September

September

டொனால்ட் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிசூடு !

அமெரிக்காவில்குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டமை அங்கு பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடா கோல்ப் கிளப்பில் கோல் விளையாட டிரம்ப் சென்றபோதே இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றது. இதையடுத்து, அதிகாரிகள் டிரம்பை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

மேலும், அதிபர் வேட்பாளர் டிரம்ப் பாதுகாப்பாக உள்ளார் என அவரது கட்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

ஏற்கனவே, பென்சில்வேனியாவில் நடந்த பிரசாரத்தில் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டொனால்ட் டிரம்பின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர்,எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், புளோரிடாவின் வெஸ்ட் பால்ம் பீச்சில் உள்ள டிரம்பின் கோல்ஃப் மைதானத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இரு மாதங்களில் டிரம்ப் மீது நடத்தப்பட்ட 2வது தாக்குதல் முயற்சி இது என்பதால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 1300-இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் – PAFFREL

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 1300-இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக PAFFREL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

 

இவற்றில் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 62 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன் 19 தாக்குதல் சம்பவங்களும் அலுவலகங்கள் மீதான 27 தாக்குதல் சம்பவங்களும் உள்ளடங்குவதாக அவர் கூறியுள்ளார்.

 

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து வகையான பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதாக கூறியுள்ள ரோஹண ஹெட்டியாரச்சி, இந்த காலப்பகுதியில் அமைதியான முறையில் செயற்படுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

அத்துடன் இம்முறை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளில் 150-இற்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

முடிவுக்கு வந்தது பிரித்தானியாவின் மிகப்பெரும் இரண்டு தசாப்த கால சிறுவர் துஷ்பிரயோக வழக்கு விவகாரம் !

2 தசாப்தங்களுக்கு முன்னர் இரண்டு சிறுமிகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த ஏழு ஆண்கள், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான பிரித்தானியாவின் மிகப்பெரிய விசாரணையின் கீழ் வெள்ளிக்கிழமை (13) கடுமையான சிறைத்தண்டனைகளைப் பெற்றனர்.

 

2000 களின் முற்பகுதியில் வடக்கு இங்கிலாந்தில் உள்ள ரோதர்ஹாமில் செய்யப்பட்ட குற்றங்களுக்காக அவர்களுக்கு தற்சமயம் ஏழு முதல் 25 ஆண்டுகள் வரை சித்தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

சிறுவர்கள் துஷ்பிரயோகம் சம்பந்தமான பிரித்தானியாவின் ஒரு தசாப்தகால விசாரணையில் இந்த வழக்கு மிகப்பெரியது ஆகும்.

 

சம்பவம் நடந்த போது, பாதிக்கப்பட்டவர்கள் 11 மற்றும் 15 வயதுடையவர்களாக இருந்ததாகவும், குற்றம் நடந்த காலத்தில் இருவரும் பராமரிப்பு அமைப்பில் நேரத்தைச் செலவிட்டதாகவும் தேசிய குற்றவியல் நிறுவனம் (NCA) தெரிவித்துள்ளது.

 

1997 மற்றும் 2013 க்கு இடையில் ரோதர்ஹாமில் ஆண்களின் கும்பல்களால் குறைந்தது 1,400 சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர் மற்றும் கடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விண்வெளியில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் சுனிதா வில்லியம்ஸ்!

சா்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸும் , நாசா விஞ்ஞானியான பட்ச் வில்மோரும் அங்கிருந்தே அமெரிக்காவில் வரும் நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் வாக்களிக்கவுள்ளனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து செய்தியாளா்களிடம் சுனிதா வில்லியம்ஸ் , ‘தோ்தலில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய கடமையாகும். எனவே, நான் விண்வெளியில் இருந்தபடியே அதிபா் தோ்தலில் வாக்களிக்கவிருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, பட்ச் வில்மோரும், அதிபா் தோ்தல் வாக்குச் சீட்டுக்காகவிண்ணப்பத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்காவின் போயிங் உருவாக்கியுள்ள ஸ்டாா்லைனா் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோருடன் சா்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த ஜூன் 5-ஆம் திகதி சென்றடைந்தது. அதுதான் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு நபா்களை ஏற்றிச் சென்ற இரண்டாவது தனியாா் நிறுவன விண்வெளி ஓடம் ஆகும்.

 

ஒன்பது நாள்கள் அந்த நிலையத்தில் தங்கியிருந்துவிட்டு ஸ்டாா்லைனா் மூலமே அவா்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவதாக இருந்தது. இருந்தாலும், தொழில்நுட்பக் கோளாறு காரணாக அவா்களால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை.

