை ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகைத்தந்திருந்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவினர், கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

 

தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நேற்று (23) ஏற்பாடு செய்திருந்தனர்.

 

இதன்போது, கருத்துத் தெரிவித்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் தலைமை அதிகாரி,

 

இலங்கையின் 09 ஜனாதிபதித் தேர்தல் இன, மத, பேதங்களை மையப்படுத்தி பிரிவினைகளை ஊக்குவிக்காத, மிக அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தலாக அமைந்திருந்தது.

 

தேர்தல் ஆணைக்குழு வெளிப்படைத்தன்மை, செயற்றிறன்மிக்க தன்மையுடன், எவ்வித சந்தேகங்களையும் தோற்றுவிக்காத வகையில் செயற்பட்டது.

 

ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்ட 39 பேரில், பெண் வேட்பாளர்கள் எவரும் உள்ளடங்காமை மிகுந்த கரிசனைக்குரியது. எதிர்வருங்காலத்தில் இதுகுறித்து அவதானம் செலுத்தப்படவேண்டியது அவசியம். 39 வேட்பாளர்களில் சிலர் பிரசார நடவடிக்கைகளைக்கூட முன்னெடுக்கவில்லை. அவர்களுக்காக அரச நிதி செலவிடப்படுவது கரிசனைக்குரிய விடயமாகும். இதனை சீரமைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்

 

இலங்கை வரலாற்றில் நடைபெற்ற மிகவும் அமைதியான தேர்தல் இதுவாகும். திடீரென ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை ஒன்றுக்கொன்று முரணான தன்மையைக் காண்பிக்கிறது. தேர்தல் பிரசாரங்களின்போது சம்பள உயர்வு, வட்டி அற்ற கடன் போன்ற நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கும் போக்கு ஏற்புடையதல்ல.

 

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவுக்கு தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியில் 5,000 முறைப்பாடுகளும், தேர்தல் தினத்தன்று 600 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றன என ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

பெண்களுடன் சேட்டை புரிந்த இளைஞர்களை எச்சரித்த சாரதி மீது வாள்வெட்டு – யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

யாழ் . மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் பெண்களுடன் சேட்டை புரிந்த இளைஞர்களை எச்சரித்த தனியார் பேருந்து சாரதி மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

பேருந்து சாரதியான வினாசித்தம்பி ஜெகதீஸ்வரன் என்பவர் மீதே நேற்றைய தினம் திங்கட்கிழமை வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

 

கொழும்புத்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் பயணிகளை ஏற்றி வந்த வேளை மணியந்தோட்டம் பகுதியில் பேருந்தை மறித்து சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

தாக்குதலில் காயமடைந்த சாரதி யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கடந்த வாரம் யாழ் . மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் 04 பேர் கொண்ட கும்பல் ஒன்று, பேருந்து நிலையத்திற்கு வரும் பெண்களுடன் அநாகரிகமாக நடந்து கொண்டு , தொந்தரவு செய்துள்ளனர்.

 

இதனை அவதனித்த சாரதி, குறித்த இளைஞர்களை கடுமையாக எச்சரித்து , அங்கிருந்து அப்புறப்படுத்தி இருந்தார்.

 

இந்நிலையில் , அன்றைய தினம் பெண்களுடன் அநாகரிகமாக நடந்து கொண்ட இளைஞர்கள் கும்பலை சேர்ந்தவர்கள் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்து, பயணிகள் சேவையில் ஈடுபட்டிருந்த பேருந்தை மறித்து வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இருபத்தி இரண்டிலிருந்து நான்காக பிரிக்கப்பட்ட அனுரவின் அமைச்சரவை !

இலங்கை நாட்டின் புதிய ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை காணப்பட்ட 22 அமைச்சுக்கள் நான்கு அமைச்சுக்களாக பிரிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்கவின் புதிய அமைச்சரவை வருமாறு:

1.ஜனாதிபதியிடம்
பாதுகாப்பு, பொருளாதாரம், தேசிய
கொள்கை திட்டமிடல்.

2.பிரதமரிடம்
நல்லாட்சி, நிருவாகம்.

3.அமைச்சர் -1
சமூக, மனிதவள அபிவிருத்தி

4.அமைச்சர் – 2
உட்கட்டமைப்பு, கைத்தொழில் அபிவிருத்தி.

தற்போதைய 22 அமைச்சுக்கள் மேற்குறிப்பிட்ட 04 அமைச்சுக்களின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

அனுர குழுவினரை எதிர்கொள்ளஅனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய பொதுக் கூட்டமைப்பை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்!

எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய பொதுக் கூட்டமைப்பை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபைக் கூட்டத்திலேயே ஐக்கிய தேசியக் கட்சி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பான பிரேரணையை முன்வைத்துள்ளார்.

