இலங்கை மின்சாரசபையின் நிலைமை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை விட மோசமாக உள்ளது என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை தனியார் மயப்படுத்துவதே ஒரே வழி என தெரிவித்துள்ளார்.
தனியார் மயப்படுத்துவதற்கு அல்லது மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் பல நிறுவங்களை அடையாளம் கண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் மயப்படுத்தப்படவுள்ள மறுசீரமைக்கப்படவுள்ள அரசநிறுவனங்களின் பங்குகளை வைத்திருப்பதற்காக இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் புதிய நிறுவனமொன்று ஏற்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வழங்கப்படும் நிதிகள் நட்டங்களை ஈடுசெய்வதற்கு பயன்படுத்தக்கூடாது என்பதே நிதி வழங்குபவர்களின் முக்கிய கரிசனை என தெரிவித்துள்ள ஜனாதிபதி நிதி வழங்கும் சமூகத்தினர் தாங்கள் வழங்கும் நிதியை சுகாதார உற்பத்தி துறைகளில் பயன்படுத்தவேண்டும் என விரும்புகின்றனர் இதன் காரணமாக நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை அரசாங்கம் தொடர்ந்தும் கொண்டுசெல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.அரசதுறையைஅரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பது தொடர்பான உத்தேச திட்டம் குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பது தனியார் மயப்படுத்துவது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் எதிர்கொண்டுள்ள நஷ்டங்கள் காரணமாக அதனை தனியார் மயப்படுத்துவதே ஒரே வழி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இழப்புகளை சரிசெய்வதற்கு வேறு வழியில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி அதன் நஷ்டத்தினை சரிசெய்வதற்கு செலவு பிரதிபலிப்பு விலைப்பொறிமுறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை பொறுத்தவரை கடனே அதன் பிரச்சினை கடனை திருப்பி செலுத்துவதற்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஐந்துவருடங்களை கோரியுள்ளது எனவும் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கை மின்சாரசபையின் நிலைமை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை விட மோசமாக உள்ளது 200 பில்லியனிற்கும் மேல் நஷ்டம் என மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட்டை அதிகரிப்பதா அல்லது மின்கட்டணத்தை அதிகரிப்பதா என்ற இரண்டில் ஒன்றை தெரிவு செய்யவேண்டியுள்ளது. மின் உற்பத்திக்காக நுரைச்சோலை மின் நிலையத்திற்கு நிலக்கரியை வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை.
இலங்கை மின்சார சபைக்கான திட்டங்கள் குறித்து பதிலளித்துள்ள ஜனாதிபதி அதற்கான திட்டங்கள் இடம்பெறுகின்றன நாடு எதிர்கொண்டுள்ள அந்நிய செலாவணி பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு நாட்டிற்கான ஒரே வழி மறுசீரமைப்பே எனவும் தெரிவித்துள்ளார்.தனியார் மயப்படுத்தவேண்டிய மறுசீரமைக்கவேண்டிய நிறுவனங்களாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் இலங்கை மின்சாரசபை லங்கா ஹொஸ்பிட்டல் ஹில்டன் கொழும்பு ஸ்ரீலங்கா டெலிகோம் வோட்டர் எட்ஜ் ஆகியவை இனங்காணப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.