 

ஸ்டாா்லைனரில் ஆள்களை அழைத்துவருவது அச்சுறுத்தல் நிறைந்தது என்பதால் சுனிதாவும் பட்ச் வில்மோரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண்கலம் மூலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்குத் திரும்புவாா்கள் என்று நாசா அறிவித்தது. யாரையும் ஏற்றாமல் ஸ்டாா்லைனா் விண்கலம் மட்டும் கடந்த வாரம் பூமி திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் தேசமாய் ஒன்றுபடுவோம் – யாழ் பல்கலை சமூகம் அழைப்பு !

வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் திரட்சியை இத் தேர்தலில் வெளிப்படுத்துவோம் என யாழ் பல்கலை சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.

 

தமிழ் மக்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தின் திறந்த மடல் எனும் தலைப்பிலான அறிக்கையிலேயே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

நூற்றாண்டுகள் கடந்த கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைகளிற்குள் (Structural Genocide) சிக்குண்டு இனவிடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள் எங்களின் அரசியல் விடுதலைப் பயணத்தில் தவிர்க்க முடியாதவொரு தேர்தலாக எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சிறிலங்காவின் அரச தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் மாறியுள்ளது. இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகமாக இம்மடலினை எங்கள் பேரன்புமிக்க தமிழ் மக்களை நோக்கி மாணவர்கள் நாங்கள் எழுதுகின்றோம்.

 

தமிழ் மக்கள் உதிரிகளாக்கப்படுதலும் கூட்டு மனவலு சிதைக்கப்படுதலும்

 

2009 இற்குப் பின்னரான 15 ஆண்டுகள் காலத்தில் தமிழ் மக்கள் தேசமாகச் சிந்திப்பதிலிருந்தும், எழுச்சியடைவதிலிருந்தும் எங்களை விலகியிருக்கச் செய்வதில் சிங்கள – பௌத்த பேரினவாதம் ஏறக்குறைய வெற்றியடைந்திருக்கின்றது. சாதிகளாக, மதங்களாக, பிரதேசங்களாக தமிழ் மக்களையும் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளையும் உதிரிகளாக்கி, எங்களின் கூட்டு மனவலுவைத் தகர்த்தெறிந்து உளவியல் ரீதியில் தோல்வி மற்றும் அடிமைத்துவ மனோநிலையினை எங்கள் மக்களிடையே விதைப்பதனை சிறிலங்கா அரசின் முகவர்களும் அவர்களது அமைப்புக்களும் கனகச்சிதமாகச் செய்து முடித்துள்ளன.

 

தமிழ் மக்களினது அரசியற் பலத்தினையும் எழுச்சியினையும் இல்லாதொழிப்பதற்காகச் சாணக்கியம், ராஜதந்திரம் என்று பெயரிட்டு தமிழ்த் தரப்புகளால் முன்னெடுக்கப்பட்ட வெற்றுக் காசோலை அரசியல் பயன்படுத்தப்பட்டது.

அதன் விளைவே கடந்த 2010, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல்களில் தமிழ் இனப்படுகொலை பொறுப்பாளிகளான ஒரு தரப்பினரை எதிர்ப்பதாகக் கூறி, இனப்படுகொலைக் குற்றத்தைப் புரிந்த சிறிலங்காவின் இராணுவத் தளபதி, பதில் பாதுகாப்பு அமைச்சர், போர்க்குற்றம் புரிந்த பெருமளவான இராணுவத்தினரின் ஆதரவினைப் பெற்ற நபர்களுக்கு வாக்களித்தோம். பரிகார நீதியைக் கோர வேண்டிய நாம், எமது அரசியற் தலைமைகளினால் கண்மூடித்தனமாக வழிநடத்தப்பட்டோம்.

 

எம்மைச் சூழும் பொருளாதார நல்லிணக்க மாயைகள்!

 

சிறிலங்காவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வங்குரோத்து நிலையைக் காரணங்காட்டி கவர்ச்சிகர வாக்குறுதிகளை முன்வைத்து வரும் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்கள் நாட்டின் இந்நிலைக்குத் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளும், வலிந்து திணிக்கப்பட்ட போருமே அடிப்படைக் காரணம் என்பதை ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை.

