September

September

மக்களுக்காக களத்தில் இறங்கி பணி செய்ய எண்ணுகிறேன் – மனோ அணியிலிருந்து விலகினார் கே.டி. குருசுவாமி!

ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்து தான் உடன் பதவி விலகுவதாக கே.டி. குருசுவாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர், குறித்த கட்சிகளின் தலைவர் மனோகணேசனுக்கு அனுப்பியுள்ள உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றிலேயே அறிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில் அவர்,

 

“நாட்டில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளையும், அதன் பின் நடக்கின்ற நிகழ்வுகளையும் உற்று நோக்கும் பொழுது, மக்களின் மனதில் மிகப் பெரிய மாற்றத்தையும், அவர்களின் எதிர்பார்ப்பு உயர்ந்திருப்பதையும் காண்கின்றோம்.

 

இந்நிலையில், மக்களோடு நேரடியாக களத்தில் பணிசெய்ய விரும்புவதால், கட்சியோடு இதுவரையில் வகித்து வந்த ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளர், தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்து, இன்றோடு உடனடியாக விலகிக்கொள்கின்றேன்.

 

தங்களோடும், கட்சியோடும் பயணித்த 13 ஆண்டு கால அரசியல் பாதையில் என்னை வழி நடத்தியதற்கும் நெறிப்படுத்தியதற்கும் என் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு கட்சியின் சக உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறிய குற்றத்துக்காக வைத்தியர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

யாழ்., சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை, பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்களால் தொடரப்பட்ட வழக்குகள் இன்று சாவகச்சேரி நீதிமன்றில், நீதிபதி ஜுட்சன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வைத்தியர் அர்ச்சுனா தான், சுமத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்க தவறியமை மற்றும் பிணை நிபந்தனைகளை மீறி செயற்பட்டமை போன்ற காரணத்தினால் வைத்தியர் அர்ச்சுனாவின் பிணை இரத்து செய்யப்பட்டது.

அத்தோடு, எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதிவரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம், கடந்த தவணையில், வைத்தியர்களின் பிணையாளிகள் மன்றில் நேரில் தோன்றி தம்மை பிணையாளிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவது முழுமையாக தடை – பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தரவு !

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு காரணமாக மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் எனவும், கசிந்துள்ள விடயங்கள் தொடர்பில் சுயாதீன நிபுணர்களின் பங்களிப்புடன் முழுமையான விசாரணை அறிக்கை கொண்டுவரப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (26) காலை கல்வி அமைச்சின் அனைத்து திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் ஹரினி அமரசூரிய;

“.. பாடசாலைக் கல்வியின் வளர்ச்சி தற்போதைய அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். எங்கள் அரசாங்கத்தின் கீழ் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளோம்.

கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அவநம்பிக்கையை களைவதற்கு இந்த நிறுவனங்கள் செயற்பட வேண்டும். குறிப்பாக, பரீட்சைகளை நடத்துதல் மற்றும் முடிவுகளை வழங்குதல் ஆகியவற்றை விரைவுபடுத்த வேண்டும்.

ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது முறையான முறையின் மூலம் செய்யப்பட வேண்டும். மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் காலிப் பணியிடங்கள் வெளிப்படைத் தன்மையுடன் நிரப்பப்பட வேண்டும்.” என கூறிய பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்வரும் காலங்களில் பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை முழுமையாக நிறுத்துமாறும் உத்தரவு வழங்கியுள்ளார்.

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் எச். இலுக்பிடிய விளக்கமறியலில் !

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் எச். இலுக்பிடியவை விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

ஈ-விசா வழங்கும் நடவடிக்கையை இரண்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் தீர்மானத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

 

குறித்த வழக்கு இன்று (25) அழைக்கப்பட்ட போது குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டதை அடுத்து குடிவரவு குடியகல்வு அதிகாரியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

குறித்த மனு ஜனவரி 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பொலிஸ் உயர் அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது – அமைச்சர் விஜித ஹேரத்

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பொலிஸ் உயர் அதிகாரிகளை தொடர்புகொள்ளும் நடைமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தொிவித்துள்ளாா்.

