06

06

பாரிய சுற்றாடல் நெருக்கடிக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும் – நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம்

இலங்கையில் உருவாகியுள்ள பாரிய சுற்றாடல் நெருக்கடிக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மேலதிகமாக, ஒரு நாடாக இன்று பாரிய சுற்றாடல் நெருக்கடியின் விளிம்பில் இருப்பதாக அவர் கூறுகிறார்.

2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்கும் போது 29 வீதமாக இருந்த நாட்டின் காடுகளின் அளவு இன்று 16 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் தினமும் ஒரு யானையாவது இறக்கிறது என்று தெரிவித்த அவர் 2022ஆம் ஆண்டில் மட்டும் 395 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பாரிய அனர்த்தத்தை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு திருப்பியனுப்புங்கள் – கனடா செல்ல முற்பட்டு கர்நாடகாவில் உள்ள இலங்கையர்கள் போராட்டம்!

இந்தியா கர்நாடகாவில் இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெளிநாட்டிற்கு செல்வதற்காக முகவர்களால் அழைத்துச் செல்லப்பட்ட 38 பேரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 38 பேர் இன்று தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2021.06.10 ஆம் திகதி கர்நாடகாவின் மங்களூரில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களை விடுதலை செய்த நீதிமன்றம், மீண்டும்  அவர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

அதற்கான ஏற்பாட்டினைச் செய்வதற்காக 15 நாட்கள் அவகாசம் நீதிமன்றினால் வழங்கப்பட்ட போதிலும் தம்மை அனுப்பிவைப்பதற்கான ஏற்பாட்டினை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தே அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில், நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் யாரிடம் தொடர்புகொள்வது என்பது தெரியாது பரிதவிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

முகவர்களால் அழைத்துச் செல்லப்பட்டு, தாம் ஒரு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் உணவு, மருத்துவ வசதிகள் இல்லாம் இருப்பதாகவும் சிலர் கடும் நோய்த்தாக்கத்துக்கு உட்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் தம்மை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த வருட இறுதிக்குள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார

இந்த வருட இறுதிக்குள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும் எனவும் அதற்கான அடிப்படைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன எனவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தை பார்வையிட வெகு தொலைவில் உள்ள ஒருவர் கொழும்புக்கு வருவது மிகவும் சிரமமாக இருப்பதால் இந்த டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

“டிஜிட்டல் அமைப்புகளின் தேவை நீண்ட காலமாக உள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தை சந்திக்க கொழும்புக்கு ஏன் வர வேண்டும் என்பது நீண்ட காலமாக கேட்கப்பட்ட ஒன்று. தற்போது யாழ்ப்பாணத்தில் அலுவலகம் உள்ளது. இப்போது வராமல் வீட்டிலிருந்தே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு இந்தப் பணியைச் செய்ய முயற்சிக்கிறோம். கடந்த ஆறு மாதங்களில், தொழிலாளர் அமைச்சில் இந்தப் பணிகளைச் செய்துள்ளோம்.

இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவோம் என்று நம்புகிறோம். இந்த நாட்களில், வெளிநாட்டு முதலாளி  ஒருவர் எங்கள் பணியாளர்களில் ஒருவரைக் கண்டுபிடிக்க விரும்பினால், அவர்கள் அதை அங்கிருந்து ஒன்லைனில் செய்யலாம். மேலும் வெளிநாட்டு வேலைகள் தொடர்பான அனைத்து பணிகளையும் டிஜிட்டல் தளம் மூலம் செய்ய முடியும் என்றார்.

அழகும் அதன் அரசியலும் – கிளிநொச்சி அழகிப் போட்டி கருத்தியல் நோக்கு:- கருப்புதான் எமக்கு பிடிக்கும் கலரா?

நாம் வாழ்கின்ற இந்த உலகில் அரசியல் பற்றி மனிதர்கள் அக்கறையில்லாமல் இருப்பதென்னவோ உண்மைதான். உண்ணும் உணவு, உடுத்துகின்ற உடை, சுவாசிக்கும் காற்று எல்லாவற்றிலும் அரசியல் உண்டு. அரசியலுக்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை. அழகும் அழகுப் போட்டிகளும் கூட அதற்கு விதிவிலக்கு அல்ல. 2022ஆம் ஆண்டு டிசம்பர் நடுப்பகுதியில் கிளிநொச்சியில் நடந்த அழகுப்போட்டி அது அழகிப் போட்டியா அல்லது அழகிகளை உருவாக்குபவர்களுக்கான போட்டியா என்பது ஒரு பிரச்சினையே இல்லை. இதன் பின்னுள்ள கருத்தியல் தொடர்பானதே இப்பதிவு.