அடிப்படையில் இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கு அரசியல் உறுதித் தன்மை அவசியமாக உள்ள நிலையில், தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கள், ஒடுக்குமுறைகளை நிறுத்தும் சித்தம் ஏதுமின்றி, தமிழ் மக்களின் உரிமைக்கான குரல்களை இனிப்புத் தடவிய வார்த்தை ஜாலங்களினால் அறுத்தெறியும் பணிகளிலேயே நாட்டமும் மும்முரமும் காட்டுகின்றனர். தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பையோ அல்லது பௌத்தத்திற்கு முதன்மை வழங்கும் அதன் கட்டமைப்பையோ இவர்கள் எவரும் கேள்விக்குள்ளாக்காமல் நல்லிணக்கம் பேசுவதென்பது அற்ப வாக்குகளிற்காகவேயன்றி வேறெதற்காக?

தமிழர் தேசமாய்த் திரள்வோம் !

 

தொடர்ந்தும் தமிழர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்கேற்ற பலமானதொரு திரளாக அரசியல் மற்றும் கட்டமைப்பு ரீதியாகத் தமிழ் மக்கள் நாங்கள் எழ முடியாது உதிரிகளாக்கப்பட்டு, கூட்டு மனவலு சிதைக்கப்பட்டுள்ளது. இக்கையறு நிலையாவது கடந்த கால அனுபவங்களைப் பரிசீலனை செய்து, சுதாகரித்து முன்னகர வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம்.

 

அதிகாரப்பகிர்வோடு எவ்விதத்திலும் தொடர்பற்ற ஒற்றையாட்சி, அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தினுள் தமிழரின் அரசியலை சுருக்கியது என்பது சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்பதோடு, தமிழ் மக்களிற்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளவல்ல திடசித்தமுள்ள தலைவர் ஒருவரையேனும் சிங்கள மக்கள் மத்தியில் காண முடியவில்லை என்பதும் நோக்கத்தக்கது.

 

தமிழ்த் தேசியம் பேசுகின்ற கட்சிகளில் பயணிப்போர்கள் அனைவரும் தமிழினத்தின் விடுதலைக்கு, மேன்மைக்கு உழைப்பவர்கள் என்று நம்பி ஏமாந்த எங்களுக்கு, புலித்தோல் போர்த்திய நரிகளின் ஊளையிடுதல்களையும் கூச்சல்களையும் உதறித்தள்ளி, தமிழர் தேசமாக, எங்கள் தலைவிதியை நாங்களே மாற்றி எழுதும் பெருவாய்ப்பு இனப்படுகொலை நிகழ்ந்து 15 ஆண்டுகளின் பின் கனிந்துள்ளது.

 

தமிழரை அணிதிரட்டி வெல்லட்டும் தமிழ்ப் பொதுவேட்பாளர் !

 

தமிழ் மக்களைத் தேசமாய் அணி திரட்டுவதற்கும், பன்னாட்டுச் சமூகங்களிற்கு விடுதலைக்கான எங்களின் கூட்டு வேட்கையினையும், கூட்டு மனோபலத்தினையும் வெளிப்படுத்துவதற்கும் எங்களிற்குள்ள ஒரேயொரு வாய்ப்பாகத் தமிழ்ப் பொதுவேட்பாளர் எண்ணக்கருவினை நாங்கள் பலப்படுத்த வேண்டும். இது ஒரு காத்திரமான வழிமுறை. இது எமது வரலாற்றுக் கடமை. தமிழ்ப் பொதுவேட்பாளர் சிறிலங்காவின் அரச தலைவர் இருக்கையை வெல்லப் போகின்றவரல்ல ; மாறாக தமிழ் மக்களை அணிதிரட்டுவதில் வெல்லப் போகின்றவர்.

 

இனியாவது ஏமாற்றும் கபட அரசியலிற்குப் பலியாகாமல், தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுக்கோ, வெளித்தரப்புக்களுக்கோ சென்று சேர்வதைத் தவிர்த்து, தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களைப் பிரதிபலிக்கும் தீர்மானங்களைத் தமிழ் மக்கள் கூட்டாக மேற்கொள்ள வேண்டும். தவறுவோமேயானால் நாங்கள் அரசியல் பிழைத்த மக்களாக்கப்படுவோம்.