அமைச்சுப் பொறுப்புக்களைக் கையேற்ற பின்னா் ஊடகங்களுக்கு இவ்வாறு குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கும் பொலிஸார் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பொலிஸார் அரசியல் தலையீடுகள் இன்றி சுதந்திரமாக செயற்படுவதற்கான சூழல் உடனடியாக உருவாக்கப்படும்.

கடவுச்சீட்டினை வழங்குவதே இந்த அமைச்சு எதிர்கொண்டுள்ள முக்கியமான பிரச்சினையாகும். கடவுச்சீட்டு விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

கடவுச்சீட்டிற்காக மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கவேண்டிய நிலைக்கு முடிவு காண்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

ஒக்டோபர் 15 முதல் 20 திகதிக்குள் புதிய கடவுச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும்,அந்த காலத்திற்குள் இந்த விடயத்திற்கு தீர்வை காண விரும்புகின்றேன்,

பொலிஸார் மீதான பொதுமக்கள் நம்பிக்கை குறைவடைந்துள்ளதை ஏற்றுக்கொள்கின்றேன். அந்த நம்பிக்கையை மீள கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் காணப்படுகின்றது.

சட்டமொழுங்கை நடைமுறைப்படுத்தும்போது செய்த தவறுகளை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் திருத்திக்கொள்ளவேண்டும்.

சட்டமொழுங்கை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸாருக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்குவேன். எந்த அரசியல் தலையீடும் இருக்ககூடாது.

அரசாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பொலிஸ் உயர் அதிகாரிகளை தொடர்புகொள்ள மாட்டார்கள்.

இவ்வாறானதொரு மாற்றத்தை எதிர்பார்த்தே இந்நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை வழங்கினார்கள்” என மேலும் தொிவித்தாா்.

தென்லெபனான் மீது புதிய தீவிர தாக்குதல்களை ஆரம்பித்த இஸ்ரேல் !

தென்லெபனான் மற்றும் பெக்காவின் மீது புதிய தீவிர தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

தென்லெபானின் நெபட்டியா நகரின் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்கள் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர் என லெபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தென்லெபானை சுற்றியுள்ள நகரங்களிலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன

ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை தொடர்பில் ஆராய நடவடிக்கைகள் !

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 452 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 3 இலட்சத்து 300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த எண்ணிக்கையானது மொத்த வாக்குகளில் 2.24 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. எனவே, இந்த முறை அதிகளவான வாக்குகள் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக்கு புறப்பட தடை விதிக்கப்பட்ட வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ..? – வெளியாகியுள்ள பின்னணி !

தேவையற்ற வதந்திகளை பகிராது இந் நாட்டின் அனைத்து பிரஜைகளும் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டுமென, வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் ஆளுநராக செயற்பட்டு வந்த பி.எஸ்.எம். சார்ள்ஸ் நேற்று (24) அவரது பதிவியை இராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில், பி.எஸ்.எம். சார்ள்ஸின் நிழற்படத்தை முன்னிலைப்படுத்தி, சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பல்வேறு வதந்திகள் பகிரப்படுகின்றன.
அந்த செய்தியில், முன்னாள் ஆளுநர் ஒருவர் வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்து, விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமூக ஊடகங்களிலும், இணைய தளங்களிலும் தகவல்களை பகிரும்போது, செய்திக்கு பொருத்தமான நிழற்படங்களை பகிரவும், தேவையற்ற வதந்திகளை பகிராது இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளும் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பன்முகத்தன்மையை மதிக்கும் இலங்கை தேசமாக இந்நாட்டைக் கட்டியெழுப்பும் நிலையான, நிரந்தரமான வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிப்போம். – மக்களுக்கான உரையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க !

ஜனாதிபதி தேர்தலின் வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (25) இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
பிக்குமார்களே, மதத் தலைவர்களே, பெற்றோர்களே, சகோதர சகோதரிகளே, பிள்ளைகளே,

பல தசாப்தங்களாக நாம் எழுப்பிய குரலுக்கு மெது மெதுவாக ஆனால் சீராக செவிசாய்த்து, நாங்கள் முன்வைத்த வேலைத்திட்டத்திற்கு உயிர்மூச்சாக இருந்த இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் எங்களது கௌரவத்தைத் தெரிவிக்கிறோம்.

