“மக்கள் ஆணையில்லாது பாராளுமன்றத்துக்கு செல்ல கூட தகுதியில்லாத ரணில் விக்கிரமசிங்க எப்படி 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முடியும்.” என தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் அமைப்பாளர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.
18 ஆம் திகதி பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமல்படுத்துவதற்காக வடக்கு மக்களுக்கு வாக்குறுதியை வழங்கி இருக்கிறார். மேலும் வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருவதாகவும் கூறி வருகிறார். இதனை கூறுவதற்கு ஜனாதிபதிக்கு எந்தவொரு அதிகாரமும் கிடையாது. அதனை நிறைவேற்ற வேண்டுமாயின் அவருக்கு மக்களாணை வேண்டும். அது அவரிடம் காணப்படுகின்றதா?
ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்தது 13 ஐ நிறைவேற்றவோ அல்லது நாட்டில் புரட்சி ஏற்படுத்தி அதன் ஊடாக அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவோ அல்ல. அதிகாரத்தை விட்டு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி காலப்பகுதியில் எஞ்சியிருக்கும் காலப்பகுதியை முன்னெடுத்து செல்லவும், நாட்டு மக்களை வழிநடத்தவும் மற்றும் நாட்டை பாதுகாக்கவும் என்பதை ரணில் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் மக்களாணை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு முறையாக நாட்டை ஆள முடியாமல் தப்பியோடிய கோட்டாபயவிற்கு பதிலாக வெற்றிடமாக காணப்பட்ட ஜனாதிபதி பதவியை நிரப்புவதற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்நிலையில் 13 ஐ அமுல்படுத்த எந்தவொரு அதிகாரமும் தற்பொழுது ரணிலுக்கு கிடையாது. மேலும் கோட்டாபய ராஜபக்ஷவினால் நிறைவேற்ற முடியாமல் விட்டுச்சென்ற வேலைத் திட்டங்களை முன்னெடுத்து செல்வதே அவருடைய தற்பொழுதுள்ள பொறுப்பாகும்.
ஜனாதிபதி ரணில் அரசியலில் இருந்து மக்களால் ஒதுக்கப்பட்ட மற்றும் தேர்தலின் போது நிராகரிக்கப்பட்டதோடு பாராளுமன்றத்தில் கூட அங்கம் வகிக்க தகுதியில்லாத நபர். இவ்வாறான ஒருவருக்கு அரசியமைப்பை மாற்றுவதற்கு எப்படி அதிகாரம் இருக்கிறது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
மேலும் 13 ஐ நடைமுறைப்படுத்துவதானால் யாருக்கு இலாபம்? அதன் பயனை யார் பெற்றுக்கொள்ள போவது? இந்நிலையில் இந்தியாவின் வேண்டுகோளுக்கு இனங்கவே 13 ஐ நடைமுறைப்படுத்த ரணில் ஆர்வம் காட்டுகிறார்.அவர்கள் இலங்கை மீது முழுமையாக அதிகாரத்தை பயன்படுத்தி 13 ஐ நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார்கள்.
மேலும் அமெரிக்காவிற்கும் அதில் ஒரு பங்கு இருக்கிறது. அன்று 13 ஐ நடைமுறைப்படுத்த ஜே.ஆர். ஜயவர்தன கைச்சாத்திட்ட போது அமெரிக்கா உயர்தானிகரே முதலில் வாழ்த்து செய்தி அனுப்பினார். எம்மை பொறுத்தமட்டில் இந்தியா மற்றும் அமெரிக்காவே இதன் பின்னணியில் இருக்கிறது.
நாட்டில் 13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தினால் பிரிவினைவாத அரசியல்வாதிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் நோக்கம் நிறைவேறுமே தவிர தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கபோவதில்லை என்றார்.