நாங்கள் மாறி மாறி சிங்கள ஆட்சியாளர்களுக்கு வாக்களிக்க வழிநடத்தப்பட்டோம். இதனால் தமிழ் மக்களின் நிலை, அரசியல், சமூக ரீதியில் பரிதாபகரமாய்ப் போனதேயன்றி வேறேதும் நிகழவில்லை. உரிமைகளுற்கான தமிழரின் அரசியல் இன்று சலுகைகளுக்காகத் துவண்டு போயுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள திரு.பா.அரியநேத்திரன் அவர்களுக்கு, அவரின் சங்குச் சின்னத்திற்கு வாக்களிப்போம். மாற்றுக் கருத்துக்கள் இருப்பினும், கட்சி வேறுபாடுகள் கடந்து வடக்கு – கிழக்கு, மலையகம், இதர பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும், சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் திரட்சியை, இத் தேர்தலில் வெளிப்படுத்துவோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான் ஜனாதிபதியானால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்கமாட்டேன் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

நான் ஜனாதிபதியானால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்கமாட்டேன் என ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை, இந்திய ஒப்பந்தத்துக்கு தெற்கு மக்களின் ஆசிர்வாதம் இருக்கவில்லை. அது பலவந்தமாகத் திணிக்கப்பட்டதொன்றாகும். அதனால்தான் வடக்கு – கிழக்கு இணைப்பு, பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் என்பன நடைமுறைப்படுத்தப்படவில்லை.

குறித்த ஒப்பந்தம் அமுலாக்கப்பட்ட விதத்தை நானும் அனுமதிக்கவில்லை. ஒப்பந்தம் வந்தபோது நான் இராணுவத்தில் இருந்தேன். ஒப்பந்தம் பலவந்தமாகத் திணிக்கப்பட்டதை ஏற்க முடியாது.

13 வழங்கப்படும் எனச் சஜித் கூறுகின்றார். அதேபோல் ஐக்கியமான நாடு பற்றி சஜித் மற்றும் அநுர ஆகியோர் கதைக்கின்றனர். ஆனால், ஒற்றையாட்சி எனும் நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன்.

நான் ஜனாதிபதியாகும் பட்சத்தில் மாகாணங்களுக்குப் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கமாட்டேன்.

ஆனால், 13 ஐ விடவும் அதிகாரங்களைப் பகிர்ந்து மக்கள் சமத்துவத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கலாம். அவ்வாறானதொரு நிலை ஏற்படும் வரை மேற்படி அதிகாரங்களை வழங்க முடியாது எனவும் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் பொலிஸாரையும் ஆயுதப்படையினரையும் இணைத்து ‘அவசரகால திட்டம்’ !

ஜனாதிபதி தேர்தல் அன்றும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போதும் நாட்டில் ஏற்படக்கூடிய எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்வதற்காக பொலிஸாரையும் ஆயுதப்படையினரையும் இணைத்து ‘அவசரகால திட்டம்’ ஒன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானிகளுக்கு அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அவசர நிலை ஏற்படக்கூடும் என பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது பாதுகாப்பு பிரதானிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதை அடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை, எந்தவொரு அவசர நிலையிலும் பொலிஸாருக்கு உதவியாக இராணுவத்தை நிலைநிறுத்துவது குறித்தும், அவசரநிலையில் இராணுவம் தனது அதிகாரங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகத்துடனும் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகவும், முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர்கள் தலைமையில் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் அவசரகால பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, படைத் தளபதிகளின் தலைமையில் எதிர்வரும் 18ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

அதன் பின்னர் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் தலைமையில் தேர்தலுக்கு முன்னர் அவசர பாதுகாப்புச் சபைக் கூட்டமும் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரே மாதத்தில் ஒரு பில்லியன் ரசிகர்கள் – யூடியூப்பில் கலக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ !

பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமூக வலைத்தளங்களில் ஒரு பில்லியன் இரசிகர்களால் பின் தொடரப்படும் முதல் நபராக பதிவாகியுள்ளார்.

 

Instagram, Facebook, Twitter, YouTube, மற்றும் சீன சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் ரொனால்டோவை ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட இரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.

 

மற்றுமொரு கால்பந்தாட்ட நட்சத்திரமான மெஸ்ஸியை 623 மில்லியன் இரசிகர்கள் பின்தொடர்வதுடன் பாடகர்களான ஜஸ்டின் பீபர், டெய்லர் ஸ்விஃப்ட் ஆகியோருக்கும் மில்லியன் கணக்கான இரசிகர்களே உள்ளனர்.

 

இந்தப் பட்டியிலில் இரண்டாமிடத்திலுள்ள செலினா கோமஸ் 690 மில்லியன் இரசிகர்களை தம்வசம் வைத்துள்ளார்.