 

இதன்படி எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் அரசியல் சூழ்நிலைகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய பொதுக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு அனைத்து கட்சிகளையும் அழைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமக்கு ஒத்துழைப்பு நல்காத, எம்மை நம்பாத பிரஜைகளின் நம்பிக்கையை வென்றெடுப்பது எனது பாரிய பொறுப்பாகும் – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்த தீர்க்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

 

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்காக ஆற்றிய விசேட உரையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனநாயக ரீதியாக மக்கள் என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளார்கள். எமது நாட்டின் ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்த எனது ஆட்சிக்காலத்தில் தீர்க்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

 

நாம் மிகவும் சவாலானதொரு கட்டத்தில் தான் உள்ளோம். நான் மெஜிக் காரனோ மாயாஜால வித்தைக் காரனோ கிடையாது. நானும் இந்த நாட்டில் பிறந்த ஒரு சாதாரண பிரஜை.

எனக்கும் ஆற்றல்கள் இருக்கின்றன. ஆற்றாமைகளும் இருக்கின்றன. நாம் அறிந்த விடயங்களும் இருக்கின்றன. அறியாத விடயங்களும் இருக்கின்றன.

 

ஆனால் என்னுடைய முதன்மைப்பணி ஆற்றல்களை உறிஞ்சி எடுத்து அறிந்தவற்றை ஒன்று திரட்டி மிகச் சிறந்த தீர்மானங்களை மேற்கொண்டு இந்த நாட்டை நெறிப்படுத்துவதாகும்.

அதனால் அந்த கூட்டான இடையீட்டின் பங்காளியாவதே என்னுடைய பொறுப்பாகும்.

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் என்னிடம் ஒரு தலையாய பொறுப்பு இருப்பதாக நான் நம்புகிறேன்.

 

இந்த சவாலை வென்றெடுப்பதற்காக எல்லாச் சந்தர்ப்பங்களிலும் செயலாற்றுவதற்காக என்னிடம் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பினை நான் முறைப்படி ஈடேற்றுவேன்.

எமது நாட்டுக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகும்.

 

உலக நாடுகள் மத்தியில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும் நாங்கள் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாடாக அமந்துவிட முடியாது. உலகத்துடன் கூட்டாக ஒருங்கிணைந்து பயணிக்கவேண்டும். அதற்கு அவசியமான தீர்மானங்களை மேற்கொள்வதில் நாங்கள் ஒருபோதுமே தயங்கமாட்டோம்.

 

அதைப்போலவே எமது நாட்டை கட்டியெழுப்புகையில் கைத்தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர் முக்கியமானவர்களாக கருதப்படுவார்கள். எனவே அவர்களை பலம்பொருந்தியவர்களாக கட்டியெழுப்ப அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி உதவுவார்களென நாங்கள் நம்புகிறோம்.

எமது நாட்டின் ஜனநாயகத்தினால் நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறேன்.

அவ்வாறு தெரிவு செய்துகொள்வதற்காக மக்கள் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

எனக்கு அளிக்கப்படாத வாக்குகளும் இருக்கின்றன. எனவே எமது வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு பற்றி எமக்கு சிறந்த புரிந்துணர்வு இருக்கின்றது.

 

எமக்கு ஒத்துழைப்பு நல்காத, எம்மை நம்பாத பிரஜைகளின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதும் அவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதும் எனது ஆட்சிக்காலத்தில் எனக்கு கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பாக அமைகின்றது. அந்த பணியை சரிவர ஈடேற்ற முடியுமென்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது ” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் 3520,438 பேர் வாக்களிக்கவில்லை – நிராகரிக்கப்பட்ட 3 லட்சம் வாக்குகள்!

9 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக சனிக்கிழமை நடந்த தேர்தலில் 3520,438 பேர் வாக்களிக்காத அதேவேளை 300300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

 

9 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக தேர்தலில் வாக்களிக்க இம்முறை 1,71,40354 வாக்காளர்கள் வாக்களிக்கத்தகுதி பெற்றிருந்தனர்.இவர்களில் 1,36,19916 வாக்காளர்களே வாக்களித்த நிலையில் 35.20,438 வாக்காளர்கள் வாக்களிக்க வில்லை.

 

அதுமட்டுமன்றி வாக்களித்த 1,36,19916 வாக்காளர்களின் வாக்குகளில் 300.300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதால் 1,33,19616 வாக்குகளே இந்த ஜனாதிபதி தேர்தலில் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன.

மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களின் மனவிருப்பங்களிற்கு நாம் மதிப்பளிக்கின்றோம். – ஜனாதிபதி அனுர குமாரவுக்கான வாழ்த்து செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!

புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  அனைத்து மக்களினதும் கனவுகளை ஈடேற்றுவார் என்பதை எதிர்பார்க்கின்றோம் என ஈழமக்கள் ஜனாநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டதையடுத்து ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளையும் நாட்டின் பொருளாதார நிலைமைகளையும் மனதில் நிறுத்தி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் தீர்க்கமான முடிவொன்றை எடுத்து செயலாற்றி இருந்தோம்.

ஆனாலும் எமது நம்பிக்கைகளுக்கு மாற்றாக இலங்கைத் தீவில் வாழுகின்ற மக்களில் கணிசமானவர்கள் ஆட்சி மாற்றம் ஒன்றையே தமது விருப்பமாக வெளிப்படுத்தியுள்ளனர். மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களின் மனவிருப்பங்களிற்கு நாம் மதிப்பளிக்கின்றோம்.