கிரேக்க பெண் தெய்வங்களுக்கு இடையே அழகுப்போட்டிகள் இடம்பெற்றதாகவும் அந்தப் போட்டிகளில் வெற்றிபெற அத்தெய்வங்கள் லஞ்சம் கொடுத்ததாகவும் புராண இதிகாச கதைகள் குறிப்பிடுகின்றன. ஆனால் உண்மையான அழகுப்போட்டி ஆண்டு தோறும் நடைபெறும் எதென்ஸ் விழாவில் ஆண்களுக்குத்தான் நடந்துள்ளது. ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் இங்கிலாந்தில் ஆங்கிலேய மே தினக் கொண்டாட்டங்களில் அரசியைத் தெரிவு செய்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அமெரிக்க மே தினக் கொண்டாட்டங்களில் இளம் பெண் அழகி ஒருத்தி போட்டியில் தெரிவு செய்யப்பட்டு சமூகப் பிரதிநிதியாக்கப்படுவது நடைமுறையாக இருந்து வந்துள்ளது. 1789இல் இளம்பெண்கள் வரிசையாக நின்று அமெரிக்க ஜனாதிபதியை வரவேற்கும் முறை உருவானது.

இந்த அழகுப் போட்டி தொடர்பாக குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து பெரும்பாலும் ஆண்களினால் மோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்விமர்சனங்கள் பெரும்பாலும் ஆக்கபூர்வமானவையாக இல்லாமல் அப்போட்டியில் கலந்துகொண்ட பெண்கள் மீதான விமர்சனங்களாகவே அமைந்தன. இந்த விமர்சனங்களில் ஒன்று தங்களை அழகாக்கி இப்பெண்கள், ஆண்களை ஏமாற்ற முயல்கின்றனர் என்பது. இது தான் 2022இன் மிகப்பெரிய நகைச்சுவையாக அமையும் என்றால் மிகையல்ல. புலம்பெயர்ந்த ஆண்கள் தங்களுடைய அழகை மட்டுமல்ல, வயது, கல்வி, தொழில், தங்களிடம் உள்ள சொத்துக்கள் என்று பலதிலும் ஏமாற்றி தங்கள் மணப்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்வது என்பது ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சமாகவே அன்று இருந்தது. இப்போது இவர்கள் சொல்லும் பெண்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது கொஞ்சம் ஓவர்தான்.

இந்த புலம்பெயர்ந்த ஆண்களின் விமர்சனங்களுக்கு பதிலளித்த போட்டியில் கலந்துகொண்ட பெண்கள் இதற்கு பதிலளிக்கின்ற போது ஒட்டுமொத்தமாக புலம்பெயர்ந்தவர்கள் மீது காட்டமான விமர்சனங்களை வைத்துள்ளனர். விமர்சனங்களை முன்வைத்த ஆண்களுக்கு பதிலளித்ததோடு அவர்கள் நிறுத்திக்கொண்டிருப்பது ஆரோக்கியமானதாக இருந்திருக்கும்.

1971இல் கதிர்காமத்தைச் சேர்ந்த அழகுராணிப் போட்டியில் வெற்றிபெற்ற பிரேமாவதி மன்னம்பேரி படுகொலைசெய்யப்பட்டார். ஜேவிபி உறுப்பினராக இருந்த அவர் ஜேவிபி கிளர்ச்சியின் போது இலங்கை பாதுகாப்புப் படையால் நிர்வாணமாக்கப்பட்டு தெருக்களில் கொண்டு திரியப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டார்.

சென் லுயிஸில் 1905இல் பெண் அழகிகளுக்கான போட்டி பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டமை தற்போதுள்ள அழகிப் போட்டிகளுக்கு வித்திட்டது. அப்போது 40,000 பேர் இவ்வழகிப் போட்டிக்கு தங்கள் புகைப்படங்களை அனுப்பி வைத்திருந்தனர். 1921ஆம் ஆண்டு செப்ரம்பரில் அமெரிக்க அழகி அட்லான்டிக் நகரில் தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் நீராடும் அழகிப் போட்டி இடம்பெற்றது.