 

கடந்த மாதம் யூ.டியூபில் இணைந்த ரொனால்டோவை ஒரு வாரத்திற்குள் 50 மில்லியன் இரசிகர்கள் பின்தொடர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு அடுத்த ஐந்து வருடங்களுக்குள் தீர்வு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

தேசிய காணி ஆணைக்குழு மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆகியவை தமது அரசாங்கத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இன்று தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு அடுத்த ஐந்து வருடங்களுக்குள் தீர்வு காண்பதற்கு நீதியரசர் நவாஸ் ஆணைக்குழுவின் ஊடாக செயற்படுவார் என யாழ்ப்பாணம்  நாவாந்துறையில் இன்று (14) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கின் பிரச்சினைகளை அரசியல் பிரச்சினைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது எனவும், அபிவிருத்தியும் தேவை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இல்லையேல் ஏனைய மாகாணங்கள் அபிவிருத்தியில் முன்னோக்கி செல்லும் போது வடக்கு பின்தங்கிவிடும் எனவும் வடக்கின் அரசியல் பிரச்சினைகளை மட்டுமன்றி அபிவிருத்தி பிரச்சினைகளையும் தீர்த்து வைப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களை தான் அச்சுறுத்தியதாக குறிப்பிட்ட அநுரகுமார திஸாநாயக்கவை  சுமந்திரன்  பாதுகாத்தாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

அநுர, சஜித் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க முயல்கின்றனர். அவ்வாறு செய்தால் நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்காது . வாழ்க்கை செலவை குறைப்பதே எமது முதலவாது குறிக்கோள்.அஸ்வெசும நிகழ்ச்சி திட்டம்.உர மானியம். வழங்கப்பட்டுள்ளது. தனியார் துறையினருக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு அடுத்த வருடம் முதல் சம்பளத்தை அதிகரிக்க முடியும். வரியையும் குறைக்க வழிசெய்ய முடியும்.

அநுர, சஜித் ஆகிய இரண்டு வேட்பாளர்களும் வரியை குறைக்க வேண்டும் என கூறுகின்றனர். அவ்வாறு செய்தால் மேலும் பல பாதிப்பை சந்திக்க நேரிடும்.

இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றார்கள். சலுகைகளை வழங்க வேண்டும். முதலீட்டாளர்களை இலங்கைக்கு வரவழைக்க வேண்டும். தனியார் துறையிலும் ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்க உள்ளோம்.சுய தொழில் முயற்சியாளருக்கு வட்டியில்லா கடன்களை வழங்க வேண்டும்.

காங்கேசன்துறை பிரதேசத்தில் முதலாவது முதலீட்டு வலயம் உருவாக்கப்படவுள்ளது. தொடர்நது பரந்தன், மாங்குளத்தில் முதலீட்டு வலயம் உருவாக்கப்படும். பூநகரி பிரதேசத்தில் சூரிய மின்சக்தி திட்டம் உருவாக்கப்படும். சஜித், அநுரவிடம் தீர்வுகள் இல்லை. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” என் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்காக நேட்டோ களமிறங்கினால் ரஷ்யா தகுந்த முறையில் பதிலளிக்கும் – விளாடிமிர் புட்டின்

ரஷ்யா மீது உக்ரேன் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நேட்டோ நீக்கினால் உக்ரேன் – ரஷ்ய யுத்தத்தில் நேட்டோ நேரடியாக களமிறங்குகின்றது என தான் கருதுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

நேட்டோ, அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் ரஷ்யா ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி, ஆயுத உதவிகள் அளித்து வருவதால், ரஷ்யாவுக்கு கடும் சவாலை உக்ரேன் தொடர்ந்தும் அளித்து வருகிறது.

இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் இந்தப் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இந்தப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் அண்மையில் அறிவித்தார்.

எனினும், ரஷ்ய பிராந்தியங்கள் மீது ஆளில்லா ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி உக்ரேன் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்த நிலையில், இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தும் திறன் உக்ரேன் இராணுவத்திற்கு கிடையாது என்றும் செயற்கைகோள் மூலமான உளவுத் தகவல்களை பெறாமல் இவற்றை பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா அல்லது நேட்டோ செயற்கைகோள்களை தான் உக்ரேன் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ஏவுகணைகளுக்கு தேவையான சில அதிநவீன கருவிகள் நேட்டோ அமைப்பிடம் தான் உள்ளதாகவும் எனவே, இந்த போரில் நேட்டோ படைகள் நேரடியாக ஈடுபடுகிறதா அல்லது இல்லையா என்பதே முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஏவுகணைகளை உக்ரேன் பயன்படுத்த அனுமதித்தால், அது போரின் தன்மையை மாற்றும் எனத் தெரிவித்துள்ள புடின், அது நேட்டோ படைகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் ரஷ்யாவுடன் நேரடியாக மோதுவதற்கு சமம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் தகுந்த முடிவுகளை ரஷ்யா எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.