எங்கள் வேலைத்திட்டத்தில் உடன்படாத தரப்பினர் கூட நாங்கள் அடைந்த வெற்றியால் மகிழ்ச்சி அடைந்தால் மாத்திரமே நீங்கள் அளித்த இந்த வெற்றி மேலும் பலமானதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, இந்த வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன்.

நமது அரசியல் இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, பல்வேறு அவதூறுகளையும், பொய்யான, திரிபுபடுத்தப்பட்ட தகவல்களையும் ஒதுக்கி விட்டு, புதிய பரிசோதனைக்கு அஞ்சாமல், எமது அரசியல் இயக்கத்திற்கு நமது நாட்டின் ஆட்சி அதிகாரத்தை வழங்கும் அளவிற்கு பெரும் உறுதியுடன் இருந்த பிரஜைகள் உட்பட அனைத்து மக்களுக்கும் இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு தோள் கொடுப்பதற்கான பலம் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

இந்த வெற்றிக்காக எமக்கு முன்னரும், எங்களுடனும் பலவிதமான தியாகங்களைச் செய்த, சில சமயங்களில் தங்கள் உயிரைக்கூட தியாகம் செய்த பல தலைமுறைகளின் விலைமதிப்பற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் நாங்கள் மரியாதையுடன் நினைவுகூருகிறோம். இந்த வெற்றியையும், அதன் மூலம் கட்டியெழுப்பப்படும் வளமான நாட்டையும் அவர்களுக்கு அளிக்கும் கௌரவமாகவே நான் கருதுகிறேன்.

இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான பங்கை கூட்டுசெயற்பாடாக நிறைவேற்றும் திறன் எமக்கு உள்ளது. அதற்கான மிகத் திறமையான குழு எங்களிடம் உள்ளது.

நம் அனைவருக்கும் அது குறித்த முழுமையான உறுதிப்பாடு உள்ளது. நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த எத்தகைய மாற்றத்தையும் மேற்கொள்வதற்கு முன்னதாக பொருளாதாரத்தை நிரந்தரமான நிலைக்கு உயர்த்துவது அவசியம் என நாம் நம்புகிறோம்.

அதற்காக நீண்டகால மத்திய கால திட்டங்களைத் தயாரிப்பதற்கு முன்னர், பின்பற்ற வேண்டிய துரித பொருளாதார செயற்பாடுகளின் ஊடாக குறுங்கால ஸ்தீரநிலையை ஏற்படுத்த நாம் நடவடிக்கை எடுப்போம்.

நாம் எதிர்பார்க்கும் மாற்றத்திற்காக குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவை அனைத்தும் தற்போதைய பொருளாதாரத்தில் ஸ்தீர நிலையையும் நம்பிக்கையும் கட்டியெழுப்புவதில் மாத்திரமே தங்கியுள்ளது.

அதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் துரிதமாக பேச்சுவார்த்தை ஆரம்பித்து நீடிக்கப்பட்ட கடன் வசதியுடன் தொடர்புள்ள விடயங்களை தொடர்ந்து முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கிறோம்.

கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, சம்பந்தப்பட்ட கடன் தரப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அது தொடர்பான பணிகளை விரைவில் நிறைவு செய்து, உரிய கடன் நிவாரணத்தைப் பெறுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

அதற்கு இந்த நாட்டு மக்களைப் போலவே சர்வதேச சமூகத்தினதும் ஆதரவையும் பெற முடியும் என நம்புகிறோம். அந்த ஒத்துழைப்பின் மூலம் இந்த கூட்டு முயற்சியில் வெற்றி பெற முடியும் என எதிர்பார்க்கிறோம்.

எமக்கு அதிகாரத்தை கையளிக்கையில் ‘மாற்றம்’ ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணக் கருவே மக்களிடத்தில் ஆழமாக பதிந்திருந்தது. மாற்றம் என எமது நாட்டு மக்கள் கருதுவது அரசியல் முறைமையில் காணப்படும் அனைத்துவிதமான மோசமான பண்புகளை மாற்றுவதையாகும்.