1951 முதல் உலக அழகிப் போட்டி இடம்பெற்று வருகின்றது. கிளிநொச்சியில் நடைபெற்ற அழகிப் போட்டி அல்லது அழகு கலைஞர்களுக்கிடையேயான போட்டியும் இந்த உலக அழகுப் போட்டியும் அடிப்படையில் ஒன்றே. இதன் கருத்தியல் தளத்தில் தான் நாம் கவனம் செலுத்தவேண்டுமே அல்லாமல் போர் தின்ற கிளிநொச்சியில் அழகுராணிப் போட்டி அவசியமா இல்லையா என்பதல்ல பிரச்சினை. வெறும் அடைமொழிகளை வீசி அவ்விளம் பெண்களை குற்றவாளியாக்குவது நியாயமற்ற செயல்.

ஆணாக இருந்தாலென்ன பெண்ணாக இருந்தாலென்ன அழகு என்பது முக்கியமான அம்சம். ஒவ்வொருவரும் தன்னளவில் தாங்கள் அழகானவர்கள் என்பதை ஏற்றுக்கொள்வது அவர்களுடைய தனித்துவத்திற்கும் ஆளுமைக்கும் மிகவும் அவசியமானது. அதனால் அவரவர் தங்களை அழகுபடுத்தி வெளிப்படுத்துவது ஆரோக்கியமான விடயமே. அதில் எவ்வித தவறும் கிடையாது. ஆண்களுக்கு அழகு அவசியம் இல்லை என்றால் சிகை அலங்கார நிலையங்கள் எதற்கு?

ஆனால் இந்த அழகும் அதற்கான போட்டி என்பதும் சிக்கலான ஒன்று. ஆணழகன் போட்டிகள் இருந்தாலும் அவை பெரிதாகப் பேசப்படுவதில்லை. ஏனெனில் அது ஆண்களின் அம்சமாகப் பார்க்கப்படுவதில்லை. ஆனால் மிஸ்வேர்ல்ட், மிஸ் கிளிநொச்சி என்பது பலரது கவனத்தையும் ஈர்த்துவிடுகின்றது. அதற்குக் காரணம் சந்தைப் பொருளாதாரமும் அது ஏற்படுத்திய நுகர்வுக் கலாச்சாரமுமே. பெண்ணியம் சார்ந்த பெண் விடுதலைக்கான அமைப்புகள் இதற்கு எதிரான போராட்டங்களை மேற்கொண்டனர் 1970இல் லண்டன் அல்பேர் ஹோலில் இடம்பெற்ற மிஸ் வேர்ல்ட் போட்டிக்குள் நுழைந்த பெண்ணியவாதிகள் அங்கு சலசலப்பை ஏற்படுத்தி உலகின் கவனத்தை ஈர்த்தனர்.

2018 இல் இடம்பெற்ற உலக அழகிப் போட்டியை வழங்கிக்கொண்டிருந்த பொப் ஹோப் “இன்றைய இரவைப் பார்க்க இதுவொரு கன்றுகளின் சந்தையாகத் தெரிகின்றது” எனக் குறிப்பிட்டிருந்தார். பிரித்தானியாவில் கன்றுகள் காட்சிப்படுத்தப்பட்டு ஏல விற்பனை செய்யப்படும் முறையிருப்பதன் பின்னணியில் அவர் இக்கருத்தை வெளிப்படுத்தி இருந்தார். இவ்வாறு இந்த உலக அழகிப் போட்டிகளுக்கு எதிரான பல போராட்டங்கள் காலத்துக்குக் காலம் இடம்பெற்று வருகின்றது.

2002 இல் நைஜீரியாவின் அபுஜாவில் நடக்கவிருந்த மிஸ் வேர்லட் போட்டி அதுதொடர்பான சர்ச்சையால் அங்கு நடைபெறவில்லை. முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் கணிசமான அளவில் வாழ்கின்ற நைஜீரியவில் மிஸ் வேர்ல்ட் ஏற்பாடு செய்யப்பட்டதுமே வாதப் பிரதிவாதங்கள் இரு மதத்தரிப்பினரிடையேயும் உருவானது. அது ஏற்கனவே முரண்பாடுகளோடு இருந்தோரிடையே மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்பின்னணியில் “முகம்மது நபிகள் இன்று இருந்தால் இந்த உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் ஒருவரையே திருமணம் செய்ய விரும்பி இருப்பார்” என்று கிறிஸ்தவ பெண் ஊடகவியலாளர் ஒரு கட்டுரையை எழுதினார். அதனைத் தொடர்ந்து சில நாட்களின் பின் வெடித்த கலவரத்தில் 215 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கட்டுரையாளருக்கு மரண தண்டனை – அறிவிக்கப்பட அவர் தற்போது மேற்கு நாடு ஒன்றில் தற்போதும் தலைமறைவாக வாழ்கின்றார்.