அதேவேளை சமத்துவமான தேசத்தை உருவாக்கும் கனவோடு ஆட்சி அமைத்திருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி தோழர் அநுரகுமார திசாநாயக்க அனைத்து மக்களினதும் கனவுகளை ஈடேற்றுவார் என்பதையும் எதிர்பார்க்கிறோம்.

எமது வேண்டுகோளை ஏற்று எமது அரசியல் வழி நின்று வாக்களித்த மக்களுக்கும் தமது ஜனநாயக கடமைகளை நிறைவேற்றும் வகையில் வாக்களிப்பில் கலந்து கொண்ட அனைத்து மக்களிற்கும் நாம் நன்றி கூறுகின்றோம்.

இதுவரை காலமும் எமது நாடாளுமன்ற அரசியலில், தேசிய நல்லிணக்க வழிமுறை வரலாற்றில் அரசுகளுக்கு உள்ளிருந்தும் வெளியே இருந்தும் மக்கள் நலன் சார்ந்து நாம் உறுதியுடன் செயலாற்றி வருகின்றோம். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே என்றும் மாறாத எமது அரசியல் இலக்கு” என்பதையும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் – பதவியேற்றார் இலங்கையின் 10ஆவது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க!

அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இன்று காலை(23) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இதன் பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தலை நடத்துவதும் , அரச தலைவரை தெரிவு செய்வது மாத்திரம் ஜனநாயகமல்ல, எனது ஆட்சியில் ஜனநாயகத்தை முறையாக பாதுகாப்பேன்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அர்ப்பணிப்பையும், அவரது அரசியல் வகிபாகத்தையும் மதிக்கிறேன்.
சவால்மிக்க பொருளாதார சூழலில் ஆட்சியை பொறுப்பேற்றுள்ளேன். அனைவருடனும் ஒன்றிணைந்து பயணிப்போம்.
நாடு என்ற ரீதியில் தனித்து செயற்பட முடியாது. அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து இலங்கை நாட்டின் வரலாற்றினை புதிதாக எழுத வேண்டும் – முதலாவது உரையில் அனுர குமார திசாநாயக்க!

இலங்கையின் வரலாற்றினை புதிதாக எழுதவேண்டுமென எமக்கு அழைப்பு விடுக்கின்றது என புதிதாக ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பல நூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவே இறுதியில் நனவாகி உள்ளதாக அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல சிரமங்களுக்கு மத்தியில் இலட்சக்கணக்கான நீங்கள் அனைவரும் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி பலனளித்துள்ளது.

அதற்காக என்னால் உங்களுக்கு நன்றி கூற முடியாது. அதற்கான காரணம் அது என்னுடையதல்ல, எமது கூட்டுமுயற்சியின் பெறுபேறாகும்.

 

இது எம்மனைவரதும் வெற்றியாகும். நாங்கள் மாத்திரமல்ல இந்த வெற்றிக்காக பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் தமது இரத்தம், கண்ணீர், வியர்வையை மாத்திரமன்றி உயிர்களைக்கூட தியாகம் செய்துள்ளார்கள்.

 

எமக்கு முந்திய தலைமுறையினர் எம்மிடம் கையளித்த குறுந்தடியில் வீணாகிப்போய்விடாத அவர்களின் முடிவிலா அர்ப்பணிப்பே பொதிந்துள்ளது. அதன் சுமையை நாங்கள் நன்றாகவே அறிவோம்.

எதிர்பார்ப்புகள் நிறைந்த உங்களின் இலட்சக்கணக்கான விழிகள் எமக்கு தெம்பூட்டுகின்றன.

இலங்கையின் வரலாற்றினை புதிதாக எழுத வேண்டுமென எமக்கு அழைப்பு விடுக்கின்றன. கனவை முழுமையாகவே யதார்த்தபூர்வமானதாக அமைத்துக்கொள்வதற்காக இந்த மண்ணுக்கு புத்தம் புதிய ஆரம்பமொன்று அவசியமாகும்.

 

சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய எம்மனைவரதும் ஒன்று சேர்ந்த வலிமை ஆரம்பிக்கின்ற யுகத்தின் அடிக்கல்லாக அமையும். அதன் மீது தான் புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டியெழுப்பப்படும். வாருங்கள் நாங்கள் அதற்காக கைகோர்த்துக்கொள்வோம் என புதிய ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இனமத பேதத்தை தூண்டாமல் பெற்ற வெற்றிக்காக அனுரகுமாரதிசநாயக்கவிற்கு நன்றி – நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

இனமத பேதத்தை தூண்டாமல் பெற்ற வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு நன்றி என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சமூக ஊடகபதிவில் தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
இன, மத வெறிகளைத் தூண்டாமல் சிறப்பாக வெற்றி பெற்ற #அனுரவிற்கு எமது வாழ்த்துக்கள். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆலோசனையை ஏற்று, மற்றைய வேட்பாளர்களை நிராகரித்து #சஜித்துக்கு வாக்களித்து தேர்தல் வரைபடத்தில் ஒரு வித்தியாசத்தைக் காண்பித்த வட கிழக்கு தமிழ் மக்களுக்கும் எமது நன்றிகள்.