தற்போது அது நிரூபனமாகியுள்ளது. இந்த நாட்டில் நடைபெற்ற அனைத்துவிதமான தேர்தல்களையும் நோக்கினால், தேர்தலுக்குப் பின்னரான எந்த வன்முறைச் சம்பவமும் நடைபெறாத ஒரேயொரு தேர்தலாக நாம் வெற்றியீட்டிய ஜனாதிபதித் தேர்தலாக வரலாற்றில் இணைக்க முடிந்துள்ளது.

இது நமது நாட்டு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. இந்த நிலைமையை உறுதிப்படுத்தி நிலைப்படுத்துவது எமது நோக்கமாகும். அரசியலில் அதிகாரத்தைப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கும் அதற்காக வியூகம் அமைப்பதற்கும் எவருக்கும் உரிமையுள்ளது.

அரசியல் செய்யும் நேரத்தில் அரசியல் செய்வதற்கும், நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரத்தில் அதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் இந்த தருணத்தில் வலியுறுத்துகிறேன். அதற்கான தலைமைத்துவத்தை நாம் வழங்குகிறோம்.

சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், பேர்கராக இருந்தாலும், மலேயராக இருந்தாலும், இவர்கள் அனைவருக்கும் “நாம் இலங்கைப் பிரஜைகள்” என்று பெருமையுடன் வாழக்கூடிய நடைமுறைச்சாத்தியமான ஒரு நாடு உருவாகும் வரை, இந்த நாடு தோல்வியடையுமே தவிர வெற்றியடையாது. அதற்காக அரசியலமைப்பு ரீதியான,பொருளாதார.அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள ஒரு போதும் நாம் பின்வாங்க மாட்டோம்.

தனது இனம், தனது மதம், தனது வர்க்கம், தனது சாதி என இந்த நாடு பிரிந்திருந்த காலத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்து, பன்முகத்தன்மையை மதிக்கும் இலங்கை தேசமாக இந்நாட்டைக் கட்டியெழுப்பும் நிலையான, நிரந்தரமான வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிப்போம்.

இந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்காக அவற்றை செயல்படுத்த அவசியமான செயற்திறன்மிக்க மற்றும் நேர்மையான அதிகாரிகளை நியமிக்கும் பல நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே நிறைவு செய்துள்ளோம்.

பொதுப் பணிக்கு இடையூறு ஏற்படாத மற்றும் பிரஜைகள் தொடர்பில் பாதகமான அழுத்தங்கள் ஏற்படாத வகையில் , எதிர்பார்த்த மாற்றங்கள் படிப்படியாக மேற்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்வோம். சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கவும், ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்கவும் நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். அனைத்து பிரஜைகளினதும் சமூக பாதுகாப்பை உறுதி செய்வோம்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற எண்ணக்கருவை மீள உயிர்ப்பிப்போம். எமது நாட்டை கட்டியெழுப்புகையில் அரச சேவைக்கு பாரிய பங்கு இருக்கிறது என்பதை நம்புகிறோம். பொது மக்களை கண்ணியமாக நடத்தும் அரசாங்கத்தின் இலக்குகளை நோக்கிச் செல்லும் அரச சேவையை உருவாக்குவோம்.

செயற்திறன் மிக்க, நேர்மையான மற்றும் ஜனரஞ்சகமான அரச சேவையை உருவாக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். இந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே எமது எதிர்பார்ப்பு. அதற்கான நடைமுறைச்சாத்தியமான வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது. மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள அதிக வாழ்க்கைச் சுமையை குறைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.

இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படும் நிலை ஏற்பட இடமளிக்க மாட்டோம். தமது பிள்ளைக்கு நல்ல பாடசாலை மற்றும் சிறந்த கல்வியை வழங்க அந்த ஒவ்வொரு பெற்றோருக்கும் உரிமை உண்டு.

அனைத்து பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியை வழங்கவும், அடுத்த தலைமுறையை பாதுகாக்கவும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். அறிவு,திறன்,மனப்பாங்கு என்பவற்றை மேம்படுத்தி இளைஞர் சமூகத்திற்கு நம்பிக்கை ஏற்படக் கூடிய எதிர்காலத்தை உருவாக்குவோம். எந்த நாட்டிற்கு நாம் சென்றாலும், விமான நிலையத்தின் தன்மையை வைத்து அந்த நாடு குறித்து ஒரு கண்ணோட்டைத்தை உருவாக்க முடியும்.