மீண்டும் நாங்கள் உலக அழகிப் போட்டிக்கு வருவோம்,
விளையாட்டுப் போட்டிகளை நாங்கள் பார்த்து மகிழ்கின்றோம், குத்துச் சண்டைகளில் யார் வெல்வார்கள் என்று பந்தயம் கட்டுகின்றோம், காளையை அடக்கும் பாட்டிகளை பார்த்து ரசிக்கின்றோம், போட்டிப் பரீட்சைகளில் போட்டி போட்டு கலந்துகொள்கின்றோம் ஆனால் அழகிப் போட்டி மட்டும் ஏன் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றது? என்ற கேள்வி நியாயமானதே.

ஏனைய போட்டிகளுக்கும் அழகுப் போட்டிக்கும் உள்ள பிரதான வேறுபாடு தான் இதற்குக் காரணம். ஏனைய போட்டிகளில் ஒருவரின் பலம், திறமை: எழுத்தாற்றல், பேச்சாற்றல், வரையும் ஆற்றல், ஓடும் ஆற்றல் போன்ற பல்வகைப்பட்ட ஆற்றல்கள், சிந்திக்கும் ஆற்றல் என்ற அளவீடு செய்யக்கூடிய சுட்டிகள் போட்டியின் போது மதிப்பீடு செய்யப்படுகின்றது. இது புறநிலையானது பொருள்வகைப்பட்டது. அதற்கு நீங்கள் பரிவர்த்தனை மதிப்பை ஏற்படுத்த முடியும். அதாவது விலை நிர்ணயம் செய்ய முடியும். உதாரணத்திற்கு சீதனச் சந்தையில் ஓஎல் பெயில் விட்டவருக்கும் பட்டதாரிக்கு இடையே உள்ள சந்தைவிலை – சீதனம் ஒன்றல்ல.

இதற்கு முற்றிலும் மாறாக அழகு என்பது உணர்வு சம்பந்தப்பட்டது. அகநிலையானது. அதனை அளவீடு செய்ய முற்படுவதே அடிப்படையில் தவறான அணுகுமுறை. நாங்கள் விரும்புகின்றவர் எங்களுக்கு பேரழகனாகவோ பேரழகியாகவோ தோன்றலாம். ஆனால் எங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு அவ்வாறே தோண்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. கறுப்புப் பற்றி வரலாற்றினூடு எங்களுக்கு திணிக்கப்பட்ட தகவல்களால், கறுப்புப் பற்றிய தவறான புரிதலை எங்களை அறியாமலேயே எங்களுக்குள் கொண்டுள்ளோம். அகத்தில் உள்ள இந்தச் சிக்கலை மறைக்க நாங்கள் முகத்தையும் தோலையும் ப்பிளீச் பண்ணி கொஞ்சம் கூடுதலாக வெள்ளையாக்க விரும்புகின்றோம். ஆபிரிக்க பெண்கள் கூட இதனையே செய்ய ஊக்கப்படுத்தப்படுகின்றனர். அழகு என்ற பெயரில்.
1500களில் இருந்து ஐரோப்பியர்களின் காலனி ஆதிக்கத்திலிருந்தும் அதன் பின் நவகாலனித்துவ ஆதிக்கத்தினாலும் வெள்ளைத்தோல் அழகு, பண்பு, அறிவு ஆகியவற்றோடு தொடர்புபடுத்தப்பட்டு பார்க்கப்படலாயிற்று. ஐரோப்பிய வெள்ளையினத்தவர்கள் எம்மை ஆண்டதால் வெள்ளை மீது அல்லது கறுமை குறைந்தவர்கள் மீது எமக்கு காதலுருவாவது ஒன்றும் வியப்பில்லை. மேலும் கறுப்பாடு, கறுப்புப் பணம், கறுப்புச் சந்தை என்ற சொல்லாடல்கள் எல்லாம் கறுப்புப் பற்றிய கீழ்நிலைக் கருத்துருவாக்கத்தை எம்மத்தியில் மிக ஆழமாக பதிவு செய்துள்ளது. வெள்ளை தான் அழகு என்ற உணர்வை இவை ஏற்படுத்தி உள்ளது. மிஸ் வேர்ல்ட் போட்டியும் இதனையே பிரதிபலிக்கின்றது. வெள்ளையினத்தினரைக் கொண்ட நாடுகளும் அவர்களை ஒத்தவர்களுமே பெரும்பாலும் இப்போட்டிகளில் வெற்றிபெறுவது இதனையே உறுதி செய்கின்றது. ஆய்வுகளும் அதனை உறுதிப்படுத்துகின்றன.

இவற்றுக்கு அப்பால் இப்போது வெள்ளையினத்வரல்லாதவர்களும் இந்த அழகுப் போட்டியில் வெற்றிபெற வாய்ப்பு ஏற்பட்டு இருப்பது ஒன்றும் வெள்ளையரல்லாதோரை அல்லது கறுப்பை அழகாகக் கருதுவதால் அல்ல. தங்கள் ப்பிளீச் பவுடரையும் தாங்கள் அழகென்று கருதுவதை சந்தைப்படுத்தி தங்கள் சந்தையை விரிவாக்கம் செய்யவே. அதனால் தான் இலகுவில் விலைபோகக்கூடிய உலகின் இரண்டாவது பெரிய சந்தையுடைய இந்தியா மிஸ் வேர்ல்ட் போட்டிகளில் ஆறு தடவைகள் வெற்றி பெற்றதன் ரகசியம். உலகின் மிகப்பெரிய சந்தையையுடைய சீனா தன் சந்தையை சர்வதேசத்துக்கு திறந்துவிடாததால் சீனா 2007 இல் ஒரு தடவை மட்டுமே மிஸ்வேர்ல்ட் போட்டியில் வெற்றிபெற்றது.

உயிருள்ள உணர்வுள்ள ஜீவன்களான பெண்கள் சந்தைப் பொருளாதாரத்தின் விற்பனைப் பண்டமாக மாற்றப்படும் தன்மைதான் இந்த அழகுப் போட்டிகளில் வெளிப்படுத்தப்படுகின்றது. அழகில்லாத ஆணோ அழகில்லாத பெண்ணோ கிடையாது. படைக்கப்படவும் முடியாது. அழகை அவரவர் தமக்கேற்ப மெருகூட்டுவது அவரவர் உரிமை. ஆனால் அதற்கு போட்டி வைத்து தெரிவு செய்கின்ற போது அது தீவிரமான அரசியலாக மாற்றப்படுவது தவிர்க்க முடியாதது. ஒரு பெண்ணின் அழகை அளவீடு செய்வதும் அதன் மூலம் அவளை மதிப்பீடு செய்வதும் இந்த நூற்றாண்டின் கருத்தியல் அவலம் என்றே கருதுகிறேன். அவளின் அழகிற்கு அவள் மட்டுமே நிகர். இதற்கு ஒருபடி மேலே சென்று இப்போது க்கீயூட் பேபி கொன்ரெஸ்ட் வேறு நடத்த ஆரம்பித்துவிட்டது பேஸ்புக். லாபமீட்டலாம் என்றால் என்னவும் செய்யலாம் என்பது பல்தேசிய நிறுவனங்களின் கொள்கை. அதற்கு அவர்கள் பார்பி டோலின் இடுப்பை சிறிதாக்கி அதனையும் செக்ஸியாக்கி விற்பனை செய்கிறார்கள். இப்படி எத்தனை போட்டிகளுக்கு எம் எதிர்கால சந்ததியினர் முகம்கொடுக்க வேண்டி வரும் என்பது பல்தேசிய நிறுவனங்களுக்குத் தான் வெளிச்சம். இதில் கிளிநொச்சி இளம்பெண்கள் என்ன பாவம் செய்தார்கள், நீங்கள் சொல்லம்புகளால் அவர்களைத் தைக்க?