அதன் ஒழுங்கு, மக்களின் நடத்தை,செயல்பாடு, போன்றவற்றின் மூலமும் மறைமுகமாக அந்த நாட்டின் இயல்பு எடுத்துக் காட்டப்படுகின்றது. அதையும் தாண்டி சுற்றுச்சூழலின் தூய்மை, வீதிகளில் வாகனங்கள் செல்லும் விதம், முதியோர்களை நடத்தும் விதம், விருந்தோம்பல் செய்யும் முறை, விலங்குகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதையும் உறுதிப்படுத்த முடியும். நம் நாட்டின் பிம்பத்தை அதே வகையில் தெளிவாக தெரியும் வகையில் கட்டியெழுப்ப நாம் திட்டங்களை தயாரித்து முடித்துள்ளோம்.

அந்த உருவாக்கத்திற்காக குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த நாட்டின் கடவுச்சீட்டை உலகமே மதிக்கும் நிலைக்கு, நாம் நாட்டை கட்டியெழுப்புவது அவசியம். இந்த நாட்டின் பிரஜைகளுக்கு ‘நான் இலங்கையர்’ என்று பெருமையுடன் கூறக்கூடிய நாட்டை உருவாக்குவது அவசியம்.

இந்த நாட்டின் பிரஜையாக இருப்பது பெருமை என்று நம் நாட்டு மக்கள் உணரும் வகையில் இந்த நாட்டை உருவாக்குவது அவசியம். அதற்கு உங்களின் கூட்டுப் பங்களிப்பு தேவை. அனைத்து பிரஜைகளுக்கும் சமூக நீதியை நிறைவேற்றும் அரசொன்றை உருவாக்க நாம் பொறுப்புடன் பங்களிக்கிறோம்.

அறிவு, திறன்கள், கல்வி மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் மூலம் எமது சிறுவர்கள் மற்றும் இளைஞர் சந்ததிக்கு நம்பகமான எதிர்காலத்தை நாம் கட்டியெழுப்புவோம். நமது நாட்டின் சனத்தொகையில் ஐம்பத்திரண்டு வீதத்தைத் தாண்டிய பெண்கள் சமூகம், இந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகச் செயல்பாட்டிற்கு பெரும் பங்களிப்பைச் செய்யும் குழுவாகும். பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பாக அனைவரும் ஒன்றிணைந்து எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு நாம் செல்வோம்.

சகல நிறுவனங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை பலப்படுத்துவதற்கு நாம் செயற்படுவோம். அதற்கான எமது அர்ப்பணிப்பின் முன்னுதாரணத்தை வெளிப்படுத்தும் வகையில் ஏற்கெனவே எமது பிரதமர் பதவிக்கு பெண் ஒருவரை நியமித்துள்ளோம். எமது சனத்தொகையில் பெருந்தொகையானோர் ஊனமுற்று விசேட சமூக பாதுகாப்பு கிடைக்க வேண்டியவர்களாகும். அவர்களுக்காக பலமான சமூக பாதுகாப்பு கட்டமைப்பொன்றை நாம் திட்டமிட்டுள்ளதோடு அதன் குறுங்கால நடவடிக்கையை விரைவாக ஆரம்பிப்போம்.

நாம் செல்லும் பயணத்தில் சமூக கட்டமைப்பின் எந்தவொரு பகுதியையும் கைவிடப்போவதில்லை என்பதற்கு நாம் பொறுப்பு கூறுகிறோம். ஒவ்வொருவரினதும் தனித்துவத்திற்கு மதிப்பளித்து அவற்றை நாட்டின் முன்னேற்றத்துக்காக சாதகமான முறையில் பயன்படுத்திக்கொள்ள எமது பங்களிப்பை வழங்குவோம்.

மக்கள் இறைமைக்கு மதிப்பளிக்கும் அதேநேரம், அவர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்போம். எம் மீதான சந்தேகம் காரணமாக நிச்சயமற்ற நபர்கள் இருப்பதை நாம் அறிவோம். எனது செயற்பாடுகளின் ஊடாக உங்களின் நம்பிக்கையை வெல்ல எதிர்பார்க்கிறேன். உங்களுடைய விமர்சனங்களை பொறுத்தமான தருணத்தில் ஏற்றுக்கொள்வேன்.