“தீர்வு தருவதாக கூறி விட்டு ரணில் விக்கிரமசிங்க எங்களை ஏமாற்றினால் மக்களை திரட்டி போராடுவோம்.” – நாடாளுமன்றத்தில் எம்.ஏ.சுமந்திரன்

“அதிகார பகிர்வு தருவதாக கூறிவிட்டு பின்பு ஏமாற்றினால் தமிழ் மக்களை ஒன்றுத்திரட்டி போராட்டங்களை முன்னெடுப்போம்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர்,

“பலவருடங்களாக இனப்பிரச்சினைக்கு கிடைக்காத தீர்வு எதிர்வரும் 75 ஆவது சுதந்திர தினத்திற்குள் அதவது ஒரு மாத காலத்திற்குள் கிடைக்குமா என பல்வேறு தரப்பினர் மாற்றுக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள்.

அதிகார பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லாமல் தான் நாமும் கலந்துக் கொள்கிறோம். அதனை அரசுக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.

தீர்வு திட்ட விவகாரத்தில் கூட்டமைப்பு பங்குகொள்ளவில்லை என்ற பழிச்சொல் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். அதனால் தான் பேச்சில் பங்கேற்கின்றோம்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நாம் இதயச்சுத்தியுடன் கலந்துக் கொள்கிறோம். வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

அந்த கால எல்லைக்குள் தீர்வை பெற்றுக் கொடுக்காவிட்டால் அதன் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும்.

அரசியல் தீர்வு வழங்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்தி விட்டு பிறகு ஒரு நாடகத்தை அரங்கேற்றி தமிழர்களை ஏமாற்றும் வகையில் சர்வதேசத்தின் கண்களுக்கு மண்ணை தூவினால் அது அரசாங்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

குறுகிய காலத்திற்குள் அரசியல் தீர்வு வழங்க முடியாது என்பதை அறிந்துக் கொண்டு எம்மையும் தமிழ் மக்களையும் ஏமாற்றும் வகையில் அரசு செயற்பட்டால் தமிழ் மக்களை ஒன்றுத்திரட்டி போராட்டங்களை முன்னெடுப்போம்.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் அரசியல் தீர்வு வழங்குவதாக குறிப்பிட்ட அரசாங்கத்திற்கு விடுக்கும் ஒரு எச்சரிக்கையாக இதனை அரசாங்கம் கருத்திற் கொள்ள வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

75 ஆவது தேசிய சுதந்திர கொண்டாட்டத்துடன் இணைந்தாக உருவாக்கப்படவுள்ள தேசிய இளைஞர் தளத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய 75 ஆவது தேசிய சுதந்திர கொண்டாட்டத்துடன் இணைந்தாக உருவாக்கப்படவுள்ள தேசிய இளைஞர் தளத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2048 ஆம் ஆண்டளவில் வளமான மற்றும் பலம்மிக்க இலங்கையை கட்டியெழுப்பும் செயற்பாட்டின் ஒரு பங்காளர்களாவதற்கு இலங்கை இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காகவும், 25 வருட கால அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் இளைஞர் சமூகத்தை பொறுப்பான பங்காளர்களாக ஈடுபடுத்துவதற்காகவும் தேசிய இளைஞர் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

2048 ஆம் ஆண்டளவில், தற்போதைய தலைமுறை இளைஞர்கள் பெரியவர்களாக வளர்ந்து நாட்டின் பொது மற்றும் தனியார் துறைகளில் முக்கிய பங்கு வகிப்பார்கள். இதன்படி, எதிர்கால அரசியல் முறைமை மற்றும் அரசியல்வாதிகள் பற்றி குறை கூறாமல் அபிவிருத்தியடைந்த இலங்கையை உருவாக்கும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்படும்.

நாட்டில் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இளைஞர் சமூகம் முன்னின்று செயற்பட வேண்டும் என்பதும், அதற்கான சிறந்த வாய்ப்பாக தேசிய இளைஞர் தளம் அமையும் என்பதே ஜனாதிபதியின் கருத்தாகும்.

சட்டம் மற்றும் பொருளாதாரம்/ கல்வி, தொழில் பயிற்சி, எதிர்காலத்திற்கான திறன்கள்/ நிலைபேரான அபிவிருத்தி மற்றும் காலநிலை நடவடிக்கை/ சுகாதாரம், பாதுகாப்பான உணவு மற்றும் நீர் தரநிலைகள்/ தேசிய பாதுகாப்பு/ இராஜதந்திரம் மற்றும் சர்வதேச உறவுகள்/ விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு/ விளையாட்டு/ அழகியற்கலை, சித்திரம்,இசை , நாடகம், திரைப்படம், கட்டடக்கலை போன்றவை/ கைத்தொழில், புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு/ நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள்/ நீர், காற்று, நிலம் மற்றும் விலங்கு பாதுகாப்பு/ நிர்வாகத்திற்கான தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் ஒழிப்பு/ தேசிய அபிவிருத்திக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் இயக்கவியல் கற்றல்/ நியாயமான சமூகம் ஆகிய துறைகள் தொடர்பில் தேசிய இளைஞர் தளத்தின் கவனம் செலுத்தப்படும்.