அதேபோல் நாங்கள் கட்டியெழுப்ப போகும் எதிர்காலத்தின் பங்குதாரர்களாக உங்களை வலுவூட்டுவோம். எமக்கிடையில் காணப்படும் வேறுபாடுகளை கலைய முடியுமானால்,நமக்கிடையிலான இலக்கு சமமானவை என நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.

அதன் ஊடாக நாடு முகங்கொடுத்துள்ள நெருக்கடியை ஏற்றுக் கொள்ளவும் அதன் ஊடாக முன்னோக்சிச் செல்வதற்குத் தேவையான மூலோபாயங்களை இணைந்து திட்டமிடவும் முடியும். இந்த நாட்டை கட்டியெழுப்வுதற்காக காத்திரமாகவும் நேர்மையாகவும் இணையும் அனைவருக்கும் எமது கதவுகள் திறந்துள்ளன.

மக்களின் ஆணைக்கு அமைவான பாராளுமன்றம் ஒன்று அவசியப்படுகிறது. இறுதியாக இருந்த பாராளுமன்றம் மக்கள் ஆணையை திரிபுபடுத்தியதாக காணப்பட்டது. அதனால் நேற்றைய தினம் பாராளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுத்தேன்.

அரசியலமைப்புக்கு அமைவாக நாட்டை கொண்டு செல்வதற்காக எமது பாராளுமன்ற பிரநிதித்துவத்திற்கு அமைவாக அமைச்சரவை ஒன்றை நியமித்தேன். அன்றாடம் சூரியன் உதிக்கும் ஒவ்வொரு பொழுதிலும் மக்கள் காணும் கனவுகள் உள்ளன.

அது இன்று இருப்பதை விடவும் சிறந்த நாடாகும்! ஆனாலும், பல வருடங்களாக அது கனவாகவே போய்விட்டது என்பதையும் நானும் அறிவேன். சந்தர்ப்பவாதம், அதிகாரமோகம்,சர்வாதிகாரம் மற்றும் இனவாதம் காரணமாக எமது நாட்டை மேலும் உயர்த்தி வைக்க எம்மால் முடியாமல் உள்ளது..! இருப்பினும், எமக்கு வரலாற்றில் நழுவவிட முடியாத சந்தர்ப்பமொன்று கிடைத்திருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பல்வகைத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் செழிப்பான நாட்டை கட்டியெழுப்புவோம்.

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த நபர்களின் பெயர்கள் நாட்டு மக்களுக்கு வெளியிட நடவடிக்கைகள்!

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 253 வாகனங்கள் முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த நபர்களின் பெயர்கள் நாட்டு மக்களுக்கு வெளியிடப்படும் என்றும் இவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த வாகனங்கள் தொடர்பாக நாம் தீர்க்கமான விசாரணைகளை நடத்தி, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக நாம் உரிய நடவடிக்கை எடுப்போம். யார் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தது என்ற விபரங்களை நாம் நாட்டு மக்களுக்கும் வெளிப்படுத்துவோம்.

அரச அதிகாரிகள் இதற்காக எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஏனெனில், இவர்களுக்குத்தான் இந்த வாகனங்களை யாருடையது, யார் பயன்படுத்தியது என்ற அனைத்து விடயங்களும் தெரியும்.

 

ஏன், இவர்கள் இந்த வாகனங்களை ஒப்படைத்துவிட்டு ஒழிய வேண்டும்? அதாவது, உரிமையில்லாதவற்றை பயன்படுத்தினால்தான் பயப்பட்டு, ஒழிந்துச் செல்ல வேண்டும்.

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 253 வாகனங்களை வெளியாட்கள் பயன்படுத்துகிறார்கள்.

 

இவைதான் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலக அதிகாரிகளிடம், வாகனங்களை பயன்படுத்திய நபர்களின் பெயர் விபரங்களை கோரியுள்ளோம்.

இந்த அனைத்து நபர்களுக்கு எதிராகவும் எதிர்க்காலத்தில் சட்டநடவடிக்கை மேற்கொள்வோம்.

ஜனாதிபதி இதுதொடர்பாக உறுதியாகவுள்ளார். இது மக்களுடைய வாகனங்கள். இவை மீளவும் மக்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.