உறுப்பினர், இளைஞர் அமைப்பு மற்றும் ஆலோசகர் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் தேசிய இளைஞர் தளத்துக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

உறுப்பினராக விண்ணப்பிப்பதற்கான வயது எல்லை 16 – 35 ஆகும். இளைஞர் அமைப்புக்கு 40 வயதிற்குட்பட்டவரகள் விண்ணப்பிக்கலாம். ஆலோசகர் பதவிக்கு வயதெல்லை கிடையாது.

தேசிய இளைஞர் தளத்தில் உறுப்பினராவதற்கு எதிர்பார்ப்பவர்கள் தாம் நீண்டகாலம் மேற்கொண்டு வந்த திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான அறிக்கையொன்றை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தேசிய இளைஞர் தளம் கவனம் செலுத்தும் பகுதிகளில் நிபுணத்துவம் பெற்ற நபர்களுக்கு விண்ணப்பிக்கவும் அல்லது இத்திட்டத்தில் ஆலோசகர்களாக நியமிக்கப்பட முடியும். நேர்முகப்பரீட்சை செயன்முறைக்குப் பின்னர் தெரிவுகள் இடம்பெறும்.

அனைத்து விண்ணப்பதாரர்களும் தாங்கள் பணிபுரிய விரும்பும் ஒரு துறையை மட்டும் தேர்ந்தெடுத்து, 31 ஜனவரி 2023 அன்று அல்லது அதற்கு முன்பாக தங்களால் தயாரிக்கப்பட்ட விண்ணப்பத்தை dir.ysd@presidentsoffice.lk அல்லது “பணிப்பாளர், இளைஞர் மற்றும் நிலைபேரான அபிவிருத்தி, ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு 01” என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

நிர்வாகம், உள்ளடக்க உருவாக்கம், தகவல் தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல்,விநியோகம் மற்றும் நிதி ஆகிய துறைகளில் தமது சேவைகளை தொண்டர் அடிப்படையில் வழங்க ஆர்வமுள்ள எவரும் ஜனாதிபதி செயலகத்தில் உள்ள இளைஞர் மற்றும் நிலையான அபிவிருத்தி பணிப்பாளருடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

“கூறியதையே திரும்ப திரும்ப கூறுகிறார்கள். ஜனாதிபதி ரணிலுடனான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை.” எம்.ஏ.சுமந்திரன்

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று மாலை நடைபெற்ற சந்திப்பு அவ்வளவு நல்லதாக இல்லை. கடந்த டிசம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் முன்னேற்றம் எதுவும் இன்று வரை இல்லை.” என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அரசியல் கைதிகள் விடயம் மற்றும் காணி விடுவிப்பு சம்பந்தமாக கடந்த சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களையே இன்றைய சந்திப்பிலும் திரும்பச் திரும்ப அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி சந்திப்பின் போது உடனடியாக நடைமுறைப்படுத்தக் கூடிய விடயங்கள் பற்றி ஒரு பட்டியல் தருமாறு சொன்னார்கள். நான் அதைத் தருகின்றேன் என்று தெரிவித்தேன்.

அதேநேரத்தில் அரசியல் தீர்வு விவகாரம் உள்ளிட்ட ஏனைய விடயங்களிலும் இன்னமும் ஒரு முன்னேற்றம் இல்லை எனில் நாம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதா? இல்லையா? என்பது தொடர்பில் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டி வரும் என்பதை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளோம்.

இன்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் நானும் (எம்.ஏ. சுமந்திரன் – தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதனும் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தனும் (புளொட்) கலந்துகொண்டோம்.

அதேவேளை, அரச தரப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் பங்கேற்றனர் . வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளிநாடு சென்றிருப்பதால் அவர் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை” – என்றார்.

போதைப்பொருள் கொள்வனவுக்கான பணம் செலுத்தவில்லை என்பதால் 10 வயது சிறுவனை கடத்திய பெண் கைது !

கொள்வனவு செய்யப்பட்ட போதைப்பொருளுக்காக பணம் செலுத்தாமை காரணமாக 10 வயது சிறுவனை கடத்திச் சென்ற சம்பவம் நீர்கொழும்பில் பதிவாகியுள்ளது.

நீர்கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவரின் புதல்வர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தமது வர்த்தகத்திற்காக அவர் கிராண்ட்பாஸ் பகுதியிலுள்ள பெண் ஒருவரிடம் இருந்து போதைப்பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.

அதற்காக செலுத்த வேண்டிய பணம் தாமதமானதன் காரணமாக குறித்த பெண், வர்த்தகரின் 10 வயதான பேரனை கடத்திச் சென்று, கிராண்ட்பாஸ் ரந்திய உயன பகுதியிலுள்ள வீடமைப்பு தொகுதியில் தடுத்து வைத்துள்ளார்.

அத்துடன், வர்த்தகரை தொடர்புக் கொண்டு அவரது மகன் பெற்றுக் கொண்ட போதைப்பொருளுக்கான பணத்தை செலுத்துமாறு குறித்த பெண் கோரியுள்ளார். இதன்போது, கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல்களுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த சிறுவன் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு சென்று சிறுவனை பாதுகாப்பாக மீட்டனர்.

இதனையடுத்து சிறுவனை கடத்தியதாக கூறப்படும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது – நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் தலையிட மாட்டோம் எனவும் அவர்களின் நிகழ்ச்சி நிரலை திருத்த முயற்சிக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.

சுதந்திரமான அமைப்பான தேசிய தேர்தல் ஆணையம் தனது செயல்பாடுகளை தொடர வேண்டும் என்றும், அரசின் தலையீடு இருக்காது என்றும் அவர் கூறினார்.

‘எதிர்க்கட்சிகளின் உதவியுடன், தேர்தல்கள், தேர்தல் திகதி மற்றும் தேர்தல் செயல்முறைகளை விவரிக்கும் அரசியலமைப்பின் 21 வது திருத்தத்தை நாங்கள் நிறைவேற்றினோம். இதன் மூலம், இந்த விவகாரங்களில் சுதந்திரமான தேர்தல்கள் ஆணைக்குழு செயல்படும்’ என கூறினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் திருத்துவதற்கு அரசாங்கத்திற்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ அதிகாரம் இல்லை எனவும் அமைச்சர் கூறினார்.

“வடக்கு – கிழக்கை இணைக்க வேண்டும் என கூறி முஸ்லீம்களிடையே விசமத்தனமான கருத்துக்கள் விதைக்கப்படுகிறது.” – ரவூப் ஹக்கீம்

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்பாடுகளில் முஸ்லிம் தரப்பையும் இணைத்துக் கொள்ள ஜனாதிபதி ரணில் நடவடிக்கை எடுப்பது அவசியம் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் உரையாற்றிய ரவூப் ஹக்கீம் எம்பி,

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகவும் நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் கட்சிகளுடனும் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.

சகல தரப்புகளும் இணங்கும் சிறந்த தீர்வை மிக விரைவில் பெற்றுத்தருவதற்கான முயற்சியை ஜனாதிபதி ரணில் உளப்பூர்வமாக எடுப்பாரானால் அதில் முஸ்லிம் தரப்பையும் இணைத்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

எனினும் அது சம்பந்தமாக விசமத்தனமான பிரசாரங்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவது கவலைக்குரிய விடயமாகும். இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து, தமிழ் மக்களின் அபிலாசைகள் என்பது சில சமயங்களில் முஸ்லிம்களின் அபிலாசைகளுடன் முரண்பட்டதாக காணப்படுகின்றன.

அந்த வகையில் தேவையற்ற சந்தேகங்களை கிளப்பி ஒட்டுமொத்த இனப்பிரச்சினை தீர்வுக்கான சாத்தியப்பாட்டையும் குழப்ப முயற்சிக்கும் விடயமாக இதை உணர முடிகிறது. அதனடிப்பையில் ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு பிரதேசத்தையும் ஒரு அரசியல் அலகாக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழர் தரப்பில் நீண்டகாலமாக தெரிவிக்கப்பட்டு வருகின்ற போதிலும்; அதில் முஸ்லிம் தரப்பு சற்று மாற்றமான கருத்தை கொண்டிருக்கின்றது என்பதை குறிப்பிட வேண்டும் என தெரிவித்தார்.